WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,805
Date uploaded in London – 30 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஹெல்த்கேர் மே 2026 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
ஏரோபிக் ஃபிட்னெஸ் என்றால் என்ன? ஏரோபிக் பயிற்சிகளால் ஏற்படும் நன்மைகள் யாவை? ஒரு அலசல் ஆய்வு!
ச. நாகராஜன்
வயதாக வயதாக உடலில் ஏற்படும் மாற்றங்கள் பல; நமது மூளையும் வயது ஏற ஏற மாறுகிறது. உயிரணுக்களின் அழிவினால் மூளை சற்று சிறிதாகிறது.
ஆனால் எல்லோருக்கும் இந்த மாறுதல் ஒரே மாதிரியாக அமைவதில்லை. வாழ்க்கைமுறை மாற்றத்தால் நமது மூளையில் ஏற்படும் உயிரணுக்களின் அழிவைக் கட்டுப்படுத்தலாம். உடல் பயிற்சி, உணவுத்திட்டம், சமூகத் தொடர்புகள் ஆகியவை மூலம் மூளையின் செயல் திறனை அழியாமல், குறையாமல் வைத்துக் கொள்ள முடியும்.
ஏரோபிக் ஃபிட்னெஸ் (Aerobic Fitness) என்பது இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏரோபிக் ஃபிட்னெஸ் என்றால் என்ன, அதை எப்படி மேம்படுத்துவது? ஆரோக்கியமான உடல் தகுதியே ஏரோபிக் ஃபிட்னெஸ் ஆகும்.
ஓட்டப் பயிற்சி, நீச்சல், சைக்கிள் சவாரி, நடனமாடுதல், நடைப் பயிற்சி உள்ளிட்டவை ஏரோபிக் ஃபிட்னெஸிற்கான வழிமுறைகளாகும். இது மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 55 வயதை அடைந்தவர்களும் அதற்கு மேற்பட்ட வயதை அடைந்தவர்களும் ஏரோபிக் ஃபிட்னெஸ் உடையவர்கள் என்றால் அவர்களது மூளையின் வெளி உறை கூடுதல் கனம் உள்ளதாக இருக்கும். (greater cortical thickness or greater thickness of the brains’s outer layer). இந்த வெளி உறை கனத்திற்கும் நினைவாற்றல் உள்ளிட்ட மூளைத் திறனுக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு என்பதை பல சோதனைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
18 வயதிலிருந்தே இந்தப் பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. அமெரிக்க ஆய்வு ஒன்றில் 159 தன்னார்வலர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு எம் ஆர் ஐ ஸ்கேன் செய்யப்பட்டது. இதில் பல உண்மைகள் தெரியவந்தது. ஏரோபிக் ஃபிட்னெஸ் பயிற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு அல்ஜெமிர், டெமின்ஷியா போன்ற மறதி நோய்கள் வருவது குறைவாகிறது.
ஏரோபிக் ஃபிட்னெஸ் என்பது ஒரு லயத்துடன் திருப்பித் திருப்பி உடலில் உள்ள பெரிய தசைப் பகுதிகளை இயக்கும் உடல் இயக்கமாகும். இந்த இயக்கமானது heart rate எனப்படும் இதய நடையை அதிகரிக்கச் செய்வதோடு உங்கள் உடல் எவ்வளவு ஆக்ஸிஜனைப் பயன்படுத்துகிறது என்பதையும் தெரிவிக்கும். இதய நோய்கள், டயபடீஸ், உயர் ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் ஆகியவற்றைக் குறைக்கும்.
ஏரோபிக் என்ற சொல்லுக்கே “ஆக்ஸிஜனுடன்” என்று அர்த்தமாகும். ஏரோபிக் பயிற்சிகளைச் செய்யும் போது சுவாசமானது தசைகளுக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவைக் கட்டுப்படுத்தி உங்களின் இயக்கத்திற்குப் பெரிதும் உதவுகிறது.
ஏரோபிக் பயிற்சியில் நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுவது, கார்டியோ சாதனங்களை உபயோகிப்பது, நீச்சலடிப்பது உள்ளிட்டவை அடங்கும்.
நடைப்பயிற்சி : மிகவும் சுலபமான எளிய பயிற்சி இதுவே தான்.
சைக்கிள் ஓட்டுவது: ஏற்றச் சரிவுகள் உள்ள இடங்களில் சைக்கிள் ஓட்டுவது சிறப்பாகும். ஆர்த்ரிடிஸ் அல்லது மூட்டுகளைப் பாதிக்கும் நோய்களுக்கு சைக்கிள் ஓட்டுவதே சாலச் சிறந்தது நடைப்பயிற்சியில் ஏற்படுவது போல முதுகு, இடுப்பு, மூட்டுக்கால், உள்ளிட்ட பகுதிகளில் . சைக்கிள் ஓட்டுவது அழுத்தத்தைத் தராது.
கார்டியோ எக்விப்மெண்ட் : உங்கள் ஹார்ட் ரேட்டை அதிகரிக்கச் செய்யும் எந்த இயந்திர சாதனமும் இந்த வகையில் அடங்கும். படிகளில் ஏறுவதற்கான இயந்திர சாதனம், ட்ரேட்மில் உள்ளிட்ட சாதனங்கள் உடல்பயிற்சிக் கூடத்தில் (GYM) நிச்சயமாக இருக்கும். அவற்றைப் பயன்படுத்தலாம்.
நீச்சல் பயிற்சி : கை, கால்களை அசைத்து நீரில் முன்னேறிச் செல்லும் நீச்சல் பயிற்சி மூட்டுவலி உள்ளவர்களுக்கு மிகவும் நல்ல பயிற்சி. தக்க பயிற்சியாளருடன் முறையாக நீச்சலைக் கற்று அபாயமில்லாதபடி நீச்சல் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
ஏரோபிக் பயிற்சிகளின் பலன்கள்
வலுவான எலும்புகளை உருவாக்கும்
தசை வலுவை அதிகரிக்கும். நெகிழ்வுத் தன்மையும், தாக்குப் பிடிக்கும் தன்மையும் உண்டாகும்
உடலை எப்போதும் பாலன்ஸுடன் வைத்திருக்க உதவும்
மனோசக்தியை அதிகரிக்கும்.
உடல் எடையைச் சீராக வைத்துக் கொள்ள உதவும்.
இதய சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கும்.
பக்கவாதம், டயபடீஸ் வராது.
நுரையீரலின் ஆற்றல் அதிகரிக்கும்.
இரத்த அழுத்தம் குறையும்
நல்ல கொலஸ்ட்ராலான ஹெச் டி எல் அதிகரிக்கும்.
இரத்த சர்க்கரை அளவை சரியானபடி நிர்வகிக்க உதவும்.
இந்தப் பயிற்சிகளைச் செய்யும் போது ஜாக்கிரதையாகவே செய்தல் வேண்டும். சுளுக்கு, எலும்பு முறிவு, மூட்டு வலி, தசைப்பிடிப்பு, உடல் வலி ஆகியவை ஏற்படாமல் உரிய அளவில் முறையாக பயிற்சிகளைச் செய்தல் வேண்டும்.
சரியானபடி இந்தப் பயிற்சிகளை மேற்கொள்கிறோமா என்று பார்க்க ஒரு சின்ன எளிய சோதனை உண்டு. இவற்றைச் செய்யும் போது ஒருவருடன் பேச வேண்டும். பேசுவதில் கஷ்டமான உணர்வு ஏற்பட்டால் நீங்கள் அதிக அளவில் உடலை வருத்துகிறீர்கள் என்று அறிந்து கொள்ளலாம். அதற்கேற்றபடி உங்கள் பயிற்சி அளவை மாற்றி குறைத்துக் கொள்ளலாம்.
இது பற்றி சைகாலஜி டு டே உள்ளிட்ட பத்திரிகைகள் பல கட்டுரைகளைப் பிரசுரிக்கின்றன. அவற்றையும் படித்தல் அவசியமாகும்.
வளம் பெற வாழ்த்துக்கள்!
**