Vishnu Temples 108 “Divya Desams” in Pictures- Last Article; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் முடிவுரை (Post.15,919)

Written by London Swaminathan

Post No. 15,919

Date uploaded in London –26 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திவ்ய தேச வரிசையில் இது கடைசி கட்டுரை 

துவக்கத்திலேயே நான் எழுதியதை மீண்டும் சொல்கிறேன் ; எவ்வளவோ பேர் இந்த 108 திவ்யதேசங்கள் பற்றி எழுதியபோதும் நான் இதை எழுதத் துவங்கியதன் காரணம் ஸ்ரீ  பெரும்புதூர் கோவில் சுவர்களிலும் கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோவில் சுவர்களிலும் நான் கண்ட  சித்திரங்களை புகைப்படம் எடுத்ததே.

அந்தப் புகைப்படங்களை வீணடிக்க மனம் வராததால் வாசகர்களுடன் பகிர்ந்தேன். பல க்ஷேத்திரங்களில் படங்களை ஐ பேட் I Pad   மூலம் எடுக்க முடியாதபடி இருள் சூழ்ந்து இருந்ததால் 108 படங்களும் இருக்காது; ஆயினும் திருநாங்கூர் என்ற இடத்தில் மட்டும்  11 திருப்பதிகள் ஒன்றாக அமைந்துள்ளன. 108 திவ்ய தேசங்களில் 15 திவ்ய தேசங்கள் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளன. ஆக  இரண்டே ஊர்களில் 26 க்ஷேத்திரங்களைக் கண்டுவிட்டோம் ! எனக்கு முன்னர் இது பற்றி வெளியான கட்டுரைகளின் சுருக்கத்தை நான் சேர்த்து இருந்தேன்; அவர்கள் அனைவருக்கும் நன்றி உரித்தாகுக.

***

பரமபதம்

தாயார் : ஸ்ரீ பெரிய பிராட்டியார்

மூலவர் : ஸ்ரீ பரமபத நாதன்

தெற்குநோக்கி வீற்றிருந்த திருக்கோலத்தில் இறைவன் பரமபதநாதன், வைகுண்டபதி என்று அழைக்கப்படுகிறான்.

தீர்த்தம் விரஜா நதி, அயிரமத புஷ்கரிணி.

திருப்பரமபதம் அல்லது வைகுந்தம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். வைணவ அடியவர்கள் கடைசி நிலையாகிய வீடுபேறு அல்லது மோட்சம் அல்லது முக்தி என்ற நிலை எய்தி செல்லும் இடமாகும். 8 ஆழ்வார்களால் 36 பாசுரங்களில் பாடல் பெற்ற தலமாகும். வைணவ அடியார்கட்கு, இறைவனன்றி தமக்குப் புகலிடம் யாதுமில்லை என்றெண்ணி அடியவர்கட்கு மோட்சத்தை நல்கும் இந்தப் பரமபதமே வைணவர்களின் கடைசி இலக்காகும்.

இதனை திருநாடு என ஆழ்வார் பாசுரங்களில் குறிக்கின்றனர். திருநாட்டைப் பற்றிப் புராணங்களாலும் ஆழ்வார் பாசுரங்களாலும் உணரலாம். இராமானுஜர் இயற்றிய வேதாந்த சங்கிரஹம் என்னும் நூல் திருநாட்டைப் பற்றித் தெளிவாகவும், நேரில் பார்ப்பது போலவும் விளக்கிப் பேசுகிறது. இராமானுஜர் இயற்றிய கத்யத்ரயத்தில் ஒன்றான வைகுண்ட கத்யத்தில் பரமபத வர்ணனை சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. இராமானுஜரின் வரலாற்றைப் பேசும் “ப்ரபந்நாம்ருத தர்ப்பணம்” என்னும் நூலில் பரமபதம் விளக்கப்பட்டுள்ளது.

பரமபதம் (வைகுந்தம்) அடைவது குறித்து ஆழ்வார்கள் பல பாசுரங்களைப் பாடியுள்ளனர். குறிப்பாக, நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி 10-ஆம் பத்து 9-ஆம் திருவாய்மொழியான “சூழ்விசும்பு அணிமுகில்” (முதல் பாசுரம்) பரமபத அனுபவத்தை நேரில் காண்பதுபோல விளக்குகிறது:

சூழ்விசும்பு அணிமுகில் தூரியம் முழக்கின

ஆழ்கடல் அலைதிரை கையெடுத்தாடின

ஏழ்பொழிலும் வளமேந்திய என்னப்பன்

வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டுகந்தே

“எம்பெருமானின் அடியார்கள் வைகுந்தம் (பரமபதம்) செல்லும் போது, ஆகாயத்தில் உள்ள மேகங்கள் வாத்தியங்களை முழங்கின. ஆழமான கடல்கள் அலைகளெனும் கைகளை உயர்த்தி நடனமாடின. இத்தகைய பெருமைகளை உடைய நாரணனின் அடியார்களைக் கண்டு அனைத்து உலகங்களும் மகிழ்ந்து கொண்டாடின.*

****

வைணவ சித்தாந்தங்களின் படி இங்கு செல்லும் ஜீவாத்மாக்கள் நித்யசூரிகள் ஆகின்றன. அதாவது எப்போதும் அழிவற்ற சக்தியைப் பெறுகின்றன. இங்கு இறைவனைப் போலவே வடிவம் அவர்கட்கும் உண்டாகிறது. ஆயினும் இறைவனோடு இரண்டறக் கலக்காமல் உடனிருந்து தொண்டு செய்து கொண்டு எப்போதும் பல்லாண்டிசைத்துக் கொண்டிருப்பர். நித்ய சூரியாகி இங்கு சென்றுவிட்டால் படைப்புகளும், பிரபஞ்சங்களும் என்னவென்று தெளிவாகத் தெரிவதால் இதற்கு தெளிவிசும்புத் திருநாடு என்று பெயர். இதற்குமேல் அறிவதற்கு ஒன்றுமில்லையாதலால் இதற்கு எல்லைநிலம் என்பது பொருள். இங்கு அடையும் இன்பத்திற்கும் நலத்திற்கும் முடிவே இல்லாததால் நலமந்தமில்லதோர் நாடு என்பதும் இதற்குப் பெயர். இங்கு கிடைக்கும் இன்பம் “அந்தமில் பேரின்பம்” என்று நம்மாழ்வார் பாடுகிறார். வைகுண்டம் என்றும் பெயருண்டு.

***

பரமபதசோபான பட விளையாட்டு !

இந்துக்கள்தான் போர்ட் கேம்களை Board Games கண்டுபிடித்தனர் என்று லண்டன் மியூசியங்களில் பட்டவர்த்தனமாகப் பொறித்துள்ளனர் நாம் உண்டாக்கிய Chess செஸ் / சதுரங்கம் இன்று உலகம் முழுதும் நமது பெருமையைப் பறைசாற்றி வருகிறது விளையாட்டில் இறைவனையும் மோட்சத்தையும் சேர்த்த ஒரே நாடு பாரதம்தான்! இதில் இறைவனை கீழேபோட்டுவிட்டு Snakes and Ladders ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ் என்று நம்முடைய பரமபத சோபனா படத்தை அவர்கள் இன்றுவரை விற்கின்றனர்; விளையாடுகின்றனர்.

அந்தக் காலத்தில் மதுரையில் புதுமண்டபத்திலுள்ள புஸ்தகக்கடைகளில் இதை வாங்கி இரவும் பகலும் விளையாடினோம் !

பரமபதம் என்னும் இறைவனின் திருநாடு அடைய உதவும் பரமபத விளையாட்டின் மூலம் இறை வழிபாடு வலுவடைகிறது.

பரமன் என்றால் திருமால் என்று பொருள், பரமபதம் என்றால் திருமாலின் இருப்பிடம்- வைகுந்தம்; அதை அடைவதே வாழ்வின் குறிக்கோள்.

நூற்றுக்கும் மேற்பட்ட கட்டங்களுடைய வரை  படத்தின் மீது பல படங்கள் இருக்கும்; தாயக்கட்டங்களை உருட்டி எண்ணிக்கைக்கு ஏற்ப காய்களை ஒவ்வொருவரும் நகர்த்துவார்கள் .

கட்டங்களில் கீழிலிருந்து மேல் நோக்கி காய்களை நகர்த்த வேண்டும். இடைபட்ட கட்டங்களில் ஏணிகளும், பாம்புகளும் வரையப்பட்டிருக்கும். ஏணியில் ஏறினால் புண்ணியம் செய்ததாகவும், பாம்பின் வாய் வழியாக கீழே இறங்கினால் பாவம் செய்ததாகவும் கருதப்படுகிறது இறுதியில் கடைசி கட்டத்தைச் சென்றடைந்தால் வைகுண்டத்த சென்றடைந்ததாக  கருத்து!   இவ்விளையாட்டு பெரும்பாலும் மார்கழி மாத்தில் வைகுண்ட ஏகாதசி நாளில் விளையாடப்படுகிறது. ஒவ்வெரு கட்டத்திலும் கடவுள்கள், கடவுளால் படைக்கப்பட்ட தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், பறப்பன, ஊர்வன, போன்ற அனைத்து ஜிவராசிகள் களும்  உள்ளன; ஒவ்வொரு கட்டமும் ஒரு தத்துவ ஆன்மீக கருத்தை விளக்குகிறது .

***

Tags- பரமபதசோபான படம், திருநாடு, பரமபதம், வைகுந்தம், Vishnu Temples 108 “Divya Desams” in Pictures- Last Article; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன், முடிவுரை, கடைசி கட்டுரை 

—subham—

Leave a comment

Leave a comment