HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 74; இந்து மத கலைச்சொல் அகராதி- 74 (Post No.15,920)

Written by London Swaminathan

Post No. 15,920

Date uploaded in London –26 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 74

“N”  words continued…………………….

நக்கீரர்

சர்ச்சைக்குரிய சங்க காலப்  புலவர் ; மதுரைக் கணக்காயனார் என்ற பிராமணனின் மகன் ; சிவ பெருமானுடன் மோதியவர் ; ஏழைப் பிராமணன் தருமிக்கு சிவபெருமானே எழுதித் தந்த கவிதையில் குற்றம் கண்டவர்; பின்னர் சிவனருளும் முருகன் அருளும் பெற்றார்; சங்க இலக்கியத்தில் கடவுளைப் போற்றும் புறநானூற்றுப் பாடலையும் முழுநீள தெய்வீக நூலான திருமுருகாற்றுப்  படையையும் , பாண்டிய மன்னனைப் போற்றும் நெடுநல்வாடை நூலையும் ஏனைய பாடல்களையும் இயற்றியவர். பிராமணப் புலவன் தருமிக்காக சிவபெருமானே சங்கத்துச் சென்றார் என்று அப்பர் பெருமான் (600 CE) தேவாரத்தில் பாடியதால் இந்த நிகழ்ச்சி 300  CE வாக்கில் நடந்திருக்க வேண்டும்.

***

நலுங்கு- நலங்கு

பிராமணர் கல்யாணங்களில் தாலி கட்டிய நாளன்று மலையில் நடைபெறும் கேளிக்கை , வேடிக்கை , ஆட்டம்- பாட்டம் நிறைந்த சடங்கு ஆகும் . கல்யாணத்திலேற்பட்ட மனத்தொய்வு, களைப்பு ஆகியவற்றைக் குறைத்து பெண் வீட்டாரையும் மாப்பிள்ளை வீட்டாரையும் இணைக்கும் நிகழ்ச்சி இது ; இரு தரப்பினரும் எதிரும் புதிருமாக உட்கார்ந்த்துக்கொண்டு,  பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் இடையே பல போட்டிகளை நடத்துவார்கள்; வெற்றி பெற்ற குழுவினர் ஆரவாரம் செய்து உலகக் கோப்பையை வென்றதாக எண்ணி மகிழ்ச்சிக் கூத்தாடுவார்கள்; பெண் வீட்டாரையும் மாப்பிள்ளை வீட்டாரையும் கிண்டலும் கேலியும் செய்து பாட்டும் பாடுவார்கள் ; சில உதாரணங்கள் :

தண்ணீர் நிறைந்த குடத்தில் மோதிரத்தைப் போட்டு பெண்ணையும் மாப்பிள்ளையையும் ஏவி விடுவார்கள் முதலில் மோதிரத்தை எடுத்தவர் வெற்றி வீரர் ; பெண் அல்லது மாப்பிள்ளை கையில் காசுகளைக் கொடுத்து இறுக்க மூடச் சொல்லுவார்கள் ; அந்தக் குரங்குப் பிடியிலிருந்து காசினை எடுக்கும் முதல் நபர் வெற்றி! .

மாப்பிள்ளையை ஹிட்லர் மீசை, கோணல் மூஞ்சி , ஒல்லிப்பிச்சான் அல்லது பூசணிக்குண்டு என்று வருணித்துப் பெண் வீட்டுப் பெண் கள் ஏசுவார்கள் ; உடனே மாப்பிள்ளை வீட்டுப் பையன்கள் பெண்ணுக்கு காக்கையின் குரல், முடியே இல்லாத டோபா முடி, அடுப்பையே பார்த்திராத பெண்! என்றெல்லாம் கிண்டல் செய்வார்கள் ; இதற்கான பாட்டுகள் சிலவற்றைச் சேகரித்து நான் வெளியிட்டேன் ; கால வேகத்தில் அவை அழிந்து வருகின்றன .

வேறு சில பண்பாடுகளைப்  பின்பற்றுவோர் பெண்ணுக்கு மஞ்சள் பூசும் சடங்கினை நலங்கு என்பார்கள்; இது வடக்கத்திய மெஹந்தி (மருதாணி) சங்கீத் சடங்குகளைப் போன்றது .

மன நெருக்கத்தை, மன அழுத்தத்தைக் குறைக்க இந்துக்கள் கண் டுபிடித்த மகத்தான சடங்கு நலங்கு !

நலுங்குப் பாட்டு

அனுப்பியவர் திருமதி தயா நாராயணன் ,

Mrs Daya Narayanan from London, Now in Sydney, Australia.

சம்பந்திப் பாட்டு

சம்மந்தி அம்மா வந்தாளாம்

சந்தோஷமாகவே

சம்மந்தி அம்மா வந்தாளாம்

சந்தோஷமாகவே

பானைபோல் வயிறும் பட்டாணிக்கண்ணும்

யானை ரூபமும்  எலி வால்  பின்னலும் 

சம்மந்தி அம்மா வந்தாளாம்

வெகு சந்தோஷமாகவே

ஜப்பான் குள்ளம் ஜெர்மனி உயரம்

ஹிட்லர் மூக்கும் சர்ச்சில் வாயும்

சம்மந்தி அம்மா வந்தாளாம்

வெகு சந்தோஷமாகவே !

வெகு சந்தோஷமாகவே !

வெகு சந்தோஷமாகவே !

குறிப்பு – இது இரண்டாம் உலகப் போர் காலப் பாட்டு ; அந்தக் காலத்தில் ஹிட்லர், சர்ச்சில் படங்கள், கார்ட்டூன்கள் அடிக்கடிப் பத்திரிகைகளில் வெளியானதால் இதை மக்கள் ரசித்து இருப்பார்கள்.

ரா ரா நலுங்கிட வா ராஜ கோபாலா

ரா ரா நலுங்கிட வா ராஜ கோபாலா

ராஜ கோபாலா

கனகாம்பரதாரா கெளஸ்துப ஹாரா

கவச குண்டல தாரா

வனமா    தாரா வாசுதேவா  காலி

வைகுண்ட ஜகன்னாதா

ரா ரா நலுங்கிட வா ராஜ கோபாலா

ரா ரா நலுங்கிட வா ராஜ கோபாலா

பக்தவத்சல பரமதயாளா

பரிபூரணானந்தா நித்யானந்தா

உத்தம புருஷா

சித்தடி  நலுங்கிடரே

ரா ரா நலுங்கிட வா ராஜ கோபாலா

ரா ரா நலுங்கிட வா ராஜ கோபாலா

அந்தக் காலத்தில் மிக இளம் வயதில் கல்யாணங்கள் நடந்தன கோவலன் , இராமபிரான் ஆகியோருக்கெல்லாம் 18  வயதுக்குள்ளேயே திருமணங்கள்  நடந்ததாக நமது இலக்கியங்கள் செப்புகின்றன. அந்த சூழ் நிலையில் பெண்ணும் மாப்பிள்ளையும் கூட இந்தப் பாடல்களை ரசித்து இருப்பார்கள்.

இப்போது போல எருமைக்கடா வயதில் கல்யாணங்கள் நடக்கவில்லை!.

***

நால்வர் 

தமிழ்நாட்டில் சைவ சமயத்தில் எத்தனையோ பெரியோர்கள் இருந்தும் , 63 நாயன்மார்கள் இருந்தும்,  சைவ சமயத்துக்குப் புத்தியிரூட்டிய நான்கு பேரை- அப்பர்சம்பந்தர், சுந்தரர்,  மாணிக்க வாசகர்  – மட்டும் நால்வர் என்று போற்றித் துதிப்பர்; இவர்களில் முதல் மூவர் பாடியது தேவாரம்; மாணிக்கவாசகர் பாடியது திருவாசகம். பெரிய புராணத்தில் 63 நாயன்மார்களைப் பாடிய சேக்கிழார், மாணிக்கத்தைப் பாடாமல்  விட்டது பெரிய புதிர்; முதல் மூவர் மாணிக்கத்தைக் குறிப்பிடாததும் முதல் மூவரை மாணிக்கம் குறிப்பிடாததும் அதைவிடப் பெரிய புதிர்! அப்பர் காலம் மஹேந்திர வர்மன் 600 CE காலம் என்பது ஐயம் திரிபற நிரூபிக்கப்பட்டாலும்  மாணிக்கம் காலம் என்ன என்பது சர்ச்சைக்குரியதாகவே நீடிக்கிறது; ஆயினும் சில குறிப்புகளிலிருந்தும்,  திருவிளையாடல் புராண மன்னர் வரிசையிலிருந்தும் மாணிக்கம் முதல் மூவருக்கு 100 அல்லது 200 ஆண்டு முந்தையவர் என்று தெரிகிறது. (Please see my research articles on this topic).

***

நாமம்

வைஷ்ணவர்கள் – அதாவது விஷ்ணுவை வணங்குவோர் – நெற்றியில் இட்டுக்கொள்ளும் புனிதக் குறியீடு நாமம் ஆகும் ; சைவர்களின் விபூதி மூன்று படுக்கைக்கோடுகள் கொண்டது; நாமமென்பது மூன்று நெடுங்கோடுகள் கொண்டது;  இரண்டு வெள்ளைக்கோடுகளுக்கு இடையே ஒரு சிவப்புக்கோடு இருக்கும்.

இவர்களில் இரு பிரிவினர் தென்கலை என்றும் வடகலை என்றும் உள்ளனர் ; தென்கலையைப் பின்பற்றுவோர் ஆங்கில எழுத்து Y ஒய் போல நாமம் போடுவார்கள்; வட கலையைப் பின்பற்றுவோர் ஆங்கில எழுத்து யு U போல நாமம்  போடுவார்கள்; தென்கலையினர் திவ்யப் பிரபந்த தமிழ் பாசுரங்களையும் வடகலையினர் வேதாந்த தேசிகரின் ஸம்ஸ்க்ருதப் பாடல்களையும் போற்றுகிறார்கள். ஸ்ரீரங்கம், திருப்பதி போன்ற பெரிய கோவில்களில் எல்லோரும் வித்தியாசமில்லாமல்  வணங்கினாலும் சிறிய கோவில்களில் இந்த வேறுபாடு , நடைமுறைகள் முதலியன தெளிவாகத் தெரியும்; யானைகளுக்கு நாமம் போடுவதில் கூட இதைப் பின்பற்றுவார்கள்; சில நேரங்களில் இந்த வேறுபாடு ஏற்படுத்திய சர்ச்சை,  நீதிமன்றம் வரை சென்றதும் உண்டு. தீவிர வைஷ்ணவர்கள் உடலில் 12 இடங்களில் நாமங்களை இட்டுக்கொள்வார்கள் ; சிவனை வழிபடும் பிராமணர்கள் தினமும் மூன்று  வேளை சந்தியாவந்தனத்தின் போதும் விபூதியை இதே போல 12 இடங்களில் இட்டுக் கொள்கிறார்கள்.

****

நம்மாழ்வார்

நம்மாழ்வார் (மாறன் சடகோபன்) 12 ஆழ்வார்களில் தலைசிறந்தவராகவும், வைணவ மரபில் ‘ஆழ்வார்களுக்குத் தலைவராகவும்’ போற்றப்படுகிறார். பிறந்ததிலிருந்து பேசவும் கேட்கவும் முடியாமல் இருந்த இவர், தனது 16 வயதில் ஞானம் பெற்று, இறைவனின் புகழைப் பாடும் திருவாய்மொழி உள்ளிட்ட நான்கு பிரபந்தங்களை அருளினார். இவர்  பிறந்த ஊர் ஆழ்வார் திருநகரி;  வேதம் தமிழ் செய்த மாறன் என்றும் சடகோபன் என்றும் அறியப்படும் நம்மாழ்வாரின் அவதார மகிமையால் ஆழ்வார் திருநகரி என்ற பெயரை இத்தலம் பெற்றது.

நம்மாழ்வாரின் பாடல்கள் தத்துவார்த்த சிந்தனைகள்,  மற்றும் பல அதிசயத் தகவல்களைக் கொண்டுள்ளன (எ.கா: 7 மலைகள், 7 கடல்கள் குறித்த தகவல்கள்). வானியல் மற்றும் ஜோதிடக் கருத்துக்கள்: இவரது திருவாய்மொழியில், அன்றைய கால ஜோதிட நம்பிக்கைகள் மற்றும் வேலன் வெறியாடல் குறித்த சுவையான குறிப்புகளும், விபூதியின் மகிமையும் இடம்பெற்றுள்ளன.

நம்மாழ்வார் தனது பாடல்களில் ‘Wheel of Time’ எனப்படும் காலச் சக்கரத்தைப் பற்றி விவரித்துள்ளார். இவற்றில் சில சங்ககால மற்றும் அரிய தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன. திருக்குறள் மீதும், வாமன அவதாரம் மீதும் ஆழ்வார் கொண்டுள்ள ஈடுபாடு குறித்தும் காணலாம் .

பாரதியாருக்கு மிகவும் பிடித்த ஆழ்வார் நம்மாழ்வார். கலியுகத்தைக் கொன்று கிருத யுகத்தை மீண்டும் இப்பூவுலகில் கொண்டுவருவேன் என்று ஆழ்வார் பாடியது, பாரதியை மிகவும் கவர்ந்தது. ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துக் கட்டுரைகளை எழுதினார்

புத்தர் போதி மரம் என்னும் அரச மரத்துக்கு  அடியில் அமர்ந்து ஞானம் அடைந்ததைப் போல நம்மாழ்வார் புளியமரத்தின் கீழ் அமர்ந்து ஞானம் பெற்றார்;  இன்றும் அந்தப் புளிய மரம் வணங்கப்படுகிறது.

Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 74; இந்து மத கலைச்சொல் அகராதி- , நக்கீரர், நம்மாழ்வார், நாமம்

To be continued………………………….

Leave a comment

Leave a comment