Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-41; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post 15,813)

Written by London Swaminathan

Post No. 15,813

Date uploaded in London –1 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 41

திருவித்துவக்கோடு 

மண்டலம் : மலை நாடு

கடவுளர்கள்: அபாயபிரதன் ,பத்மபாணி நாச்சியார்

மூலவர்   உய்ய வந்த பெருமாள் ; அபயபிரதன்

தாயார்    வித்துவகோட்டுவல்லி, பத்மபாணி நாச்சியார்

திருக்கோலம்   நின்ற திருக்கோலம்

திருமுகமண்டலம்   தெற்கே திருமுக மண்டலம்

பாசுரங்கள் 10

மங்களாசாசனம் குலசேகர ஆழ்வார் 10 பாடல்கள்

தீர்த்தம்    சக்கர தீர்த்தம்

விமானம்  தத்வ காஞ்சன விமானம்

கோவிலின் சுவர்களில் அழகிய சுதைச் சிற்பங்களும், சிற்ப வேலைப்பாடுகளும், அர்ஜு னன் தவம் செய்த காட்சி, தசாவதாரக் காட்சிகள், கிருஷ்ண லீலா காட்சிகள் போன்றவை சிறந்த வண்ணங்களில் பேரழகு பொருந்தியதாக உள்ளன.

இந்த திவ்ய தேச கோவிலில் நுழைந்த உடன் சிவன் சந்நிதி உள்ளது. அதன் பின் எம்பெருமான் சந்நிதி உள்ளது; இங்குள்ள எல்லா நான்கு விஷ்ணு மூர்த்திகளும் நின்ற திருக்கோலத்தில், சங்கு, சக்கரம், கதை, தாமரை மலர் ஏந்தி காட்சி அளிக்கின்றனர். இந்த நான்கு மூர்த்திகளும், வாசுதேவ, சங்கர்ஷணன், பிரத்யூமன அனிருத்தர் என்று எம்பெருமான் வியூகத்தில் தன்னை பிரித்துக்கொண்டது போல உள்ள வடிவுகளாக காட்சி அளிக்கின்றன.

முன்னே இருக்கும் சிவனுடன் சேர்ந்து, இது ஐந்து மூர்த்தி தலம் என்றும், ஐந்து மூர்த்தி திருக்கோவில் என்றும் கூறபடுகிறது. இங்கு தீபம் ஏற்றி துளசி கொண்டு பூஜை செய்தால், மனதில் உள்ள கவலைகள் நீங்கும் என்றும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும் என்றும், வேலை தடை உள்ளவர்களுக்கு உத்தியோக தடைகள் நீங்கி வேலை கிடைக்கும் என்றும் நம்புகிறார்கள்.

மாதாமாதம் வரும் திருவோணம் நக்ஷத்திரம் மற்றும் வைகுந்த ஏகாதசி ஆகியவை இங்கு நடைபெறும் திருவிழாக்கள் ஆகும். காசி விஸ்வநாதரே இங்கு எழுந்தருளி இருப்பதாலும் பத்து நதிகள் இணைந்து பாரத புழா நதிக்கரையில் உள்ளதாலும் இதுவும் பித்ரு தர்ப்பணம் கொடுக்கும் இடமாக கருதப் படுகிறது.

குலசேகர ஆழ்வாரால் 10 பாசுரங்களால் மங்களா சாசனம், செய்யபட்ட பெருமாள். மூலவரின் திருநாமத்தை உய்ய வந்த பெருமாள் என்ற அர்தத்தில் உன்னைவிட்டால் எங்ஙனம் நான் உய்வேன் என்று குறிப்பிட்டது இந்த பெருமாளைத்தான்.

துவாபர யுகத்தில் பஞ்ச பாண்டவர்கள் வனவாச காலத்தில் தென்னிந்தியாவில் பயணம் செய்கையில் இங்குள்ள நீளா நதிக்கரையோரம் ஒரு அழகான இடத்தைக் கண்டனர். அங்கு நிலவிய தெய்வீகம் கலந்த அமைதியைக் கண்டதும் சில காலம் அங்கேயே தங்கி இருக்க எண்ணினர். நாள்வழிபாட்டிற்காக சிலைகளையும், ஆலயத்தையும் நிர்மானித்தனர். முதலில் அர்ஜுனன் மஹாவிஷ்ணுவின் சிலையையும் அதற்கு வடக்கே தருமர் ஒரு சிலையையும் தென்புறத்தில் பீமன் ஒரு சிலையையும் அதற்கு பின்புறம் (தென்புறத்திலே) நகுலனும் சகாதேவனும் ஒரு சிலையையும் நிர்மானித்தனர்.

 வெகு காலத்திற்குப் பின்னால் பாண்டியமன்னன் ஒருவனால் மிகப்பெரிய சுற்றுமதில் கட்டப்பட்டது. நெடுங்காலம் 4 மூர்த்திகளால் ஆனதாகவே இக்கோவில் இருந்தது. சுமார் 2000 (1800) ஆண்டுகட்கு முன்பு தென்னாட்டைச் சேர்ந்த முனிவர் ஒருவர் காசிக்குச் சென்றிருந்தார். அங்கேயே வெகு காலம் தங்கி வாழ்ந்திருந்தார். அவரது அன்னையார் மரணத் தறுவாயில் இருப்பதாக செய்தி வந்ததையடுத்து அவர் திரும்பிவரும்போது அவரது பக்தி ஈடுபாட்டினால் காசி விசுவநாதரும் அம்முனிவரது குடையில் மறைந்து வந்ததாக கூறுவர். வரும் வழியில் இந்தச் சன்னதிக்கு வந்த முனிவர் நீளா நதியில் நீராடச் செல்லும்போது நான்கு மூர்த்திகட்கு முன்புறம் இருந்த ஒரு பலி பீடத்தில் தமது குடையை வைத்துவிட்டுச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அந்தப் பலி பீடம் நான்காக வெடித்து அவ்வெடிப்பிலிருந்து சுயம்புவாக சிவலிங்கம் ஒன்றும் தோன்றியிருந்ததாம். குடையும் மறைந்துவிட்டது. இவ்விதம் இது ஐந்து மூர்த்தி தலமாயிற்று. தற்போது இந்த சிவலிங்கத்தைச் சுற்றிலும் தனியே ஒரு கோவில் கட்டப்பட்டுவிட்டது.

கேரளாவில் பாலக்காட்டு மாவட்டத்தில் உள்ள பட்டாம்பி என்னும் நகருக்கு அருகில் அமைந்துள்ளது. ஷோரனூர் கள்ளிக்கோட்டை மார்க்கத்தில் பட்டாம்பி ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 3.5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ஷோரனூரிலிருந்து குருவாயூர் செல்லும் பாதையில் 16 கிலோமீட்டர் சென்று அங்கிருந்து குறுகிய பாதையில் சுமார் 1 கிலோ மீட்டர் நடந்தால் வரும். பட்டாம்பி ரயில் நிலையத்தில் இருந்து பாரதபுழாய் ஆற்றை கடந்து 1.5 கிலோமீட்டர் நடந்தால் கோவிலை அடையலாம்.

***

பாசுரங்கள்

688.  

தரு துயரம் தடாயேல்*  உன் சரண் அல்லால் சரண் இல்லை*

விரை குழுவும் மலர்ப் பொழில் சூழ்*  வித்துவக்கோட்டு அம்மானே*

அரி சினத்தால் ஈன்ற தாய்*  அகற்றிடினும்*  மற்று அவள்தன்

அருள் நினைந்தே அழும் குழவி*  அதுவே போன்று இருந்தேனே (2)   

689.  

கண்டார் இகழ்வனவே*  காதலன்தான் செய்திடினும்*

கொண்டானை அல்லால்*  அறியாக் குலமகள் போல்*

விண் தோய் மதில் புடை சூழ்*  வித்துவக்கோட்டு அம்மா*  நீ

கொண்டாளாயாகிலும்*  உன் குரைகழலே கூறுவனே

690.  

மீன் நோக்கும் நீள் வயல் சூழ்*  வித்துவக்கோட்டு அம்மா*  என்-

பால் நோக்காயாகிலும்*  உன் பற்று அல்லால் பற்று இலேன்*

தான் நோக்காது*  எத்துயரம் செய்திடினும்*  தார்-வேந்தன்

கோல் நோக்கி வாழும்*  குடி போன்று இருந்தேனே

691.  

வாளால் அறுத்துச் சுடினும்*  மருத்துவன்பால்*

மாளாத காதல்*  நோயாளன் போல் மாயத்தால்*

மீளாத் துயர் தரினும்*  வித்துவக்கோட்டு அம்மா*  நீ

ஆளா உனது அருளே*  பார்ப்பன் அடியேனே

692.  

வெங்கண்-திண்களிறு அடர்த்தாய்*  வித்துவக்கோட்டு அம்மானே*

எங்குப் போய் உய்கேன்?*  உன் இணையடியே அடையல் அல்லால்*

எங்கும் போய்க் கரை காணாது*  எறிகடல்வாய் மீண்டு ஏயும்*

வங்கத்தின் கூம்பு ஏறும்*  மாப் பறவை போன்றேனே

693.  

செந்தழலே வந்து*  அழலைச் செய்திடினும்*  செங்கமலம்

அந்தரம் சேர்*  வெங்கதிரோற்கு அல்லால் அலராவால்*

வெந்துயர் வீட்டாவிடினும்*  வித்துவக்கோட்டு அம்மா*  உன்

அந்தமில் சீர்க்கு அல்லால்*  அகம் குழைய மாட்டேனே

694.  

எத்தனையும் வான் மறந்த*  காலத்தும் பைங்கூழ்கள்*

மைத்து எழுந்த மா முகிலே*  பார்த்திருக்கும் மற்று அவை போல்*

மெய்த் துயர் வீட்டாவிடினும்*  வித்துவக்கோட்டு அம்மா*  என்

சித்தம் மிக உன்பாலே*  வைப்பன் அடியேனே

695.  

தொக்கு இலங்கி யாறெல்லாம்*  பரந்து ஓடித்* தொடுகடலே

புக்கு அன்றிப் புறம்நிற்க*  மாட்டாத மற்று அவை போல்*

மிக்கு இலங்கு முகில்-நிறத்தாய்*  வித்துவக்கோட்டு அம்மா*  உன்

புக்கு இலங்கு சீர் அல்லால்*  புக்கிலன் காண் புண்ணியனே

696.  

நின்னையே தான் வேண்டி*  நீள் செல்வம் வேண்டாதான்*

தன்னையே தான் வேண்டும்*  செல்வம்போல் மாயத்தால்*

மின்னையே சேர் திகிரி*  வித்துவக்கோட்டு அம்மானே*

நின்னையே தான் வேண்டி*  நிற்பன் அடியேனே

697.  

வித்துவக்கோட்டு அம்மா*  நீ வேண்டாயே ஆயிடினும்*

மற்று ஆரும் பற்று இலேன் என்று*  அவனைத் தாள் நயந்து*

கொற்ற வேல்-தானைக்*  குலசேகரன் சொன்ன*

நற்றமிழ் பத்தும் வல்லார்*  நண்ணார் நரகமே (2)

–subham—

Tags- திருவித்துவக்கோடு Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-41; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள்

Leave a comment

Leave a comment