Written by London Swaminathan
Post No. 15,831
Date uploaded in London –5 June 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருநாவாய்
நாவாய் முகுந்தன் கோவில்
மலைநாட்டுத் திருப்பதி, கேரள மாநிலம்
திருநாவாய் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.திருமங்கையாழ்வார் மற்றும் நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது
மூலவர் – நாவாய் முகுந்தன், நாராயணன், நின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் – மலர்மங்கை நாச்சியார், சிறுதேவி.
தீர்த்தம் – செங்கமல ஸரஸ்.
விமானம் – வேத விமானம்.
ப்ரத்யக்ஷம் – லக்ஷ்மி, கஜேந்த்ரன், நவயோகிகள்.
கோவில் பாரதப்புழை ஆற்றை ஒட்டியுள்ளது. எதிர்க் கரையில் சிவனுக்கும் ப்ரஹ்மாவுக்கும் கோவில்கள் உள்ளன. இதைக் காசிக்கு ஸமானமாகக் கருதி சிராத்தங்கள் முதலியன செய்கின்றனர்.
துவாரபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் இங்கு வந்து பஞ்ச பாண்டவர்களுடன் சேர்ந்து, தம் முன்னோருக்கு பித்ரு பூஜை செய்தார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இதனால் இத்தலத்தில் பித்ரு பூஜை செய்தால் அளவிடற்கரிய புண்ணியம் கிடைக்கும் என்று கருதப்படுகிறது.
அமாவாசை நாட்களில் இத்தலத்தின் தலவிருட்சம் அடியில் பித்ருக்களுக்கு அன்னம் வைத்து வழிபடுகிறார்கள். அமாவாசையன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தலத்தின் அருகில் உள்ள பாரத புழை நதியில் நீராடி பித்ரு பூஜை செய்கின்றனர். கேரள மாநிலத்தில் பித்ரு தர்ப்பணம் கொடுப்பதில் இத்தலம் முதன்மை வகிக்கிறது.
இவ்விடத்தில் 9 யோகிகள் யாகம் செய்ததால் இந்த ஸ்தலம் திருநவயோகி என்று பெயர் பெற்று நாளடைவில் திருநாவாய் என்று மக்கள் வழக்கில் மாறுபட்டதாக ஐதீஹம்.
ஒரு சமயம் மஹாலக்ஷ்மியும் கஜேந்திரனும் தாமரைப் பூக்களை பறித்து பகவானை அர்ச்சனை செய்ய, கஜேந்திரனுக்கு, பூ கிடைக்காமல் பகவானிடம் முறையிட பகவான் லக்ஷ்மியை பூ பறிக்க வேண்டாம் என்று சொல்லி, லக்ஷ்மியை தன்னுடன் ஏக சிம்மாஸனத்தில் அமரச்செய்து கஜேந்த்ரன் பூஜையை எற்றுக் கொண்டதாக புராண வரலாறு. மலைநாட்டில் இந்த ஓர் இடத்தில்தான் லக்ஷ்மிக்கு தனி ஸந்நிதி உண்டு.
மங்களாசாஸனம் –
திருமங்கையாழ்வார் – 1520, 1856
நம்மாழ்வார் – 3634 -44
மொத்தம் 13 பாசுரங்கள்.
திருநாவாய் முகுந்தன் கோவில்
பெருமாளின் முழங்கால்களுக்கு கீழான பகுதி பூமியில் புதைந்துள்ள தலம் இதன் பொருட்டே இங்கே நேர்த்தி கடன் செலுத்தும் அன்பர்கள், முட்டியிட்டு பிரதட்சணம் செய்வது வழக்கம்.
***
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திவ்ய தேசம் திருநாவாய். சென்னை – கள்ளிக்கோட்டை ரயில் மார்க்கத்தில் திருநாவாய் ரயில் நிலையம் அமைந்துள்ளது. சென்னை – கள்ளிக்கோட்டை ரயில் மார்க்கத்தில் உள்ள இந்த
ஸ்டேஷனிலிருந்து ஊரும் கோவிலும் 1 மைல் தூரத்தில் உள்ளன. ஷோரானூரிலிருந்து பஸ்ஸில் குட்டீபுரம் வந்து அங்கிருந்து வேறு பஸ்ஸில் திருநாவாய் வந்ததும் கோயிலை அடையலாம்.
***
திருவிழா
வைகுண்ட ஏகாதசி, திருவோணம்;
இக்கோவிலில் மாமாங்கத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. 18 ஆம் நூற்றாண்டில் திப்பு சுல்தானாலும் 1921 இல் மாப்பிள்ளைக் கலகம் நடந்த போதும் இக்கோவில் தாக்குதலுக்கு உள்ளானது
கேரளாவில் இந்த தலத்தில் மட்டும் தான் லட்சுமிக்கு தனி சன்னதி உண்டு என்கிறார்கள்.
கோயிலின் சுற்றுப்பகுதியில் கணபதி, லட்சுமி, ஐயப்பனுக்கு சன்னதிகள் உண்டு. கோயிலுக்கு எதிரே உள்ள ஆற்றின் அக்கரையில் பிரம்மனுக்கும், சிவனுக்கும் தனி கோயில் உள்ளது. எனவே இத்தலத்தை மும்மூர்த்தி என அழைக்கிறார்கள்.
***
பாசுரங்கள்
1520.
தூ வாய புள் ஊர்ந்து வந்து* துறை வேழம்*
மூவாமை நல்கி* முதலை துணித்தானை*
தேவாதிதேவனை* செங் கமலக் கண்ணானை*
நாவாய் உளானை* நறையூரில் கண்டேனே.
***
3750.
அறுக்கும் வினையாயின* ஆகத்து அவனை*
நிறுத்தும் மனத்துஒன்றிய* சிந்தையினார்க்கு*
வெறித்தண்மலர்ச் சோலைகள்சூழ்* திருநாவாய்*
குறுக்கும்வகை உண்டுகொலோ* கொடியேற்கே? (2)
3751.
கொடிஏர்இடைக்* கோகனகத்தவள் கேள்வன்*
வடிவேல் தடம்கண்* மடப்பின்னை மணாளன்*
நெடியான்உறை சோலைகள்சூழ்* திருநாவாய்*
அடியேன் அணுகப்பெறும்நாள்* எவைகொலோ!
3752.
எவைகொல் அணுகப் பெறும்நாள்?’* என்று எப்போதும்*
கவையில் மனம்இன்றி* கண்ணீர்கள் கலுழ்வன்*
நவைஇல் திருநாரணன்சேர்* திருநாவாய்*
அவையுள் புகலாவதுஓர்* நாள் அறியேனே
3753.
நாளேல் அறியேன்* எனக்குஉள்ளன* நானும்
மீளா அடிமைப்* பணி செய்யப் புகுந்தேன்*
நீள்ஆர்மலர்ச் சோலைகள்சூழ்* திருநாவாய்*
வாள்ஏய் தடம்கண்* மடப்பின்னை மணாளா!
3754.
மணாளன் மலர்மங்கைக்கும்* மண் மடந்தைக்கும்*
கண்ணாளன் உலகத்துஉயிர்* தேவர்கட்குஎல்லாம்*
விண்ணாளன் விரும்பிஉறையும்* திருநாவாய்*
கண்ஆரக் களிக்கின்றது* இங்குஎன்று கொல்கண்டே?
3755.
கண்டே களிக்கின்றது* இங்குஎன்று கொல்கண்கள்*
தொண்டேஉனக்காய் ஒழிந்தேன்* துரிசுஇன்றி*
வண்டுஆர்மலர்ச் சோலைகள்சூழ்* திருநாவாய்*
கொண்டே உறைகின்ற* எம்கோவலர்கோவே!
3756.
கோவாகிய* மாவலியை நிலம்கொண்டாய்*
தேவாசுரம் செற்றவனே!* திருமாலே*
நாவாய்உறைகின்ற* என்நாரணநம்பீ*
‘ஆஆ அடியான்* இவன் என்று அருளாயே.
3757.
அருளாது ஒழிவாய்* அருள்செய்து* அடியேனைப்
பொருளாக்கி* உன்பொன்அடிக்கீழ்ப் புகவைப்பாய்*
மருளேஇன்றி* உன்னை என்நெஞ்சத்துஇருத்தும்*
தெருளேதரு* தென்திருநாவாய் என்தேவே!
3758.
தேவர் முனிவர்க்குஎன்றும்* காண்டற்குஅரியன்*
மூவர் முதல்வன்* ஒருமூவுலகுஆளி*
தேவன் விரும்பிஉறையும்* திருநாவாய்*
யாவர் அணுகப்பெறுவார்* இனிஅந்தோ!
3759.
அந்தோ! அணுகப்பெறும்நாள்* என்றுஎப்போதும்*
சிந்தை கலங்கித்* திருமால் என்றுஅழைப்பன்*
கொந்துஆர்மலர்ச் சோலைகள்சூழ்* திருநாவாய்*
வந்தே உறைகின்ற* எம்மா மணிவண்ணா!.
3760.
வண்ணம் மணிமாட* நல்நாவாய் உள்ளானைத்*
திண்ணம் மதிள்* தென்குருகூர்ச் சடகோபன்*
பண்ணார் தமிழ்* ஆயிரத்து இப்பத்தும்வல்லார்*
மண்ணாண்டு* மணம்கமழ்வர் மல்லிகையே. ~ நம்மாழ்வார்
–subham—
Tags– திரு நாவாய்,மலைநாட்டுத் திருப்பதி, Part 45, Vishnu Temples, 108