ராமாயணத்தில் வரங்கள் (56) ராவணனுக்கு பிரம்மா வரம் அளித்தது!

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,834

Date uploaded in London – 6 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (56) ராவணனுக்கு பிரம்மா வரம் அளித்தது!

ச. நாகராஜன்

உத்தரகாண்டத்தின் பதினாறாவது ஸர்க்கமாக அமைவது ‘ராவணன் என்ற பெயரை அடைவது’ என்ற ஸர்க்கமாகும்.

ஒரு சமயம் புஷ்பக விமானத்தில் ராவணன் செல்லும் போது அது ஒரு இடத்தில் அசையாமல் நின்று விட்டது. ஏன் இப்படி இந்த விமானம் இங்கு நின்று விட்டது என்று ராவணன் யோசித்த சமயத்தில் சிவபெருமானின் அனுசரராகிய நந்தீஸ்வரர் அங்கு வந்து ராவணனிடம், ‘இது சங்கர பகவான் எழுந்தருளியிருக்கும் இடம். நீ திரும்பிப் போய் விடு” என்றார்.

கோபமடைந்த ராவணன், ‘இந்த சங்கரன் என்பவன் யார்?’ என்று கேட்டவாறே கைலாஸத்தை நெருங்கினான். அங்கு வானர முகத்துடன் இருந்த நந்தீஸ்வரரைப் பார்த்து அவன் அலட்சியம் செய்தான். இதனால் வெகுண்ட நந்தீஸ்வரர், “என் வானர முகத்தைக் கண்டு எள்ளி நகையாடினாய்.. உன் குலத்தை அழிக்க வானரர்கள் உதிப்பார்கள்’ என்றார்.

ராவணன் கைலாஸ மலையைப் பெயர்த்து எறிய எண்ணம் கொண்டு அந்த மலையின் அடியில் கைகளை வைத்து மலையைக் குலுக்கினான். உடனே சங்கரர் அந்த மலையை தன் திருவடிப் பெருவிரலினால் விளையாட்டாக அழுத்தினார்.

கைகள் நசுக்குண்ட நிலையில் ராவணன் ஓவென்று அலறினான். உடனே அவனது மந்திரிகள் அவனிடம் சிவபெருமானை வணங்கித் துதிக்குமாறு கூறினார்கள். ராவணனும் அப்படியே ஸ்தோத்திரங்களால் சிவனைத் துதிக்கலானான்.

இதனால் மகிழ்ந்த சங்கரர், “ஓ! தசானனா! நீ இட்ட கூச்சலினால் உலகமே நடுங்கியது. ஆகவே இனி ராவணன் என்ற பெயரை இட்டு அனைவரும் உன்னை அழைப்பார்கள் என்றார்.

அப்போது ராவணன் அவரை வணங்கி, ‘மஹாதேவரே. பிரஸன்னராய் இருக்கிறீர்கள் என்றால் வருந்திக் கேட்கும் எனக்கு ஒரு வரத்தை அருள்வீராக’ என்றான்.

ப்ரீதோ யதி மஹாதேவ வரம் மே தேஹி யாசத: |

   உத்தரகாண்டம், பதினாறாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 34

மஹாதேவ – ,மஹாதேவரே                                           ப்ரீதி: – பிரஸன்னராய்                                                  யதி – இருக்கிறீர்கள் என்றால்                                       யாசத: – வருந்திக் கேட்கும்                                              மே – எனக்கு                                                                வரம் – ஒரு வரத்தை                                                         தேஹி – தந்தருள்வீர்

இப்படிச் சொன்ன ராவணன் தனக்கு தீர்க்க ஆயுளைக் கேட்டதோடு ஒரு சஸ்திரத்தையும் தந்தருளுமாறு வேண்டினான்.

வாஞ்சிசதம் சாயுஷ: சேஷம் சஸ்த்ரம் த்வம் ச ப்ரயஸ்ச  மே|

உத்தரகாண்டம், பதினாறாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 36

வாஞ்சிசதம் – பிரார்த்திக்கப்பட்டதாகிற                                  சேஷம் – குறையாமலிருக்கிற                                          ஆயுஷ: ச – ஆயுளையும்                                                சஸ்த்ரம் ச ஒரு சஸ்திரத்தையும்                                          மே – எனக்கு                                                            ப்ரயஸ்ச – தந்தருள வேண்டும்.

சிவபெருமானும் உடனே அப்படியே அருளினார்.  சந்திரஹாஸம் என்ற வாளை ராவணனுக்குத் தந்தார். அத்தோடு ராவணனைப் பார்த்து சங்கரர், “இந்த வாள் உன்னால் அவமரியாதை செய்யப்படத் தக்கதன்று. அப்படி அவமரியாதை செய்யப்பட்டால் இது என்னிடமே திரும்பி வந்து விடும்” என்றார்.

ராவணன் அதைப் பெற்றுக் கொண்டு தன்னிடத்திற்குத் திரும்பினான்.

இந்த வரம் கேட்டுப் பெற்ற ஒன்றாகும்.

**

Leave a comment

Leave a comment