
WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,930
Date uploaded in London – 30 June 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
எம்.ஜி.ஆரும், பாக்யராஜும் – ஒரு அற்புதமான நட்பும், மரியாதையும்! – 1
ச. நாகராஜன்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தனது கலை வாரிசாக பாக்யராஜை அறிவித்தார்.
பாக்யராஜோ மக்கள் திலகத்தை மரியாதையுடன் விஸ்வாசித்தார்.
அரசியலில் இருப்போரில் சிலருக்கு இது பிடிக்கவில்லை.
இதற்கிடையில் எம்.ஜி.ஆருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
என்ன நடந்தது?
இதை விவரமாக ஜெயலலிதாவின் முன்னாள் செயலாளரான கவிஞர். ரவிராஜ் அம்மு..அம்மா..அப்பல்லோ! என்ற தனது தொடரில் பாக்யா பிப்ரவரி 1-15, 2020 தேதியிட்ட இதழில் 13வது அத்தியாயத்தில் விளக்குகிறார் இப்படி…
“தஞ்சைப் பெரியகோயில் விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டது. அவரை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர் குழு அவருக்கு சர்க்கரை வியாதி இருப்பதாகக் கூறியது. எம்.ஜி.யாருக்கு உடல் நிலை சரியில்லை என்ற செய்தி வெளியானது இதுவே முதல் முறையாகும். தனது உடல் நிலை பற்றி எப்போதுமே எம்.ஜி.ஆர் அவர்கள் கவலைப்பட்டதில்லை. தனக்கு தலைவலி என்று கூட யாரிடமும் கூறியதில்லை. ஆனால் இப்போது தனது உடல் நிலை ஒத்துழைக்கவில்லை என்பதை அவர் உணர ஆரம்பித்தார். இந்த சூழலில் 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 2ந்தேதி காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார் எம்.ஜி.ஆர். அதனை அடுத்து வீடு திரும்புகையில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. அதனால் அன்றைக்கு இருந்த அரசு நிகழ்ச்சி, கட்சி நிகழ்ச்சி உட்பட மற்ற எல்லா நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து விட்டு வீட்டிற்குச் சென்று ஓய்வெடுத்தார். அன்றைக்கே அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டதால் உடனடியாக அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். மறுநாளே எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டார். உடனடியாக அமெரிக்கா மற்றும் ஜப்பானிலிருந்து அப்பல்லோவிற்கு டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர்.
நெருக்கமானவர்களைத் தவிர வேறு எவருக்கும் எம்.ஜி.ஆரைப் பார்க்க அனுமதி கிடைக்கவில்லை. பாக்யராஜ் அவர்கள் மட்டும் இரவு நேரங்களில் தவறாமல் ஆஸ்பத்திரி சென்று நலம் விசாரித்து வந்தார். நாடெங்கும் அவர் நலம் பெற பிரார்த்தனை நடைபெற்றது. எம்.ஜி.ஆரை தூரத்தில் நின்று வணங்கிவிட்டு வந்து விடுவதாக ஜெயலலிதா கெஞ்சிப் பார்த்தார். ஆனாலும் சிலரது சதியால் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.
ஜெயலலிதா டில்லியில் இருந்தார். டில்லியிலிருந்து பிரதமர் இந்திரா காந்தி சென்னை வந்து அப்பல்லோவில் இருந்த எம்ஜியாரைப் பார்த்துவிட்டுச் சென்றார். இந்திரா காந்தி சென்னை வரும் திட்டம் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்ததால் அதை ஜெயலலிதா அறிந்திருக்கவில்லை. பிரதமர் இந்திரா மூலமாகவே எம்ஜியாரைப் பார்த்து விடுவதற்கான முயற்சியில் இறங்கினார் ஜெயலலிதா.
எம்.ஜி.ஆர் அவர்களுக்கு உடல்நிலை மேலும் பாதிப்படைந்த நிலையில் ஒருநாள் இரவு திடீரென்று அவர் பேசுகிற சக்தியை இழந்தார். மூளையில் கட்டி இருப்பது அறியப்பட்டது. ஆப்பரேஷன் செய்தாக வேண்டிய கட்டாயம். அப்பல்லோ கை விரித்து விட்ட சூழலில் இந்திரா காந்தி அவர்களின் உதவியால் அமெரிக்காவுக்குக் கொண்டுபோக முடிவானது. உடனடியாக தனி விமானம் மூலம் எம்.ஜி.ஆர் நியூயார்க் ப்ரூக்ளின் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். விமானத்தில் கொண்டு செல்லும்போது பயன்படுத்த அவருக்கு தயாரிக்கப்பட்ட “சிலிக்கன் வாட்டர் பெட்”டுக்கு மட்டும் ரூ 5 லட்சம் செலவானது.
சென்னையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பிறகு எம்ஜியார் அவர்களின் எந்த ஒரு புகைப்படமும் வெளிவராதபடி பார்த்துக் கொண்டார்கள். தொண்டர்கள், பொதுமக்கள், கட்சியினர், எம்ஜியாரைப் பற்றி எந்தவொரு செய்தியும் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.
அந்த காலகட்டத்தில் தான் இந்திரா அவர்கள் சீக்கியர்களால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். நாடு பதற்றம் அடைந்தது. அரசியல் களம் பரபரப்பானது. ராஜீவ் காந்தி பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்திரா காந்தி இறந்த செய்தி உடல் நலம் குன்றி இருந்த எம்.ஜி.ஆர் அவர்களுக்கு தெரிவிக்கப்படாமலேயே இருந்தது.
எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தும் ஆப்பரேஷனுக்கு தயாரானது ப்ரூக்ளின் மருத்துவமனை.
இங்கே தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு ஆறு மாதம் இருக்கும் போதே அவசரமாகத் தேர்தல் நடத்த முடிவானது.
இந்திரா காந்தி படுகொலை, ப்ரூக்ளின் மருத்துவ மனையில் படுத்த படுக்கையில் எம்.ஜி.ஆர். இந்தச் சூழலில் தான் தேர்தல் நெருங்கியது. தேர்தல் பொறுப்பு ஆர்.எம்.வீ. கையில். ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் எவருக்கும் சீட் கிடைக்கவில்லை. அனைவரும் ஒதுக்கப்பட்டனர். விரக்தியில் இருந்த ஜெயலலிதா வீட்டிலேயே இருந்தார்.
கோடிக்கணக்கான பக்தர்களால் கொண்டாடப்பட்டு வந்த இதய தெய்வம் எம்.ஜி.ஆர் அவர்களின் கலை வாரிசாக எம்ஜியாரேலேயே அறிவிக்கப்பட்ட இயக்குநரும் நடிகருமான புரட்சித் திலகம் கே. பாக்யராஜ் அவர்கள் தனிப்பட்ட முறையில் தன் சொந்த செலவில் உதவியாளர்களுடன் அமெரிக்காவுக்குப் பறந்தார்.”
அமெரிக்காவில் என்ன நடந்தது என்பதை அடுத்து கவிஞர் ரவிராஜ் வாயிலாகப் பார்ப்போம்!
*** தொடரும்