Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-58; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,884)

Written by London Swaminathan

Post No. 15,884

Date uploaded in London –18 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

கண்டமெனும் கடிநகர் / தேவப்பிரயாகை

திருக்கண்டமென்னும் கடிநகர் (தற்காலத்தில் தேவப்பிரயாகை என்று அழைக்கப்படுகிறது) என்பது வைணவர்களின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். உத்தரகண்ட் மாநிலத்தின் தேரி கார்வால்  மாவட்டத்தில், அலக்நந்தா மற்றும் பாகீரதி ஆறுகள் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. இது பெரியாழ்வாரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும்.

திவ்யதேசம்- திருகண்டமென்னும் கடி நகர் / தேவப்ரயாகை / சுதர்சன க்ஷேத்திரம்’    

மூலவர்-நீலமேகப்பெருமாள் / புருஷோத்தமன் / ரகுநாத்ஜி

தாயார்-  புண்டரீகவல்லி தாயார் / சீதாப்பிராட்டியார் / விமலா

திருக்கோலம்- நின்ற திருக்கோலம் 

திசை      -கிழக்கு  

பாசுரங்கள்-     11   

மங்களாசாசனம்- பெரியாழ்வார்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 அடி உயரத்தில் தேவப்ரயாகை அமைந்திருக்கிறது. ஹரித்துவாரில் இருந்து பத்ரிநாத் செல்லும் வழியில், ரிஷிகேஷில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவிலும் பத்ரிநாத்தில் இருந்து சுமார் 290 கிமீ தொலைவிலும் உள்ளது. இந்த வழியில் ஐந்து புண்ணிய சங்கமங்கள் இருக்கின்றன.

1

அலக்நந்தா நதியுடன் பாகீரதி சங்கமமாகும் தேவப்ரயாகை ( ரிஷிகேஷில் இருந்து 70 கிமீ ) ;

2

அலக்நந்தாவுடன் மந்தாகினி சங்கமிக்கும் ருத்ரப்ரயாகை (140 கிமீ) ;

3

அலக்நந்தாவுடன் பிண்டர்நதி சேரும் கர்ணப்ரயாகை (170 கிமீ);

4

அலக்நந்தாவுடன் நந்தாகினி சேரும் நந்தப்ரயாகை (190 கிமீ) ;

5

அலக்நந்தாவுடன் கருடகங்கா என்ற தௌலி நதி சேரும் விஷ்ணுப்ரயாகை (260 கிமீ) என ஐந்து ப்ரயாகைகள் ( பஞ்ச ப்ரயாகை) பத்ரிநாத்திற்கு முன்பு உள்ளன.

Following pictures are taken from a website;thanks

தேவப்பிரயாகை  அலஹாபாத்தின் திரிவேணி சங்கமம் போன்று வழிபடப்படும் வரும் ஒரு புண்ணிய சங்கமம் ஆகும். அமைதியாக நகர்ந்து பச்சை நிறத்துடன் வரும் பாகீரதியும், ஆக்ரோஷமாக சீறிப் பாய்ந்து இளம் சிவப்பு நிறத்துடன் வரும் அலக்நந்தாவும் சங்கமிக்கும் காட்சி நம்மைப் பரவசப்படுத்துகிறது. சங்கமத்துக்குப் பிறகு ‘கங்கை’ எனப் பெயர் மாறுகிறது. ப்ரயாகை என்றால் சங்கமிப்பது; இங்கு பாகீரதியும் அலகநந்தாவும் சங்கமிப்பதாலும், இங்கு பிரம்மா, விஷணுவே தேவன் என்று அவருக்காக சிறந்த யாகத்தை செய்ததாலும், இந்த இடத்தை இந்திரனே பாதுகாப்பதாலும், இது தேவப்ரயாகை என்று பெயர் பெற்றது.

பிரம்மன், பரத்வாஜர், தசரதன் ஆகியோருடன் ஸ்ரீராமபிரானும் இங்கு தவம் செய்ததாக வரலாறு. ராவணனைக் கொன்ற பாவம் நீங்குவதற்காக ஸ்ரீராமன் இங்கே தவம் செய்ததாக ஐதீகம்.

கண்டம் என்றால் ஒரு பகுதி என்றும் கடி என்றால் மணம் கமழும் என்றும் அர்த்தம். மணம் கமழும் பகுதி என்று ஆழ்வாரால் பாடப்பட்ட பகுதி, கண்டம் எனும் கடி நகர் ஆகும்.

கடி என்றால் ஒரு நொடி பொழுது என்றும் இந்த திவ்யதேசத்தில் ஒரு நொடி பொழுது இருந்தால் எல்லா ஜென்மங்களிலும் செய்த பாவங்களை போக்கி விடும் என்று ஓர் அர்த்தம் சொல்வார்கள்; 108 திவ்யதேசங்களில் இப்படி சொல்லப்பட்ட திவ்யதேசங்கள் மூன்று, அவை, கண்டமெனும் கடி நகர், திருக்கடிகை, திருக்கடித்தானம் (மலையாள திவ்யதேசம்) ஆகும்.

இங்குள்ள ஆலயத்தில் எழுந்தருளியிருப்பவர் ஸ்ரீராமன். இவரை ரகுநாத்ஜீ என்று அழைக்கிறார்கள். சுமார் 72 அடி உயரத்துடனும், உச்சியில் கூம்புவடிவத்துடனும் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. ஸ்ரீராமன் திருவடி பதித்த பாறை ஒன்றும் இங்கிருக்கிறது. ஸ்ரீராமன் இந்த இடத்தில் தசரதருக்கு பிண்டதானம் கொடுத்தாராம். ஸ்ரீரகுநாதரின் ஆலயத்துக்கு அருகில் பத்ரிநாதர், கால பைரவர், ஹனுமான் மகாதேவர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. சஞ்சீவ பர்வதம் தாங்கிய ஹனுமனும் காட்சி அளிக்கிறார். இந்த கோவிலில் உத்சவர் உண்டு. ஆண்டுக்கு பத்து நாட்கள் உற்சவம் காண்கிறார்.

ஆதி சங்கரர் நிறுவிய கோவில் ரகுநாத்ஜி மந்திர் என்று கூறப்படும். ஸ்வாமி ராமானுஜரும் மங்களாசாசனம் செய்த க்ஷேத்திரம் ஆகும்.

தேவேந்திரன் ப்ரயாகையைப் பாதுகாக்கிறான் என்றும், இங்குள்ள ஆலமரம் தான் ப்ரளய காலத்தில் அழியாமல் இருக்கும் என்றும், அதன் இலையில் தான் எம்பெருமான் குழந்தையாக பள்ளிகொள்வார் என்றும் மத்ஸய புராணம் கூறுகிறது.

கோவிலுக்குப் பின்பகுதியில் சிறிய ஆஞ்சநேயர் சந்நிதியும் உள்ளது.

தல வரலாறு: பரத்வாஜ முனிவருக்கு பெருமாள் காட்சி அளித்த தலம் இதுவாகும்.

தேவப்பிரயாகையின் சிறப்பை பற்றி புராணங்களில் கூறப்பட்டுள்ளன.

பாசுரம்

 91.  

தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த*  எம் தாசரதிபோய்*

எங்கும் தன் புகழாவிருந்து அரசாண்ட*  எம் புருடோத்தமன் இருக்கை*

கங்கை கங்கைஎன்ற வாசகத்தாலே*  கடுவினை களைந்திடுகிற்கும்*

கங்கையின் கரைமேல் கைதொழநின்ற*  கண்டம்என்னும் கடிநகரே.  (2)

392.  

சலம்பொதி உடம்பின் தழல்உமிழ் பேழ்வாய்ச்*  சந்திரன் வெங்கதிர் அஞ்ச*

மலர்ந்துஎழுந்துஅணவும் மணிவண்ண உருவின்*  மால் புருடோத்தமன் வாழ்வு*

நலம்திகழ் சடையான் முடிக்கொன்றை மலரும்*  நாரணன் பாதத்துழாயும்*

கலந்துஇழி புனலால் புகர்படு கங்கைக்*  கண்டம்என்னும் கடிநகரே. 

393.  

அதிர்முகம்உடைய வலம்புரி குமிழ்த்தி*  அழல்உமிழ் ஆழிகொண்டுஎறிந்து*  அங்கு-

எதிர்முக அசுரர் தலைகளை இடறும்*  எம் புருடோத்தமன் இருக்கை*

சதுமுகன் கையிற் சதுப்புயன் தாளில்* சங்கரன் சடையினில் தங்கி*

கதிர்முக மணிகொண்டுஇழி புனல்கங்கைக்*  கண்டம்என்னும் கடிநகரே

394.  

இமையவர் இறுமாந்துஇருந்து அரசாள*  ஏற்று வந்துஎதிர் பொருசேனை*

நமபுரம் நணுக நாந்தகம் விசிறும்*  நம் புருடோத்தமன் நகர்தான்*

இமவந்தம் தொடங்கி இருங்கடல் அளவும்* இருகரை உலகுஇரைத்துஆட*

கமையுடைப் பெருமைக் கங்கையின் கரைமேல்*  கண்டம்என்னும் கடிநகரே.

395.  

உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும்*  ஒண் சுடர்ஆழியும் சங்கும்*

மழுவொடு வாளும் படைக்கலம்உடைய*  மால் புருடோத்தமன் வாழ்வு*

எழுமையும் கூடி ஈண்டிய பாவம்*  இறைப்பொழுது அளவினில் எல்லாம்*

கழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல்*  கண்டம்என்னும் கடிநகரே.

396.  

தலைபெய்து குமுறிச்சலம் பொதிமேகம்*  சலசல பொழிந்திடக்கண்டு*

மலைப் பெரும்குடையால் மறைத்தவன் மதுரை*  மால் புருடோத்தமன் வாழ்வு*

அலைப்புஉடைத் திரைவாய் அருந்தவ முனிவர்*  அவபிரதம் குடைந்தாட*

கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரைமேல்*  கண்டம்என்னும் கடிநகரே.

397.  

விற்பிடித்துஇறுத்து வேழத்தை முறுக்கி*   மேல்இருந்தவன் தலைசாடி*

மற்பொருதுஎழப் பாய்ந்து அரையனை உதைத்த*  மால் புருடோத்தமன் வாழ்வு*

அற்புதம்உடைய ஐராவதமதமும்*  அவர் இளம்படியர் ஒண்சாந்தும்*

கற்பக மலரும் கலந்துஇழி கங்கைக்*  கண்டம்என்னும் கடிநகரே.

400.  

 மூன்றெழுத்ததனை மூன்றெழுத்ததனால்*  மூன்றெழுத்தாக்கி*  மூன்றெழுத்தை-

ஏன்றுகொண்டிருப்பார்க்கு இரக்கம் நன்குடைய*  எம் புருடோத்தமன் இருக்கை*

மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி*  மூன்றினில் மூன்றருவானான்*

கான்தடம் பொழில்சூழ் கங்கையின் கரைமேல்*  கண்டமென்னும் கடிநகரே. (2)

401.  

பொங்கொலி கங்கைக் கரைமலி கண்டத்து*  உறை புருடோத்தமனடிமேல்*

வெங்கலி நலியா வில்லிபுத்தூர்க்கோன்*  விட்டுசித்தன் விருப்புற்று*

தங்கிய அன்பால் செய்த‌ தமிழ்மாலை*  தங்கிய நாவுடையார்க்கு*

கங்கையில் திருமால் கழலிணைக்கீழே*  குளித்திருந்த கணக்காமே. (2)

–subham-

Tags- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-58; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், கண்டமெனும் கடிநகர் ,தேவப்பிரயாகை

Leave a comment

Leave a comment