ராமாயணத்தில் வரங்கள் 64  – சூரியன் சுமேருவுக்கு வரம் அளித்தது! (Post.15,991)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,991

Date uploaded in London – 18 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் 64  – சூரியன் சுமேருவுக்கு வரம் அளித்தது!

ச. நாகராஜன்

உத்தரகாண்டத்தின் முப்பத்தைந்தாவது ஸர்க்கமாக அமைவது ‘ஹனுமாரின் உற்பத்தி முதலியது’ என்ற ஸர்க்கமாகும்.

ஶ்ரீ ராமர் அகத்திய முனிவரிடம் ஹனுமாரின் வரலாறைச் சொல்லுமாறு கேட்க அவரும் சொல்லத் தொடங்கினார்.

முன்காலத்தில் முனிவர்களின் சாபத்தினால் ஹனுமார் தன் பலத்தை உணராதவராக ஆகி விட்டார்.

சூரியன் அளித்த வரத்தால் சுவர்ணமாய் விளங்கும் சுமேரு என்ற மலை ஒன்று உண்டு.

“சூர்யதத்தவரஸ்வர்ண: சுமேரு நாம பர்வத:”

  உத்தரகாண்டம் முப்பத்தைந்தாவது ஸர்க்கம், ஸ்லோக எண் 19

சூர்யதத்தவரஸ்வர்ண: – சூரியன் அளித்த வரத்தால் சுவர்ணமாய் விளங்கும்’  சுமேரு – சுமேரு                                                         நாம – என்ற பெயரை உடைய                                                         பர்வத: – மலை ஒன்று உண்டு

இப்படி சூரியன் சுவர்ணமயமாய் விளங்குமாறு சுமேரு மலைக்கு வரம் அளித்ததை அகத்தியர் குறிப்பிடுகிறார்.

ஆனால் ஏன், எதற்காக என்ற விவரங்கள் இங்கு தரப்படவில்லை.

அந்த சுமேரு மலையில் ஹனுமானின் தந்தையான கேஸரி என்பவன் ராஜ்யபரிபாலனம் செய்து வந்தான். அஞ்சனை என்பவள் அவனுக்கு மனைவியாக வாய்த்தாள். அவளிடத்தில் வாயுதேவனே உத்தமனான ஒரு புதல்வனை உண்டு பண்ணினார்.

ஒரு நாள் தாய் வெளியே சென்றிருக்கையில் குழந்தை பசியால் அழுதது. அப்போது ஜபாபுஷ்பங்களின் குவியலுக்கு நிகராக உதயமாகிய சூரியனைக் கண்டது. அதைக் கண்ட குழந்தை சூரியனை நோக்கிப் பறந்து சென்றது. வாயுவேகத்தில் பறந்து சென்ற குழந்தையைக் கண்ட அனைவரும் ஆச்சரியப்பட்டனர். வாயுபகவானோ குழந்தையை சூரியன் தகித்து விடுவாரோ என்று பயந்து பனிமலை எனக் குளிர்ந்தவராய் குழந்தையைக் காப்பாற்றியவாறே கூடவே பறந்து சென்றார்.

அப்போது ராகு பகவானும் சூரியனைப் பற்றுவதற்காக வந்தார். ஆனால் ஹனுமானைக் கண்டு அவர் சூரியனை நெருங்கவில்லை. ராகு இந்திரனிடம் சென்று என்னை விட்டுவிட்டு இன்னொருவரை எப்படி நீ சூரியனை நெருங்க அனுமதிக்கலாம் என்று கேட்க இந்திரன், சூரியனின் அருகில் இருந்த ஹனுமானை தன் வஜ்ராயுதத்தால் தட்டினார். உடனே குழந்தை சோர்ந்து விழுந்தது. அதை எடுத்துக் கொண்ட வாயு பகவான் ஒரு குகையிலே புகுந்தார்.

உலகமே காற்று இல்லாமல் ஸ்தம்பித்தது. உடனே அனைவரும் பிரம்மாவை வேண்ட அவர் வாயுதேவன் இருந்த இடத்திற்குச் சென்று குழந்தையை ஸ்பர்சித்தார். குழந்தை முன் போல ஜீவிக்க ஆரம்பித்தது.

இதனால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். வாயுபகவானும் முன் போல சஞ்சரிக்கலானார்.

ஹனுமானின் குழந்தைப் பருவ விவரத்தை வால்மீகி இப்படியாக விவரிக்கிறார்.

ஆனால் சுமேரு பெற்ற வரம் ஒரு சிறு குறிப்பாகவே இங்கு காணப்படுகிறது.

**

Leave a comment

Leave a comment