
WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,774
Date uploaded in London – 23 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
15-5-26 மங்கையர் மலர் இதழில் வெளியான கட்டுரை!
பெண் சாமுராய் உண்டா? ஆச்சரியத் தகவல்!
ச. நாகராஜன்
ஜப்பானைச் சேர்ந்த சாமுராய்கள் பற்றிய ஏராளமான தகவல்கள் உண்டு.போரிடுவதில் வல்லவர்கள் அவர்கள். அவர்களுக்கென்று ஒரு தனி விதி உண்டு.

ஆனால் இப்போதைய கேள்வி பெண்களில் சாமுராய் உண்டா?
உண்டு. பெண் சாமுராய்கள் இருந்தது பற்றிய ஆச்சரியகரமான தகவல்கள் இப்போது திரட்டப்பட்டுள்ளன.
ஆனால் அவர்கள் அரிதாகவே ஜப்பானில் இருந்துள்ளனர்.
சாமுராய் என்பவர்கள் ஒரு தனிப்பட்ட சமூகக் குழுவினராவர். அவர்கள் “புஷி” வகுப்பினர் என்று அழைக்கப்பட்டனர். இந்தக் குழுவில் பிறந்த பெண்கள் சண்டையிடவில்லை என்றாலும் கூட அந்த வகுப்பில் பிறந்ததாலேயே சாமுராய் பெண்கள் என்று அழைக்கப்பட்டனர். ஒன்னாமுஷா என்றால் போர் வீராங்கனைகள் என்று பொருள்.
‘வரலாற்றில் போர்’ என்ற இதழில் வெஸ்டர்ன் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டயானா ரைட் என்ற பேராசிரியை ஒரு ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளார்.
ஜப்பானில் 1868ம் ஆண்டு முதல் 1869 முடிய நடைபெற்ற ‘போஷின் போரில்’ பெண் சாமுராய்கள் கலந்து கொண்டு போரிட்ட செய்தி இப்போது ஆதாரபூர்வமாக சேகரிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் ஜப்பானின் வட பகுதியான அய்ஜூ நிலப்பரப்பை ஆண்ட ஷோகுனேட் வீரர் படையில் அங்கம் வகித்துள்ளனர்.
20 முதல் 30 பெண் சாமுராய்கள் ஒரு தனிப்படையாக இருந்துள்ளனர். இவர்களில் பத்துப் பேரை பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இவர்களில் இருபத்தியிரண்டே வயதான நகானோ டகிகோ என்ற பெண்மணியே தனிப் பெரும் தலைவியாக இருந்துள்ளார்.
பெரிய போர்வாள்களையும் நகினடா என்ற வளைந்த கத்தியையும் கொண்டிருந்த வீராங்கனைகள் யானாகி பாலத்தின் அருகே நடந்த சண்டையில் பங்கு கொண்டிருந்தனர். அங்கு துப்பாக்கிகளும் பயன்படுத்தப்பட்டன.
நகானோ சுடப்படுவதற்கு முன்னர் பலரைத் தனது நகினடாவால் குத்திக் கொலை செய்தார்.
ஜப்பானின் மத்திய பகுதியில் உள்ள ஒரு நகர் நுமாஜு. இங்குள்ள ஒரு மண்மேட்டில் தான் இந்த பெண் சாமுராய்களின் உடல்கள் புதைக்கப்பட்டன என்று வரலாற்று அறிஞர்கள் நம்புகின்றனர். இங்குள்ள மண்டை ஓடுகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. 1989ம் ஆண்டு 105 மண்டை ஓடுகள் ஆராயப்பட்டன. இவை அனைத்துமே இளவயதினரின் மண்டை ஓடுகள். இவற்றில் மூன்றில் ஒரு பங்கு பெண்களின் மண்டை ஓடுகள்!
டகேடா வமிசத்தினருக்கும் ஹோஜோ வமிசனத்தினருக்கும் நடந்த போரான சென்பான் மட்சுபாரா என்று அறியப்படும் போரில் இவர்கள் கலந்து கொண்டிருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இந்த பெண் சாமுராய்களின் வீரத்தைப் பற்றிய ஏராளமான சம்பவங்களை ஜப்பானியர் பேசுகின்றனர். டோமோ ஜோஜென் என்ற பெண்மணி வீரத்துடன் போரில் போரிட்டதைப் பற்றி அனைவரும் பேசுகின்றனர்.
ஆயிரம் போர்வீரர்களை எதிர்கொண்ட ஒரு பெண் சாமுராய் ‘ஹெய்கே கதை’ என்ற வீர நிகழ்ச்சியில் பேசப்படுகிறார்.
1526 முதல் 1543 முதல் வாழ்ந்த ஓஹோரி சுருஹைம் என்ற பெண்மணி தனது தந்தையும் சகோதரர்களும் ஒமிஷிமியா என்ற தீவைக் காக்கும் போரில் கொல்லப்பட்டவுடன் தானே படைக்குத் தலைமை ஏற்றார். பதினாறே வயதான இந்தப் பெண் அதிசயிக்கத்தக்க விதத்தில் தன் தாய்நிலமான இந்தத் தீவைக் காத்தார். ஒரு ஆவியால் வழி நடத்தப்பட்ட இவரை ஜோன் ஆஃப் ஆர்க் என்று கொண்டாடுகின்றனர் மக்கள்.
ஆயிரத்தி எண்ணூற்றி எழுபதுகளில் சாமுராய் இனத்தினருக்கு ஒரு முடிவு வந்தது.
என்றாலும் கூட சில குடும்பங்களில் பெண் சாமுராய்கள் கத்தியைச் சுழற்றி பயிற்சி பெறும் வழக்கம் இன்றும் நிலவுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
கிரேக்க புராணங்களில் அமேஸான் என்ற பெண் வீராங்கனைகள் பேசப்படுகின்றனர். அடுத்து நிஜமாக வாழ்ந்த ஒன்னா முஷா என்று ஜப்பானிய வீராங்கனைகள் பேசப்படுகின்றனர்.
உலகில் பெண் வீராங்கனைகள் தனிப் படையாக இருந்த அதிசய வரலாற்றை ஜப்பானிய வரலாறு கூறுகிறது.
**