

Written by London Swaminathan
Post No. 15,683
Date uploaded in London –1 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
நாச்சியார்கோயில்
கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள நாச்சியார்கோயில் தலம், முக்கிய பரிகாரத் தலமாகவும் கருதப்படுகிறது
மூலவர் : திருநறையூர் நம்பி
உற்சவர் : இடர்கடுத்த திருவாளன்
தாயார் : வஞ்சுளவல்லி
தல விருட்சம் : வகுளம் (மகிழம்)
புராண பெயர் : சுகந்தகிரி க்ஷேத்ரம்
ஊர் : நாச்சியார்கோயில்
மாவட்டம் : தஞ்சாவூர்
திருமால் மீது தீவிர பக்தி கொண்ட மேதாவி மகரிஷி, திருமாலை தனது மருமகனாக அடைய விரும்பினார். இதற்காக மகாலட்சுமியை மகளாக அடைய வேண்டும் என்று வஞ்சுள மரத்தடியில் அமர்ந்து தவம் இயற்றினார். முனிவரின் தவத்தில் மகாலட்சுமி மகிழ்ந்து, ஒரு பங்குனி மாத உத்திர நட்சத்திர தினத்தில், அவர் தவம் செய்த மரத்தடியில் (வஞ்சுளவல்லி) குழந்தையாகத் தோன்றினார்.. தன் ஆசிரமத்திலேயே குழந்தையை வளர்த்து வந்தார். மகாலட்சுமியை திருமணம் செய்வதற்காக திருமால் 5 வடிவங்கள் (சங்கர்ஷணன், பிரத்யும்னன், அனிருத்தன், புருஷோத்தமன், வாசுதேவன்) எடுத்து, ஒவ்வொரு திசையாகச் சென்று அவரைத் தேடி வந்தார். திருமாலுடன் வந்த கருடாழ்வார், பிராட்டி இருக்கும் இடம் அறிந்து அதுகுறித்து திருமாலிடம் தெரிவித்தார். மேதாவி ரிஷியின் வளர்ப்புப் பெண்ணான வஞ்ஜுளவல்லியை பகவான் மணந்து கொள்கிறார்.
இத்தலத்தில் உள்ள தாயார், பெருமாளைவிட சற்று முன்புறம் நின்றவாறு உள்ளார். தாயார், கையில் கிளி, இடுப்பில் சாவிக் கொத்து வைத்திருப்பது, அனைத்தையும் அவரே நிர்வாகம் செய்கிறார் என்பதை உணர்த்துகிறது.
திருமங்கையாழ்வார் இக்கோயிலை மங்களாசாசனம் செய்துள்ளார்.
நாச்சியார் கோயில் திருமங்கையாழ்வார் பாசுரம்
திருமங்கையாழ்வார் – 1078, 1329, 1470, 1478-1577, 1611, 1659, 1852, 2067, 2068, 2673 (71) , 2674, (73,133)
மொத்தம் 110 பாசுரங்கள்.
“வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்பெருந்துயரிடும்பையில் பிறந்து,கூடினேன் கூடியல்லாரோடு ஐவர்கூட்டமைந்து அசுரனாய் அலைத்தேன்,நாடினேன் நாடி நன்னெறிக்கண்டேன்நாராயணா என்னும் நாமம்,தேடினேன் தேடித் திருநறையூர்ஏத்தீரேல் ஏவா வினைகளே.”— பெரிய திருமொழி ௬.௩.௧
***
3. கொங்கார் குழலார் கூடி இருந்து சிரித்து நீர்
எங்கோலம் ஐயா என் இனிக் காண்பது என்னாத முன்
செங்கோல் வலவன் தான் பணிந்து ஏத்தித் திகழும் ஊர்
நங்கோன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே
***
4. கொம்பும் அரவமும் வல்லியும் வென்ற நுண் நேரிடை
வம்புண் குழலார் வாசல் அடைத்து இகழாத முன்
செம்பொன் கமுகினம் தான் கனியம் செழுஞ்சோலை சூழ்
நம்பன் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே
***
§
திருநறையூர் என்றால் தேன் நிறைந்த பூக்களும் மணம் கமிழும் பொய்கைகள் கலந்து மணம் வீசும் ஊர் என்று பொருள்.
திருவிழா:
மார்கழி, பங்குனியில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், இவ்விழாவின் போது கருடசேவை உற்சவம் நடக்கிறது.

(It is not my picture)
நாச்சியார் கோவில் கல் கருடன்
நாச்சியார் கோவில்(திருநறையூர்) பெருமாள் கோவிலின் பெருமை கல் கருடனால் அதிகரித்துவிட்டது. மரத்தினால், சுதையினால், உலோகத்தினால் அல்லது இவைகளின் கூட்டினால் ஆன கருட வாகனங்களை அறிவோம். முழு கல்லினால் ஆன கருடனை சுமந்து கொண்டுபோவது அதிசயம்தானே . மேலும் இதன் எடை கோவிலின் வெளியே போவதற்குள் அதிகரிக்கிறது என்ற நம்பிக்கையால் மேலும் மேலும் தூக்கும் சிப்பந்திகள் அதிகரிப்பது இன்னொரு விசேஷம். இதே ஊரில் பாடல் பற்ற சிவன் கோவிலும் இருப்பது எல்லா இந்துக்களுக்கும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த பலனையும் கொடுக்கிறது.
முதலில் நான் பிப்ரவரி 2023-ல் எப்படிப் போனேன் என்று சொல்லி துவங்குகிறேன் . கும்பகோணத்திலிருந்து இந்த ஊர் சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. நாங்கள் காரில் சென்றோம். அருகிலேயே சிவன் கோவிலும் இருக்கிறது. கூட்டம் இல்லாத சிவன் கோவில்கள் என்ற தலைப்பில் எழுதிய மூன்று சிவன் கோவிலில் இந்த சிவன் கோவிலும் அடக்கம் .
63 நாயன்மார்களில் ஒருவரான கோச்செங்கணார் கனவில் தோன்றிய திருமால், தனக்கு கோயில் கட்டும்படி பணித்தார், அதன்படி சிவன் கோயில் அமைப்பில் யாளிகளுடன், மாடக்கோயில் அமைப்பில் அவர் இக்கோயிலைக் கட்டினார்.
சிறிதும் பெரிதுமாக 16 கோபுரங்கள் காட்சி தருகின்றன.
பெருமாளுடைய கல் கருட வாகனம் பிரசித்தமானது. ஏழு வியாழக்கிழமைகளில் கருட பகவானை அர்ச்சித்தாலோ தரிசித்தாலோ நினைத்தது நிறைவேறும் என்பதால் நிறைய பக்தர்கள் வருகிறார்கள் .சந்நிதியில் 4 பேர் தூக்கும் கருட வாகனத்தை இறுதியில் 64 பேர் தூக்கிச் செல்லுவார்கள்; கல் கருடனுக்கு தனி சந்நிதி உள்ளது.
கருட சேவையின்போது, பெருமாள் கல் கருடன் வாகனத்திலும் தாயார் அன்ன னாவாகனத்த்திலும் பவனி வருவார்கள்.
திருமங்கை ஆவார் பாடிய திருத்தலம் . 108 திவ்ய தேசங்களில் ஒன்று.
கருட பட்சிகள் மரணம்
திருக்கோயில் நந்தவனத்தில் நீண்டகாலமாய் வசித்து வந்த கருட பட்சிகள் 1999ம் ஆண்டில் முக்தி அடைய அங்கேயே அடக்கம் செய்யப்பட்டன.. இவை நமக்கு திருக்கழுகுக் குன்ற கழுகுகளை நினைவுபடுத்தும்.
108 திவ்ய தேசங்களில் சேவை சாதிக்கும் எம்பெருமான்களின் விக்ரஹங்கள் எல்லாவற்றையும் இந்தக்கோவிலில் ஒரு சீராகக் காணலாம் என்று லிப்கோ பாதிப்பு கூறுகிறது.
அருகில் திரு நாகேஸ்வரம், அழகாபுத்தூர் கோவில்கள் உள்ளன. இதே ஊரில் பாடல் பெற்ற சிவன் கோவிலும் இருக்கிறது.
–subham—
Tags- நாச்சியார்கோவில், கல் கருடன்