Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-39; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post No.15,806)
Written by London Swaminathan
Post No. 15,806
Date uploaded in London –30 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருமூழிக்களம் (Thirumoozhikalam) , 108 வைணவத் திவ்ய தேசங்களில் 79-வது தலமாகும். கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில், அங்கமாலிக்கு அருகில் இத்தலம் அமைந்துள்ளது.
மூலவர் – திருமூழிக்களத்தான்.
தாயார் – மதுரவேணி நாச்சியார்.
தீர்த்தம்: பெருங்குளம், சங்க தீர்த்தம், சிற்றாறு.
விமானம்: சௌந்தர்ய விமானம்.
***
புராணக் கதைகள்
அரித மகரிஷி என்பவர் திருமாலைக் குறித்து இவ்விடத்தில் தவமிருந்து வரம் பெற்றதாகப் தலபுராணம் கூறுகிறது.
இராமாயண காலத்தில், பரதன் ஸ்ரீராமனை சந்திக்க வந்தபோது லட்சுமணர் இவ்விடத்தில் தங்கியிருந்து வழிபட்டதாகவும் நம்பப்படுகிறது.
அரித மகரிசி என்பவர் திருமாலைக் குறித்து இவ்விடத்தில் தவமிருந்து வேண்ட, மக்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை போதிக்கும் ‘ஸ்ரீ ஸுக்தியை’ என்ற திருமொழியை இறைவன் அம்முனிவர்க்கு வழங்கினான். எனவே இவ்விடத்திற்கு திருமொழிக்களம் என்றும் எம்பெருமானுக்கு திருமொழிக்களத்தான் என்பதும் பெயராயிற்று. திருமொழிக்களம் என்பதே காலப்போக்கில் திருமூழிக்களமாயிற்று. இப்பெயரே தொன்னெடுங்காலமாய் விளங்கி வந்தபடியால் ஆழ்வார் பாசுரங்களிலும் திருமூழிக்களம் என்றே வந்துள்ளது.
இங்குள்ள இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் திருமூழிக்களத்தான், அப்பன் ஸ்ரீஸுக்திநாதன் என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறான்.
நம்மாழ்வாராலும், திருமங்கை ஆழ்வாராலும் 14 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகும்.
இராமாயணத்தில் இலக்குவனுடன் பரதனும் சேர்ந்து வழிபட்ட தலமாகும். இத்தலத்திற்கு இலக்குவன் கோபுரம், மண்டபம் போன்றவற்றை எழுப்பி பல திருப்பணிகள் செய்தான். இலட்சுமணனின் திருப்பணிக்குப் பிறகு இலட்சுமணனையே மூலவராக வைத்து வழிபாடியற்றத் தொடங்கினர் என்பது இங்கு சொல் வழக்கு.
கருவறை வெளிப் பிராகாரத்தில் ராமன்-சீதை-அனுமன் ஆகியோர் தனி சந்நதி கொண்டிருக்கிறார்கள்.
திருவிழா:
சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் ஆறாட்டு. அதற்கு பத்து நாள் முன்பாக கொடியேற்றம். சித்திரை திருவோணத்தை தவிர அனைத்து திருவோணத்திற்கும் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் உண்டு. கேரளாவை பொறுத்த வரை ஆடி மாதம் முழுவதும் ராமாயண மாதம் என்பதால் இந்த மாதத்தில் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் .
***
போக்குவரத்து:எர்ணாகுளத்தில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ளது.அருகில் உள்ள ரயில் நிலையங்கள்: அங்கமாலி (Angamaly) மற்றும் ஆலுவா (Aluva). அங்கிருந்து பேருந்து வசதிகள் உள்ளன
.முகவரி: அருள்மிகு லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில், திருமூழிக்களம், கேரளா – 683572.
***
பாசுரங்கள்
1553.
பனி ஏய் பரங் குன்றின்* பவளத் திரளே*
முனியே* திருமூழிக்களத்து விளக்கே*
இனியாய் தொண்டரோம்* பருகும் இன் அமுது ஆய
கனியே* உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே*.
2061.
பொன்ஆனாய்! பொழில்ஏழும் காவல் பூண்ட- புகழ்ஆனாய்!* இகழ்வாய தொண்டனேன் நான்,*
என்ஆனாய்? என்ஆனாய்? என்னல் அல்லால்* என்அறிவன் ஏழையேன்,* உலகம் ஏத்தும்-
தென்ஆனாய் வடஆனாய் குடபால் ஆனாய்* குணபாலமதயானாய் இமையோர்க்கு என்றும்-
முன்ஆனாய்* பின்ஆனார் வணங்கும் சோதி!* திருமூழிக் களத்துஆனாய் முதல்ஆனாயே!
2782.
உன்னிய யோகத்து உறக்கத்தை,* ஊரகத்துள்-
அன்னவனை அட்ட புயகரத்து எம்மான் ஏற்றை,*
என்னை மனம்கவர்ந்த ஈசனை,* -வானவர்தம்-
3739.
எம்கானல் அகம்கழிவாய்* இரை தேர்ந்துஇங்கு இனிதுஅமரும்*
செங்கால மடநாராய்!* திருமூழிக்களத்து உறையும்*
கொங்குஆர் பூந்துழாய்முடி* எம்குடக்கூத்தர்க்கு என்தூதாய்*
நும்கால்கள் என்தலைமேல்* கெழுமீரோ நுமரோடே. (2)
3740.
நுமரோடும் பிரியாதே* நீரும் நும் சேவலுமாய்*
அமர்காதல் குருகுஇனங்காள்! அணி மூழிக்களத்து உறையும்*
எமராலும் பழிப்புண்டு* இங்கு என்தம்மால் இழிப்புண்டு*
தமரோடுஅங்கு உறைவார்க்குத்* தக்கிலமே! கேளீரே.
3741.
தக்கிலமே கேளீர்கள்* தடம்புனல்வாய் இரைதேரும்*
கொக்குஇனங்காள்! குருகுஇனங்காள்!* குளிர் மூழிக்களத்து உறையும்*
செக்கமலத்துஅலர் போலும்* கண்கைகால் செங்கனிவாய்*
அக்கமலத்துஇலைப்போலும்* திருமேனி அடிகளுக்கே.
3742.
திருமேனி அடிகளுக்குத்* தீவினையேன் விடுதூதாய்*
திருமூழிக்களம் என்னும்* செழுநகர்வாய் அணிமுகில்காள்*
திருமேனி அவட்குஅருளீர்* என்றக்கால் உம்மைத்தன்*
திருமேனி ஒளிஅகற்றி* தெளிவிசும்பு கடியுமே?
3744.
தூதுஉரைத்தல் செப்புமின்கள்* தூமொழிவாய் வண்டுஇனங்காள்*
போதுஇரைத்து மதுநுகரும்* பொழில் மூழிக்களத்துஉறையும்*
மாதரைத்தம் மார்வகத்தே* வைத்தார்க்கு என்வாய்மாற்றம்*
தூதுஉரைத்தல் செப்புதிரேல்* சுடர்வளையும் கலையுமே.
3745.
சுடர்வளையும் கலையும்கொண்டு* அருவினையேன் தோள்துறந்த*
படர்புகழான்* திருமூழிக்களத்துஉறையும் பங்கயக்கண்*
சுடர்பவள வாயனைக்கண்டு* ஒருநாள் ஓர்தூய்மாற்றம்*
படர்பொழில்வாய்க் குருகுஇனங்காள்!* எனக்கு ஒன்று பணியீரே.
3746.
எனக்குஒன்று பணியீர்கள்* இரும்பொழில்வாய் இரைதேர்ந்து*
மனக்குஇன்பம் படமேவும்* வண்டுஇனங்காள்! தும்பிகாள்*
கனக்கொள் திண்மதிள்புடைசூழ்* திருமூழிக் களத்துஉறையும்*
புனக்கொள் காயாமேனிப்* பூந்துழாய் முடியார்க்கே.
3747.
பூந்துழாய் முடியார்க்கு* பொன்ஆழிக் கையாருக்கு*
ஏந்துநீர் இளம்குருகே!* திருமூழிக்களத்தாருக்கு*
ஏந்துபூண் முலைபயந்து* என்இணைமலர்க்கண் நீர்ததும்ப*
தாம்தம்மைக் கொண்டுஅகல்தல்* தகவுஅன்றுஎன்று உரையீரே
3748.
தகவுஅன்றுஎன்று உரையீர்கள்* தடம்புனல்வாய் இரைதேர்ந்து*
மிகஇன்பம் படமேவும்* மேல்நடைய அன்னங்காள்*
மிகமேனி மெலிவுஎய்தி* மேகலையும் ஈடுஅழிந்து* என்
அகமேனி ஒழியாமே* திருமூழிக் களத்தார்க்கே.
3749.
ஒழிவுஇன்றித் திருமூழிக்களத்துஉறையும்* ஒண்சுடரை*
ஒழிவுஇல்லா அணிமழலைக்* கிளிமொழியாள் அலற்றியசொல்*
வழுஇல்லா வண்குருகூர்ச்* சடகோபன் வாய்ந்துஉரைத்த*
அழிவுஇல்லா ஆயிரத்து இப்பத்தும்* நோய் அறுக்குமே (2)
–subham—
Tags- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-39; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், திருமூழிக்களம்