
WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,925
Date uploaded in London – 28 June 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மாமனிதர் பாக்யராஜ் மறைந்தார்!
ச. நாகராஜன்
தாங்க முடியாத துயருடன் இந்த வார்த்தைகளை எழுத வேண்டியிருக்கிறது : மாமனிதர் பாக்யராஜ் மறைந்தார்.
இன்று (27-6-26) காலை நடைப்பயிற்சி முடித்து வீட்டுக்கு வந்தவர் மார்பு வலிக்கிறது என்று சொன்னார். மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் காலமானார்.
பெரிய இயக்குநர். சிறந்த திரைக்கதாசிரியர். சிறந்த நடிகர். பெரிய எழுத்தாளர். பல நடிகர்களையும் நடிகைகளையும் அறிமுகப்படுத்தியவர். உதவி இயக்குநர்களை ஆதரித்து அவர்களைப் பெரும் வெற்றி பெறும் இயக்குநர்களாக உயர்த்தியவர். பத்திரிகை ஆசிரியர்….. இப்படி எல்லாம் சொல்லிக் கொண்டே போகலாம்.
ஆனால் என் மனதில் வரும் சொற்கள் : இவர் ஒரு மாமனிதர்.
மனிதப் பண்புகளுடன் கர்வம் இன்றி அனைவரது நலனுக்காகவும் அயராது உழைத்தவர்.
இவருடனான எனது நட்பு 1998ல் தொடங்கியது. மினி பாக்யாவில் எழுத ஆரம்பித்து பிறகு பாக்யாவில் இடை விடாது இருபது வருடங்களுக்கும் மேலாக எழுதியதால் இவரைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
“நாகராஜன் எத்தனை வாரம் வேண்டுமானாலும் எழுதலாம். அவரது கட்டுரைகளை உடனே பிரசுரியுங்கள்” என்று இவர் தன் உதவியாளர்களுக்குக் கட்டளை பிறப்பித்திருக்கிறார். அவ்வளவு அன்பு என் மீது. பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் 26 வாரம் அல்லது 52 வாரமே எழுத அனுமதித்த பாக்யா என்னை தொடர்ந்து பல வருடங்கள் எழுத அனுமதித்தது.
விண்வெளியில் மனித சாதனைகள் 156 வாரம், அறிவியல் துளிகள் 460 வாரம், மாயாலோகம், விந்தை மனிதர்கள் – பல வாரங்கள் – என எனது படைப்புகள் இடைவிடாமல் பாக்யாவில் இடம் பெற்றன.
18-9-2010 அன்று அறிவியல் எழுத்துச் சேவைக்காக மன்னை ஶ்ரீ பார்த்தசாரதி டிரஸ்ட் எனக்கு ‘அறிவியல் எழுத்துச் செம்மல்’ என்ற விருதை அளித்த போது மகிழ்ச்சியுடன் தனது உதவி டைரக்டர்களிடம் மலர்க் கொத்தை விழா மேடைக்கு அனுப்பித் தனது பாராட்டுதல்களை வழங்கினார்.
வெற்றிக்கலை புத்தகத்திற்கு முன்னுரை கேட்கச் சென்ற போது உடனடியாக தருகிறேன் என்று சொன்னவர் இரண்டே நாட்களில் ரெடி வாருங்கள் என்றார்.
ஒரு முறை காலை பத்து மணிக்குச் சந்திப்பதாக ஏற்பாடு. ஆனால் அன்று மழை. ஆகவே எனது டிரைவர் வரவில்லை. அவரிடம் தொடர்பு கொண்டு டிரைவர் வரவில்லை. ஆகவே இன்னொரு நாள் வருகிறேன் என்றேன்.
உடனே, “உங்கள் டிரைவர் வரவில்லை என்றால் என்ன? எனது காரை அனுப்புகிறேன்” என்றார். காரும் வந்தது. உரிய நேரத்தில் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அவரது அலுவலகம் சென்றேன். பேச்சு சுவாரசியமாக ஆரம்பித்தது.
உதவியாளர்களை அழைத்த அவர், “யாரும் டிஸ்டர்ப் செய்ய வேண்டாம்” என்று கட்டளை இட்டார்.
12 மணி ஆனது. உணவு நேரம். “உங்களுக்காக பூர்ணிமா அனுப்பி இருக்கிறார். வாருங்கள் சாப்பிடுவோம்” என்றார்.
சோபா அருகில் தரையில் அமர்ந்து சாப்பிட்டோம். மீண்டும் பேச்சு.
பல விஷயங்களைக் குறித்துக் கொண்டார்.
அருகிலிருந்த கட்டு கட்டான காகிதம்/போஸ்ட் கார்ட் அவருக்கு வந்தவை. அவற்றை அவரே படித்து குறிப்பு எடுப்பது வழக்கம்.
உதவியாளரிடம் தனது பதிலைச் சொல்வது வழக்கம்.
எதையும் கூர்ந்து அணுகும் அற்புத திறமை. தெரியாத கலைகளை முயன்று கற்கும் ஊக்கத் திறன்.
அனைவரையும் சமமாக பாவிக்கும் உயர்ந்த மனிதத் தன்மை.
மாலயில் வெகு நேரம் ஆயிற்று. கிளம்புகிறேன் என்று சொல்லி மாடியில் இருந்த அவர் அறையிலிருந்து கீழே வந்த போது ஏராளமானோர் அங்கு நின்றிருந்தனர்; வீற்றிருந்தனர்.
பலரது ஆச்சரியப்பார்வை என் மீது படிந்தது.
யார் இவர்கள்? என்று என்னை வழி அனுப்ப வந்த உதவியாளர்களிடம் கேட்ட போது, “சார்! இவர்கள் எல்லாம் காலையிலிருந்து டைரக்டரைப் பார்க்கக் காத்திருக்கிறார்கள். சிலர் நடிகைக்கான வாய்ப்பு கேட்க வந்துள்ளனர். சிலர் நடிகர்கள். சிலர் உதவி இயக்குநர்கள்..” என்றனர் அவர்கள்.
“நீங்கள் இருக்கும் போது டிஸ்டர்ப் செய்ய வேண்டாம் என்று டைரக்டர் சொன்னதால் யாரையும் அனுப்பவில்லை. நாங்களும் உள்ளே வரவில்லை” என்றனர்.
திடுக்கிட்டேன். அன்றிலிருந்து பிரபலங்களைப் பார்க்க நேர்ந்தால் சில நிமிடங்களில் சந்திப்பை முடிப்பதை வழக்கமாகக் கொண்டேன்.
எனது மகனின் திருமணத்திற்கு திருமதி பூர்ண்மா, சாந்தனு ஆகியோருடன் வந்து என்னை கௌரவித்தார்.
இறுதியாக அவருடன் பேசியது கோவிட் காலத்தில். ஒரு நாள் அவர் தொலைபேசியில் என்னை அழைத்து கோவிட் பற்றிய தகவல்களை அனுப்புமாறு கேட்டார். உடனே அனுப்பினேன்.
அவர் இன்று இல்லை என்பதை நினைக்கும் போது உள்ளம் வேதனைப் படுகிறது.
பல்துறை வித்தகராக உலகம் அவரைப் பார்த்தாலும் அவரை ஒரு மாமனிதராக முதலில் பார்க்கவே என் மனம் விழைகிறது.
அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
ஓம் சாந்தி!
**