WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,982
Date uploaded in London – 15 July 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
5-7-26 தினமணி இதழில் வெளியான கட்டுரை!
அதிசயமான அமேஸான் மழைக்காடு என்ன ஆகப் போகிறது?
ச. நாகராஜன்
இயற்கை பூமியில் தந்த அதிசயங்களுள் ஒன்று அமேஸான் மழைக்காடுகள் ஆகும்.
உலகின் மிகப் பெரிய மழைக்காடான இது 20 லட்சம் சதுர மைல் (52 லட்சம் சதுரகிலோமீட்டர்) பரப்பளவைக் கொண்டது.
பல்லுயிர்ப் பெருக்கத்தின் ஆதாரமாகத் திகழும் இதை நம்பி 470 லட்சம் பேர்கள் வாழ்கின்றனர். உலகத்தையே மாசு படுத்தும் கார்பன் நச்சுப்புகையை உள்ளிழுத்துத் தக்க வைத்து உலகையே சுத்தப்படுத்தும் காடு இது.
ஆனால் வருந்தத்தக்க விஷயம் என்னவெனில் இதைப் போற்றிப் பாதுகாக்க வேண்டிய மனிதர்கள் இதுவரை 17 சதவிகிதம் இந்த வளத்தை அழித்து விட்டனர் என்பது தான். இங்குள்ள மரங்களை வெட்டி அழித்து விவசாய நிலமாக இதை மாற்ற முயன்றுள்ளனர் இங்கு வாழும் மக்கள். எண்ணெய் வளத்தைச் சுரண்டுதல், ஆங்காங்கே சுரங்கங்களைத் தோண்டி இயற்கை வளத்தைச் சுரண்டுதல் போன்றவற்றாலும் இது படிப்படியாக அழிந்து வருகிறது.
அடடா, இந்தக் காட்டின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
இந்தக் கவலை மனதை வாட்ட பெர்னாடோ ஃப்ளோரஸ் என்ற ஆய்வாளர் இதைப் பற்றி ஆராய முற்பட்டார். இவர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர். சாண்டியாகோ டி கம்போஸ்டெலா பல்கலைக்கழகத்தில் பணியாற்றுபவர் இவர்.
காட்டு வளம் அழிய அழிய மழை பொழிவதும் குறைகிறது. காட்டு வளம் குறையும் போது புவி வெப்பமயமாதல் அதிகரிக்கிறது.
அத்துடன் காடே வறண்டு போவதால் காட்டுத் தீயினால் இன்னும் ஏராளமான பரப்பு அழிந்துபடுகிறது. இங்கு சாலைகள் போடுவது சுலபமாகி விட்டதால் நிறைய சாலைகள் அமைக்கப்படுகின்றன. சாலைகள் அதிகமாக அதிகமாக மக்கள் கூட்டம் அதிகமாகி சட்ட விரோதமான செயல்கள் அரங்கேறுகின்றன. அதிக அளவில் மரங்களை வெட்டி அவற்றைக் கடத்தல் உள்ளிட்ட வருந்தத்தக்க செயல்கள் அதிகமாகி வருகின்றன.
சுற்றுப்புறச் சூழலுக்குக் கேடு பயப்பதோடு, அங்கு வாழும் காட்டு மிருகங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அத்துடன் நீரில் வாழும் உயிரினங்களும் அழிந்து படுகின்றன.
“நீங்கள் இருக்கும் இடமெல்லாம் புல்டோஸரால் அழிக்கப்பட்டு நீரெல்லாம் விஷம் கலந்து இருந்தால் வாழ்வது தான் எப்படி?” என்ற கருத்தை முன் வைத்த பெர்னாடோ ஃப்ளோரஸ், அதனால் தான் அந்தப் பகுதியில் வாழும் மக்கள் வெளியேறத் தொடங்கி விட்டனர் என்கிறார்.
இப்படியே போனால் “மிகவும் குழப்பமான சீதோஷ்ண நிலை உலகில் உருவாகும்” என்று எச்சரிக்கும் அவர், ‘இதனால் பனிப்பாறைகள் உருகும். கடலில் உள்ள நீரோட்டம் இயற்கைக்கு மாறாக செயல்பட ஆரம்பிக்கும். அதனால் ஏற்படும் பேரழிவை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது” என்கிறார்.
லைவ் ஸயின்ஸ் பத்திரிகைக்கு அவர் கொடுத்த பேட்டியில்,”உடனடியாக நாம் அமேஸானை அழிக்கும் செயலை நிறுத்த வேண்டும். இப்படிச் செய்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்கிறார்.
இந்த நிபுணரின் எச்சரிக்கையை உரிய விதத்தில் உணர்ந்து உலக மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அமேஸான் மழைக்காடுகளைக் காக்க வேண்டும்.
இதுவே இன்றைய அவசியமான அவசரத் தேவையாகும்.
செய்வோமா?
**