Written by London Swaminathan
Post No. 15,775
Date uploaded in London –23 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART 32
திருமெய்யம்
தாயார் : ஸ்ரீ உய்ய வந்த நாச்சியார்
மூலவர் : ஸ்ரீ சத்ய கிரிநாதன்
உற் சவர்: ஸ்ரீ மெய்யப்பன்
கடவுளர்கள்: சத்யாகிரி நாதன் ,உஜ்ஜீவனா
திருமெய்யம் (திருமயம்) என்பது தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு ஆன்மீகத் தலமாகும். இது பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 43-வது திருப்பதியாகவும், கலைநயம் மிக்க குடைவரைக் கோயில்களைக் கொண்ட பகுதியாகவும் புகழ்பெற்றது.
திருமெய்யம் கோயிலின் சிறப்பம்சங்கள்:
இரட்டை குடைவரைக் கோயில்கள்: ஒரே குன்றின் அடிவாரத்தில் சிவபெருமானுக்கும் (சத்தியகிரீஸ்வரர்), பெருமாளுக்கும் (சத்தியமூர்த்தி பெருமாள்) அடுத்தடுத்து குடைவரைக் கோயில்கள் அமைந்துள்ளன. குன்றின் மேற்பகுதியில் மற்றொரு லிங்கமும் உள்ளது.
சத்தியமூர்த்தி பெருமாள்:
மூலவர் சத்யமூர்த்தி பெருமாள்
ஆதிசேஷன் மீது சயனக் கோலத்தில் காட்சியளிக்கிறார்.
இது பெருமாளின் மிக நீண்ட சயனத் திருக்கோலங்களில் ஒன்றாகும்.
வரலாற்றுச் சான்றுகள்: இங்குள்ள கல்வெட்டுகள், பல்லவர் மற்றும் பாண்டியர் காலமான கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
திருமயம் கோட்டை: இக்கோயிலை ஒட்டி அமைந்துள்ள திருமயம் கோட்டை, 17-ஆம் நூற்றாண்டில் விஜயரகுநாத சேதுபதியால் கட்டப்பட்டது. இந்த பிரமாண்ட கோட்டையைச் சுற்றி பெரிய அகழியும் உள்ளது.
புதுக்கோட்டையிலிருந்து சுமார் 18-20 கி.மீ தொலைவில் காரைக்குடி செல்லும் வழியில் உள்ளது. அருகிலுள்ள நகரங்கள்: புதுக்கோட்டை மற்றும் காரைக்குடி.
கோயிலுக்குப் பின்னால் குன்றின் கீழே ஒரு எண்கோண வடிவில் ஒரு குளம் உள்ளது. குன்றின் மேற்புறத்தில் அந்தரத்தில் பாறையைக் குடைந்து அதில் ஒரு லிங்கத்தை வைத்து அதையும் வழிபட்டு வந்துள்ளனர். சமீபத்தில் அந்த இடத்திற்கு இரும்பில் ஒரு ஏணிப்படி வைத்து மக்கள் ஏறிப் போய் வழிபட வசதி செய்து வைத்துள்ளனர் . இங்கு ஓரிரு கிரந்த கல்வெட்டுக்கள் உள்ளன. அதனை வைத்து இந்த மூன்று கோயில்களின் காலத்தை கி.பி 8 -9 ம் நூற்றாண்டு என்று அறியமுடிகிறது இங்கு கட்டபொம்மனும், அவன் தம்பி ஊமைத்துறையும் வந்து தங்கியிருக்கின்றனர்.இன்று அந்த கோட்டையின் பாதி மட்டுமே உள்ளது. மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.இங்குள்ள செங்காவியில் வரையப்பட்டிருக்கும் பாறை ஓவியங்கள். 5000 வருடங்களுக்கும் முந்தையாதாக இருக்க வேண்டும். .இங்கிருந்து ஆவுடையார் கோயில், சித்தன்ன வாசல், குடுமியான் மலை, கொடும்பாளூர் போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களுக்கும் செல்லலாம்.
திருமெய்யம் குன்றின் செங்குத்தான தென்முகச்சரிவில் சத்யகிரீஸ்வரருக்கும் (சிவன்) திருமெய்யருக்கும் (பெருமாள்) குடைவரை குகைகோயில்கள் அடுத்தடுத்து ஒன்றுக்கொன்று அறுபதுதடி தூரத்தில் அமைந்துளது. இரண்டு குடைவரைகளுள் ஒன்று திருமெய்யர் (பெருமாள்) குடைவரைக் கோவிலாகும். திருமெய்யத்தில் பதின்மூன்றாம் நூற்றாண்டுவரை ஒரு வழியாகவே சத்யகிரீஸ்வரரையும், திருமெய்யரையும் தரிசிக்கும் படியாகத்தான் சன்னதிகள் அமைந்திருந்தன. சத்யகிரீஸ்வரர் கோவிலுக்கும் திருமெய்யர் – சத்தியமூர்த்திக் கோவிலுக்கும் இடையே பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் ஏற்பட்ட சைவ வைணவப் பூசல் இரு கோவில் வளாகங்களுக்கு இடையில் ஒரு மதிற்சுவர் கட்டிப் பிரிக்கும் அளவிற்கு நீண்டது.
ஐந்து நிலை இராஜகோபுரம்
தெற்கு நோக்கிய ஐந்து நிலை இராஜகோபுரம் பாண்டியர்களின் கி.பி. 13-14 ஆம் நூற்றாண்டையொட்டிய கலைப்பணியாக இருக்கலாம். இராஜகோபுரவாயிலுக்கும் இரண்டாம் வாயிலுக்கும் இடையில் நீளமான மண்டபம் அமைந்துள்ளது. இது நாயக்கர் காலத்தில் (16 ஆம் நூற்றாண்டில்) கட்டப்பட்டிருக்கலாம். இம்மண்டபத்தின் மேற்குப்புறத்தில் சக்கரத்தாழ்வார், ஆண்டாள், கிருஷ்ணர் ஆகியோருக்குக் கிழக்கு நோக்கிய சன்னதிகள் உள்ளன. மண்டபத் தூண்களில் மதுரைவீரன் பொம்மியைக் கடத்திச் செல்லும் சிற்பத் தொகுப்பு, குறவன், குறத்தி, நாயக்க வீரன், நடனமாடும் மங்கையர் ஆகிய சிற்பத் தொகுதிகள் காணப்படுகின்றன.
உய்யவந்த நாச்சியார் சன்னதி
இரண்டாம் வாயில் வழியாகப் பிரகாரத்துக்குள் நுழைந்ததும் மேற்கில் உய்ய வந்த தாயார் சன்னதியைக் காணலாம். கிழக்கு நோக்கியுள்ள இச்சன்னதி முகமண்டபம், முன்று தளத்துடன் கூடிய விமானத்துடன் கூடியது. கருவறையில் உய்யவந்த நாச்சியார் என்ற உஜ்ஜிவனித் தாயார் பட்டாடை உடுத்தி அர்த்தபத்மாசனத்தில் காட்சி தருகிறார்.
சுந்தரபாண்டியன் குறடு
பிரகாரத்தின் தென்கிழக்கில் நீளமான மேடையில் ஆழ்வார்களும் மதுரகவி மற்றும் இராமானுஜர் போன்ற ஆச்சார்யார்களும் கட்சி தருகிறார்கள். எதிரில் உள்ள தூண்களில் தசாவதார சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அடுத்து மடைப்பள்ளி உள்ளது. இரண்டாம் வாயிலில் நுழைந்தவுடன் எதிரில் பலிபீடத்தையும் கொடிமரத்தையும் காணலாம். இவற்றின் பின்புறம் காணும் பெரிய மண்டபத்திற்குச் சுந்தரபாண்டியன் குறடு என்று பெயர்.
சுந்தரபாண்டியன் குறட்டினை அணைத்துள்ள பிரகாரத்தின் மேற்குப் பகுதியில், இக்கோவில் வளாகத்தைச் சத்தியகிரீஸ்வரர் கோவிலிலிருந்து பிரிக்கும் மதில்சுவரைக் காணலாம். இந்த மேற்குப் பிரகாரத்தின் முடிவில் பள்ளி கொண்ட பெருமாளின் குடைவரைக் கோவில் அமைந்துள்ளது. பிரகாரத்தையொட்டி ஒரு மூன்றிலைத்தாண்டியதும் ஒரு சிறு மண்டபம் உள்ளது. இந்தச் சிறுமண்டபத்தியொட்டி பள்ளிகொண்ட பெருமாளின் சன்னதி அமைந்துள்ளது.
பள்ளி கொண்ட பெருமாள் சன்னதி
இங்குப் பள்ளி கொண்ட பெருமாள் என்ற யோகசயன மூர்த்தி அனந்தசயனநிலையில் காட்சி தருகிறார். ஆதிசேஷன் என்ற பாம்பணையில் மேற்கில்தலைவைத்துக் கிழக்கில் காலை நீட்டியபடி தெற்கு நோக்கி அரிதுயில் கொள்ளும் பெருமாளின் உருவம் சுமார் 30 அடி அல்லது 9 மீட்டர் நீளத்தில் குகை முழுதும் வியாபித்துள்ளது.
தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மா பெருமாளின் நாபிக்கமலத்திலிருந்து தோன்றுகிறார். மார்பினில் லட்சுமியும் காலருகே பூதேவியும் வீற்றிருக்கிறார்கள். பிரம்மாவின் அருகில் சப்தரிஷிகளும் தேவர்களும் காட்சிதருகிறார்கள். ஆதிசேஷன் பின்னால் கருடன் நிற்கிறார். இவர்கள் அருகே தர்மராஜன், சித்திரகுப்தன், சந்திரன், சூரியன், ராகு ஆகியோர் காணப்படுகின்றனர். மது கைடபர்கள் பெருமாளை தாக்குவதற்காக இவரின் காலருகே நிற்கிறார்கள். பெருமாளின் ஐந்து ஆயுதங்களில் நான்கு ஆயுதங்களான சுதர்ஷன சக்கரமும், பாஞ்சஜன்யம் என்னும் சங்கையும், நந்தகம் என்னும் வாளினையும், கௌமோதகி என்னும் கதையையும் காட்டப்பட்டுள்ளது. படமெடுத்தாடும் ஆதிசேஷன் தன் ஐந்து தலைகளிலிருந்து மது கைடபர்களை நோக்கி நெருப்பை உமிழ்கிறார். மது கைடபர்களை நோக்கி தீ ஜுவாலைகள் பரவுகின்றன. இவை தவிர, கானப்பறை, பேரிகை, சல்லிகை, தக்கை, தண்ணுமை தடாகமும், தடாரி, உடுக்கை, கிடக்கை, கரடிக்கை முதலான பண்டைக்காலக் கருவிகளும் மலையில் வடிக்கப்பட்டுள்ளன. பிற வைணவ தலங்களில் காணப்படும் அனந்தசயனகோலங்களைவிடத் திருமயம் அனந்தசயனக்கோலம் மிகவும் அழகானது என்பது என் கருத்து.
சத்தியமூர்த்தி சன்னதி
சுந்தரபாண்டியன் குறட்டுட்டைத் தாண்டி அமைந்துள்ள ஒரு இடைநாழிகையைத் தாண்டினால் சத்தியமூர்த்தியின் சன்னதியை அடையலாம். இந்தச் சன்னதி ஒருதள விமானம், முகமண்டபம், பிரகாரம் என்று அமைந்துள்ளது. அதன் நுழைவாயிலைப் பக்கத்திற்கொருவராக இரண்டு துவாரபாலகர்கள் காக்கின்றனர். இக்கோவிலில் நின்றகோலத்தில் காட்சிதரும் மற்றோரு மூலவர் இவர். வலது முன் கை அபய முத்திரையும், இடது முன் கை கடியவலம்பிதமும் காட்ட, பின் கைகள் சங்கு சக்கரம் ஏந்தி. கிரீடம், மகரகுண்டலம், அணிகலன்கள் பூண்டு அலங்காரபுருஷராய் சத்தியமூர்த்திப் பெருமாள் காட்சி தருகிறார். இடப்புறம் கருடன் நின்றநிலையில் காட்சி தருகிறார். அவரையடுத்து இலட்சுமி அமர்ந்கோலத்தில் காட்சி தருகிறார். பெருமாளின் வலப்புறம் புரூரவச் சக்கரவர்த்தி நின்ற கோலத்தில் காணப்படுகிறார்.
விஜயநகர மன்னர்கள் ஆட்சியில், தற்போது காணப்படும் அமைப்பில், மூலவரின் குடைவரைக்கு முன்பு உள்ள சிறிய மண்டபம், மற்றோரு மூலவர் சத்தியமூர்த்திப் பெருமாளுக்கான கருவறை, விஷ்வக்ஷேனர்,இராமர், தாயார் ஆகியோருக்கான கருவறைகள், மண்டபங்கள், கோபுரங்கள் எல்லாம் கட்டப்பட்டன. கோவில் வளாகத்தில் இன்னும் பல சன்னதிகள் உள்ளன.
***
Following pictures are taken from other websites; thanks.



ஆழ்வார்கள் மங்களாசாசனம்
மையார் கடலும் மணிவரையும் மாமுகிலும்,
கொய்யார் குவளையும் காயாவும் போன்றிருண்ட
மெய்யானை, மெய்ய மலையானைச் சங்கேந்தும்
கையானை, கைதொழா கையல்ல கண்டாமே.
(நாலாயிர திவ்ய பிரபந்தம் பெரியதிருமொழி 2016-பாசுரம்)
திருமங்கை ஆழ்வார் தன் பாசுரத்தில் இங்குள்ள பெருமாளை ‘மெய்யமலையான்’ என்று குறிப்பிடுகிறார். கல்வெட்டுகளில் பெருமாள் பள்ளிகொண்டருளின ஆழ்வார் என்றும் அழகியமெய்யர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
திருவிழா
வைகாசி 10 நாள் திருவிழா மற்றும் பவுர்ணமி தேர்: சத்தியமூர்த்தி பெருமாளுக்கு ஆடி மாதம் காப்பு கட்டி 10 நாள் திருவிழா நடைபெறும். ஆடி கடைசி அன்று சத்தியமூர்த்தி பெருமாள் தேரில் உலா வருவார்.
ஆடிப்பூரம் 10 நாள் திருவிழா.
திருமெய்யருக்கு வருடந்தோறும் சித்திரை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை திருப்பாவாடை என்ற அன்னக்கூடை உத்ஸவம் நடைபெறும்.
பாசுரங்கள்
1524.
கட்டு ஏறு நீள் சோலைக்* காண்டவத்தைத் தீ மூட்டி
விட்டானை* மெய்யம் அமர்ந்த பெருமானை*
மட்டு ஏறு கற்பகத்தை* மாதர்க்கு ஆய்* வண் துவரை
நட்டானை நாடி* நறையூரில் கண்டேனே.
1852.
சுடலையில்* சுடு நீறன் அமர்ந்தது ஓர்*
நடலை தீர்த்தவனை* நறையூர்க் கண்டு,* என்-
உடலையுள் புகுந்து* உள்ளம் உருக்கிஉண்*
விடலையைச் சென்று காண்டும்* மெய்யத்துள்ளே.
2016.
மைஆர் கடலும்* மணிவரையும் மாமுகிலும்,*
கொய்ஆர் குவளையும் காயாவும்* போன்றுஇருண்ட*
மெய்யானை மெய்ய மலையானை* சங்குஏந்தும்
கையானை கைதொழா* கைஅல்ல கண்டாமே.
–SUBHAM—
TAGS- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-32; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், PART 32, திருமெய்யம்