WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,830
Date uploaded in London – 5 June 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் வரங்கள் மூன்றாம் பாகம் ஆரம்பம்
ராமாயணத்தில் வரங்கள் (55) கும்பகர்ணனுக்கு பிரம்மா வரம் அளித்தது!
ச. நாகராஜன்
உத்தரகாண்டத்தின் பத்தாவது ஸர்க்கமாக அமைவது ‘ராவணன் முதலியவர்கள் வரத்தைப் பெறுவது’ என்ற ஸர்க்கமாகும்.
அகஸ்திய முனிவர் ஶ்ரீ ராமரிடம் ராவணனும் அவனது சகோதரர்களும் பெற்ற வரம் பற்றி விளக்க ஆரம்பித்தார். அவர்களில் கும்பகர்ணன் பெற்ற வரத்தைப் பற்றி அவர் விளக்கமாக எடுத்துரைத்தார்.
விபீஷணனுக்கு வரம் அளித்த பின்னர் பிரம்மா கும்பகர்ணனுக்கு வரம் அளிக்கச் சித்தமானார். அப்போது தேவர்கள் எல்லோரும் பிரம்மாவை நோக்கி, “கும்பகர்ணன் துஷ்ட மனத்துடன் உலகங்களை எவ்வளவு நடுங்க வைத்திருக்கிறான் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். இந்திரனுடைய நந்தவனத்தில் ஏழு அப்ஸரஸ்களும், மஹேந்திரனது பரிவார ஜனங்கள் பதின்மரும், மானிடப் பெரியோர்களும், ரிஷிகளும் இவனால் புசிக்கப்பட்டிருக்கின்றனர். ஆகவே இவனுக்கு வெளித்தோற்றத்திற்கு வரம் போல இருக்கும் ஒன்றால் அவனது அறிவு சற்று இழந்திருப்பது போன்ற வரத்தை அருள வேண்டும். இதனால் உலகங்கள் அனைத்திற்கும் நன்மை உண்டாகும்” என்று வேண்டினர்.
உடனே பிரம்மா தனது பத்தினியான சரஸ்வதியை மனதில் நினைத்தார். உடனே சரஸ்வதி தேவி அவர் முன்னால் வந்து கை கூப்பி என்ன செய்ய வேண்டும் என்று வேண்டினாள்.
பிரம்மா சரஸ்வதியை நோக்கி, “ஹே! வாணி! தேவர்கள் வேண்டிக் கொண்டபடி நீ கும்பகர்ணனின் நாக்கில் புகுந்து நடத்து” என்றார்.
தேவியும் சரி என்று சொல்லி விட்டு அமைந்தாள். உடனே பிரம்மா, கும்பகர்ணனைப் பார்த்து, “மஹாபாஹுவாகிய கும்பகர்ணா! எது மனதில் இருக்கிறதோ அந்த வரத்தைக் கேட்பாயாக” என்றார்.
கும்பகர்ண மஹாபாஹோ வரம் வரய யோ மத: |
உத்தரகாண்டம், பத்தாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 44
மஹாபாஹோ – மஹாபாஹுவாகிய கும்பகர்ண – கும்பகர்ணா! ய: – எது மத: – மனதில் இருக்கிறதோ வரம் – அந்த வரத்தை வரய – கேட்டுக்கொள் (என்றார்)
உடனே கும்பகர்ணன், “தேவதேவரே! அநேக வருஷங்கள் துயில் கொள்ள எனது கருத்து” என்றான்.
ஸ்வப்னம்து வர்ஷான்யனேகானி தேவதேவ மமேப்ஸிதம் |
உத்தரகாண்டம் பத்தாவது ஸர்க்கம் ஸ்லோக எண் 45
தேவதேவ – தேவதேவரே அநேகானி – அநேக வர்ஷானி – வருஷங்கள் ஸ்வப்னம்து – துயில்கொள்ள மம – எனது ஈர்ஷிசதம் – கருத்து
உடனே பிரம்மா ஏவம் அஸ்து – அப்படியே ஆகுக என்று வரத்தை அளித்து விட்டு அந்தர்தானமானார்.. ஸரஸ்வதி தேவியும் அகன்றாள்
கும்பகர்ணன் மனம் நொந்து, “என் வாயிலிருந்து வந்த சொல் ஏன் இப்படி ஆகியிருக்கிறது” என்று நினைத்தான்.
இது கும்பகர்ணன் கேட்டுப் பெற்ற வரமாகும்.
**