WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,812
Date uploaded in London – 1 June 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
தினமணி 31-5-26 இதழில் கொண்டாட்டம் பகுதியில் வெளியாகியுள்ள கட்டுரை
கொஞ்சம் போனை ஆஃப் செய்யுங்கள்! மூளைத் திறன் கூடும்!
ச. நாகராஜன்
கையில் போனை வைத்துக் கொண்டு இடைவிடாமல் யூ டியூப், சானல்களைப் பார்த்தல், இணையதள வம்புகள், யாருடனாவது தேவையற்ற அரட்டை ஆகிய இவற்றையெல்லாம் செய்து கொண்டிருப்பவர்களுக்கு அறிவியல் தரும் ஒரு லேடஸ்ட் அறிவுரை – கொஞ்சம் போனை ஆஃப் செய்யுங்கள் – உங்கள் மூளைத் திறன் கூடும் என்பது தான்!
சோஷியல் மீடியாக்களின் பாதிப்பு அனைவரையும் அதற்கு அடிமையாக்குவது தான். ஒரு நிமிடம் சாலையில் நின்று பாருங்கள். ஆளுக்கொரு போனை கையில் வைத்துக் கொண்டு, பேசிக் கொண்டு அல்லது சில சானல் நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டு அனைவரும் போவதைக் காணலாம்.
PNAS Nexus இதழில் சமீபத்தில் வெளியான ஒரு சுவையான ஆய்வின் முடிவை போனைக் கையில் வைத்திருக்கும் அனைவரும் அறிய வேண்டியது அவசியம்.
467 நபர்கள் இந்த ஆய்வுக்கு உட்பட்டனர். 14 நாட்கள் இவர்கள் இடைவிடாமல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர். அவர்கள் போனில் பேசவும் போனில் டெக்ஸ்ட் செய்து செய்திகளைப் பரிமாறிக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது. ஆனால் இணையதளத்தில் உலாவி நேரத்தைச் செலவிடுவது தடை செய்யப்பட்டது. சோஷியல் மீடியாக்கள் அனைத்தும் போனிலிருந்து நீக்கப்பட்டது.
ஐந்து மணி நேரம் ஸ்கீரின் டைமாகச் செலவழித்தவர்கள் இப்போது மூன்று மணி நேரத்திற்கும் குறைவாகவே அதில் செலவழிக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
இரண்டு வார முடிவில் அவர்களது கவனக் குவிப்பு அதிகரித்தது. மனநலம் மேம்பட்டது .பொதுவாக அவர்கள் உடல்நலமும் மேம்பட்டது. மனச்சோர்வுக்கான அடையாளங்களையே காணோம். அவர்கள் நடத்தையில் நல்ல மாறுதலும் தென்பட்டது.
அட, கொஞ்சம் நேரத்தை போனில் குறைத்ததற்கே இவ்வளவு ஆக்கபூர்வமான முன்னேற்றமா என்று அனைவரும் வியந்தனர்.
இந்த PNAS Nexus ஆய்வு ஒருபுறம் இருக்க, 2025 நவம்பரில் JAMA Network பிரசுரித்த ஒரு ஹார்வேர்ட் ஆய்வு இன்னும் பல சுவையான தகவல்களைத் தருகிறது.
இதில் கலந்து கொண்ட 400 தன்னார்வலர்கள் சிறிது நேரம் போனை மூடி வைத்தால் கூட, – சோஷியல் மீடியாக்கள், பேஸ்புக், இன்ஸ்டாக்ராம் உள்ளிட்டவற்றிலிருந்து தள்ளி இருந்தாலும் கூட – குறிப்பிடத்தக்க நல்ல முன்னேற்றத்தைக் காண முடிகிறது என்பதைக் கண்டனர். மனச்சோர்வு 24.8 சதவிகிதமும், கவலை 16.1 சதவிகிதமும் இன்ஸோம்னியா எனும் தூக்கமின்மை வியாதி 14.5 சதவிகிதம் குறைகிறது என்றும்
ஆய்வறிக்கை கூறுகிறது.
ஆக போன் மூலம் சோஷியல் மீடியாக்களுக்கு அடிமையாவதை ஒரு நாளைக்குக் கொஞ்ச நேரம் மட்டும் குறைத்து ஒரு இரண்டு வாரம் நீங்களே சோதித்துப் பார்க்கலாம் – முன்னேற்றம் ஏற்படுகிறதா இல்லையா என்று!
போனை ஆஃப் செய்து தான் வைப்போமே – கொஞ்ச நேரம் மட்டும் – தினமும்!!
**