Written by London Swaminathan
Post No. 15,705
Date uploaded in London –6 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
புறநானூற்றில் வரும் ஒரு பாடலுக்கு உரைகாரர்கள் சாமுத்ரிகா லட்சணத்தைக் காட்டியுள்ளனர். தோல் உரித்த உடும்பு போல எலும்புகள் தெரியும் ஏழைப் பாணனை ஒரு புலவர் ஆற்றுப்படுத்துகிறார் ; அவருக்கு உதவக்கூடிய மன்னன் செம் பொறி படைத்த ஆகம் / மார்பினை உடையவன் என்கிறார் ; இதற்கு உரைகள் எழுதியோர் பொறி என்ற சொல்லுக்குத் தமிழில் லெட்சுமி என்ற பொருள் இருப்பதைக் காட்டிவிட்டு மார்பில் மூன்று வரிகள் இருப்பதால் அவன் மார்பினை (ஆகம் ) செம்பொறி என்றார் புலவர் என்கின்றனர்
இவ்வாறு மூன்று வரிகள் கழுத்தில் இருந்தால் அவள் தேவிக்குச் சமமான உத்தம லட்சணம் உடையவள் என்று லலிதா சஹஸ்ரநாம மும் ஆதி சங்கரரின் செளந்தர்ய லஹரியும் கூறுகிறது ; இது சாமுத்ரிகா லட்சண விளக்கம்.
மன்னரை விஷ்ணுவுக்கு ஒப்பிடுவதைக் காளிதாசன் நூல்களிலும் பிற நூல்களிலும் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுகளிலும் காணலாம் ; அவர்கள் ஆளும் ராஜ்யத்தை ராஜ்ய லட்சுமி என்றும் போற்றுவார்கள் ; ஏனெனில் விஷ்ணுவின் மார்பில் லட்சுமி வசிக்கிறாள் என்று இந்து மத புராணங்கள் பாடுகின்றன
பூவெனப்படுவது பொறி வாழ் பூவே
என்ற பொன் மொழியையும் உரைகாரர்கள்-சுட்டிக் காட்டுகின்றனர்
பொறி= லட்சுமி
இதோ அந்த புறநானூற்றுப் பாடல்:
புறநானூறு 68, பாடியவர்: கோவூர் கிழார், பாடப்பட்டோன், சோழன் நலங்கிள்ளி, திணை: பாடாண், துறை: பாணாற்றுப்படை
1
உடும்பு உரித்து அன்ன என்பு எழு மருங்கின்
கடும்பின் கடும் பசி களையுநர்க் காணாது,
சில் செவித்து ஆகிய கேள்வி நொந்து நொந்து
ஈங்கு எவன் செய்தியோ பாண, பூண் சுமந்து,
2
அம் பகட்டு எழிலிய செம் பொறி ஆகத்து 5
மென்மையின் மகளிர்க்கு வணங்கி வன்மையின்
3
ஆடவர்ப் பிணிக்கும் பீடு கெழு நெடுந்தகை,
புனிறு தீர் குழவிக்கு இலிற்று முலை போலச்
சுரந்த காவிரி மரங்கொல் மலி நீர்
மன்பதை புரக்கும் நன்னாட்டுப் பொருநன், 10
உள் பகை ஒரு திறம் பட்டெனப்
4
புள் பகைக்கு
ஏவான் ஆகலின் சாவேம் யாம் என,
நீங்கா மறவர் வீங்கு தோள் புடைப்பத்,
தணி பறை அறையும் அணி கொள் தேர்வழிக்,
கடுங்கள் பருகுநர் நடுங்கு கை உகுத்த 15
நறுஞ்சேறு ஆடிய வறுந்தலை யானை
நெடுநகர் வரைப்பில் படுமுழா ஓர்க்கும்
உறந்தையோனே குருசில்,
பிறன் கடை மறப்ப நல்குவன் செலினே
இதே பாடலில் பஞ்சாங்கத்தில் போட்டுள்ள பஞ்ச பக்ஷி சாஸ்திரத்தையும் புள் பகை என்ற சொற் களால் புலவர் சுட்டிக்காட்டுகிறார்.
***
செளந்தர்யலஹரி பாடல் 69
க³லே ரேகா²ஸ்திஸ்ரோ க³திக³மககீ³தைகநிபுணே
விவாஹவ்யானத்³த⁴ப்ரகு³ணகு³ணஸங்க்²யாப்ரதிபு⁴வ꞉ .
விராஜந்தே நானாவித⁴மது⁴ரராகா³கரபு⁴வாம்ʼ
த்ரயாணாம்ʼ க்³ராமாணாம்ʼ ஸ்தி²திநியமஸீமான இவதே
பொருள்: தாயே!, இசையில் கதி, கமகம், கீதம் ஆகியவற்றில் ஒப்பில்லாத திறமை வாய்ந்தவளே! உன்னுடைய கழுத்தில் இருக்கும் மூன்று ரேகைகள் (மடிப்புகள்), மூன்று சுவரங்களுக்கு (சங்கீதத்தில் ஷட்ஜம, மத்யம, காந்தார ) எல்லைக் கோடுகளாகத் திகழ்கின்றன. இந்த மூன்று ரேகைகளும், சிவபெருமானுடனான திருமணத்தின்போது கட்டப்பட்ட மங்கள சூத்திரத்தின் (தாலி) எண்ணிக்கையை உறுதிப்படுத்தும் சாட்சிகள் போல உள்ளன;
இந்த பாடல், அன்னையின் கழுத்து அழகையும், அவளின் சங்கீத ஞானத்தையும், சிவனுடன் அவளுக்கு இருக்கும் திருமண பந்தத்தையும் போற்றுகிறது. மூன்று ரேகைகள் என்பது சாமுத்ரிகா லட்சண சாஸ்திரத்தில் உத்தம ஜாதிப் பெண்களின் அம்சமாகச் சொல்லப்பட்டுள்ளது
இதே கருத்து இடுப்பிலுள்ள மூன்று கோடுகளாக 80-ஆவது ஸ்லோகத்தில் வருகிறது.
சௌந்தர்ய லஹரியின் 80-வது பாடல், அம்மனின் அழகு மற்றும் அவளது திருமேனியின் சிறப்புகளை வர்ணிக்கிறது. த்ரிவலி எனப்படும் மூன்று மடிப்புகள் மற்றும் தளிர் போன்ற மார்பகங்களின் அழகை இந்த ஸ்லோகம் விவரிக்கிறது.
कुचौ सद्यःस्विद्यत्तटघटितकूर्पासभिदुरौ
कषन्तौ दोर्मूले कनककलशाभौ कलयता
तव त्रातुं भङ्गादलमिति वलग्नं तनुभुवा
त्रिधा नद्धं देवि त्रिवलि लवलीवल्लिभिरिव ॥
குசௌ ஸத்ய:ஸ்வித்யத்தடகடிதகூர்பாஸபிதுரௌ
கஷந்தௌ தோர்மூலே கனககலஶாபௌ கலயதா ।
தவ த்ராதும் பனகாதலமிதி வலக்னம் தனுபுவா
த்ரிதா நத்தம் தேவி த்ரிவலி லவலீவல்லிபிரிவ ॥॥
ஹே பராசக்தி!
நீ உன் கணவர் பரமேஸ்வரரின் பெருமைகளை நினைத்து நினைத்து பூரிப்பு அடைவதினால், உன்னுடைய தேகம் வியர்வையில் நனைந்து போகின்றது. அப்போது விம்மும் தங்கக் கலசங்கள் போன்ற உனது ஸ்தனங்கள், உனது ரவிக்கையையும் கிழித்துக் கொண்டு இடுப்பையும் ஒடித்து விடுமோ என்ற பயத்தில், உன்னுடைய சரீரத்தை உருவாக்கிய மன்மதன், உனது இடுப்பு ஓடியாமல் இருக்கும்பொருட்டு மூன்று ரேகைகளைப் போன்று மூன்று மடிப்புக்களையும் ஏற்படுத்தி உள்ளான் என்று தோன்றுகின்றது.
இதே விஷயம் லலிதா சஹஸ்ரநாமத்திலும் இருக்கிறது.
******

இன்னுமொரு பாடல்:
தாள் தோய் தடக்கை = ஆஜானு பாஹும்
ஸ்ரீ ராகவம் தசரதாத்மஜம் அப்ரமேயம் சீதாபதீம்
ரகு குலான்வய ரத்னதீபம்
ஆஜானு பாஹீ மரவிந்த தளாய தாக்ஷம்
ராமம் நிசாசர விநாசகரம் நமாமி.”
Sri Raghavam dasarathatmaja maprameyam
Sitapatim raghuvaranvaya ratnadipam
Ajanubahum aravinda dalayataksam
Ramam nisacara vinasakaram namami “
இந்த வரிகள் பகவான் ஸ்ரீ ராமரை வர்ணிக்கும் புகழ்பெற்ற ஸ்லோகம்.
லவகுசா திரைப்படத்திலும் இந்த ஸ்லோகம் வருகிறது சம்ஸ்க்ருத இலக்கியம் முழுதும் இந்த ஆஜானு பாஹும் என்பதை மன்னர்க்கு வருணனையாக – குறிப்பாக ராமபிரானுக்கு – ப்பாடி இருக்கிறார்கள்.
பொருள்:
ஆஜானுபாஹும்= (Ajaanubaahum): முழங்கால் வரை நீண்ட கைகளை உடையவர் (நீண்ட புஜங்களை உடையவர்).அரவிந்த லோசனம் (Aravinda Lochana): தாமரை போன்ற கண்களை உடையவர் (அரவிந்தம் = தாமரை, லோசனம் = கண்).ராமம்: ராமனாகிய,நிசாசர வினாசகரம் (Nishachara Vinashakaram): ராக்ஷசர்களை (நிசாசரர்) அழிப்பவர்.
பொதுப்பொருள்:
முழங்கால் வரை நீண்ட கைகளையும், தாமரை போன்ற கண்களையும் உடையவரும், ராக்ஷசர்களை அழிப்பவருமான ராமனை வணங்குகிறேன்.இது பொதுவாக ராமனின் அழகையும், வீரத்தையும் போற்றும் ஸ்லோகமாக பாடப்படுகிறது.
தமிழில் இதை தாள் தோய் தடக்கை ( ஆஜானு பாஹும்) என்று மொழிபெயர்த்துப் பாடி இருக்கிறார்கள்; ஆண்களுக்கான சாமுத்ரிகா லட்சணத்தில் இது ஒரு அம்சம் ; தாமரை இதழ் போன்ற கண்கள் பொதுவாகப் பெண்களுக்கு தமிழில் பயன்படுத்தப்படுகிறது ஆயினும் ராமர் ,கிருஷ்ணர் ஆகியோருக்கு இது சம்ஸ்க்ருதத்தில் நிறைய இடங்களில் வருகிறது
ஆஜானுபாஹும் /தாள் தோய் தடக்கை என்பது சங்க இலக்கியங்களில், குறிப்பாகப் புறநானூற்றில் பாண்டிய மன்னர்களைக் பாடிய இடத்தில் வருகிறது ; இது ஒரு உத்தம இலக்கணம்; கைகள் முழங்கால் வரை நீண்டிருப்பது வலிமை மற்றும் கம்பீரத்தின் அடையாளமாக இந்துக்களால் போற்றப்பட்டது.
புறநானூறு 59
பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் இது புலவர் மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் பாடிய பாடல்
ஆரம் தாழ்ந்த அணி கிளர் மார்பின்,
தாள் தோய் தடக் கை, தகை மாண் வழுதி!
வல்லை மன்ற, நீ நயந்து அளித்தல்;
தேற்றாய், பெரும! பொய்யே; என்றும்
காய் சினம் தவிராது கடல் ஊர்பு எழுதரும்
ஞாயிறு அனையை, நின் பகைவர்க்கு;
திங்கள் அனையை, எம்மனோர்க்கே.
புறநானூறு (59) சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் என்ற பாண்டிய மன்னனை, புலவர் “தாள் தோய் தடக்கைத் தகை மாண் வழுதி” (முழங்கால் வரை நீண்ட பெரிய கைகளை உடைய, தகுதியால் மாட்சிமைப்பட்ட பாண்டியனே) என்று புகழ்கிறார். , அம்மன்னன் பகைவரை ஞாயிறு போல் எரிப்பவன் என்றும் புகழ்கிறார்.
மன்னர்களை சூரிய சந்திரனுக்கும் பஞ்ச பூதங்களுக்கும் ஒப்பிடுவதைக் காளிதாசன் நூல்களில் காண்கிறோம். இதைச் சங்க இலக்கியத்திலும் காணலாம். ஆகவே இமயம் முதல் குமரி வரை இந்துக்கள் ஒரே பண்பாட்டினைக் கொண்டவர்கள் என்பது தெளிவாகிறது சங்க இலக்கியத்தின் 30,000 வரிகளில் புத்தரோ மஹாவீரரோ கிடையாது ; இந்து மத தெய்வங்களும் புராணக்கதைகளும் மட்டுமே 200 முதல் 300 பாடல்களில் காணக்கிடக்கின்றன; ஏனையவை மத சம்பந்தம் இல்லாத வாழ்க்கைக் குறிப்புகளே!
—subham—
Tags- புறநானூற்றில், சாமுத்ரிகா லக்ஷணம் ,செம் பொறி ஆகம் , லட்சுமி வசிக்கும் மார்பு, பூவெனப்படுவது பொறி வாழ் பூவே ,மூன்று வரிகள் ,தாள் தோய் தடக்கை ,ஆஜானு பாஹு, சௌந்தர்ய லஹரி