
Rani Mangammal.
Written by London Swaminathan
Post No. 15,704
Date uploaded in London –6 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மந்தபால
மஹாபாரதத்திலுள்ள ஒரு வினோதமான ரிஷியின் கதை. குழந்தைகள் உனக்குப் பிறக்காததால் சொர்க்கத்தில் நுழைய முடியாது என்று திருப்பி அனுப்பப்பட்ட ரிஷி இவர். அடுத்த ஜென்மத்தில் அவர் ஆண்பறவையாகப் பிறந்து ஜரிதா என்னும் பெண் பறவையின் மூலம் நான்கு பறவைகளைப் பெற்றார் . பின்னர் ஜரிதாவை விட்டுவிட்டு லபிதா பறவையுடன் வாழ்ந்தார் ; காண்டவ வனத்தை அர்ஜுனனும் கிருஷ்னனும் எரிக்கப்போகும் செய்தியை அறிந்து 4 பறவைக்குழந்தைகளை காப்பாற்றுவதற்காக ஜரிதாவிடம் திரும்பி வந்து காட்டின் வேறு பகுதியில் சுகமாக வாழ்ந்தார் .
***
மாண்டவ்ய ரிஷி / ஆணி மாண்டவ்ய

பழி ஓரிடத்திலே பாரம் ஒரிடத்திலே என்றும், பாவம் ஓரிடத்திலே என்றும் ஒரு பழமொழி உண்டு. மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி அல்லது சமம் என்று மற்றொரு பழமொழி உண்டு. இதை விளக்க ஒரு சுவையான கதை இருக்கிறது.
ஆணி மாண்டவ்ய ரிஷி (Mandavya Rishi), அணி மாண்டவ்யர் (Aṇi Māṇḍavya) என்றும் அழைக்கப்படுபவர் ஒரு முனிவர் ஆவார். அவருடைய கதை மகாபாரதத்தில் ஆதி பர்வத்தில் வருகிறது மாண்டவ்ய ரிஷி இரு கைகளையும் உயரத் தூக்கியவாறு தவத்தில் இருந்தார்; அப்போது அரண்மனையில் இருந்து அரசனின் பொருள்களைத் திருடியவர்கள் ஓடி வந்தனர்; பின்னால் சேவகர்கள் துரத்திக்கொண்டு வருவதைப் பார்த்து முனிவர்களின் ஆசிரமத்துக்குள் பொருள்களைப் போட்டுவிட்டு திருடர்கள் ஓடிவிட்டனர்; திருடர்களைத் தேடி வந்த அரச சேவகர்கள் பல கேள்விகளைக் கேட்டும் முனிவர் பதில் சொல்லவில்லை ஏனெனில் அவர் மெளன விரதத்தில் இருந்தார் . பின்னர் திருடர்களும் பிடிபட்டனர்; முனிவரிடம் திருட்டுப் பொருள்கள் இருந்ததால் அவரையும் திருடர்களுடன் மன்னர் முன்னால் நிறுத்தினர் ; ராஜாவும் அனைவரையும் கழுமரத்தில் ஏற்றிக்கொல்ல உத்தரவிட்டான் அவரைச் சூலத்தில் (Stake) ஏற்றித் தண்டித்தனர். திருடர்கள் அனைவரும் இறந்தனர் ; அணி மாண்டவ்யர் மட்டும் இறக்கவில்லை ; அவர் நிரபராதி என்று தெரிந்தவுடன் அவரைக் கழு மரத்திலிருந்து இறக்கியபோது கூரான ஆணி முனை ஒட்டிக்கொண்டு இருந்ததால் அவர் பெயருடன் ஆணியும் சேர்ந்து கொண்டது . தன் தவ வலிமையால் சூலத்தில் இருந்தும் உயிருடன் இருந்த அவர், யமதர்மனிடம் (மரண தேவன்) ஏன் தனக்குத் தண்டனை கிடைத்தது என்று கேட்டார். சிறுவயதில் பூச்சிகளைக் கொன்றதற்கான தண்டனை இது என்று யமன் கூறியதைக் கேட்டு, சிறு வயதில் அறியாமையால் செய்யும் தவறுக்கு தண்டனை வழங்கக் கூடாது என்று கூறி, யமனைப் பூமியில் மனிதனாகப் பிறக்கச் சாபமிட்டார். இதன் காரணமாகவே யமன் விதுரராகப் பிறந்தார் அவர் ஒரு பட்டுப்பூச்சியை வெறும் புல்லினால் குத்தி வேடிக்கையை பார்த்ததற்கு கிடைத்த தணடனை கழுமரம்!மண்டியா(கர்நாடகம்) நகரம்: மாண்டவ்ய ரிஷியின் ஆசிரமம் காவேரி நதிக்கரையில் இருந்ததாகவும், அந்த இடமே பின்னர் மண்டியா (Mandya) நகரம் என்று அழைக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.
***
மஹாலக்ஷ்மி: லட்சுமியின் பெயர் ; அஷ்ட லெட்சுமிகளின் விவரம் முன்னரே லெட்சுமி என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
***
மஹா கால
சிவனின் பெயர் ; காலம் என்றும் காலன் என்றும் பொருள்; அதாவது எல்லோரின் , எல்லாவற்றின் முடிவுக்கு காரணமானவர் சிவ பெருமான் ; பன்னிரண்டு ஜோதிர்லிங்கத்த தலங்களில் ஒன்றான உஜ்ஜைனி நகரத்திலுள்ளவர் மஹா காலேஸ்வர்; அங்குள்ள ஷிப்ரா நதியில் ஸ்நானம் செய்து சிவலிங்கத்தைத் தரிசித்தவர்களுக்கு அஸ்வமேத யாகம் செய்தபலன் கிடைக்கும் இந்த விவரம் மஹாபாரத வனபர்வத்தில் உள்ளது.
***
மகரிஷி / மஹரிஷி

தற்காலத்தில் ராமணரும் மனம் கடந்த தியான முறையைக் கண்டுபிடித்த மகேஷ் யோகியும் மகரிஷி என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறார்கள்.
உலகின் மிகப் பழமையான நூலான ரிக்வேதத்தில் பல இடங்களில் ரிஷி என்ற சொல் பயிலப்படுகிறது. “மந்திரத்தை வாக்கிய வடிவத்தில் சொல்பவர்” — என்று வேதத்தின் சர்வானுக்ரமணி கூறும்.
யாஸ்கர் எழுதிய நிருக்தம் போன்ற நூல்களில் சொற்பிறப்பியல் அடிப்படையில் ரிஷி என்ற சொல்லுக்கு விளக்கம் தரப்படுகிறது:
சாயனர் “ர்ஸ்: என்றால் ‘மேலே செல்’ என்பார். இதிலிருந்து பிறந்தது ரிஷி — ரிக் வேத பாஷ்யத்துக்கு முன்னுரை தருகையில் ‘த்ருஸ்’ என்ற சொல்லையும் காட்டுவார். ‘பார்’ என்பது இதன் மூலம். அதாவது மனிதனின் ஊனக் கண்ணால் காண முடியாததை ஞானக் கண்ணால் கண்டு நமக்கு வேத மந்திரங்களை அளித்தார்கள்.
இந்து மதம் தவிர, உலகிலுள்ள எல்லா மத நூல்களும் ஒரு மதத் தலைவர் சொன்னதை அடிப்படையாகக் கொண்டவை. உலகிலுள்ள எல்லா மதங்களும் ஒரு மனிதனால் தோற்றுவிக்கப்பட்டவை. இந்துக்களின் வேதமோ, இந்து மதமோ மனிதனால் தோற்றுவிக்கப் படவில்லை. அது சநாதனமாக – தோற்றமோ முடிவோ இல்லாத ஒன்றாக— இருந்து வருகிறது. வேத மந்திர ஒலிகளும் இப்படித்தான்.
நாம் ரேடியோவில் ஒரு நிலையத்தைக் கேட்க வேண்டுமானல் ஒரு அலை வரிசயைத் தேர்ந்தெடுக்கிறோம். அது போல ரிஷிகள் மனதை ஒரு முகப்படுத்தி மந்திரங்களைக் கேட்கிறார்கள். எப்படி ஆயிரக் கணக்கான நிலயங்களின் ரேடியோ அலைகள் நம்மைச் சுற்றி இருக்கிறதோ அது போல பிரபஞ்சத்தில் பல்லாயிரக் கணக்கான மந்திர ஒலிகளும் நம்மைச் சுற்றி இருக்கின்றன என்று இந்துக்கள் நம்புவர்.
ரிஷிகள் முக்காலம் உணர்ந்த “த்ரிகால” ஞானிகளும் ஆவர். எப்படி நாம் ஒரு வீடியோ “டேப்”பைப் பார்க்கையில் REWIND ரீவைண்டு, FAST FORWARD பாஸ்ட் பார்வர்ட் என்று முன் பின்னால் உள்ளதைப் பார்க்கிறோமோ அது போல ரிஷிகளும் செய்கின்றனர். மஹாபாரத யுத்தக் காட்சியை கண்ணன் — விஸ்வரூப தரிசனத்தில் — அர்ஜுனனுக்கு பாஸ்ட் பார்வர்ட் செய்து காட்டுவதைப் படிக்கிறோம்.
இதே போல த்ரிகரண சுத்தி என்பதும் ரிஷிகளிடத்தில் உள்ளது.
சதபத ப்ராஹ்மணம் ரிஷி என்பதற்கு “அதிகம் பாடுபடுபவர், கஷ்டப்படுபவர்” — என்று பொருள் சொல்லும். அதாவது தீவிரத் தவம் புரிவோர்.
தைத்ரீய ஆரண்யகம் , “முன்னேறிச் செல், தோன்று” என்று பொருள் காணும்.
தான் மட்டுமின்றி மனித குலத்தையும் முன்னேற்ற விரும்பியதால்தான் அவர்கள் காயத்ரி மந்திரம், மிருத்யுஞ்சய மந்திரம் போன்ற அரிய பெரிய மந்திரங்களை நமக்கு அளிததனர்.

ராஜ ரிஷிகளும் சப்த ரிஷிக்களும்
ஜனகன், புத்தன், ராமன், கிருஷ்ணன் இவர்களை ராஜ ரிஷிகள் என்பர். கண்ணனும் ராஜரிஷி பற்றி கீதையில் (4-2) சொல்கிறான். இன்னும் ஒரு ஸ்லோகத்தில் (10—6) சப்த ரிஷிக்கள் , நான்கு மானச புத்ரர்கள், 14 மனுக்கள் பற்றி கிருஷ்ணன் சொல்லுவான்.
இதற்கு ஸ்ரீ இராமகிருஷ்ண மடம் அண்ணா அவர்கள் எழுதிய உரை மிகவும் அருமையானது. அவர் சொல்வதாவது:–
முன்னவர்களான ஏழு மகரிஷிக்கள்:
1.நீண்ட ஆயுள்
2.மந்திரங்களை காணும் சக்தி
3.ஈசுவரத்தன்மை
4.தெய்வீகப்பார்வை
5.குணத்தாலும், வித்தையாலும், வயதாலும் உயர்வு
6.தருமத்தைப் பிரத்யக்ஷமாக அனுஷ்டித்துக் காட்டல்
7.கோத்ரப் பிரவர்த்தகராக இருத்தல்
இவ்வேழு லக்ஷணங்களும் அமைந்தவர்கள் ரிஷிகள்.
இவர்களில் முக்கியமானவர்கள் ஏழு மகரிஷிகள்; ஒவ்வொரு மன்வந்தரத்திலும் இவர்கள் வெவ்வேறாவர். இந்த கல்பத்தில் முதல் மன்வந்தரத்தில் தோன்றிய ஸப்தரிஷிகள்:–
மரீசி, அங்கிரஸ், அத்ரி, புலஸ்தியர், புலஹர், க்ரது, வசிஷ்டர்.
இப்போது நடக்கும் வைவஸ்வத மன்வந்தரத்துக்கு உரிய ஸப்தரிஷிகள்:
அத்ரி, வசிஷ்டர், விசுவாமித்திரர், ஜமதக்னி, பரத்வாஜர், கௌதமர், காசியபர்
நால்வர்: ஸனகர் ஸநந்தனர் ஸனாதனர் ஸனத் குமாரர்.இதுதவிர ரிஷிக்களை வேறு பல வகைகளிலும் பிரிப்பர்:
ராஜ ரிஷி:
க்ஷத்திய குல அரசர்கள் – ரிஷிகளின் தன்மை பெற்றவர்கள்
பிரம்ம ரிஷி:
பிராமண குலத்தை சேர்ந்த ரிஷி முனிவர்
ஜன ரிஷி:
மக்களிடையே இருந்து ரிஷிகளின் நிலைக்கு உயர்ந்தோர்.
காண்ட ரிஷி:
வேதங்களின் காண்டங்களுக்குப் பொறுபான ரிஷிக்கள்
மஹரிஷி:
ரிஷிகளுக்குள் உயர் நிலை அடைந்தவர். நாம் தலைவர், பெருந்தலைவர் என்று சொல்வது போல
பரம ரிஷி:
மிக உயர்ந்த நிலையிலுள்ள ரிஷி
ச்ருத ரிஷி:
வேத ஒலியைக் கேட்போர்
தவ ரிஷி:
தவத்தில் சிறந்தவர்
சத்ய ரிஷி:
சத்யத்தில் நிலைபெற்றவர்.
தேவ ரிஷி
தெய்வீக நிலைக்கு உயர்ந்தோர்.
பதஞ்சலி பிரிவினை
பாணினி எழுதிய அஷ்டாத்யாயீ என்னும் உலகமே வியக்கும் சம்ஸ்கிருத இலக்கண நூலுக்கு மஹாபாஷ்யம் என்ற அளவிலும் தரத்திலும் பெரிய விளக்கவுரை (பாஷ்யம்) செய்ஹ பதஞ்சலி என்ற ரிஷி. வேறி இரண்டு விளக்கம் தருவார்:
மந்திரத்தைக் கண்டவர்கள் ஒரு வகை. கல்ப சூத்ரம் போன்ற பெரிய நூலகளை எழுதியோர் மற்றொரு வகை. ஆன்மீக எழுத்தாளர்களையும் ரிஷி வகையில் சேர்த்துவிட்டார் பதஞ்சலி.
மஹாபாரதமோ எனில் வேறு வகையில் ரிஷிக்களைப் பிரித்துரைக்கும்:
கிருஹஸ்தாஸ்ரமி: இல்லறம் நடத்தும் ரிஷிமார்கள்.
ரிஷிக்களில் இந்த வகைதான் அதிகம். பெரிய ரிஷிக்கள் அனைவரும் இல்லறத்தை நடத்தியே பெரும் புகழை எய்தினர். வசிட்டர், விசுவா மித்திரர், அகத்தியர் ஆகிய அனைவரும் மனைவியுடன் வாழ்ந்தவர்
ஊர்த்வரேதஸ்: — பிரம்மசர்யம் அனுட்டித்த ரிஷிக்கள்
ஆஸ்ரமவாசிகள்:– கானகம் முதலிய இயற்கைச் சூழ்நிலையில் ஆஸ்ரமம் அமைத்து எளிமையான வாழ்வு வாழ்ந்தோர்.
யாயவரஸ்: நாடோடி ரிஷிக்கள். நாடு விட்டு நாடு சென்று பலருக்கும் உதவியவர்கள்
புரோகித வ்ருத்திகா: — புரோகிதம் செய்த ரிஷிக்கள்
சாதரண வ்ருத்திகா: — சாதாரண வாழ்க்கை நடத்திய ரிஷிக்கள்
சஸ்த்ர அத்யாபகா :– ஆயுதப் (சஸ்த்ரம்) பயிற்சி அளித்த ரிஷிகள்
சாஸ்த்ர அத்யாபகா: — சாத்திரப் பயிற்சி அளித்த ரிஷிகள்
உக்ர தபஸ்வீ: — இவர்கள் சூப்பர் பாஸ்ட் ரயில் போல உக்ரமான தவம் செய்து விரவில் பலன் பெற முயன்றோர்.
சாதரண தபஸ்வீ: இவர்கள் சாதாரண வேகத்தில் செல்லும் ரயில் போல தவம் செய்தோர்.
இந்தப் பிரிவினைகள் அவர்களை வருணிக்கப் பயன்படுத்திய சொற்கள். ஒருவர், ஒரு பிரிவில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதல்ல.
( உதவிய நூல்கள்:— பழங்கால இந்தியாவில் ரிஷிமார்கள் – சி.பி. பாண்டே எழுதிய நூல் —- ப்ருகு வம்சம் – ஒரு ஆய்வு, ஜயந்தி பண்டா எழுதிய நூல்—பகவத் கீதை, அண்ணா உரை, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை).
****
மஹா வாக்கியங்கள்
மனிதன் என்பவன் இறைவனின் ஒரு அம்சம் ;அவனுக்குள் உறையும் ஆத்மா அழிவில்லாதது ; உடல் மட்டுமே அழியக்கூடியது ; எப்படி பானைக்குள் உள்ள காற்று பானை உடைந்த பின்னர் வெளியேயுள்ள காற்றுடன் கலந்து ஐக்கியமாகிவிடுகிறதோ அது போல ஆத்மாவும் இறைவன் என்னும் பரப் பிரம்மத்துடன் கலந்துவிடும் . இதை விளக்கும் பொன்மொழிகள் ஒவ்வொரு வேதத்துக்கும் உரிய உபநிஷத்தில் உள்ளது; அவை பின்வருமாறு:
1. प्रज्ञानम् ब्रह्म (ப்ரக்ஞாநம் ப்ரஹ்ம )
உணர்வு / பிரக்ஞை பிரம்மம்
ஐதரேய உபநிஷத் (3.3) ரிக் வேதம்,
**
2. अयम् आत्मा ब्रह्म (அயம் ஆத்மா ப்ரஹ்ம )
உள்ளுக்குள் உறையும் ஆத்மாவே பிரம்மம்
: மாண்டூக்ய உபநிஷத் (2) அதர்வ வேதம்
**
3. तत् त्वम् असि (தத் த்வம் அசி )
நீயே அதுவாக இருக்கிறாய்
சாந்தோக்கிய உபநிஷத் (6.8.7) சாம வேதம்
**
4. अहम् ब्रह्म अस्मि அஹம் ப்ரஹ்மாஸ்மி
நானே பிரம்மம் ஆக இருக்கிறேன்
பிருஹதாரண்யக உபநிஷத் (1.4.10) of the யஜுர் வேதம் .
**
வேறு சில மஹா வாக்கியங்கள்
सर्वं खल्विदं ब्रह्म (சர்வம் கல்விதம் ப்ரஹ்ம ): இங்குள்ள எல்லாம் பிரம்மம்
इशावास्यमिदं सर्वम् (ஈசாவாஸ்யம் இதம் சர்வம் ): உலகம் முழுதும் இறைவனால் வியாபிக்கப்பட்டுள்ளது
***
மஹேந்திர வர்மன்
Music Inscription

Pallava Period Hero Stone for a Dog.
உலகப்புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரும் தொல்பொருட் துறை அறிஞருமான டாக்டர் இரா .நாகசாமி 23, 2014 மயிலை ஆர்கே கன்வென்ஷன் செண்டரில், “பல்லவர் இசையில் மயிலாப்பூர்” என்ற தலைப்பில் நிகழ்த்திய ஒரு உரை தரும் செய்திகள்
டாக்டர் நாகசாமி, காயத்ரி கிரீஷின் இசைத்துணையோடு, உரையாற்றினார்.
“சித்திரக்கார புலி”, “சங்கீர்ணஜாதி”, என்று விருதுகளை கொண்ட மகேந்திர வர்ம பல்லவன், கலைகளில் வல்லவன். புதுக்கோட்டை மாவட்டத்தில் குடுமியான்மலையிலும் திருமெய்யத்திலும் மகேந்திரனது இசைக்கல்வெட்டுகள் உள்ளன. “பகவதஜ்ஜுகம்”, “மத்தவிலாச பிரஹசனம்” என்ற சமஸ்கிருத நாட்டிய நாடகங்களை மகேந்திரன் படைத்தான். கேரளத்தில் சில கோயில் திருவிழாவில் இன்றும் மத்தவிலாசம் நடிக்கப்படுகிறது. அதன் ஓலைச்சுவடி நூறாண்டுகளுக்கு முன்னால் திருவிதாங்கூர் ஓரியண்டல் நூலகத்தில் கிடைத்தது. காஞ்சி அருகே மாமண்டூர் குகையில் மகேந்திர பல்லவனின் கல்வெட்டில் இந்நூலை அவன் படைத்த குறிப்பும் அதனால் தனக்கு “மத்தவிலாசன்” என்ற விருதமைந்த குறிப்பும் உள்ளன. இதில், நாந்தி என்றழைக்கப்படும் கடவுள் வாழ்த்தில், “பாஷா வேஷ வபுக்ரியா குணக்ருதான்” என்று வரும் சொற்களை, பரத முனிவர் தன் “நாட்டிய சாத்திரம்’ நூலில், நாட்டியத்தின் நான்கு முக்கிய அம்சங்கள் என்றுளார். பரதமுனிவரின் நாட்டிய சாத்திரத்தை கற்று மகேந்திரன் இந்நாடகத்தை படைத்த சான்று இது எனவும், “திஷது வோ ந்ருத்த கபாலீ ” என்ற வரியில் மயிலை கபாலியை மகேந்திர பல்லவன் வேண்டுகிறான் என்று நாகசாமி விளக்கினார்.மகேந்திரன் காலத்தில் மயிலை வந்த திருஞானசம்பந்தர் பூம்பாவை பதிகத்தை கபாலிக் கோவிலில் பாடியுள்ளார். அதில்
“மைப்பயந்த ஒன்கண் மடநல்லார் மாமயிலை
கைப்பயந்த நீற்றான் கபாலீச்சுரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓணவிழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவும் காணாதே ஓடியோ பூம்பாவாய் ”,
என்ற தேவாரப்பாடலில், ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரதில் நடந்த விழாவையும்;
“மணக்கை மடநல்லார்” என்ற பாடலில் “தொல் கார்த்திகை நாள்” விழாவையும் சொல்லி, மயிலையில் கபாலிச்சுர கோவிலில் 1300 ஆண்டுக்கு முன் மாதாமாதம் நடந்த திருவிழாக்களை நாகசாமி எடுத்துக்காட்டினார்.
செங்கம் வட்டார நடுகற்கள் பற்றிய 1972-ம் நூலில் அப்போதைய தொல்பொருட் துறை இயக்குனரும், வரலாற்று நிபுணருமான டாக்டர் இரா .நாகசாமி நமக்கு இன்னொரு புதுமையான தகவலை அளிக்கிறார். என்சைக்ளோபீடியாக்களில் பார்த்தால் மாமன்னன் மஹேந்திர வர்மன் 30 ஆண்டுகள் மட்டுமே ஆண்டதாகக் கூறும். ஆயினும் அவனது 39-ஆவது ஆட்சி ஆண்டு கூட ஒரு நடு கல்லில் உளது; அவனது தந்தை சிம்ம விஷ்ணுவின் ஆட்சியின்போதே அவனுக்கும் பட்டாபிஷேகம் செய்விக்கப் பட்டதால் இப்படி ஆட்சி ஆண்டு உள்ளதாக அவர் கூறுகிறார்.
டாக்டர் இரா. நாகசாமி அவர்கள், முதலாம் மகேந்திரவர்மன் பல்லவன் (கி.பி. 590-630) மற்றும் அவனது கலைப்படைப்புகள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட மிகச்சிறந்த தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் அறிஞர் ஆவார் மகேந்திர வர்மன் கி.பி. 600-630 காலகட்டத்தில் ஆட்சி செய்ததை அவர் உறுதிப்படுத்தினார் .
Mamamdur Caves of Mahendra Pallava
முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி. 600 – 630)
சிம்மவிஷ்ணுவின் மகனான மகேந்திரவர்மன், மாவீரனாக வாழ்ந்தான். இவனது ஆட்சிக்காலத்தின் முதற்பகுதியில் சமணம் உயர்நிலையில் இருந்தது. பிற்பகுதியில் சைவம் உயர் நிலைக்கு வந்தது. இப் பேரரசனே சமண சமயத்தை விடுத்து, சைவத்திற்கு மாறினான். திருநாவுக்கரசர் எனும் அப்பரால் மனமாற்றம் அடைந்தவன். சிவன் கோவில்களையும் விஷ்ணு கோவில்களையும் பிறமதத்தினர் ஆக்ரமித்திருந்தனர் ;அவற்றையெல்லாம் மீண்டும் இந்து மதக் கோவில்களாக மாற்றினான் ; இந்தச் செய்திகள் பெரிய புராணம் முதலிய நூல் களிலும் கல்வெட்டுகளிலும் உள. தமிழகக் கலை வரலாற்றில் ஈடிலாப் படைப்புக்களை உருவாக்கியவன். சிறந்த இசைவல்லவன், ஓவியன், நாடக ஆசிரியன். பல்லவர் வரலாற்றில் குறிப்பிடத்தக்க புகழ் எய்தியவன்.
பட்டங்கள்
இப்பேரரசனுக்குப் பல பட்டப் பெயர்கள் இருந்தன. குணபரன், விசித்திர சித்தன், போத்தரையன், சத்ருமல்லன், மத்தவிலாசன் போன்ற பல பட்டப் பெயர்கள் இவனது சாசனங்களில் காணப்பெறுகின்றன.
புள்ளலூர் எனும் இடத்தில் சாளுக்கிய மன்னன் புலிகேசியையும், கங்கமன்னன் துர்வீநீதனையும் இவன் வென்று தன் வீரத்திற்குப் பெருமை சேர்த்தான்.
மத்தவிலாச பிரகசனம் எனும் நாடகநூல் இப்பேரரசனால் எழுதப் பெற்றதாகும். பல்வேறு சமயங்களைப் பற்றிய செய்திகளையும், நல்லொழுக்கம் பற்றி வலியுறுத்துகின்ற செய்திகளையும் நகைச்சுவை உணர்வோடு இந்நாடகநூல் விவரித்துக் கூறுகின்றது. மகேந்திரவர்ம பல்லவனின் புலமை இந்நூல் வாயிலாக வெளிப்படுகின்றது.
சிறந்த இசைப்புலவனாக வாழ்ந்த மகேந்திர பல்லவன் ‘சங்கீர்ணஜாதி‘ எனும் இசைப் பண்ணைத் தானே அமைத்துச் சிறப்பெய்தினான். ஒப்பற்ற கவியாகவும் விளங்கினான். திருச்சிராப்பள்ளிக் குடைவரைப் பாடல்கள் இவனால் எழுதப்பெற்றவை என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும். சித்திரக்காரப்புலி என்ற பட்டம் புனைந்து, ஓவியக்கலை வளர்ப்பதில் பெரும் பணி புரிந்திருக்கிறான். மண்டகப்பட்டு, மகேந்திரவாடி, மாமண்டூர், வல்லம், பல்லவபுரம், தளவனூர், திருச்சிராப்பள்ளி போன்ற இடங்களில் மலையைக் குடைந்து, குடை வரைக் கோயில்களை உருவாக்கினான். சுதை, மண், கல், மரம், உலோகம் ஆகியவை இன்றிப் புதுமையான கோயில்களை உருவாக்கியவன் இவன் என அவனது மண்டகப்பட்டுக் கல்வெட்டு கூறுகின்றது.
***
பாண்டிய நாட்டு ராணி மங்கையற்கரசி

Queen Magaiyarkarasi
மங்கையற்கரசி சோழர் குலப் பெண்மணி ; மாபெரும் சிவ பக்தை; பாண்டிய மகாராஜாவுக்கு வாக்குப்பட்டாள் பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறன் சைவ சமயத்திலிருந்து சமண சமயத்திற்கு மாறி சமணர்களோடு சேர்ந்தான். இதனால் பாண்டிய நாட்டிலிருந்த கோவில்களெல்லாம் பாழாகி சமணர்களின் பள்ளிகளாக மாறலாயின;
இதையெல்லாம் பார்த்த பாண்டி மாதேவியான மங்கையர்க்கரசியார் மிகவும் வேதனையும் கவலையும் அடைந்தாள். அமைச்சராக இருந்த குலச்சிறையாரிடம் ஆலோசனை செய்தாள்.
சைவம் தழைக்க வந்துதித்த திருஞானசம்பந்தர் திருமறைக்கா ட்டுக்கு எழுந்தருளியிருப்பதை அவர்கள் அறிந்து தூதர்கள் மூலம் அழைப்புவிடுத்தார்கள் . ஞானசம்பந்தர், நமசிவாய மந்திரத்தை ஜபித்த வண்ணம் சிவிகையில் மதுரை நோக்கிச் சென்றார்.
மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை
வரிவளைக் கைம்மடமானி
பங்கயச் செல்வி பாண்டிமாதேவி
பணி செய்து நாள்தோறும் பரவப்
பொங்கழலுருவன் பூத நாயகன் நால்
வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த
ஆலவாயாவதும் இதுவே
என்று தொடங்கி பதிகம் பாடினார் அதில் மங்கையர்கரசியின் சிவபக்தியைப் பெரிதும் புகழ்ந்து பாடியிருக்கிறார்.; இதற்குள் சமணர்கள் சம்பந்தர் தங்கிய மடத்தில் தீ வைத்தார்கள். அமணர்கள் இட்ட தீத்தழல் போய் ”பையவே சென்று பாண்டியர்க்காகவே” எனப் பாடினார். சம்பந்தரின் வாக்குப்படியே சமணர்கள் இட்ட தீ மன்னனிடம் வெப்பு நோயாக உருவெடுத்தது. யாராலும் தீர்க்கமுடியாத நோயை சம்பந்தர் மீனாட்சி கோவில் விபூதி மூலம் தீர்த்துவைத்தார் ; அப்போது அவர் பாடியதே
‘மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு, துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு, சமயத்திலுள்ளது நீறு
செந்துவர் வாய் உமை பங்கன் திரு
ஆலவாயன் திருநீறே’
பின்னர் நடந்த அனல்வாதம், புனல் வாதப் போட்டிகளில் சம்பந்தர் வென்றார் ; அவைகளில் தோற்றால், கழுமரத்தில் ஏறி உயிர்விடுவோம் என்று 8000 சமணர்கள் வீ ரவசனம் பேசியிருந்தனர் ; சம்பந்தர் வெற்றிபெற்றவுடன் நிறைய சமணர்கள் சைவர்களாக மாறினர்; ஏனையோர் கழுவேறினர் .
பாண்டிய நாட்டிற்கே கேடு வந்த சமயம் மங்கையர்க்கரசியார் மிகவும் சாதுரியமாக முடிவெடுத்து அமைச்சர் குலச்சிறையாருடன் சென்று சம்பந்தர் மூலமாக அக்கேட்டை நீக்கினாள்; மன்னனையும் மீட்டெடுத்தாள். நாட்டையும் வீட்டையும் தக்க சமயத்தில் கைகொடுத்துக் காப்பாற்றினாள். மங்கையர்க்கரசி மங்கையர்க்கு எல்லாம் அரசியாகி 63 நாயன்மார்களில் ஒரு நாயன்மாராகவும் சிறப்பித்துப் பேசப்படுகிறார். பெரிய புராணத்தில் அழகிய செய்யுட்களால் சேக்கிழார் நமக்கு இந்தக்கதையை செப்புகிறார்.
***
மங்கம்மாள் , ராணி மங்கம்மாள்
திருச்சியிலிருந்து மதுரையை அரசாண்ட ராணி மங்கம்மாளைப் பற்றி பல கதைகள் உண்டு. எகிப்திய பேரழகியும் ஆட்சியாளருமான கிளியோபாட்ராவைப்போலவே இவரும் அழகானவர்; பல போர் புரிந்தவர். அவரைப் போலவே அழகால், சாதுர்யத்தால் ஆட்சி உரிமை பெற்றவர். மிகவும் திறமையான ஆட்சியாளர். மதுரை நகர் முழுதும் இன்றும் இவர் புகழ் பாடும் கட்டடங்களும் சாத்திரங்களும் சின்னங்களும் இருக்கின்றன மர்மமான முறையில் (சிறையில்?) இறந்தார். ஆனால் இந்தச் செய்திகளில் சில, உறுதிப்படுத்தப் படாத செய்திகள். அவர் காலத்தில் வாழ்ந்த சின்ன வெங்கண்ணா, மங்கம்மாளைக் கிண்டல் செய்து எழுதிய கவிகளில் இருந்து பெறப்பட்ட கிளுகிளு செய்திகள் இதோ :.அவர் சொல்லும் ரகசியம்: மங்கம்மாளின் இயற் பெயர் கனகா; அவர் தந்தை சந்திரகிரி துபாகுல நாயகர். அவர் ஒரு நடன மாது. வேலை தேடி தஞ்சை விஜயராகவரின் அரசவைக்குச் சென்றார். அவர் அந்தப்புரத்தில் சேர்க்க தயாராக இருந்த தருணத்தில் எப்படியோ மதுரை சொக்கநாத நாயகரை (1659-1682) மணந்தார். மங்கம்மாளின் மகன் முத்துவீரப்ப நாயகர் (1682-1689) சிறிது காலம் ஆண்டு இறந்துவிட்டார். உடனே பேரன் விஜரங்க சொக்கநாத நாயக்கரின் பேரில் 1689-ல் ஆட்சியை ஏற்றுக்கொண்டார்.
. மதுரை முழுதும் அன்ன சத்திரங்களைக் கட்டினார். கோவில்களுக்கும் பிராமணர்களுக்கும் வாரி வழங்கினார். மதுரை சவுராஷ்டிர சமூகத்துக்குப் பிராமண அந்தஸ்து வழங்கினார். காவிரிப் பிரச்சினை இவர் காலத்தில்தான் துவங்கியது. சிக்கதேவராயன் காவிரி நதியின் குறுக்கே கண்ணம்பாடியில் அணை கட்டி தஞ்சைப் பாசனத்தைத் தடுக்கவே போர்க் குரல் எழுப்பினார். கடவுள் அருளால் பெரு மழை, வெள்ளத்தில் அணை உடைந்தது. காவிரிப் பிரச்சினையும் தீர்ந்தது. இவர் கடைசி காலத்தில் சிறையில் இறந்ததாக ஒரு செய்தி. எது எப்படியாகிலும் இவரது சத்திரங்களும், கோவில், மசூதி, கிறிஸ்தவ சர்ச்சுகளுக்குக் கொடுத்த தானங்களும், மதுரை தமுக்கம் அரணமனையும் (இப்போது காந்தி மியூசியம்), மீனாக்ஷி கோவில், திருப்பரங்குன்றம் கோவில்களும் இருக்கும் வரை மங்கம்மாளின் புகழ் மங்கவே மங்காது.
மொகலாயப் பேரரசன் அவுரங்கசீப் தனது ஒரு செருப்பை நாடு முழுதும் ஊர்வலம் விட்டான். அஸ்வமேத யாக குதிரை போகும் இடம் எல்லாம் எப்படி பாரதீய சக்கரவர்த்திகளுக்குச் சொந்தமானதோ அதே போல செருப்பு போனமிடம் எல்லாம் கப்பம் கட்டவேண்டும். ராணி மங்கம்மாள் மிகவும் தைரிய சாலி. அவனது படைத் தளபதி அந்த ஒற்றை செருப்பை காலில் மாட்டிக்கொண்டு மற்றொரு செருப்பு எங்கே என்று கேட்டான். ஆனால் பின்னர் ராமநாதபுரத்தின் கிழவன் சேதுபதி, மைசூரின் சிக்க தேவராயா தஞ்சை மன்னன் ஷாஜி, திருவாங்கூர் மன்னன் ரவிவர்மா ஆகியோர் தொல்லை கொடுக்கவே அவுரங்கசீப்புடன் சமரசம் செய்துகொண்டு கப்பம் கட்டினார்.
அழகால் ஆட்சி பெற்றதும், போர் முனைகளில் எதிரிகளைச் சந்தித்ததும், மர்மமான முறையில் இறந்ததும் இவரை கிளியோபாட்ராவுக்கு அருகில் அழைத்துச் செல்கிறது.
***
மாணிக்கவாசகர்

Manikkavasagar
மதுரைக்கு அருகிலுள்ள திருவாதவூரில் பிராமண குலத்தில் பிறந்த இவரை அரிமர்த்தனன் என்னும் பாண்டியன் அழைத்து அமைச்சர் ஆக்கினான் ; கடற்கரைப் பகுதியில் அராபிய வணிகர்கள் குதிரைகளைக் கொண்டுவந்திருப்பதை அறிந்த மன்னன், மாணிக்கவாசகரிடம் பொற்காசுகளைக் கொடுத்து அனுப்பினான் ; திருப்பெருந்துறையில் ஒரு புனித குருவினை கண்டவுடன் அவர் வசப்பட்டு அரச பணியை மறந்தார் . மன்னர் இவரை அழைத்து பல தண்டனைகளை கொடுத்தான் பின்னர்தான் மன்னருக்குத் தெரிந்தது – இவர் சிவபக்தர் அதைத் தெரிவிக்கவே நரி -பரி லீலைகள் நடந்தன என்று; அவரை விடுதலை செய்து அனுப்பியவுடன் அவர் யாத்திரை செய்து திருவாசகத்தைப் பாடினார். சிதம்பரத்தில் புத்த பிட்சுக்களை வாதத்தில் வென்ற பின்னர் அங்கே கோவிலில் இறைவன் அடி சேர்ந்தார்
அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் என்ற நால்வர் சைவ சமயத்தின் மாபெரும் தூண்கள்.
மாணிக்கவாசகர் வாழ்ந்த காலம் என்ன? அவருடைய பெயர் என்ன? யாருக்கும் விடை தெரியாத கேள்வி. தேவாரம் பாடிய மூவருக்கு முன்னால் இவர் வாழ்ந்திருந்தால் அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரும் இவர் பெயரைச் சொல்லாதது ஏன்? நாயன்மார்கள் பட்டியலில் இவர் பெயர் இல்லாதது ஏன்? இந்த மூவருக்கும் பின்னால் அவர் வாழ்ந்திருந்தால் திருவாசகத்திலோ, திருக்கோவையாரிலோ மூவரையும் மாணிக்கமாவது குறிப்பிட்டிருப்பாரே! ஏன் குறிப்பிடவில்லை? மதுரை வரை வந்து கூன் பாண்டியனை நின்ற சீர்நெடுமாறனாக்கிய சம்பந்தரை எப்படி மாணிக்கம் மறக்கமுடியும்?
சுருக்கமாகச் சொன்னால் மூவரை மாணிக்கவாசகர் குறிப்பிடவில்லை. ‘மாணிக்கவாசகர் மூவர் குறிப்பிடவில்லை. திருவாசகத்தில் உள்ள திருவெம்பாவையைப் பாடியவர், திருக்கோவையார் என்னும் நூலையும் அவர் இயற்றியதை அறிஞர் உலகம் ஒப்புக்கொள்கிறது. அதில் சைவத்தில் பற்றுள்ள ஒரு வரகுணனைப் பற்றி ஒரு குறிப்பும் உள்ளது. அதைக் கொண்டு மாணிக்கவாசகர் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று பலரும் முடிவு கட்டிவிட்டனர். ஆனால் தற்போதைய ஆராய்ச்சிகள் இது பிழை என்றே காட்டுகின்றன. அப்பர் தேவாரத்திலும், திருவிளையாடல் புராணத்திலுமுள்ள செய்திகள் இவர் தேவார மூவருக்கு முந்தியவர் என்று காட்டுகின்றன மேலும் ‘வரகுண’ என்பது ஒரு அடைமொழி. யாரும் வைத்துக் கொள்ளலாம். உண்மையில் மாணிக்க வாசகரின் இயற்பெயர் எவருக்கும் தெரியாது இவர் பிறந்தது திரு வாதவூர் என்பதால் அந்த ஊரின் கடவுளான சத்ய வாகீஸ்வரர் இவர் பெயர் என்று கருதலாம் அதையே பின்னர் நமபியாண்டார் நம்பி முதலியோர் பொய் அடிமை இல்லாத புலவர் என்று பாடினார்கள்
அறுபத்து மூவர் வரலாற்றைக் கூறும் அகஸ்திய பக்த விலாசம் என்ற சம்ஸ்கிருத நூலும் பொய் அடிமை இலாத புலவரை ‘ஒருவர்’ என்றே கூறி அவருடைய பெயர் ஸத்யதாசன் என்றும் குறித்துள்ளது. அவர் வேதபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர், அந்தண குலத்தவர் 12 ஆண்டுப் பரமனைப் பாடிப் பரவி சிவபதம் அடைந்தார்.
மாணிக்க வாசகரின் பெயர் ஸத்தியதாசன். ஏனெனில் மேலே சத்யதாசனுக்குச் சொன்ன எல்லா விஷயங்களும் கச்சிதமாகப் பொருந்துகிறது. அதைவிட முக்கிய விஷயம் வேதபுரம் என்பது திருவாதவூரே! வேதபுர என்பது தமிழில் வாதவூர் என்று எழுதப்படும். திருவாதவூர் சுவாமிக்குப் பெயர் வேதபுரீஸ்வரர்!
–subham—
Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 60; இந்து மத கலைச்சொல் அகராதி-60, மாணிக்கவாசகர், ராணி மங்கம்மாள், பாண்டிய ராணி, மங்கையற்கரசி , மகரிஷி, மாண்டவ்யர் , ரிஷி, முனிவர் ஆணி மாண்டவ்ய