Written by London Swaminathan
Post No. 15,797
Date uploaded in London –28 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part 37
திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவில்
திருமோகூர், 108 வைணவ திவ்ய தேசங்களில் 103-வது ஸ்தலம் ஆகும்; புகழ்பெற்ற காளமேகப் பெருமாள் கோவில் இங்கே இருக்கிறது.
மூலவர்: காளமேகப் பெருமாள் (மேகத்தைப் போன்ற நிறத்தில் காட்சியளிப்பதால் இப்பெயர்).
தாயார்: மோகனவல்லி.
திருமால், பாற்கடலைக் கடைந்தபோது அசுரர்களுக்கு மோகினி அவதாரம் காட்டி அமிர்தத்தை வழங்கிய “மோகன க்ஷேத்ரம்” இதுவே.
இக்கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார் மிகவும் சக்திவாய்ந்தவர். இவரது பின்புறம் யோக நரசிம்மர் வீற்றிருக்கிறார்.
நம்மாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம்.
இக்கோயிலிலுள்ள பல மண்டபங்கள் சிவகங்கையை ஆட்சிபுரிந்த மருது பாண்டியர் கட்டியவை யாகும். மூலவர் காளமேகப் பெருமாளின் சந்நிதி உயரமான அதிட்டானத்தின்மீது உள்ளது
இக்கோவிலின் கம்பத்தடி மண்டபத்திலுள்ள இராமர், சீதை, லக்ஷ்மணர், ஆஞ்சநேயர், மன்மதன், ரதி ஆகியோரின் உருவங்களைக்கொண்ட ஒற்றைக் கல்லினாலான சிற்பங்கள் சிறந்த கலைச் செல்வங்களாகும். யாளிகளின் உருவங்களைத் தாங்கிய தூண்கள் அரிய சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது. இம்மண்டபத்தில், சந்நிதியை நோக்கியவாறு, மருது பாண்டியர் ஆளுயரக் கற்றூண் உருவங்கள் காணப்படுகிறது..
மதுரை மாநகருக்கு வடக்கே ஏழு, எட்டுமைல் தொலைவிலுள்ளது. மதுரை- மேலுர் நெடுஞ்சாலை வழியே ஒத்தக்கடை வரை சென்று, அதன் பிறகு கிழக்கே திரும்பி ஒரு மைல் செல்ல வேண்டும். மதுரையிலிருந்து வடக்கே சுமார் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
சங்ககாலத்தில் மோகூர் அரசன் பழையன்ப ற்றிய குறிப்புகள் உள்ளன. ஆனால் அது வேறு மோகூர் ஆக இருக்கலாம்
***
திருக்கோயிலைச் சுற்றி நீண்டு உயர்ந்த மதிலும் மதிலுக்கு வெளியே புஷ்கரிணியும் உள்ளது. கிழக்கு நோக்கிய திருவாயிலைத் தாண்டியதும் கம்பத்தடிமண்டபம். வரும் இந்த மண்டபத்தில் இத்திருக்கோயிலுக்குத் திருப்பணி செய்த மருது பாண்டியர்கள் சின்னமருது, பெரிய மருது சிலைகள் உள்ளன அதைத் தாண்டியுள்ள கருட மண்டபத்தில் ஒரு தூணில் சீதாதேவியை அனைத்தவண்ணம் கோதண்டராமன் சிலையும், இன்னொரு துணில் இலக்குவன் சிலையும் காணப்பெறுகின்றன. இச்சிலைகளைத் தவிர காமவேளின் சிலையும் இரதிதேவியின் சிலையும் உள்ளன. கோயிலின் பாதுகாப்பாளர்களாகத் திகழ்ந்த கள்ளர் குலமக்கள், ஆங்கிலேயனை விரட்டியடித்து அவர்கள் கைப்பற்றிய பொன், பொருள், இறைவன் திருமேனி முதலியவற்றை மீட்டு வந்து சேர்த்தனர். இதற்காக திருமோகூர் கோயிலின் தேர் இழுக்கும் உரிமை கள்ளர்களின் ஆறு பிரிவுக் கிராமத்தார்களுக்கு வழங்கப்பட்டது.
ஆண்டுதோறும் நடைபெறும் கஜேந்திரமோட்சம் திருவிழாவிற்கு ஆனைமலை நரசிங்கப்பெருமாள் கோயிலுக்கு திருமோகூர் காளமேகப்பெருமாள் சாமி வரும்போது கொள்ளையடிக்கப்பட்ட விக்கிரகங்களை கள்ளர்கள் மீட்ட செயலுக்கான மரியாதையாக இன்றுவரை இறைவன் கள்ளர் வேடம் புனைந்து வருகின்றார்.
கள்ளர்களுக்கு திருமோகூர் கோவிலில் இன்றும் பரிவட்ட மரியாதை வழங்கப்படுகிறது.
***
பாசுரங்கள்
3783.
தாள தாமரைத்* தடம்அணி வயல் திருமோகூர்*
நாளும் மேவி நன்குஅமர்ந்து நின்று* அசுரரைத் தகர்க்கும்*
தோளும் நான்குஉடைச்* சுரிகுழல் கமலக்கண் கனிவாய்க்*
காள மேகத்தை அன்றி* மற்றொன்றுஇலம் கதியே. (2)
3784.
இலங்கதி மற்றொன்று எம்மைக்கும்* ஈன்தண் துழாயின்*
அலங்கலங்கண்ணி* ஆயிரம் பேர்உடை அம்மான்*
நலங்கொள் நான்மறை வாணர்கள் வாழ்* திருமோகூர்*
நலங்கழல் அவன் அடிநிழல்* தடமன்றி யாமே.
3785.
அன்றியாம் ஒரு புகலிடம்* இலம் என்றுஎன்று அலற்றி*
நின்று நான்முகன் அரனொடு* தேவர்கள் நாட*
வென்று இம்மூவுலகுஅளித்து உழல்வான்* திருமோகூர்*
நன்று நாம் இனி நணுகுதும்* நமதுஇடர் கெடவே.
3786.
இடர்கெட எம்மைப் போந்துஅளியாய்* என்றுஎன்று ஏத்தி*
சுடர்கொள் சோதியைத்* தேவரும் முனிவரும் தொடர*
படர்கொள் பாம்பணைப்* பள்ளிகொள்வான் திருமோகூர்*
இடர் கெடவடி பரவுதும்* தொண்டீர்! வம்மினே.
3787.
தொண்டீர்! வம்மின்* நம்சுடர்ஒளி ஒருதனி முதல்வன்*
அண்டம் மூவுலகு அளந்தவன்* அணி திருமோகூர்*
எண் திசையும் ஈன்கரும்பொடு* பெரும்செந்நெல் விளையக்*
கொண்ட கோயிலை வலஞ்செய்து* இங்கு ஆடுதும் கூத்தே.
3788.
கூத்தன் கோவலன்* குதற்று வல்லசுரர்கள் கூற்றம்*
ஏத்தும் நங்கட்கும்* அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்*
வாய்த்த தண்பணை வளவயல்சூழ்* திருமோகூர்-
ஆத்தன்* தாமரை அடிஅன்றி* மற்றுஇலம் அரணே.
3789.
மற்றிலம் அரண்* வான்பெரும் பாழ்தனி முதலாச்*
சுற்றும் நீர்படைத்து* அதன்வழித் தொல்முனி முதலா*
முற்றும் தேவரோடு* உலகுசெய்வான் திருமோகூர்*
சுற்றிநாம் வலஞ்செய்ய* நம் துயர்கெடும் கடிதே.
3790.
துயர்கெடும் கடிதுஅடைந்து வந்து* அடியவர் தொழுமின்*
உயர்கொள் சோலை* ஒண்தடம் மணிஒளி திருமோகூர்*
பெயர்கள் ஆயிரம்உடைய* வல்லரக்கர் புக்குஅழுந்த*
தயரதன் பெற்ற* மரகத மணித் தடத்தினையே.
3791.
மணித் தடத்தடி மலர்க்கண்கள்* பவளச் செவ்வாய்*
அணிக்கொள் நால்தடம்தோள்* தெய்வம் அசுரரை என்றும்*
துணிக்கும் வல்அரட்டன்* உறைபொழில் திருமோகூர்*
நணித்து நம்முடை நல்லரண்* நாம் அடைந்தனமே.
3792.
நாம்அடைந்த நல்அரண்* நமக்குஎன்று நல்அமரர்*
தீமை செய்யும் வல்அசுரரை* அஞ்சிச் சென்றுஅடைந்தால்*
காமரூபம் கொண்டு* எழுந்துஅளிப்பான் திருமோகூர்*
நாமமே நவின்று எண்ணுமின்* ஏத்துமின் நமர்காள்!
3793.
ஏத்துமின் நமர்காள்* என்றுதான் குடம்ஆடு-
கூத்தனைக்* குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்*
வாய்த்த ஆயிரத்துள் இவை* வண் திருமோகூர்க்கு*
ஈத்த பத்திவை ஏத்த வல்லார்க்கு* இடர் கெடுமே. (2)
To be continued…………………..
Tags- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், Part 37, திருமோகூர்