
WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,706
Date uploaded in London – 7 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
3-5-26 தினமணி இதழில் கொண்டாட்டம் பகுதியில் வெளியாகியுள்ள கட்டுரை.
உற்சாகம் தரும் இசை – இசைக்கும் மூளைக்கும் உள்ள நல்ல தொடர்பு!
ச. நாகராஜன்
இசைக்கும் மூளைக்கும் உள்ள தொடர்பு பற்றிய நியூயார்கர் பத்திரிகையின் சமீபத்திய கட்டுரை உலகில் உள்ள அனைவரையும் கவர்ந்திருக்கிறது.
இசையைக் கேட்டவுடன் ஏன் உணர்ச்சி வசப்படுகிறோம்; கவரப்படுகிறோம்?
எப்படி இசையால் கவரப்படுகிறோம் என்பது ஒரு புறமிருக்க ஏன் இசையால் நாம் கவரப்படுகிறோம் என்பது அடுத்த கேள்வி.
ஆனால் இப்போது எப்படி இசையால் நாம் கவரப்படுகிறோம் என்ற கேள்விக்கு நவீன அறிவியல் ஆராய்ச்சி பதில் தந்து விட்டது.

இசை அனைவரிடமும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவது கண்கூடு. உலகில் ஐந்து சதவிகிதம் பேர்களே இசையால் நல்ல தாக்கத்தைக் கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு இசை அன்ஹெடோனியா (Musical Anhedonia) என்ற நிலை இருப்பதாக அறிஞர்கள் கூறுகிறார்கள். அதாவது இசை இன்பத்தைப் பருக முடியாதவர்கள் இவர்கள்!
ஏன் இசை நம்மை உணர்ச்சிபூர்வமாக பாதிக்கிறது என்றால் நமது மரபணுவிலேயே அந்த உணர்ச்சி ஊறி இருக்கிறது என்பது ஒரு பதிலாகும்.
எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
நாற்பதினாயிரம் வருடங்களுக்கு முன்னரே புல்லாங்குழல் போன்ற ஒரு கருவியை மனிதன் படைத்து வாசித்து மகிழ்ந்தான் என்கிறது வரலாறு. அதாவது வார்த்தைகள் இல்லாத இசை கூட நம்மை உணர்ச்சிபூர்வமாக பாதிக்கிறது என்பதை இதன் மூலம் அறிகிறோம்.
மாண்ட்ரீலில் உள்ள ஜடோரே சோதனைச்சாலையில் இசை ஆர்வலர்களின் மூளைகளைப் பரிசோதிக்க ஆரம்பித்தனர். மூளையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான வரித்திரளி (Striatum) சந்தோஷமான தருணங்களில் டோபமைனைச் சுரக்கிறது என்று கண்டுபிடித்தனர். டோபமைன் என்பது -‘ஃபீல் குட் கெமிகல்’- நல்ல உணர்வை நல்கும் மூளை இரசாயனம் என்பதை அனைவரும் அறிவர்.
தங்களுக்கு மிகவும் பிடித்த பாடல்களைக் கேட்குமாறு சோதனையில் பங்கு கொண்டோர் கூறப்பட்டனர். என்ன ஆச்சரியம்! அவர்களின் மூளையின் சந்தோஷம் தரும் பகுதி நன்கு ஊக்குவிக்கப்பட்டதை ஆய்வாளர்கள் கண்டனர்.
அமி பெல்ஃபி என்ற பெண்மணி இசை ஆராய்ச்சியில் முதன்மையானவர். இவரி மிஸௌரி பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றுபவர். இசையானது இன்பம் பயக்கும் ஒன்று என்பதை அறிவியல் ஆய்வுகள் மறுக்க முடியாதபடி நிறுவுகின்றன என்கிறார் இவர்.
ஆகவே கவலையா, மனச்சோர்வா, உடல்நல பாதிப்பா எதானாலும் சரி, உங்களுக்குப் பிடித்த இசையைக் கேட்க ஆரம்பித்தால் நீங்கள் உணர்வூக்கம் பெற்று உற்சாகம் அடைவீர்கள். மூளையில் டோபமைன் அதிகமாகச் சுரக்கும்; இன்ப உணர்ச்சியைத் தரும்!
பழைய பாடல்களைக் கேட்டால் அந்தக் காலத்திற்கே சென்று அதிக இன்பத்தையும் அனுபவிப்பீர்கள்.
சங்கீத சௌபாக்கியமே என்றும் குன்றாத பெரும் பாக்கியமே என்பது உண்மை தான்!
***