HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 66; இந்து மத கலைச்சொல் அகராதி-66 (Post.15,789)

Mariamman Temple in Singapore

Written by London Swaminathan

Post No. 15,789

Date uploaded in London –26 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

PART 66

மாரியம்மன்

தமிழ்நாட்டிலும் தமிழர்  குடியேறிய உலக நாடுகளிலும் வணங்கப்படும் தெய்வம் மாரியம்மன். பார்வதியின் மறு வடிவம் இவள் ; சக்தி மற்றும் துர்க்கையின் அம்சமும் இணைந்தவள் ; அம்மை போன்ற நோய்களுக்கு காரணமானவள்; அவைகளை விலக்குபவளும் அவளே. மலேசியா இலங்கை, மொரீஷியஸ், சிங்கப்பூர், தாய் லாந்து முதலிய நாடுகளிலும் அன்னைக்கு கோவில் உண்டு; மதுரை போன்ற பெரிய நகரங்களிலும் மாரியம்மன் கோவில் இருக்கிறது ; நோய்களும் இயற்கைக் சேதங்களும் வராமல் இருப்பதற்காக கோடை காலத்தில் பொங்கல் வைத்தும், கஞ்சி, கூழ் வார்த்தும் மாவிளக்கு வைத்தும் இவளை வழிபடுகிறார்கள்; உடலில் எந்த பாகம் பாதிக்கப்பட்டதோ அந்த பாகத்தை வெள்ளியில் செய்து உண்டியலில் காணிக்கையாகவும் செலுத்துவார்கள்; சில ஊர்களில் பூக்குழி இறங்குதல் என்னும் தீ மிதித்தல் . முதுகில் கொக்கியை மாட்டி கம்பத்தில் தொங்குதல், தேர் இழு த்தல் ஆகியனவும் மாரியம்மனுக்கு செய்வார்கள்.

Bangkok, Thailand, Muthu Maraiamman Temple

***

மர்ம ஸ்தானம்

உடலில் உயிரை ஆரோக்கியமான நிலையில் வைக்க உதவும் உறுப்புகள் அல்லது இடங்களை  மர்ம ஸ்தானம்  என்பார்கள்; ஆயுர்வேதம், சில்ப சாஸ்திரம் முதலிய துறைகளில் பயன்படும் சொல் இது; அவைகள் பாதிக்கப்பட்டால் மரணம் சம்பவிக்கும் என்பதால் இந்தப் பெயர்; அன்றாடப் பேசசு வழக்கில் மலஜலம் கழிக்கும் உறுப்புகளுக்கும் இந்தப் பெயர் உண்டு ; மல்யுத்தம் போன்ற பயிற்சிகளில் இவைகளைத் தாக்கக்கூடாது என்ற விதிமுறைகள் உள்ளன .

***

மரீசி

மனு உண்டாக்கிய அல்லது பிரம்மாவின் மனதில் பிறந்த பத்துப் பேரில் ஒருவர் மரீசி ஆவார்; சம்ஸ்க்ருதத்தில் தீப் பொறி  என்பது பொதுவான அர்த்தம்

A spark of fire; मरीच्य इव निष्पेतु- रग्नेर्धूमाकुलार्चिषः (marīcya iva niṣpetu- ragnerdhūmākulārciṣaḥ) Rām.1.56.18.

காஸ்யப முனிவரின் தந்தை; கலா என்பவரை மணந்து

அவரைப் பெற்றார்

***

மார்க்கண்டேயன்

மிருகண்டு முனிவரின் புதல்வர் ; நீண்ட காலமாகத் தவம் இயற்றிய பின்னர் அவருக்கு மார்க்கண்டேயன் பிறந்தார் ; அறிவு குறைந்த, ஆனால் நீண்ட காலம் வாழக்கூடிய பிள்ளைகள் வேண்டுமா அல்லது 16 வயது மட்டுமே வாழக்கூடிய  புத்திசாலிப்  பிள்ளையொருவன்  வேண்டுமா  என்று சிவ பெருமான் வினவியபோது அவர் அறிவுள்ள பிள்ளையே வேண்டும் என்றார் ; அந்தப்பிள்ளை மாபெரும் சிவ பக்தன் ஆனான் . பதினாறு வயது ஆனபோது எமன் தோன்றினான்;  அப்போது அவன் சிவலிங்கத்தைக் கட்டிக்கொண்டு பிராத்தனையைத் தொடர்ந்தான்; எமன் வீசிய பாசக்கயிறு சிவலிங்கத்தையும் பெயர்த்து இழுத்தது; அதிலிருந்து வெளிப்பட்ட சிவ பெருமான் எமனை எட்டி உதைத்துத் தள்ளினார் இந்தப் பிள்ளைக்கு வயது என்றும் பதினாறு என்றார் ; இந்த நிகழ்ச்சி திருக்கடையூரில் நடந்ததாக தல வரலாலறு கூறும்

***

மருத் – வேத கால தெய்வங்கள்  

மருத் என்றால் காற்று, புயல்காற்று என்றுபொருள் ; இதிலிருந்து வந்த சொற்களே மாருதி – காற்றின் புதல்வன் அனுமன் மற்றும் மந்த மாருதம் சண்ட மாருதம் என்ற சொற்கள் ஆகும் ; இவர்களை இந்திரனின் நண்பர்கள் என்றும் ருத்ர சிவனின் புதல்வர்கள் என்றும் இந்து சமய நூல்கள் பலவாறாக விளம்பும் 

திதி என்ற பெண்ணுக்கு ஏற்பட்ட கர்ப்பத்தை இந்திரன் கலைக்கவே அது 49 துண்டுகளாகச் சிதறியதாகவும் பார்வதி தேவி கருணை கொண்டு அவைகளுக்கு உயிரூட்ட சிவ பெருமானை வேண்டியதாகவும் அவர் அவ்வாறே செய்ததால் அந்த 49 பேரும் ருத்ரனின் பிள்ளைகள் என்றும் ராமாயணம் பகரும் ; அவர்கள் மின்னல் இடியுடன் வலம் வருவார்கள் மா ரோதித– அழாதே என்று இந்திரன் சொன்னதால் மருத் என்ற பெயர் ஏற்பட்டதாகவும் புராணங்கள் உரைக்கும் ; அஷ்ட திக் பாலகர்களில் வடமேற்கு திசைக்கு அதிபதி வாயு அல்லது மருத். 

மந்த மாருதம் என்பது பொதிகை என்னும் மலய மலையிலிருந்து வீசும் தென்றல் காற்று .

சண்ட மாருதம் என்பது சூறாவளிக் காற்று 

***

மாதலி

இந்திரனின் விண்கலத்தைச் செலுத்தும் விமானி அல்லது  பைலட்; மஹாபாரத வனபர்வத்தில் அர்ஜுனனின் விண்வெளிப்பயணம் பற்றிய விரிவான வருணனை உள்ளது ; மாதலி,  ஸ்பேஸ் ஷட்டில் போன்ற விண்கலத்தில் பூமிக்கு வந்து அர்ஜுனனை அழைத்துச் சென்றார்; அங்கு ஐந்து ஆண்டுகள் தங்கிய அர்ஜுனன் பல வீரதீரச் செயல்களைச் செய்தான். இந்திரனின் வாகனம் மீண்டும் மீண்டும் பயன்டுத்தவல்ல ஸ்பேஸ் ஷட்டில் என்பதால் அதே கலத்தில் அர்ஜுனன் பூமிக்குத் திரும்பிவந்தான் .

***

மடங்கள்

தென்னாட்டில் ஆதி சங்கரர், மத்வர் போன்ற பெரிய சன்யாசிகளும் மகான்களும் வசித்த இடங்கள் மடங்கள் ஆகும். இப்போது காஞ்சி காமகோடி சங்கச்சாரியார், சிருங்கேரி சங்கராச்சாரியார் மடங்களும் வைணவர்களுக்கு அஹோபில மடமும் இருப்பது போல், பல  மடங்கள் உண்டு; அவர்களின் வழிவந்தோர் பரம்பரை பரம்பரையாக இவைகளை நிர்வகித்து வருகின்றனர் அங்கு தினசரி பூஜைகளும் சொற்பொழிவுகளும் நடக்கும்; அவர்கள் பல நூல்களையும் பத்திரிகைகளையும் வெளியிடுகிறார்கள் அவர்களைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள் ; பல இடங்களில் முந்தைய ஆச்சார்யார்களின் சமாதிகளும் இருக்கின்றன.

Sringeri Mutt in Kochi, Kerala

***

மத்ஸ்ய அவதாரம் மச்சா வதாரம் 

மஹாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் முதல் அவதாரம் மீன் அவதாரம் ;மத்ஸ்ய அல்லாம் து மச்சம் என்பதன் பொருள் மீன் ; உலகில் அக்கிரமங்கள் அதிகரிக்கும்போது அவதாரம் தோன்றும்; ஒரு முறை மஹா பிரளயம் வந்த போது ஒரு படகில் நல்லோர் அனைவரையும் விஷ்ணு ஏற்றிச் சென்றார்; மனு என்ற பெயரிலும் நோவா முதிய பெயர்களிலும் இந்தப் பிரளயக் கதை பல சமய புஸ்தகங்களில் உள்ளன .

***

மத்ஸ்ய புராணம்

மச்சாவதாரக் கதை கூறும் இந்தப் புராணத்தில்  15,000 ஸ்லோகங்கள் வரை உள்ளன ; புராணத்துக்கான பஞ்ச லட்ஷணங்களும் உள்ள இந்தப் புராணம் விஷ்ணு மற்றும் வாயு புராணம் போலவே உள்ளது.

***

மயன்

அசுரர்களின் தச்சன் ; விஷ்வகர்மா என்பவன் தேவர்களின் தச்சன் ; இவன் விப்ரசித்தியின் மகன் ; மண்டோதரி மற்றும் வஜ்ரகர்மாவின் தந்தை.

மஹாபாரதம், ஹரிவம்சம் நூல்களில் பல கதைகள் உள்ளன காண்டவ வனத்தை அர்ஜுனனும் கிருஷ்ணனும் எரித்தபோது மயன் என்பவர் தப்பித்துச் செல்ல அவர்கள் உதவினார்கள்; இதற்கு நன்றிக்கடனாக இந்திரப்பிரஸ்தம் என்னும் தலை நகரில் பளிங்குக் கற்களால் ஆன அழகான மண்டபத்தை மயன் கட்டிக்கொடுத்தான்; அதைப்  பார்வையிட வந்த துரியோதனன் கண்ணாடி போன்ற ஹாலில் தண்ணீர் என்று நினைத்து ஆடையைத் தூக்கிக் கொண்டான்; இன்னும் ஒரு இடத்தில் உண்மையிலேயே  தண்ணீர் இருந்த இடத்தில் பளிங்குத் தரை என்று நினைத்துக் காலை விட்டான்; இதை எல்லாம் சாளரத்திலிருந்து தோழிகளுடன் பார்த்துக்கொண்டிருந்த திரவுபதி கொல் என்று உரக்கச் சிரித்துவிட்டாள். அவளைப் பழிவாங்கத்துடித்த துரியோதனன் பாண்டவர்கள சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்தபோது திரவுபதியின் ஆடையை விலக்கச்செய்து பழி தீர்த்துக் கொண்டான் ; பெண்கள் மற்றவர்களை இகழ்ச்சி செய்யும் வித்த்தில்  சிரித்தால் அழிவு உண்டாகும் என்பதை விளக்கும் கதை இது .

மயன் என்பவன் தென் அமெரிக்காவுக்குச் சென்று பிரம்மாண்டமான கட்டிடங்களைக் காட்டி மாயன் நாகரீகத்தை உண்டாக்கினான்

ராமாயண மஹாபாரத காலத்தில் ஒரே மயன் இருந்திருக்க முடியாது; பொதுவாக மயன் என்ற சொல்லுக்குத் சிறந்த கட்டிடக் கலைஞன் என்றே பொருள் கொள்ள வேண்டும் .

***

மாயா /மாயை

பொய்த் தோற்றம் – கானல் நீர் போன்றது ; இல்லாத ஒன்றை இருப்பதாக நினைப்பது மாயை ;

உபநிஷத ரிஷிகள் இதைப் பல உதாணரங்களில் விளக்கினார்கள்; பாம்பைக் கயிறு என்றும் கயிற்றைப் பாம்பு என்றும் எண்ணுவது மாயைக்கு ஆதிசங்கரர் கொடுத்த உதாரணம் ஆகும் இந்த உலகே மாயம் பரம்பொருள் ஒன்றே சத்தியம் அதுவும் நாமே என்று உணர வேண்டும் என்று சொல்லி ஆதி சங்கரர் அத்வைதக் கொள்கையைப் பரப்பினார்.

***

மணிகர்ணிகா காட்

மணிகர்ணிகா படித் துறை காசியில் கங்கைக் கரையிலுள்ள மயானம் ஆகும்; உலகிலேயே 3000 ஆண்டுகளாகத் தொடர்ந்து சடலங்கள் எரியும் புனித இடம் இது ; விடுமுறை நாளே இல்லாமல் சடலங்களை எரிப்பதற்குக் காரணம் காசியில் இறந்தால் நேரடியாக முக்தி பெறலாம்; மறு பிறப்பு என்னும் பெரும் பிணியிலிருந்து  தப்பிக்கலாம் என்று இந்துக்கள் நம் புவதே .  உறவினர்களோ பிறரோ சடலங்களை புகைப்படம் எடுக்க அனுமதிப்பதில்லை ஆனால் படகுகளில் சவாரி செய்த வாறே வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடத்தைக் காணலாம் . சடலத்தை தகனம் செய்வதற்கு சந்தனக் கட்டை என்றால் கட்டணம் அதிகம்; சாதாரண விறகு என்றால் கட்டணம் குறைவு ; ஆயினும் முடி சார்ந்த மன்னரும் பிடி சாம்பாராய்ப் போகும்இந்து மத தத்துவத்தை விளக்கும் புண்ய பூமி இது.

****

மாயாதேவி

கெளதம புத்தரின் அன்னையின் பெயர் இது . நேபாளத்தில் கபிலவஸ்து என்னும்  பிரதேசத்தில் லும்பினி என்னும் இடத்தில் புத்தர் அவதரித்தார் . மாயாதேவி, லும்பினி தோட்டத்திலிருந்து வீட்டிற்கு நடந்து செல்லும்போது இடுப்பு வலி அதிகரிக்கவே சால் மரக்  கிளையினைப் பிடித்துக்கொண்டு நின்றவாறே பிள்ளையைப் பெற்றார் மஹாராணி என்பதால் தோழிகள் புடை சூழ வந்திருந்தார்; இப்போது அந்த இடம் பல்லாயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகளையும் பக்தர்களையும் கவர்ந்து இழுக்கிறது அது யுனெஸ் கோ அங்கீகரித்த பாரம்பர்ய இடம் ஆகும்.

***

மாயாவதி

ரதிதேவியின் மறுபிறப்பு  மாயாவதி.

காதல்  கடவுளான மன்மதனின் (காமன்) மனைவியே ரதி தேவி. மன்மதனை சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கியபோது, ரதி தேவி மிகுந்த துயரமடைந்தாள்.அவள் தனது கணவனை மீண்டும் அடைய வேண்டி சிவபெருமானை நோக்கித் தவமிருந்தாள். அவளது தவத்திற்கு இரங்கிய சிவன், மன்மதன் பூமியில் பிறப்பான் என்றும், ரதி மாயாவதி என்னும் பெயரில் பூவுலகில் அவதரித்து அவனை மீண்டும் மணந்து கொள்வாள் என்றும் வரமளித்தார்.

பூமியில் பிறந்த மாயாவதி, சம்பரன் என்ற அசுரனின் அரண்மனையில் பணிப்பெண்ணாக வளர்ந்தாள். (மன்மதனின் சாம்பல் கடலில் வீசப்பட்டபோது, அதை ஒரு மீன் விழுங்கியது. அந்த மீனை மீனவர்கள் பிடித்து சம்பரனின் சமையல்காரனிடம் கொடுத்தனர் சமையல்காரன் வயிற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட அந்த மீனில் இருந்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை மன்மதனின் மறுபிறவியான பிரத்யும்னன் (கிருஷ்ணன் மற்றும் ருக்மிணியின் மகன்) ஆவான்.

மாயாவதி அக்குழந்தையை அன்புடன் வளர்த்து வந்தாள். நாரதர் மூலம் அக்குழந்தையின் உண்மையான வரலாற்றை அவள் அறிந்தாள். மாயாவதி தனது மாயா சக்தியால் அசுரனான சம்பரனை அழித்து, மன்மதனின் மறுபிறவியான பிரத்யும்னனைத் திருமணம் செய்து கொண்டு வைகுண்டம் திரும்பினாள்.

To be continued………………….

Tags–மாயாவதி HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 66; இந்து மத கலைச்சொல் அகராதி-66, PART 66, மாரியம்மன்

Leave a comment

Leave a comment