சீதக்காதியின் பெருமை! (Post No.15,886)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,886

Date uploaded in London – 19 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

தமிழ் இன்பம்

சீதக்காதியின் பெருமை! 

ச. நாகராஜன் 

வள்ளல் சீதக்காதி புலவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல்

வாரி வழங்கிய பெரும் வள்ளல் ஆவார்.

அவரிடம் சென்று பரிசு பெறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர்

நமச்சிவாயப் புலவர்.

சீதக்காதி இருந்ததால் அவருக்கு பணக்கஷ்டமே இருந்ததில்லை; பணத்தின் அருமையும் அவருக்குப் புரிந்ததில்லை.

ஆனால் சீதக்காதி மறைந்தவுடன் தான் அவருக்குப் பணத்தின் அருமையும் பெருமையும் புரிந்தது. 

அவர் பாடினார் இப்படி: 

மைப்போதகமும் வளநாடுஞ் செந்தமிழ் வாணர்க்கருள்

கைப்போ தகமனை யான்சீதக் காதியைக் காத்திருந்த

அப்போ தறிந்தில மிப்பாழ்ப் பணத்தி னருமையெல்லாம்

இப்போ தறிந்தன மீயாத லோப ரிடத்திற்சென்றே

பொருள் : மை – கருமையாகிய 

போதகமும் – யானைகளையும் 

வளநாடும் – வளமாகிய ஊர்களையும் 

செந்தமிழ் வாணர்க்கு – செந்தமிழ் வல்ல புலவர்களுக்கு 

அருள் – கிருபை செய்கின்ற 

கை – துதிக்கையை உடைய 

போதகம் அனையான் – யானையை நிகர்த்தவனாகிய 

சீதக்காதியை – சீதக்காதி துரையை 

காத்திருந்த – காத்துக் கொண்டிருந்த 

அப்போது – அந்தக் காலத்தில் 

இ – இந்த 

பாழ் – பாழாகிய 

பணத்தின் அருமை எல்லாம் – பணத்தின் அருமையை முழுவதுமாக 

அறிந்திலம் – அறிந்தோமில்லை 

இப்போது – இப்பொழுது 

ஈயாத லோபர் இடத்தில் சென்று – ஒன்றும் கொடுக்காத கஞ்சர்களிடத்தில் போய் அறிந்தனம் – (பணத்தின் அருமையை) அறிந்து கொண்டோம்

சீதக்காதி மறைந்தவுடன் எல்லையில்லாத் துக்கம் கொண்ட நமச்சிவாயப் புலவர் ஒரு இரங்கல் பாடலைப் பாடினார்.

பூமா திருந்தென் புவிமா திருந்தென் பூதலத்தில்

நாமா திருந்தென்ன நாமிருந் தென்னநன் நாவலற்குச்

கோமா னழகமர் மால்சீதக் காதிகொடை மிகுந்த

சீமா னிறந்திட்ட போதே புலமையும் செத்ததுவே

பொருள்:  பூமாது இருந்து என் – திருமகள் இருந்து என்ன பயன் 

புவிமாதிருந்தென் – நிலமகள் இருந்து என்ன பயன் 

பூதலத்தில் நாமாது இருந்தென்ன – உலகத்தில் கலைமகள் இருந்து தான் பயன் 

என்ன 

நாம் இருந்து என்ன – நாமும் இருந்து தான் என்ன பயன் 

நல் நாவலர்க்கு – நல்ல புலவர்களுக்கு 

கோமான் – தலைவன் 

அழகு அமர் – அழகு வாய்ந்த 

மால் – பெருமையுள்ள 

சீதக்காதி – சீதக்காதி

 கொடைமிகுந்த – ஈகை மிகுந்த 

சீமான் – பெரும் செல்வனான அவன் 

இறந்திட்ட பொழுதே – இறந்த பொழுதே 

புலமையும் செத்தது – புலமையும் இறந்து போயிற்று.

சீதக்காதி மறைந்தவுடன் புலமையும் இறந்தது; வெளியில் புலமைக்கு

மதிப்புத் தருவோரும் இல்லாமல் போய்விட்டனர் என்று வருந்தினார் 

நமச்சிவாயப் புலவர்.

**

Leave a comment

Leave a comment