கொள்ளுவன எது? தள்ளுவன எது? சங்கரர் பதில்

22. Shankaracharya VEDVYASA

Compiled by London Swaminathan.
Post No. 1133; Date: 27 June 2014

பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா என்றழைக்கப்படும் ஆதி சங்கரரின் துதி பற்றி பல கட்டுரைகள் எழுதினேன். அதில் இதுவரை வெளியாகாத சில விஷயங்கள் இதோ:-

ஆதிசங்கரர் எழுதிய ஒவ்வொரு துதியும் அற்புதமானது. அவைகளில் மிகவும் வியப்பான விஷயங்களைச் சொல்லும் ஒரு ஸ்தோத்திரம் பிரஸ்ன உத்தர (பிரஸ்னோத்தர= வினா விடை) ரத்ன மாலிகா.

இது ஒரு கேள்வி பதில் துதி. மஹா பாரதத்தில் உள்ள யக்ஷப் ப்ரஸ்னம் போல கேள்வி—பதில் பாணியில் அமைந்தது. மொத்தம் 67 ஸ்லோகங்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் 3, 4 கேள்விகளும் பதில்களும் இருக்கும். சுமார் 200 கேள்விகளை அவரே எழுப்பி அழகான பதில்களைக் கூறுகிறார்.

இதைப் படித்தால் என்ன கிடைக்கும் என்று முதல் பாட்டிலேயே கூறிவிடுகிறார். வாழ்க்கையில் நாம் எதிர் பார்க்கும் , மற்றும் எதிர்பாராத பலன்கள் கிடைக்கும், அதாவது தெரிந்த தெரியாத பலன்கள் கிடைக்கும்.

1. & 2. கொள்ளுவன எது? தள்ளுவன எது? என்பது கேள்வி.
ஒவ்வொரு பாட்டிலும் பல கேள்விகளும் அதற்கு ரத்தினச் சுருக்கமான பதில்களும் இருக்கும். இரண்டாவது பாட்டில் எதை எடுத்துக் கொள்ளவேண்டும்? என்று கேட்டதற்கு—- குரு வசனம், —-அதாவது குருவின் கட்டளை என்கிறார் சங்கரர்.

நாம் முதலில் வகுப்புக்குள் நுழைந்தவுடனேயே சொல்ல வெண்டிய ஸ்லோகம் “குருர் பிரம்மா, குருர் விஷ்ணோ”…………….. என்ற ஸ்லோகம் தான். எல்லோரும் அறிந்த ஸ்லோகம். குருவையே த்ரிமூர்த்திகளாக வணங்கும் ஸ்லோகம் அது. குரு என்பவர் ‘பிறவிப் பிணிக்கு மருந்து கொடுக்கும் டாக்டர்’ — என்று இன்னும் ஒரு ஸ்லோகமும் ( குரவே சர்வலோகானாம் பிஷஜே பவரோகினாம்) உண்டு. ஆகையால் அவர் சொல்லுக்கு அவ்வளவு மதிப்பு.

எதை விட வேண்டும்? என்பது அடுத்த கேள்வி.. தகாத—செய்யக் கூடாத செயல்களை விட வேண்டும். பாவம் உண்டாக்காத செயல்களைச் செய்தால் இந்த ஜன்மத்திலேயே சுகங்களை அனுபவிப்பர்.

தடை செய்யப்பட்ட செயல்கள் என்ன என்பதை பஞ்ச மா பாதகங்கள் விளக்கும்:- கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பொய் சொல்லுதல், ஏமாற்றுதல். சிறைச் சாலைக்குச் சென்றாலோ, பத்திரிகைகளில் வரும் குற்றச் செய்திகளை ஆராய்ந்தாலோ மேற்கூறிய ஐந்து வகைகளில் எல்லா குற்றவாளிகளையும் அடக்கிவிடலாம்.

(மூன்றாவது ஸ்லோக விளக்கம் 27-02-14 வெளியானது)

abhinava vidyatheerthar
Sri Abhinava Vidya Thirtha Swami, Sri Sringeri Shankaracharaya (1917–1989)

4.அறிஞர்கள் உடனே செய்யவேண்டிய செயல் என்ன?
பிறப்பு இறப்பு என்னும் சுழலில் இருந்து விடுபடுவதே முதல் கடமை.
வள்ளுவனும் இதையே சொல்கிறான்.:

கற்றதனால் ஆய பயன் என்? (குறள் 2)
கடவுளைத் தொழுவதே கல்வியின் பயன் என்பான்.

ராமகிருஷ்ண பரமஹம்சர் இதை புரியும்படியான உவமையுடன் சொல்வார்: ஒரு ஊருக்குப் போகும் யாத்ரீகன் முதலில் ஒரு நல்ல விடுதியைப் பார்த்து அறைகளை ஏற்பாடு செய்துவிட்ட பின்னர்தான் ஊர் சுற்றிப் பார்க்கப் போவான். இதே போல இந்த உலகில் வந்த நாம் முதலில் இறைவனை உணர்ந்துவிட்டுப் பின்னர் சுகங்களை அனுபவிக்கலாம் என்பார்.

5. விடுதலை என்ற மரத்துக்கு விதை எது?
சரியான அறிவு (ஞானம்), அதைச் செயலில் காட்டும் பயிற்சி என்பது சங்கரரின் பதில்.
அந்தக் காலத்தில் பெரியோர்களை மெத்தப் படித்தவர், வேத வித்து, கல்வியில் கரை கண்டவர் என்றெல்லாம் அறிமுகப் படுத்திவைப்பர். அதாவது ஒருவரைப் படித்தவர் என்று சொன்னால், அதை வாழ்க்கையில் பின்பற்றும் ஒழுக்க சீலர் என்று பொருள். இந்தக் கால பள்ளிக்கூடம் முதல் பல்கலைக் கழக ஆசிரியர்கள் வரை யாரிடமும் ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியவில்லை. சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாக இருக்கிறது.

ஊருக்குதாண்டி உபதேசம் ,உனக்கில்லை என்ற பழமொழிக் கதையை நாம் அறிவோம். இப்பேற்பட்டவர்கள் யாரையும் முன்னேற்ற முடியாது.

லூயி பிஷர் என்பவர் காந்தி பற்றி எழுதிய கட்டுரையில், இவர் ஏன் பெரியவர் என்றால்

He preached what he practised and practised what he preached. Had he lived two thousand years ago in India, they would have built him a temple for him by this time.

பொருள்:– “அவர் (காந்தி) எதை உபதேசித்தாரோ அதை வாழ்க்கையில் பின்பற்றினார். அவர் எதை வாழ்க்கையில் பின்பற்றினாரோ அதைத்தான் மற்றவர்களுக்கும் உபதேசித்தார். அவர் மட்டும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் வாழ்ந்திருந்தால் இந்நேரம் இந்தியர்கள் அவருக்கு கோவிலே எழ்ப்பி இருப்பார்கள்” — என்று எழுதினார். ஆகையால் ஞானம், அதில் பயிற்சி இரண்டும் அவசியம்.

periyava rudraksha
Sri Chandra Sekarendra Sarasvati, Kanchi Sri Sankaracharya (1894–1994)

உண்மைதான்! மனிதனும் தெய்வமாகலாம் என்பது இந்து மதத்தில் மட்டுமே உள்ள கொள்கை. தமிழ் ஹிந்து வள்ளுவன் இதை மிக அழகாகச் சொல்கிறான்:

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும் (குறள் 50)

–சுபம்–

அற்புதப் பெண்மணி அருந்ததி!

Arundhati_(1994)
Vasistha and Arundhati in painting ( Picture from Wikipedia)

ஆய்வுக் கட்டுரை எழுதியவர்- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:- 1131; தேதி—26 ஜூன் 2014.

N.B. If you want to reproduce this article, please email me for permission. You must get written permission from me for each and every article separately. swami_48@yahoo.com

“அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல்” என்பது தமிழர்களின் திருமணச் சடங்கின் ஒரு பகுதி. இதில் அருந்ததி பார்த்தல் என்பது என்ன?

ஒவ்வொரு மணமக்களும் கல்யாணம் நடந்த அன்று இரவு சாந்தி முஹூர்த்த (முதல் இரவு) அறைக்குள் நுழைவதற்கு முன் கற்புக்கரசி அருந்ததி நட்சத்திரத்தைக் காணவேண்டும். எதற்காக?

“அருந்ததி போல கற்புக்கரசியாக வாழ்” என்று மணமகளுக்குச் சொல்வதற்காக இந்தச் சடங்கு. அது என்ன? பெண்களுக்கு மட்டும்தானா கற்பு? ஆண்களுக்குக் கிடையாதா? என்ற கேள்வி பலர் மனதில் எழும்.

ஆண்களுக்கும் இராம பிரான் போல
“இந்த இப்பிறவியில் சிந்தையாலும் இருமாதரைத் தொடேன்” –

என்ற கற்பு நெறியைத்தான் சான்றோர் வழங்கினர். ஆனால் ஒரு பெரிய வேறுபாடு உண்டு. ஆண்கள் கற்பு நெறி தவறினால் உலகம் தலைகீழாக மாறாது. ஆனால் பெண்கள் எல்லோரும் தன் கடைக் கண் பார்வையை வீசினாலேயே போதும் உலகம் தறிகெட்டுப் போகும். ஆகையால்தான் பெண்கள் கற்புநெறி வலியுறுத்தப்படும். தறிகெட்டு ஓடும் ஆண்களின் மனதுக்கு அணை போடுவது பெண்களின் கற்பு நெறி என்பதால்தான் மனு முதல் வள்ளுவன் வரை எல்லோரும் பெண்கள் கற்பை மட்டும் வலியுறுத்துவர்.

யார் இந்த அருந்ததி?
வடக்கு வானத்தில் ஏழு நட்சத்திரங்களைக் காணலாம். எதிலும் கடவுளைக் காணும் இந்துக்கள் மட்டும் இதை சப்தரிஷி மண்டலம் என்று அழைத்தனர். சப்த என்றால் ஏழு என்று பொருள். அத்ரி, ப்ருகு, குத்ச, வசிஷ்ட, கௌதம, காஸ்யப, ஆங்கிரசர் ஆகிய 7 ரிஷிகள் உலக மக்கள் இனத்தைத் தோற்றுவித்த முதல் எழுவர் ஆவர்.

பிராமணர்கள் நாள்தோறும் மும்முறை செய்யும் அந்திப் பொழுது நீர்க்கடனில் (ஸந்தியா வந்தனம்) இந்த எழுவரையும் தொழுவர். இதை சங்க இலக்கிய நூலான நற்றிணைப் பாடலும் உறுதி செய்யும். தமிழர்கள் அனைவரும் இந்த ஏழு நட்சத்திரங்களையும் தொழுததை நற்றிணை 231 பாடல் வரியில் காணலாம்:–
கைதொழும் மரபின் எழுமீன் போல – (இளநாகனார் பாடியது).

வேறு பல காலாசாரங்கள் இந்த ஏழு விண்மீன்களை பெருங்கரடிக் கூட்டம், பெரிய வண்டி, மனிதனின் தொடை, பட்டம், கரண்டி, உழும் ஏர், ( Ursa Major, Great Bear, Big Dipper, Plough, Thigh, Wagon) என்றெல்லாம் வருணித்தன. அவைகள் இந்துக்கள் அளவுக்கு அறிவு முதிர்ச்சி பெறாத கிரேக்க, எகிப்திய, ரோமானிய நாகரீக வகையறாக்கள்!

arnhati2

அருந்ததி என்பவள் கர்தம ரிஷியின் மகள். ஏழு ரிஷிகளில் ஒருவரான வசிட்டனின் மனைவி– உலக மஹா உத்தமி– கற்புக்கு அரசி– வசிஷ்டர் எவ்வளவோ திட்டியும் “கணவனே கண்கண்ட தெய்வம்”– என்று வாழ்ந்தவள். ஒருமுறை மற்ற ஆறு ரிஷிகளின் மனைவியர் அக்னி (பகவான்) மீது காதல் கொண்டனர். கார்த்திகேயனுக்கு பாலூட்டினர். ஆனால் அருந்ததி மட்டும் கற்பு நெறி வழுவாமல் அந்தக் கூட்டத்தில் சேரவில்லை. ஆகையால் அவள் எல்லோரையும் விட உயர்ந்து நின்றாள் – என்பது புராணம் முதலியவற்றில் கிடைத்த செய்தி. முருகனுக்குப் பாலூட்டிய அப்பெண்கள் அறுவரும் கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் ஆயினர்.

உலகின் முதல் சட்ட நிபுணன் மனு மட்டும் வேறு ஒரு செய்தி சொல்கிறார். “கீழ்ஜாதியில் பிறந்த அக்ஷமாலா வசிஷ்டரின் மனைவியாக ஆகவில்லையா?” — ( மனு ஸ்மிருதி 9-23 ) என்று கூறுகிறார் (கணவன் அந்தஸ்து மூலம் மனைவியும் பெயர் வாங்க முடியும் என்ற தொனியில் கூறியது இது ). மஹாபாரதம் (1-224-27/29) இந்தக் கதையை உறுதி செய்கிறது. எது எப்படியானாலும் அவள் கற்புத் தெய்வம் என்பதில் எல்லோருக்கும் உடன் பாடே.

சங்கத் தமிழ் இலக்கிய நூல்கள் அவர்தம் புகழ் பாடுகின்றன. அதைத் தொடர்ந்து எழுந்த சிலப்பதிகாரம், திரிகடுகம் போன்ற நூல்களும் அருந்ததியின்ன் புகழை விதந்து ஓதுகின்றன. ஆக 2000 ஆண்டுகளுக்கு முன்னர், எல்லாத் தமிழ் பெண்களும் அறிந்த ஒரே பெண் அருந்ததி.

சிலப்பதிகாரம் வானளாவப் புகழும் கற்புக்கரசியான கண்ணகியின் பெயர் சங்கத் தமிழ் நூல்களில் யாண்டும் காணோம்! ஒரே ஒரு மறைமுகக் குறிப்பு மட்டுமே உண்டு.

LEO_1.TIF
Sapta Rishi Constellation

இதோ தமிழர்கள் வணங்கிய வடக்கத்திப் பெண் அருந்ததி:—
1)“வடமீன் புரையும் கற்பின் மடமொழி அரிவை” (புறநானூறு 122)
மலையமான் திருமுடிக்காரியின் மனைவி பற்றி கபிலர் பாடிய பாடல் இது. உனது மனைவி வடமீன் (அருந்ததி) போன்று (புரையும்) கற்பிற் சிறந்தவள். (மடமொழி அரிவை= இனிய சொற்களை உடைய பெண்).

2)“அருந்ததி அனைய கற்பின் “(ஐங்குறுநூறு 442, பேயனார் பாடிய பாடல்)
3)விசும்பு வழங்கும் மளிருள்ளும் சிறந்த செம்மீன் அனையள் (பதிற்றுப்பத்து 31—27/28)
பொருள்:– வான உலகத்தில் திரியும் தெய்வப் பெண்களில் சிறந்தவளான புகழ்மிகு விண்மீன் அருந்ததிக்கு நிகரானவள்.

எந்தக் கற்புக்கரசியைப் புகழ்ந்தாலும் அவளை இப்படி அருந்ததியோடு ஒப்பிடுதல் தமிழர்தம் மரபு.
4)பெருநல் வானத்து வடவயின் விளங்கும்
சிறுமீன் புரையின் கற்பின் நறுநுதல் (பெரும்பாணாற்றுப்படை 302-303)

5)வடமீன் போல் தொழுதேத்த வயங்கிய கற்பினாள் (கலித்தொகை 2—21)

6)கடவுள் ஒருமீன் சாலினி (பரிபாடல் 5).

7)தீதிலா வடமீனின் திறம் இவள் திறம் (சிலப்பதிகாரம் 1-27)
8)சாலி ஒருமீன் தகையாளை — (சிலப்பதிகாரம்)
9)அங்கண் விசும்பின் அருந்ததி அன்னாளை (சிலப்பதிகாரம்)
சிலப்பதிகாரத்தில் கண்ணகியை வருணிக்கும் இளங்கோ அடிகள், அவளை அருந்ததிக்கு ஒப்பீட்டுப் பாடிய வரிகள் இவை.

கடவுளையே கும்பிடாமல் கணவனை மட்டும் கும்பிடும் பத்தினிப் பெண் ‘பெய்’ — என்று சொன்னால் மழை பெய்யும் என்று சொன்னானே வள்ளுவன். அந்த வகையைச் சேர்ந்தவள் அருந்ததி.
தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்
பெய் எனப் பெய்யும் மழை — (திருக்குறள் 55)

star arndhati

கம்பன் போடும் சக்கைப் போடு
இவர்களுக்கு எல்லாம் ஒரு படி மேலே போய்விட்டான் கவிச் சக்ரவர்த்தி கம்பன்!! அக்ஷமாலா என்னும் கீழ் ஜாதிப் பெண் உயர்ந்தது, வசிஷ்டரைச் சேர்ந்ததனாலே என்றான் மனு. ஆனால் கம்பனோ வசிட்டனுக்குப் புகழ் கிடைத்தது அருந்ததியினாலே என்னும் தொனியில் வசிட்ட முனிவன் பெயரைச் சொல்லாமல் “அருந்ததி கணவன் என்கிறான்!!

ராமனுக்கும் சீதைக்கும் கல்யாணம். உலகமே அயோத்தி மாநகரை நோக்கி வெள்ளம் போல நகர்ந்து செல்கிறது. ரகு வம்ச குல குருவான வசிட்ட மாமுனிவன் 2000 பிராமணர்கள் புடை சூழ முத்துப் பல்லக்கில் பிரம்மா போல அயோத்தி நோக்கி பவனி போகிறார். அதை வருணிக்கும் கம்பன்:—
10)கவிகையின் நீழல் கற்பின் அருந்ததி கணவன் முத்துச்
சிவிகையில் அன்னம் ஊரும் திசைமுகன் என்னச் சென்றான் (801)

சீதையை அருந்ததிக்கு ஒப்பிடும் கம்ப ராமாயண வரிகள்:—
11)கன்னி அருந்ததி காரியை காணா
நல்மகனுக்கு இவள் நல்லணி என்றார் (1254)
12) அருந்ததி அனையாளே! அமுதினும் இனியாளே! (2006)
சீதையை ராமன் அருந்ததி என்று போற்றியது தெரிகிறது.

13) அருந்ததி ! உரைத்தி – அழகற்கு அருகு சென்று உன்
மருந்தனைய தேவி நெடுவஞ்சர் சிறைவைப்பில்……. (5350)
என்று அனுமன் பகர்வான். இது போல இன்னும் பல குறிப்புகள் உள (அகம் 16, பரிபாடல்-20—68; பதிற்றுப்பத்து 89- 17/19)

alcor_mizar

நீங்களும் பார்க்கலாம்
யாருக்காவது அருந்ததி நட்சத்திரம் தெரியாவிட்டால் மரணம் சம்பவிக்கும் என்றும் ஒரு நம்பிக்கை உண்டு. பழங்காலத்தில் கண் பார்வையை அறியும் ஒரு மருத்துவ பரிசோதனையாக அருந்ததி பார்த்தலைப் பயன்படுத்தினர் என்பது தெரிகிறது. வடக்கு வானத்தில் ஏழு நட்சத்திரங்கள் (Ursa Major or Great Bear Constellation) ஒரு பட்டம் பறப்பது போலக் காணப்படும். பட்டத்தின் வால் போன்ற பகுதியில் கடைசி நட்சத்திரத்துக்கு முந்தைய நட்சத்திரம் வசிஷ்ட மஹரிஷி. அதை உற்று நோக்கினால் இன்னொரு நட்சத்திரம் தோன்றும். அது தோன்றித் தோன்றி மறையும். ஏனெனில் இவை இரட்டை நட்சத்திரங்கள் (Double Star System) ஆகும். ஒன்றை ஒன்று சுற்றி வட்டமிடும் இரட்டை நட்சத்திர மண்டலம். விஞ்ஞானிகள் இவைகளை மிசார் MIzar (வசிட்டன்) என்றும் ஆல்கர் Alcor (அருந்ததி) என்றும் அழைப்பர்.

அருந்ததி நியாயம்
வடமொழியில் பாடம் கற்பிக்க பல்வேறு உத்திகளைப் பயன்படுத்துவர். அவைகளில் ஒன்று அருந்ததி நியாயம். அதாவது ஒரு பொருளை நேரடியாக விளக்கினால் புரிவது கடினம் என்பதால் அதைப் படிப்படியாக விளக்கி — “இதுதான் அது”– என்பர். அருந்ததி நட்சத்திரத்தையும் ஒருவர் எடுத்த எடுப்பில் காணமுடியாது.

“அதோ பார்! ஒரு மரம் தெரிகிறதா? அதற்கு மேல் ஏழு நட்சத்திரங்கள் தெரிகிறதா? அதில் வால் போன்ற பகுதியில் கடைசி நட்சத்திரம் தெரிகிறதா? அதற்கு முன் ஒரு நட்சத்திரம் இருக்கிறதல்லவா? அதுதான் வசிஷ்ட நட்சத்திரம். இப்போது அதையே உற்றுப் பார். அருந்ததி வருவாள்” – என்று சொல்லிக் காட்டுவர்.

வேதாந்த பாடத்திலும் மஹாவல்லமை பொருந்திய இறைவனை அவ்வளவு எளிதாக புரிந்துகொள்ள முடியாது . ஆகவே அத்வைதம் முதலிய கொள்கைகளை விளக்குவோர் அருந்ததி நியாயம் என்னும் உத்தியைப் பயன்படுத்தி விளக்குவர்.

ஆரியக்கூத்து !!!
ஆரிய – திராவிட இனவாதக் கொள்கைக்கு இந்திய வரலாற்றில் இடமில்லை, அது ஒரு பொருந்தாக் கூற்று — என்று சுவாமி விவேகாநந்தர், ஹரிஜன மக்களின் தனிப்பெருந்தலைவர்–சட்ட நிபுணர் அம்பேத்கர், அரவிந்த மகரிஷி, மஹாத்மா காந்தி, நம் காலத்தில் வாழ்ந்து 1994-ல் மறைந்த காஞ்சி மாமுனிவர் ஆகியோர் கூறியது ஏன் என்பது சங்க இலக்கிய நூல்களின் 27,000+ வரிகளைப் பயிலுவோருக்கு வெள்ளிடை மலை என விளங்கும். வடக்கில் வாழ்ந்த வசிட்ட மாமுனிவன் மனைவி, தெற்கில் வாழ்ந்த தமிழர்க்கும் தெய்வம்!!!

வாழ்க தமிழ் ! வளர்க அருந்ததி புகழ் !! — சுபம் —

“சலாம் முருகா”! “சலாம் முருகா”!! அருணகிரிநாதரின் தனி வழி !!

welcome

ஆய்வுக் கட்டுரையாளர்:- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:-1129; தேதி:– 25 ஜூன் 2014.

N.B. If you want to reproduce this article, please email me for permission. You must get written permission from me for each and every article separately. swami_48@yahoo.com

கடவுளுக்கு என்ன மொழி தெரியும்?

நாம், அவருக்கு வேதம் முழங்கும் சம்ஸ்கிருதம் மட்டுமே தெரியும்,
தேவாரம், திவ்யப் பிரபந்தம் முழங்கும் தமிழ் மட்டுமே தெரியும்,
பைபிள் முழங்கும் எபிரேயம் அல்லது ஆங்கிலம் மட்டுமே தெரியும்,
குரான் முழங்கும் அராபியம் மட்டுமே தெரியும்,
சமண நூல் முழங்கும் ப்ராக்ருதம் மட்டுமே தெரியும்,
தம்ம பதம் முழங்கும் பாலி மொழி மட்டுமே தெரியும்,
ஜெண்ட் அவஸ்தா முழங்கும் பாரசீகம் மட்டுமே தெரியும்
ஆதிக்கிரந்தம் முழங்கும் பஞ்சாபி மொழி மட்டுமே தெரியும்———-
என்று நினைத்தால், அது நமது அறியாமைக்கு ஆயிரம் ‘வாட் பல்ப்’ போட்டு வெட்ட வெளிச்சமாக்கியதற்குச் சமம் ஆகும்.
அப்படியானால் அவருக்குத் தெரிந்த மொழி என்ன?

akshara
கடவுளுக்கு இரண்டே மொழிகள்தான் தெரியும்; அவற்றின் பெயர் அன்பு, உண்மை = பிரேமையும் சத்தியமும்தான் என்று சாது சந்யாசிகள் பல்லாயிரம் பாடல் பாடி முழங்குகின்றனர்.

இதை நமக்கு நிதர்சனமாகக் காட்டுபவர் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் ஆவார். அவர் சம்ஸ்கிருதம், தமிழ், ஹிந்துஸ்தானி போன்ற மொழிகள் மூலம் இறைவனை வழிபட்டு நமக்கு வழிகாட்டி உள்ளார். மொழிகள் மூலம் சண்டை வேண்டாம். அதிலும் குறிப்பாக “கோவில்களில் இறைவனுக்கு தமிழில் அர்ச்சனையா? சம்ஸ்கிருதத்தில் அர்ச்சனையா?”—என்று பட்டிமன்றம் நடத்த வேண்டாம் என்று சொல்லாமல் சொல்கிறார்.

இதோ அவரது திருப்புகழே அதற்குச் சான்று:
“சுராதிப திமாலய னுமாலொடு சலாமிடு
சுவாமிமலை வாழும் பெருமாளே” — என்றும்

கற்ப கந்திரு நாடுயர் வாழ்வுற
சித்தர் விஞ்சையர் மகர் சபாசென – என்றும்

பாடுகிறார். முகமதிய ஆட்சிக்காலத்தில் வாழ்ந்ததால் ஹிந்துஸ்தானி மொழியில் புழங்கிய சபாஷ், சலாம் முதலிய பல ஹிந்துஸ்தானிச் சொற்கள் அவர்தம் பாடல்களில் பரிமளிக்கின்றன.
om

நடிக்கும் பிரான் மருகா ! கொடும் சூரன் நடுங்க வெற்பை
இடிக்கும் கலாபத் தனி மயில் ஏறும் இராவுத்தனே — (கந்தர் அலங்காரம் பாடல் 51)
விருதா (பயனற்ற) என்ற சொல் “ அவமாயை கொண்டு உலகில் விருதா அலைந்துழலும் அடியேனை” என்ற வரியிலும் ஜே என்ற சொல்லை “நிருத ரார்க்கொரு காலா ஜேஜெய, சுரர்களேத்திடு வேலா ஜேஜெய” — என்ற திருப்புகழ் வரியிலும் காணலாம்.

குமரபரகுரு சுவாமிகளும் கூட மீனாட்சிப் பிள்ளைதமிழில்
“குறவர் மகட்குச் சலாமிடற் கேக்கறு
குமரனை முத்துக் குமரனைப் போற்றுதும்” — என்றும் பாடுகிறார்.

நாம் அன்றாடம் புழங்கும் ஹிந்துஸ்தானி சொற்கள்:
அசல், அந்தஸ்து, அபின், அல்வா, இஸ்திரி, உஷார், குமாஸ்தா, ஜமக்காளம், ஜல்தி, சோதா, தபால், தர்பார், பஞ்சாயத்து,பங்களா, சபாஷ் – இன்னும் பற்பல.

hello

உலகில் எவரும் பிறமொழிக் கலப்பிலாமல் வாழமுடியாது; பேசவும் முடியாது. ஆனால் அது எல்லை மீறிப் போகாதவாறு பாதுகாத்து, மொழியின் தூய்மையைப் போற்றுவதில் தவறில்லை.
வாழ்க தமிழ் ! வளர்க தமிழ்!

ராவணன் – பாண்டியர் சமாதான உடன்படிக்கை !

pandya-flags

Pandya Flags drawn by me.

தமிழ் இலக்கியத்தில் ஓர் அதிசயத் தகவல்!!

ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியவர்:– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:- 1127; தேதி:- 24th June 2014.

N.B. If you want to reproduce this article, please email me for permission. Previously I gave blank cheque to some people. They have been uploading all the 1100 posts from my blogs which is not allowed from today. You must get written permission from me for each and every article separately. swami_48@yahoo.com

அகத்திய முனிவருடன் அமர்ந்து பாண்டியர்கள் தமிழ் ஆராய்ந்த செய்தி பாண்டியர் செப்பேடுகளில் வருகிறது. மற்றொரு புதுமையான செய்தியும் பாண்டியர் செப்பேடுகளில் காணப்படுகிறது.

“அகத்தியனோடு தமிழாய்ந்தும் மிகத் திறனுடைய வேந்தழித்து
தசவதனன் சார்பாகச் சந்து செய்துந் தார்தராஷ்ட்ரன்
படை முழுதுங் களத்தவிய பாரதத்து பகடோட்டியும்
……………………………………………….. “
இது பாண்டியன் பராந்தக வீரநாராயணனின் தளவாய்புரச் செப்பேடுகள் (ஒன்பதாம் நூற்றாண்டு) கூறும் செய்தி.
Pandya_territories
Mighty Pandyan Empire praised by Kalidasa

பாண்டியர்களின் குல குரு அகத்தியன் என்றும் அவர் மூலமாகவே பாண்டியர்கள் முடி சூட்டப்பட்டதாகவும் வேறு சில பாண்டியர் கல்வெட்டுகளும் செப்புகின்றன.
ஆயினும் –தசவதனன் சார்பாகச் சந்து செய்வித்தும் — என்பதற்கு இதுவரை சரியான விளக்கம் கிடைக்கவில்லை என்றே அறிஞர்கள் எழுதி வந்துள்ளனர்.

“ஒரு பாண்டியன் இராவணனைச் சமாதானம் செய்துகொள்ளும்படிச் செய்தான் என்று சாசனம் கூறுகிறது. இந்தப் புராணக் கதையின் விவரம் சரியாகத் தெரியவில்லை” – என்று பாண்டியர் செப்பேடுகள் பத்து ( தமிழ் வரலாற்றுக் கழக வெளியீடு, 1967 ) என்ற நூல் கூறும்.

‘உச்சி மேற் புலவர் கொள்’ நச்சினார்க்கினியர் எழுதிய உரையில் ஒரு சுவையான விஷயம் கூறுகிறார். இது உ.வே சாமிநாதைய்யர் பதிப்பித்த பத்துப் பாட்டு உரையில் சுருக்கமாக உள்ளது:–
“தென்னாட்டை ஆண்டு குடிகளைத் துன்புறுத்திவந்த இராவணனை, அகத்தியர் பொதியின் மலை உருகும்படி இசைபாடி இலங்கைக்குப் போக்கினரென்பது பண்டைய வரலாறு” – என்று சாமிநாதையர் குறித்துள்ளார்.
Agastya
Statue of Agastya found all over South East Asia.

“தென்னவற் பெயரிய துன் அரு துப்பின்
தொன்முது கடவுள் பின்னர் மேய
வரைத் தாழ் அருவி பொருப்பின் பொருந
– என்ற மதுரைக் காஞ்சி பாடல் வரிகளுக்கு (வரி 40-42) எழுதப்பட்ட உரை இது.

இதற்குப் பின் வேறு சில நூல்களிலும் மிகவும் அறியப்படாத செய்திகள் வருகின்றன. திருவாசகத்தில் மண்டோதரிக்காக சிவன் கடலில் நடந்த வரலாறு ஒன்றும் வருகிறது. உத்தரகோச மங்கை தல புராணம் இதை விரித்துரைக்கிறது. ஆக பாண்டியர்—அகத்தியர் உறவும், தமிழ்நாடு—இலங்கை தொடர்பும் இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன.
mount_kailash_tibet_465065
Ravana lifting Kailash, Ellora Cave sculpture.

காளிதாசன் என்னும் உலக மஹா கவிஞன், அவனது ரகுவம்ச காவியத்தில் தரும் தகவலைக் கொண்டு ஆராய்கையில் பாண்டியன் – ராவணன் புதிருக்கு விடை கிடைக்கிறது.
நான் ஏற்கனவே எழுதிய பல ஆராய்ச்சிக் கட்டுரைகளில் காளிதாசன் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு என்றும் மாணிக்க வாசகரின் காலம், அப்பர்-சம்பந்தருக்குச் சற்று முந்தியது என்றும் ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளேன்.

ராவணன் அவ்வப்போது தென் இந்தியாவுக்குள் புகுந்து அட்டூழியம் செய்தது வேறு பல இடங்களிலும் வருகிறது. ராவணனை வென்று அவனை மடியில் கட்டிக் கொண்டு நாற்கடலில் நீராடி, வாலி, சந்தியா வந்தனம் செய்த செய்தி வால்மீகி ராமாயணத்தில் வருகிறது.

இராமாயண முனிவர்கள் என்ற அரிய நூலில் முத்தமிழ் வித்தகர் தி.வே. கோபாலய்யர் சொல்லும் கதை இதோ:–

அகத்திய முனிவர், தமிழிலும் இசையிலும் வல்லவர் என்பது தமிழ் இலக்கியத்தில் எண்ணற்ற இடங்களில் காணக்கிடக்கிறது. “பொதிய மலையின் கண் இருந்து அவர் ராவணனை, ஆங்கு இயங்காதவாறு, கந்தருவத்தால் (இசையால்) பிணித்தார் என்று தொல்காப்பிய பாயிர உரையில் நச்சினார்க்கினியர் சொல்கிறார்.

“ராவணன் ஒரு கால் பொதியமலையில் ஒரு பாறையில் அமர்ந்த வண்ணம் நீண்ட சிந்தனையில் ஈடுபட்டிருந்தான். அவன் அங்கு வந்திருந்ததனை அறிந்த அகத்தியர் அவனால் முனிவர்களுக்குத் தீங்கு நேரலாம் என்ற நினைப்போடு யாழினை இனிமையாக வாசிக்கவே இராவணன் தங்கியிருந்த பாறை உருக, இராவணனுடைய கை, கால்கள் உருகிய பாறைத் திரவத்தில் அமிழ்ந்தன.

இந்நிலையில் அகத்தியனார் தம் யாழ் எழுவுதலை நிறுத்தவே, பாறை மீண்டும் கெட்டிப்படத் தொடங்கியது. சற்று நேரத்தில் பண்டுபோல (முன்னைப் போல) உறுதி உடையதாயிற்று. சுற்றுச் சூழலில் ஏற்பட்ட மாறுதலை உணராது நினைப்பிலேயே நெடிதும் ஆழ்ந்திருந்த இராவணனுடைய கை, கால்கள் மீண்டும் வன்மையை அடைந்த பாறைக்குள் அகப்பட்டுக் கொள்ள அவனால் எழுந்திருக்க முடியவே இல்லை. அவன் அகத்தியரை வேண்ட, அவன் அவனிடம் அப்பொதிய மலைப் பகமே இனி அவன் வருவதில்லை என்ற உறுதி மொழியைப் பெற்ற பின்னரே, அகத்தியர் மீண்டும் யாழ் எழுவிப் பாறையை உருக்கி அவனை விடுதலை செய்தார் என்ற கதை ஒன்று வழங்கி வருகிறது” –

நச்சி. உரையின் பேரில் கோபாலய்யர் சொன்ன கதை இது. வீணைக் கொடியுடைய வேந்தன் ராவணனின் வீணையும் பாறையில் சிக்கியதாகவும், இருவருக்கும் நடந்த இசைப் போட்டியின்போது இச்சம்பவம் நடந்ததாக வேறு சிலரும் கூறுவர்.
ravana-lifting-kailash

இதற்கெல்லாம் ஆதாரம் வேண்டாமா?

காளிதாசன் தரும் அரிய தகவல்
புறநானூற்றின்மிகப் பழைய பாடலிலேயே (பாடல் 2, முரஞ்சியூர் முடிநாகராயர்= நாகபூஷணம்) பொதியம்- இமயம் ஒப்புமை வருவது அகத்தியர், வட இமயத்தில் இருந்து தென் பொதியத்துக்கு வந்ததைக் காட்டும்.

காளிதாசன் ரகுவம்ச காவியத்தில் இந்துமதி சுயம்வரத்தில் ஆறு ஸ்லோகங்களில் பாண்டியன் புகழ் பாடுகிறார். அதில் முக்கியமான செய்தி – அகத்தியர் – பாண்டியர் – இராவணன் தொடர்பு ஆகும். வேறு எங்கும் கிடைக்காத இந்தச் செய்தி காளிதாசன் மூலமே கிடைக்கிறது அதுமட்டுமல்ல யாகத்திற்காக செய்த அவப்ருத ஸ்நானத்தில் ( குளியல்) பாண்டிய மன்னர்கள் எந்நேரமும் இருப்பதையும் சொல்கிறார். புற நானூற்றில் பெரிதும் போற்றப்படும் பலயாகசாலை முது குடுமிப் பெருவழுதி கி.மு. முதல் நூற்றாண்டு என்பது நிரூபணமானால் காளிதாசன் குறிப்பிடும் பாண்டியன் அவன் என்ற வரலாற்றுச் செய்தியும் கிடைக்கும்.

பாண்டியன் புகழ் பாடும் முக்கிய ஸ்லோகம்:–
அஸ்த்ரம் ஹராதாப்தவதா துராபம் யேன இந்த்ரலோகாவ ஜயாய த்ருப்த:
புரா ஜனஸ்தான விமர்த்தசங்கீ சந்த்யாய லங்காதிபதி: ப்ரதஸ்தே (ரகு.6-62)

இதன் பொருள்:– தான் இல்லாத போது ஜனஸ்தானம் என்னும் இடத்தைப் பாண்டியர் அழித்துவிடுவரோ என்று பயந்த ராவணன், பரம சிவனைத் துதிபாடி பிரம்ம சிரஸ் என்ற அஸ்திரத்தைப் பெற்றுள்ள பாண்டியரோடு சமாதானம் செய்துகொண்டு இந்திரலோகத்தை வெற்றி கொள்ளப் புறப்பட்டான் (ரகுவம்சம் 6-62).

ராவணனும் பயப்படும் அளவுக்கு பாண்டியர்களின் பராக்ரமம் இருந்தது!!
_coin_of_the_Pandyas_Sri_Lanka_1st_century_CE
Pandya coin found in Sri Lanka, First Century CE

ரகுவம்சம் நாலாவது சர்க்கத்திலும் பாண்டியர்-அகத்தியர் புகழ் அடுத்தடுத்து வருகிறது. தமிழுக்கும் வெளியே இப்படி ஒரு அரிய சான்று கொடுப்பது காளிதாசனின் வடமொழிக் காப்பியம் ஒன்றே ஆகும்.
ஆக நச்சினார்க்கினியர், காளிதாசன் ஆகியோர் மூலம் பாண்டிய வம்சம் மிகப் பழமை உடையது என்பதும் ராமாயண கலத்திலேயே ராவணனை நடுங்கச் செய்தது பாண்டியர்களின் படைபலம் என்பதும் தெளிவாகிறது.

இனவெறி பரப்பும் ஆரிய—திராவிடக் கொள்கைக்கு காளிதாசனும், நச்சினார்க்கினியரும் கொடுக்கும் அடி இது, என்பதும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியது. ராவணன், இலங்கையில் அரசும், தண்டகாரண்யப் பகுதியில் ஒரு ‘காலனி’யும் வைத்திருந்தான் என்பதும், அதைத் தளமாகக் கொண்டே இமயம் வரை சென்று சிவனின் கயிலாயத்தையும் அசைக்க முயற்சித்தான் என்பதும் இதனாற் பெறப்படும்!

–சுபம்–

கல்லுக்குள் தேரை, பெட்டிக்குள் எறும்பு: உணவு கொடுப்பது யார்?

Fire_ants

எழுதியவர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:— 1119; தேதி:—- 20 ஜூன் 2014

ஒரு முறை பார்வதிக்கும் பரமசிவனுக்கும் இடையே ஒரு காரசார விவாதம்:
பார்வதி:– என்ன இது? இப்படி எப்போது பார்த்தாலும் ‘டான்ஸ்’ (நடராஜன் ) ஆடியே பொழுதைக் கழிக்கிறீர்களே. கொஞ்சம் பசியால் வாடும் உயிரினங்களுக்கு உணவு அளிக்கக்கூடாதா?
பரமசிவன்:- அன்பே! ஆருயிரே ! அதைத்தான் ‘’இமைப்பொழுதும் சோராமல்’ அல்லும் பகலும், அனுவரதமும் நான் செய்து கொண்டிருக்கிறேன்.

பார்வதி:– அப்படியா! எனக்கு என்னமோ நீங்கள் ‘’நடராஜ’’னாகப் பொழுது போக்குவதே கண்களுக்குத் தெரிகிறது!

Ramdas Shivaji
Picture of Shivaji and Samarth Ramdas.

பரமசிவன்:- நீ ஒரு பெண்; கருணையின் வடிவம்; ‘பால் நினைந்தூட்டும் தாய்’! ஆகையால் பசியில் வாடும் உயிரினங்களின் மேல் எப்போதும் கருணை பொழிகிறாய். எனது நடனம்தான் இந்த உலகையே இயக்கிக் கொண்டிருக்கிறது. உனது கருணை அதை மறைக்கிறது போலும்!

இப்படி சிவன் கொடுத்த தத்துவ விளக்கம் எதுவும் பார்வதிக்கு நம்பிக்கை தரவில்லை. தன் கணவனை ‘’கையும் களவுமாகப்’’ பிடித்து குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதற்குத் திட்டம் போட்டாள். விறு விறு என்று வெளியே போய் அங்கே ஓடிக்கொண்டிருந்த சில எறும்புகளைப் பிடித்து ஒரு டப்பாவுக்குள் போட்டு மூடி வைத்தாள்.

மீண்டும் அதே நாளன்று பொழுது சாயும் நேரத்தில் சிவன் ஆடத் தொடங்கினார். பார்வதிக்கோ ஒரே ஆத்திரம். ஆட்டம் முடிந்தவுடன் சிவனை மீண்டும் வம்புக்கு இழுத்தாள்.

பார்வதி:– அன்பரே! இன்று எல்லா உயிரினங்களுக்கும் உணவு படைத்தீரா?
பரமசிவன்:- ஆமாம், தேவி! ஒரு உயிரினத்தையும் விடவில்லை. எல்லோருக்கும் உணவு அளித்துவிட்டேன்.

பார்வதி:– ஓ,அப்படியா? இனி நீர் என்னிடமிருந்து தப்பிக்க முடியாது. காலை முதல் என் முந்தானைக்குள் முடித்துவைத்த இந்தச் சின்னப் பெட்டியில் எறும்புகள் இருக்கின்றன. நீர் இந்தப் பக்கமே வரவில்லையே! இவைகளுக்கு ஏனைய்யா உணவு படைக்கவில்லை?

பரமசிவன்:- தேவி! அவசரப் படாதே, ஆத்திரப் படாதே. பெட்டியைத் திறந்து பார்.
பார்வதி, பெட்டியைத் திறந்தாள். எறும்புகள் இன்பமாக அரிசியை சாப்பிட்டுக் கொண்டிருந்தன. சிவன் வாயில் புன்சிரிப்பு நெளிந்தது. பார்வதி முகத்திலோ அசடு வழிந்தது. “எங்கும் நிறைந்த, எல்லாம் வல்ல, எல்லாம் அறிந்த” இறைவனை வெறும் ஆட்டம் (நடராஜன்) போடுபவன் என்று நினைத்து விட்டோமே, உலகையெல்லாம் ஆட்டிப்படைக்கும் ஆட்டம அல்லவா தம் கணவனுடைய ஆட்டம் என்று எண்ணி எண்ணி மகிழ்ந்தாள்.

shivajipg21

சிவாஜியை மடக்கிய ராமதாசர்

தென்னாட்டில் முஸ்லீம் படை எடுப்பாளர்களை ஒடுக்கியது விஜய நகரப் பேரரசு. அதற்குப் பின்னும் வட நாட்டில் அவுரங்கசீப்பின் அட்டஹாசம் நீடித்துக் கொண்டே இருந்தது. அப்பொழுது மஹாராஷ்டிரத்தில் மலைப் பகுதிகளில் வாழ்ந்த மக்களை ஒன்று திரட்டி உலகின் முதலாவது ‘கெரில்லா’ போரை நடத்தியவர் சிவாஜி. வீர சிவாஜியின் இந்து சாம்ராஜ்ய ஸ்தாபிதம் அவுரங்கசீப்பையும் மொகலாய சாம்ராஜ்யத்தையும் விழுத்தாட்டியது. வீர சிவாஜியின் வெற்றிக்குக் காரணம்—பவானி தேவி கொடுத்த வாளும், சமர்த்த ராமதாஸர் கொடுத்த ஆசியும் என்பது கொஞ்சம் கொஞ்சமாக சிவாஜியின் மனதில் இருந்து அகலத் தொடங்கியது.
அஹங்காரமும், மமகாரமும் ( ‘யான்’, ‘எனது’ என்னும் செருக்கு—குறள்) பெருகவே, சிவாஜிக்கு சமர்த்த ராமதாசர் ஒரு பாடம் கற்பிக்க நினைத்தார். நல்ல தருணமும் வந்தது. ஒரு நாள் மாபெரும் கோட்டை கட்டும் வேலையில் ஆயிரம் தொழிலாளிகள் ஈடுபாடிருந்தனர். சிவாஜி, பெரும் மமதையுடன் அதை மேற்பார்வை இட்டுக் கொண்டிருந்தார். நான் இல்லாவிடில் இந்த மலை ஜாதி மக்களுக்கு சோறும் தண்ணீரும் கிடைத்து இருக்குமா? என்ற எண்ணம் அவரது மனதில் இழை ஓடியது. அப்போது அங்கே ராமதாசரும் வந்து சேர்ந்தார்.

“சிவாஜி! ஒரு பெரிய பாறையை உடைக்க வேண்டும். நாலைந்து தொழிலளிகளைக் கூப்பிடு” என்று குரு ராமதாசர் உத்தரவு இட்டார். குருவின் இந்த விநோத வேண்டுகோள் வியப்புக் குறியை எழுப்பியது. இருந்த போதிலும் குரு விஷயத்தில் கேள்விக் குறியை எழுப்பி அறியாத மாபெரும் பக்தன் வீர சிவாஜி. உடனே உத்தரவு பறந்தது.

வந்தனர் தொழிலாளிகள்– வெட்டி உடைத்தனர் பாறையை– என்ன அதிசயம்!! அதற்குள் சிறிய தூவாரங்களில் தண்ணீர். அதில் சில தேரைகள்! எல்லோரும் வியப்புடன் பார்த்தனர்.
சிவாஜி! இவைகளுக்கும் நீதான் உணவு படைக்கிறாயா? என்றார் குருதேவர்.

சிவாஜிக்குப் புரிந்தது. அகந்தை அகன்றது. குருதேவரின் காலில் விழுந்தார். கண்ணிர் மல்கினார். குருவின் ஆசி பெருகியது. காவிக் கொடிகள், மேலும் பல மொகலாயர் கோட்டைகளை வென்று, அவைகளின் மீது பட்டொளி வீசிப் பறந்தன!

tad in rock

(தவளை வகையைச் சேர்ந்த தேரைகள் மூடிய கல் பாறக்கிகுள் வசிப்பது இயற்கை அதிசயங்களில் ஒன்று. மேலை நாடுகளில் உள்ளோர் இதை நம்புவதில்லை. ஆனால் இந்தியாவில் வசிப்போருக்கு இது நன்கு தெரிந்த உண்மை.)

“அடக்கம் அமரருள் உய்க்கும்”— வள்ளுவன் குறள்.—சுபம்–.

ஒளியின் வேகத்தைத் துல்லியமாக உரைக்கும் ரிக் வேதம்

speedoflight_chart

ச.நாகராஜன்
Written by S Nagarajan
Post No. 1117;Dated 19th June 2014.

சூரிய வர்ணனை
ஜய, அஜவ, விஜய, ஜிதபர்ணா, ஜிதக்ரமா, மனோஜபா, ஜிதக்ரோதா என்ற ஏழு குதிரைகள் மீது பவனி வருவான் சூரியன் என்று நமது புராண இதிஹாஸங்கள் கூறியதை நவீன அறிவியல் கூற்றான சூரிய ஒளி கொண்டிருக்கும் 7 வண்ணங்களான VIBGYOR-டன் ஒப்பிட்டும், சனியை மந்தன் என்று கூறியதை சூரியனைச் சுற்ற கிரகங்களிலேயே அதிக காலமான 30 வருடங்களை சனி எடுத்துக் கொள்வதை ஒப்பிட்டும் அனைவரும் மகிழ்ந்து வந்துள்ளோம்.

SpeedOfLight_Feature

ரிக் வேதம் கூறும் ஒளியின் வேகம்
சூரிய ஒளியின் வேகம் வினாடிக்கு ஒரு லட்சத்தி எண்பத்தாறாயிரம் மைல்கள் என்பதை நவீன அறிவியல் சென்ற நூற்றாண்டில் தான் உறுதிப்படுத்தியது.

ஆனால் இந்த வேகத்தை உலகின் ஆதி நூலான ரிக் வேத துதிப்பாடலில் (1:50) அப்படியே காண்கிறோம்.

“தரணிர் விஷ்வதர்ஷோ ஜ்யோதிஷ்க்ரதசி சூர்ய விஷ்வமா பாசிரோசணம்” (तरणिर्विश्वदर्शतो जयोतिष्क्र्दसि सूर्य |
विश्वमा भासिरोचनम) என்ற இந்த மந்திரத்தின் பொருள்: “வேகமாகவும் அழகாகவும் இருக்கும் ஓ சூரியனே, ஒளியை உருவாக்குபவனே, அனைத்துலகையும் பிரகாசிக்க வைப்பவனே” என்பதாகும்.

இதற்கு புக்கர் ஸ்தாபித்த விஜயநகர சாம்ராஜ்யத்தில் அமைச்சராக இருந்த வேத விற்பன்னரான சாயனர் உரை எழுதுகையில்,” ததா ச ஸ்மர்யதே யஞ்னானாம் ஸஹஸ்ரே த்வே த்வே சதே த்வே ச யோஜனே ஏகேன நிமிஷார்தேன க்ரமமான்” என்று எழுதியுள்ளார். இதன் பொருள் : சூரியன் அரை நிமிஷ நேரத்தில் 2202 யோஜனை தூரம் செல்கிறான் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதாகும்.

நிமிஷம் என்பது இமைக்கும் பொழுது ஆகும். அதில் பாதி நேரத்தில் 2202 யோஜனை தூரத்தை ஒளி கடக்கிறது! சாந்தி பர்வத்தில் நிமிஷம் முதற் கொண்டு பல்வேறு கால அளவுகளைப் பற்றிய விளக்கம் வருகிறது. இதன் படி கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு நிமிஷம் என்பது இன்றைய கால அளவீட்டின் படி 0.2112 வினாடிகள் ஆகும். அரை நிமிஷம் என்பது 0.1056 வினாடிகள் ஆகும்.

இனி யோஜனை என்ற தூரத்தைக் குறிக்கும் அளவு பற்றி விஷ்ணு புராணம் ஆறாவது அத்தியாயத்தில் தெளிவாக விளக்கம் தரப்படுகிறது.
பரமாணுவிலிருந்து அளவுகள் ஆரம்பித்து யோஜனையில் முடிகிறது இந்த விளக்கம். இதன் படி ஒரு யோஜனை என்பது இன்றைய தூரத்தை அளக்கும் அளவீட்டின் படி 9.09 மைல்கள் ஆகும்.

இதை வைத்து இப்போது ஒளியின் வேகத்தைக் கணக்கிடலாம்
0.1056 வினாடியில் சூரிய ஒளி 9.09 மைல்கள் பயணப்படுகிறது.அப்படியானால் ஒரு வினாடியில் 1,89,547 மைல்கள் பயணப்படுகிறது என்று ஆகிறது!

இது 1,86,000 மைல்கள் என்பதுடன் ஒப்பிட்டால் வரும் சிறிது வேறுபாடானது நாம் வேத கால அளவுகளைச் சற்று மாற்றிக் கணக்கிடுவதானாலேயே. (இந்த அளவின் படி ஒரு அங்குலம் என்பது முக்கால் அங்குலமாகக் கணக்கிடப்படுகிறது).

வேத விற்பன்னர்களின் ஆய்வுகள்
இந்த சாயனரின் உரை 1890ஆம் ஆண்டிலேயே மாக்ஸ்முல்லரால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது என்பதையும் சாயனரின் கி.பி.1395 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட எழுத்துப் பிரதி இன்றும் இருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டும் வேத அறிஞர் சுபாஷ் கக், இந்தக் காரணங்களால், இதை ‘’ஃப்ராடு ‘’ என்று சொல்ல வழியே இல்லை என்று நிரூபிக்கிறார்.

வேதங்களின் முழு அர்த்தமும் தெரிய வரும் போது பொன்னான உலகம் பிறக்கும் என்று மஹரிஷி அரவிந்தர் அருளியுள்ளதை இங்கு நாம் நினைவு கூரலாம்.

வேத விஞ்ஞானத்தைத் துல்லியமாக அறியும் பணியில் ஏராளமான அறிஞர்கள் இன்று ஈடுபட்டு ஆய்வு முடிவுகளைப் புத்தகங்களாக வெளியிட்டு வருகின்றனர், இதைப் படித்து விஞ்ஞானிகள் உள்ளிட்ட அனைவரும் பிரமிக்கின்றனர்.

நவகிரக நாயகனான சூரியனைப் பற்றிய வேத முழக்கத்தின் ஜய கோஷம் நம்மை பரவசப்படுத்துகிறது, இல்லையா!

Written by my elder brother S.Nagarajan to a Tamil Magazine: swami; ஞான ஆலயம் மே 2014 இதழில் வெளியாகி உள்ள கட்டுரை

******************

சரஸ்வதி மஹால் வெளியிட்ட பிருகதீஸ்வர மாஹாத்மியம்

saraswathimahal1

சரஸ்வதி மஹால் வெளியிட்ட பிருகதீஸ்வர மாஹாத்மியம்

By ச.நாகராஜன்; Post No 1106; dated 14th June 2014.

அற்புதமான தமிழ் ஏடுகளையும் அரிய புத்தகங்களின் கை பிரதிகளையும் நூல்களையும் சேர்த்து வைத்துள்ள சரஸ்வதி மஹால் நமது பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் அறிவுக் கோவில். சரஸ்வதி மஹால் பல அரிய நூல்களை வெளியிட்டு வருகிறது. ஆனால் சரஸ்வதி மஹாலின் தமிழ்ப் பணிக்கு உரிய மதிப்பும் மரியாதையும் என்றுமே இருந்ததில்லை. இது தமிழ் மக்களின் துரதிர்ஷ்டம்!

சரஸ்வதி மஹால் வெளியிட்டுள்ள அரிய நூலான பிருகதீஸ்வர மாஹாத்மியம் நம்மை வியக்க வைக்கும் ஒரு நூல்.
சோழ மன்னர்களில் 16 பேர்களின் வரலாற்றை விவரிக்கும் இந்த நூலை, பல தமிழறிஞர்களும் மேற்கோள் காட்டுவது வழக்கம்!

இந்த நூல் நானுறு வருடங்களுக்கு முன்னர் சம்ஸ்கிருதத்தில் எழுதப் பட்டுள்ளது. 30 அத்தியாயங்கள் கொண்டது. 49 பக்கங்கள் கொண்ட கைப்பிரதியை ஆராய்ந்து மூலத்தையும் தமிழாக்கத்தையும் (டி.ஆர்.தாமோதரன், எஸ்.ராஜலெக்ஷிமி, என்.சீனிவாசன் ஆகியோர் தமிழாக்கத்தைச் செய்துள்ளனர்) 1985ஆம் ஆண்டு சரஸ்வதி மஹால் வெளியிட்டுள்ளது.

இதில் உள்ள சில அரிய விஷயங்களை மட்டும் சுருக்கமாகச் சில வரிகளில் காண்போம்.

1)கர்வட என்ற கிராமத்தில் குலோத்துங்கன் என்ற விவசாயி வாழ்ந்து வந்தான்.சிறந்த சிவ பக்தனான அவனை சிவ பெருமான் சோதிக்க வந்தார். அவனும் அவன் துணைவியும் தக்க முறையில் சிவனடியாரை வரவேற்று உபசரித்தனர். இதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் அவனை சோழ வம்சத்தின் அரசனாக்கினார். மது, மயன், விஸ்வகர்மா, தாதா விதாதா ஆகிய தேவ சிற்பிகள் மூலம் காவிரிக் கரையில் சோழ தேசம் அமைக்கப்பட்டது. ஐயாரப்பர் ஆலயத்தையும் திருப்பழனம் ஆலயத்தையும் குலோத்துங்கன் கட்டுவித்தான்.

2) தஞ்சாசுரனை சிவபெருமான் சூலத்தால் வீழ்த்தும் போது அவன் உயிர் பிரியும் தருணம் “என் பெயரால் இந்த நகரம் விளங்க வேண்டும்” என்று வேண்டிக் கொள்ள அந்த நகருக்கு தஞ்சாவூர் என்று பெயர் வழங்கலாயிற்று.

3) தேவ சோழனின் மகன் சசிசேகர சோழன் மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவில், திருவாலங்காடு உள்ளிட்ட 60 ஆலயங்களை எடுப்பித்தான். ஒரு சமயம் காவிரியில் பெரு வெள்ளம் வர நாடே அழியும் சூழ்நிலை ஏற்பட்டது. 48 நாட்கள் உண்ணா நோன்பு இருந்து இறைவனை வேண்ட, ‘இறைவன் காவிரியின் குறுக்கே அணை கட்டுக’ என்று அருள் பாலித்தான். அதன் படியே மன்னனும் அணை கட்டினான்.

sarasvatimahal2

4) சசிசேகர சோழனின் மகன் சிவலிங்க சோழன் திருவாரூரை ஆண்டு வந்த போது பசுங்கன்று ஒன்று தேர்ச்சக்கரத்தில் வந்து சிக்கிக் கொண்டு இறந்தது. தாய்ப் பசு அரண்மனை வாயிலை அடைந்து கதறியது. இதைக் கண்ட மன்னன் தன் மைந்தன் மீது தேர்ச்

சக்கரத்தை ஏற்றி நீதி பரிபாலித்தான். இறைவன் அருளால் இருவரும் மீண்டு எழுந்தனர்.சிவலிங்க சோழன் 119 ஆலயங்களுக்குத் திருப்பணி செய்தான்.

5)சிவலிங்க சோழன் மகன் வீர சோழன் காவிரிக்குக் கிளை ஆறை ஒன்றை வெட்டி உருவாக்க அது வீர சோழன் ஆறு என்ற பெயரைப் பெற்றது.

6)வீர சோழனுடைய மகன் கரிகாலன். இவன் ஹரதத்த சிவாச்சாரியாரைத் தன் குருவாகப் பெற்றான். கஞ்சனூரில் உள்ள அக்னீஸ்வரர் ஆலயத்தை எழுப்பினான். துர்கேஸ்வரம் மங்களேசம் ஆம்ரவனம் ஆகிய இடங்களிலும் ஆலயங்களை அமைத்தான். ஆனால் விதி வசமாக கருங்குஷ்டம் இவனைப் பிடித்தது.

ஹரதத்தர் ஒரு மண்டல காலம் ஆலயத்திலேயே வாசம் செய்து நூற்றெட்டு மறைவல்லோரை அழைத்து ‘ஏகாதசருத்ர’ ஜபம் செய்தார். சிவபெருமான் ஹரதத்தரின் கனவில் தோன்றி ‘தஞ்சாபுரீஸ்வரர் ஆலயத்திற்கு தென் மேற்கில் உள்ல சிவகங்கா பொய்கையில் மன்னரை நீராடச் சொல். சக்தி கூபம் கிணற்றுக்கு அருகில் உள்ள கந்தனின் ஆலயத்தில் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் அன்று தரிசனம் செய்யச் சொல். அதற்கு முன் துந்தில விக்னேசர் (தொந்தி விநாயகர்) ஆலயத்தை நிர்மாணம் செய்யச் சொல்” என்று இப்படி வரிசையாகக் கட்டளைகளை இட மன்னனும் அனைத்தையும் செய்து கருங்குஷ்டம் நீங்கப் பெற்றான்.
thanjavur-big-temple

7)கரிகாலனின் மகன் பீம சோழன் கேரள ராஜகுமாரி வித்யுல்லதா (மின்னற்கொடி)வை மணந்தான்.திருவண்ணாமலையில் கோபுரங்களை அமைத்தான்.77 ஆண்டுகள் இவன் உயிர் வாழ்ந்தான்.

மிக நீண்ட வரலாற்றைக் கூறும் மாஹாத்மியத்தின் இதர பகுதிகளையும் இதைப் பற்றி ஆங்கிலேய அறிஞர்களின் கருத்தையும் பிரபல சரித்திர ஆய்வாளர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் கருத்தையும் அடுத்ததாகப் பார்ப்போம்!

8)பீம சோழனின் மகன் ராஜேந்திர சோழன். சேர பாண்டியரை வென்று சிறப்பாக அரசாட்சி நடத்தினான்.திருமுல்லைவாயில், திருப்பூந்துருத்தி, திருவெண்ணியூர், திருநெல்லிக்கா, சிற்றேமம் ருஷிகானனம் ஆகிய ஊர்களில் சிவாலயங்களை எடுத்தான். இதைப் போன்று 80 ஆலயங்களைக் கட்டி முடித்தான்.

9) இவனது மகன் வீரமார்த்தாண்டன்.இவன் காலத்தில் வேத பாடசாலைகளும், சாஸ்திர பாடசாலைகளும் தோன்றின. அக்னிஹோத்திர வேள்விச் சாலையிலிருந்து கிளம்பும் புகை மண்டலம் சுவர்க்கத்திற்குச் செல்லும் ‘’படி’’ போலத் தோன்றியது. இவன் சுமார் 60 ஆலயங்களைக் கட்டினான்.

10) இவனது மகன் புகழ்ச் சோழன். இவன் முருக பக்தன். தனக்கு ஒரு மகன் இல்லையே என்று வருந்த முருகப்பெருமான் கனவில் தோன்றி குக பர்வதத்தை புனருத்தாரணம் செய்யச் சொல்ல அவன் அப்படியே
செய்தான். முருகனின் அருளால் ஜய சோழனை பெற்றெடுத்தான்.

thanjavur temple
11)ஜயசோழன் ஜயசோழபுரத்தில் பெருவுடையார் கோவிலைப் போல முக்கால் பங்கு இருக்குமாறு ஒரு ஆலயத்தைக் கட்டினான்.இவன் மகன் கனக சோழன். இவன் காலத்தில் திருவலஞ்சுழியில் காவிரி நீர் பாதாளத்தில் ஓடி மறைந்தது. இதனால் மக்கள் வருந்தினர். அதற்குரிய பரிகாரங்களைச் செய்து ஏரண்ட முனிவரால் காவிரியை மீட்டான். ஏரண்ட முனிவர் காவிரையை மீட்க தன் உயிரை அர்ப்பணிக்க அவர் வழிபட்ட கொட்டையூர் ஆலயத்திற்குத் திருப்பணி செய்தான்.

12) கனக சோழனின் மகன் சுந்தர சோழன். மறையோன் ஒருவனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க இடை மருதூர் சென்று வழிபட்டுத் தன் தோஷத்தைப் போக்கிக் கொண்டான். இவன் மகன் கால கால சோழன். இவன் திருப்பனந்தாளில் குனிந்திருந்த லிங்கத்தை நிமிர்த்தினான். இவன் மகன் கல்யாண சோழன். இவன் சிதம்பரத்தில் உள்ள கோபுரத்தையும் ஆயிரங்கால் மண்டபத்தையும் கட்டினான்.இவன் மகன் பத்ர சோழன். இவனும் தன் முன்னோர்களைப் போல பல ஆலயங்களைக் கட்டினான்.

13) நூலின் கடைசி ‘பாரா’ சிவ பெருமான் பார்வதி தேவி கேட்ட கேள்விக்குப் பதில் அளிப்பதைத் தெரிவிக்கிறது. இதன் படி பார்வதி தேவி ஸ்தலங்களைப் பற்றிக் கேட்க சிவபிரான், காவிரிக்கும் சேதுவிற்கும் இடையே சிவ க்ஷேத்ரம் – 23000, விஷ்ணு க்ஷேத்ரம் – 1000 முருகன் க்ஷேத்ரம் – 6000 விநாயகர் க்ஷேத்ரம் – 5000 காளி க்ஷேத்ரம் – 1000 நடராஜர் க்ஷேத்ரம் – 100 துர்க்கை க்ஷேத்ரம் – 3000, சாஸ்தா க்ஷேத்ரம் – 11000 இருப்பதாக அருளுகிறார்!.
enterance-gopuram-new1

பல நீண்ட சுவையான கதைகளை உள்ளடக்கிய இந்த மாஹாத்மியம் பிரபல வரலாற்று ஆய்வாளர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி அவர்களால் ஆராயப்பட்டுள்ளது. 1930ஆம் ஆண்டு சோளா லெஜண்ட்ஸ் (Cola Legends) என்று ‘ஜர்னல் ஆஃப் ஓரியண்டல் ரிஸர்ச்’ இதழில் அவர் இது பற்றி ஒரு கட்டுரையையும் எழுதியுள்ளார்.

இந்த நூல் வரலாற்று நூல் என்பதை விட்டு விட்டு க்ஷேத்திரங்களை விவரிக்கும் நூலாகவும் அங்கு பாவங்களுக்கான பரிகாரங்கள் மற்றும் பிராயச்சித்தங்களைத் தெரிவிக்கும் நூலாகவும் உள்ளது. அந்த அளவில் இது மதிப்பு வாய்ந்தது. குலோத்துங்கன் வீரன், கரிகாலன் ,ராஜேந்திரன், சுந்தர சோழன் ஆகியோரைத் தவிர ஏனைய மன்னர்களைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. கரிகாலனுக்கு கருங்குஷ்டம் இருந்தது என்பதை இந்த ஒரு நூலில் மட்டுமே காண முடிகிறது. மனு நீதிச் சோழன் வரலாற்றை அப்படியே சிவலிங்க சோழன் வரலாற்றில் காண முடிகிறது. இருந்தாலும் காவிரித் தலங்களின் மகிமை பற்றியும் அதன் புராதன பழமையையும் பற்றி இந்த நூல் மூலம் அறிய முடிகிறது. இந்த நூலை மேற்கோளாகப் பல ஆராய்ச்சியாளர்களும் அறிஞர்களும் காட்டுவது வழக்கம்.

மக்கென்ஸி என்பவரிடம் இருந்த இந்த நூலின் ஒரு கைப்பிரதி அதிர்ஷ்டவசமாக டெய்லர் என்னும் அறிஞரால் மீட்டெடுக்கப்பட்ட
தால்தான் இந்த நூல் பற்றி அறிய முடிந்தது. இந்த நூலின் இதர பிரதிகள் இங்கிலாந்து சென்றிருக்கக் கூடும். அவைகள் கிடைக்க வில்லை. தஞ்சையை ஆண்ட சரபோஜி மஹாராஜா இதைத் தமிழில் மொழிபெயர்க்கச் செய்தார். இதன் மூலமாகத் தான் சம்ஸ்கிருதத்தில் இருந்த க்ஷேத்திரங்களின் தமிழ்ப் பெயர்களை அறிய முடிந்தது.

த்ருதிஸ்தலம் என்பது திருப்பண்டுருத்தி என்றும் கடேசம் என்பது திருக்கடையூர் என்றும், த்ரிகோடிகா என்பது திருக்கோடிக்காவல் என்பதும் வால்மீகநகரா என்பது திருவாரூர் என்பதும் இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பாலேயே அறிய முடிந்தது.

Thanjavur_Brihadeeswar

மொத்தத்தில் சுவையான ஒரு சோழ புராணத்தைப் படித்த மகிழ்ச்சியை இந்த நூல் ஏற்படுத்துகிறது. இன்னும் பல்லாயிரக்கணக்கான சுவடிகளில் தமிழ் மொழி பற்றியும் தமிழ் இலக்கியம், பண்பாடு, கோவில்கள் மன்னர்கள் பற்றியும் பல நூல்கள் உள்ளன. அவை அனைத்தும் வெளி வரும் நாள் எந்த நாளோ! அந்த நாளும் வந்திடாதோ .. வெகு விரைவில்!

******************* !

ஜோதிடமும் கோடீஸ்வரர்களும்!

c74d9-hongkongzodiaz

கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–1103 தேதி ஜூன் 13, 2014.

ஜோதிடம் உண்மையா? ‘’கொஞ்சம் உண்மை’’ இருக்கிறது என்று சொல்ல ஒரு ஆதாரம் கிடைத்து இருக்கிறது.

ஜோதிடம் உண்மையானால் நடக்கப் போகும் விஷயங்களில் நூறு சதவிகிதம் இல்லாவிட்டாலும் 75 சதவிகிதமாவது முன் கூட்டியே சொல்ல வேண்டும். நடந்த பின்னர் நாத்ரதாமஸ் Nostradamus (1503 – 1566) என்பவர் அன்றே சொன்னார் என்று பிதற்றுவதில் பொருள் இல்லை. ஜோதிடர்கள் உண்மை விளம்பிகளாக இருந்தால், நடக்கப் போகும் விஷயங்களை முன்கூட்டியே எழுதி ஒரு ‘கவரில்’ போட்டுக் கொடுக்கட்டும். பின்னர் ஆண்டு முடிவில் நான் சொன்னதில் இத்தனை சரியாக இருந்தது ஆகையால் ஜோதிடம் உண்மை என்று சொல்லட்டும்.

35 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அப்போது நான் மதுரை தினமணியில் சீனியர் உதவி ஆசிரியராக வேலை பார்த்தேன். எனது தந்தை செய்தி ஆசிரியராக இருந்தார். மதுரையில் உள்ள ஒரு வணிகப் பிரமுகர், எல்லா ஜோதிடர்களுக்கும் ஒரு சவால் விட்டார். “நான் பத்து பிரமுகர்களின் ஜாதகங்களை ஒரு உறையில் போட்டுத் தருகிறேன். அதில் பத்து கேள்விகள் இருக்கும்— சரியான பதில் தரும் ஜோதிடருக்கு பெரிய ரொக்கப் பரிசு” என்று அறிவித்தார். ஜோதிடர்களுக்கு அவை யாருடைய ஜாதகங்கள் என்று தெரியாது. ஆனால் மதுரைப் பிரமுகர்கள் அடங்கிய கமிட்டிக்கு மட்டும் தெரியும். குறிப்பிட்ட நாளன்று பொது மக்கள் முன்னால் அந்த உறைகள் (கவர்) பகிரங்கமாகத் திறக்கப்பட்டு ஆராயப்படும் என்று தினமணியில் செய்தி வெளியானது. எங்கள் தினமணி ஜோதிடர் உள்பட யாரும் அந்த சவாலை ஏற்க முன்வில்லை!!

ஜோதிடம் உண்மைதான். ஆனால் அதை சரியாக கணக்கிட்டுச் சொல்லும் திறமைசாலிகள் குறைந்துவிட்டனர். நாம் சூப்பர் கம்ப்யூட்ட்ர் யுகத்தில் வாழ்கிறோம். சரியான முறையில் எல்லா விஷயங்களையும் அதில் போட்டுவிட்டால் பிறகு நல்ல முறையில் ஆரூடம் சொல்ல முடியும். ஒரு காலத்தில் நானும் என் சகோதர்களும் அஷ்டாவர்கம் வரையில் போட்டு ஜாதகங்களை ஆராய்ந்ததால் இதில் எவ்வளவு கணக்குகள் உள்ளன என்பது புரிகிறது. மேலும் ஜாதகம் கொண்டு வருவோரும் சரியான ஜாதகத்தைத் தான் கொடுத்தாரா என்பதையும் அறியவேண்டும்.

ஜோதிடம் உண்மை என்பதற்கான சில ஆதாரங்களைக் காண்போம். பெரிய பெரிய சுவாமிகள், பாபாக்கள் போன்றோர் ஒரு பக்தரைப் பார்த்த மாத்திர த்திலேயே அவர்கள் ஜாதகத்தில் உள்ள குறைபாடுகளைச் சொல்லிப் பரிகாரம் சொல்கிறார்கள். அவர்களுடைய ஜாதகங்களைப் பாராமலேயே உள்ளுணர்வு, தெய்வீக ஆற்றல் மூலம் இப்படிச் சொல்வதை அருகில் இருந்து கவனித்து இருக்கிறேன்.

லண்டன் டைம்ஸ் கோடீஸ்வரர் பட்டியல்
புகழ்பெற்ற லண்டன் ‘டைம்ஸ்’ பத்திரிக்கை ஆண்டுதோறும் பிரிட்டனில் வசிக்கும் ஆயிரம் கோடீஸ்வர்களின் பட்டியலை வரிசைக் கிரமமாக வெளியிடுவதுண்டு. இதை ஆண்டுதோறும் வாங்கி அலசி ஆராய்வது எனக்குப் பிடித்தப் பொழுது போக்குகளில் ஒன்று. எந்தந்த வகையில் யார் யார் எவ்வளவு பணம் சம்பாதித்தார்கள் என்ற ஆய்வுரைகளும் அதில் இருக்கும். சினிமா மூலம் சம்பாதித்தவர்கள், இசைத்துறை மூலம் சம்பாதித்தவர்கள் வணிகம் மூலம் சம்பாதித்தவர்கள் என்று பல வகைகள் இருக்கும். ஒரு மூலையில் சிறிதாக ஜோதிட விஷயமும் இருக்கும். எந்த ராசிக்காரர்கள் அதிகம் பணம் சம்பாதிக்கிறார்கள் என்றும் ஒரு பத்தி இருக்கும். இதில் வியப்பான விஷயம்,– எப்போதும் மிதுன ராசிக்காரர்கள்—பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்கள். விருச்சிக ராசிக்காரகள் (எனது ராசி) அடிமட்டத்தில் இருக்கிறார்கள்!!

இந்து ஜாதக முறையில் ராசி கணக்கிடுவதும், மேலை நாட்டு முறையில் ராசி கணக்கிடுவதும் வெவ்வேறாக இருக்கும். உதாரணமாக எனக்கு ஜாதகப் படி தனுர் ராசி. மேலைக் கணக்குப்படி விருச்சிகம் (ஸ்கார்ப்பியோ). மேலை நாட்டில் நீங்கள் எந்த மாதத்தில் என்ன தேதியில் பிறந்தீர்களோ அதன்படி ராசி இருக்கும். கீழே உள்ள படத்தைப் பார்த்தால் மேலை நாட்டு (சூரியக் கணக்கு) முறையில் உங்கள் ராசிகள் என்ன என்பது தெரியும். ஆனால் இன்னும் ஒரு வியப்பான செய்தி:- இந்து ஜோதிட முறையில் கணக்கீட்டாலும் மிதுன ராசிக்கார்கள், — பணக்கார் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார்கள்!!!

zodiac

வெளி நாட்டுப் பத்திரிக்கைகளில் விளையாட்டு வீரர்களின் ராசிகள், நடிகர் நடிகையர் ராசிகள் என்று அவ்வப்போது அலசி ஆராயும்போதும் சில ராசிக்காரர்கள், அந்தப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்துவது ஜோதிடம் உண்மைதான் என்று நிரூபீக்கிறது.

இதோ லண்டனில் இருந்து வெளியாகும் ‘’சண்டே டைம்ஸ்’’ பத்திரிக்கை வெளியிட்ட இரண்டு ஆண்டு (2013 & 2014) கோடீஸ்வர்களின் ராசிகள்:–

According to Sunday Times Rich List 2013:

Gemini மிதுனம் 107 கோடீஸ்வரர்கள்
Aries மேஷம் 102 கோடீஸ்வரர்கள்

Capricorn மகரம் 102 கோடீஸ்வரர்கள்
Leo சிம்மம் 96 கோடீஸ்வரர்கள்
Taurus ரிஷபம் 96 கோடீஸ்வரர்கள்
Aquarius கும்பம் 93 கோடீஸ்வரர்கள்
Sagittarius தனுர் 91 கோடீஸ்வரர்கள்
Cancer கடகம் 87 கோடீஸ்வரர்கள்
Pisces மீனம் 86 கோடீஸ்வரர்கள்
Libra துலா 85 கோடீஸ்வரர்கள்
Virgo கன்னி 83 கோடீஸ்வரர்கள்
Scorpio விருச்சிகம் 71 கோடீஸ்வரர்கள்

sundaytimes2

According to Sunday Times Rich List 2014:

மிதுனம் Gemini 118 billionaires கோடீஸ்வரர்கள்
கன்னி Virgo 111 billionaires கோடீஸ்வரர்கள்
மகரம் Capricorn 98 billionaires கோடீஸ்வரர்கள்
மீனம் Pisces 95 billionaires கோடீஸ்வரர்கள்
மேஷம் Aries 95 billionaires கோடீஸ்வரர்கள்
ரிஷபம் Taurus 91 billionaires கோடீஸ்வரர்கள்
தனுர் Sagittarius 90 billionaires கோடீஸ்வரர்கள்

சிம்மம் Leo 89 billionaires கோடீஸ்வரர்கள்
கும்பம் Aquarius 89 billionaires கோடீஸ்வரர்கள்
கடகம் Cancer 81 billionaires கோடீஸ்வரர்கள்
துலா Libra 76 billionaires கோடீஸ்வரர்கள்
விருச்சிகம் Scorpio 73 billionaires கோடீஸ்வரர்கள்

ஆனால் இந்தப் பட்டியல் துல்லியமானது அல்ல என்றும் அவர்களே அடைப்புக் குறிக்குள் எழுதி இருக்கிறார்கள். ஏனெனில் ஆயிரம் கோடீஸ்வர்களின் ராசிகளும் கிடைப்பதில்லை. எந்தெந்த லட்சாதிபதிகளின் விவரங்கள் கிடைத்ததோ அவைகளை மட்டுமே கொண்டு தயாரிக்கப் பட்டது இந்த ஜோதிட ராசிப் பட்டியல் என்பது சொல்லாமலேயே விளங்கும்.

hindujas
Picture of Hinduja Brothers, Richest in the UK.

பட்டியலில் காணப்படும் சுவையான விஷயம் மிதுனராசியும், மகர ராசியும் இரண்டு பட்டியல்களிலும் உச்சியிலேயே இருப்பதைக் காணலாம். வுருச்சிக ராசி எப்போதுமே கீழேயே இருப்பதைக் காணலாம்.

என்னுடைய ராசி விருச்சிக ராசி. எப்போதுமே ஏழைதான். ஆனால் உள்ளுக்குள் ஒரு சந்தோஷம். ஏனெனில் லெட்சுமி இருக்கும் இடத்தில் சரஸ்வதி இருக்க மாட்டாள். சரஸ்வதி இருக்கும் இடத்தில் லெட்சுமி இருக்க மாட்டாள். அறிவு என்னும் நிதி இருந்தால் போதுமே!

(ஆங்கிலக் கணக்குப்படி ராசிகள் வேறு என்பதால் உங்கள் ஜாதகப்படியான ராசியை வைத்து குழம்பிக் கொள்ளாதீர்கள். தமிழ் பத்திரிக்கைகள் பெரும்பாலும் இந்து முறையையும் ஆங்கிலப் பத்திரிக்கைகள் பெரும்பாலும் மேலை/ஆங்கில முறையையும் பின்பற்றுகின்றன

ஏலாதி தரும் அபூர்வ செய்திகள்!

tamil veeran

ஏற்றம் தரும் ஏலாதி!-Part 2

லேடீஸ் ஸ்பெஷல் 2010ஆம் ஆண்டு தீபாவளி மலரில் வெளியான கட்டுரை (Written by Santanam Nagarajan; Part 2 about Tamil Ethical book Elathi)

By S.Nagarajan ; Post No.1101 dated 12th June 2014.

காலன் வராமல் காக்கும் வழி!
பூமியில் ஒரு ஜனனம் ஏற்பட்டவுடன் அந்தப் பிறப்புடன் உடனே ஒட்டிக் கொள்ளும் ஒரு வார்த்தை மரணம் தான்! பாரபட்சமில்லாது வரும் காலனது வருகையை ஆசிரியர் அழகுற விளக்குவதைப் பார்க்கும் போது நயமான கருத்து நம் உள்ளத்தில் ஆழப் பதிகிறது.

அழப்போகான், அஞ்சான், அலறினால் கேளான்,
எழப்போகான் ஈடு அற்றார் என்றும் – தொழப் போகான்,
என்னே இக் காலன்!ஈடு ஓரான், தவம் முயலான்,
கொன்னே யிருத்தல் குறை (பாடல் 37)

அழுதாலும் விடமாட்டான், அலறினாலும் விட மாட்டான், நீயே என் குல தெய்வம் என தொழுதாலும் விட மாட்டான்,அட எப்படிப்பட்டவனடா இந்தக் காலன்! என்னே இக் காலன் என கணிமேதாவியார் வியக்கும் போது கூடவே நாமும் வியக்க வேண்டியதாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் இவனை வெல்லத் தவம் அல்லவா வழி! அதை மேற்கொள்வோம் என பாடல் வலியுறுத்துகிறது.

இந்தப் பாடலைப் படித்து விட்டு கவியரசு கண்ணதாசனின் பாடலைப் பார்ப்போம்:
போனால் போகட்டும் போடா – இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா!
இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை
இல்லை என்றால் அவன் விடுவானா
உறவைச் சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா
கூக்குரலாலே கிடைக்காது -அது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது-அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா (பாலும் பழமும் திரைப்படப் பாடல்).

நயமான உண்மைக் கருத்தை கண்ணதாசனுக்கு இனம் காண்பித்தவர் ஏலாதியார் என்றால் மிகை அல்ல!

எழுத்தினால் நீங்காது, எண்ணால்ஒழியாது ஏத்தி வழுத்தினால் மாறாது என அடுத்த பாடலிலும் ஜனனம் மரணம் என்பது கல்வி அறிவினாலோ, தியானத்தினாலோ, அல்லது துதிக்கும் பாடல்களினாலோ நீங்காது என்று வலியுறுத்தி நல்ல ஒழுக்கத்துடன் தவம் புரிந்தால் ஜனன மரணச் சுழலிலிருந்து விடுபடலாம் என பேருண்மையை நூலாசிரியர் கூறுகிறார்.

ஆறு மனமே ஆறு; நூல் கூறும் கட்டளைகள் ஆறு

இனி பாடல்களில் ஆறு ஆறாகக் கூறும் பல உண்மைகள் சுவை பயப்பதோடு அரிய நீதிகளையும் உணர்த்துகிறது.

போகக்கூடாத இடங்கள் ஆறு:
கொலைக்களம் வார் குத்துச் சூதாடும் எல்லை,
அலைக்களம் போர்யானை ஆக்கும், – நிலைக்களம்,
முச்சாரிகை ஒதுங்கும் ஓரிடத்தும் இன்னவை,
நச்சாமை நோக்காமை நன்று (பாடல் 12)

கொலை செய்யும் இடம், வெள்ளச் சூழல் உள்ள நீர் நிலை,சூதாடும் கழகம், சிறைச்சாலை,யானைகளைப் பழக்குகின்ற இடம், தேர்,குதிரை, யானை ஆகிய முப்படைகள் செல்லும் இடத்திற்குப் போகாதே!

????????????????????????????????????????????????????

இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப இப்பாடலைப் பார்த்தால் ஏவுகணைகள் ஏவும் இடம், துப்பாக்கிப் பயிற்சி பெறும் இடம்,தரை, விமானப் படைகள் இயங்கிக் கொண்டிருக்கும் இடங்களில் ‘இந்த எல்லையில் வரக் கூடாது’ என்ற அறிவிப்புப் பலகைகளை சாதாரணமாகக் காண்கிறோம். உயிரைப் போக்க வைக்கும் அபாயங்கள் நிறைந்த இடத்திற்கு வலியப் போகாதே என்று கூறி ஆயுளை நீட்டிக்கும் வழிகளை கணி மேதாவியார் காட்டுகிறார்!

பெரியவன் யார்?
கொல்லான்கொலை புரியான்,பொய்யான் பிறர் மனை மேல்
செல்லான் சிறியார் இனம் சேரான் – சொல்லும்
மறையில் செவி இலன்,தீச்சொற்கண் மூங்கை,
இறையில் பெரியாற்கு இவை (பாடல் 19)
கொலை செய்யாதவன், பிறர் கொலை செய்வதையும் விரும்பாதவன்,பொய் சொல்லாதவன், பிறர் மனைவியிடம் செல்லாதவன்,தீயவர்களிடம் செல்லாதவன், தீய சொற்களைப் பேசாதவன், கேளாதவன் ஆகிய குணங்களை உடையவனே பெரியோன்!

தேவாதி தேவன் யார்?
உரையான் குலன் குடிமை: ஊனம் பிறரை
உரையான்:பொருளொடு வாழ்வு ஆயு உரையானாய்-
பூ ஆதி வண்டு தேர்ந்து உண்ணு குழலாய், ஈத்து உண்பான்,
தேவாதி தேவனாய்த் தேறு (பாடல் 32)

வண்டுகள் மொய்த்து உண்ணும் கூந்தலை உடைய பெண்ணே, தன் குல உயர்வு,குடிப் பிறப்பு உயர்வு ஆகியவற்றைப் பாராட்டிப் பேசாதவன்,பிறரது இழிவினை இகழ்ந்து உரைக்காதவன்,தன் பொருளை ஏழைகளுக்குக் கொடுத்து வாழ்பவன் தேவர்களுக்கெல்லாம் தேவன்!

மறை வழி நடப்போருக்கு எவையெல்லாம் வந்து சேரும்?
சென்றபுகழ் செல்வம் மீக்கூற்றம் சேவகம்
நின்றநிலை கல்வி வள்ளன்மை – என்றும்,
அளி வந்து ஆர் பூங்கோதாய் ஆறும் மறையின்
வழி வந்தார் கண்ணே வனப்பு (பாடல் 1)

திசை எங்கும் பரவிய புகழ், செல்வம்,மேன்மையான நிலை,வீரத்தில் அசையாத நிலை,கல்வி,கொடை இந்த ஆறும் மறையை நன்கு கற்று ஒழுகுவோருக்கு அழகைத் தரும்.

hairstyle2

எந்த அழகு உண்மை அழகு?
கல்வியைப் பற்றிக் கூறும் ஒரு பாடல் வழிவழியாக அனைவராலும் மேற்கோள் காட்டப்பட்டு வருகிறது.
அந்தப் பாடல்:-

இடை வனப்பும் தோள் வனப்பும் ஈடில் வனப்பும்
நடை வனப்பும் நாணின் வனப்பும் – புடைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோடு
எழுத்தின் வனப்பே வனப்பு (பாடல் 74)

இடுப்பழகு, தோளழகு,செல்வத்தின் அழகு, நடையழகு, நாணத்தின் அழகு,கழுத்தின் அழகு – இவையெல்லாம் அழகே அல்ல;எண்ணும் எழுத்தும் கூடிய கல்வி அழகே அழகு!

இந்தப் பாடலை பர்த்ருஹரியின் கீழ்க்கண்ட பாடலோடு (நீதி சதகம் பாடல் 15) இணைத்துப் பார்ப்போம்:

கேயூராணி ந பூஷயந்தி புருஷம் – மனிதனை வளைகள் அலங்கரிப்பதில்லை
ஹாரா ந சந்த்ரோஜ்வலா – சந்திரன் போல பிரகாசிக்கும் முத்து மாலைகளோ
ந ஸ்நானம் ந விலேபகம் ந குஸ¤மம் – குளிப்பதோ, சந்தனம் பூசிக் கொள்வதோ
ந அலங்க்ருதா மூர்தஜா – வாரி விட்ட சிகையோ
ந பூஷயந்தி – மனிதனை அலங்கரிப்பவையாகா
யா ஸம்ஸ்கிருதா தார்யதே ஏகாவாணீ – எது நன்கு பரிசுத்தமாகத் தரிக்கப்படுகிறதோ அந்தக் கல்வி ஒன்று தான்
புருஷம் ஸமலங்கரோதி -மனிதனை நன்கு அலங்கரிக்கச் செய்கிறது
அகில பூஷணானி க்ஷ£யந்தே வாக் பூஷணம் பூஷணம்- எல்லா அழகும் நசிக்கின்றன கல்வியுள்ள வாக்கே சிறந்த அழகு.

032maruthi

அபூர்வ செய்திகள்!
ஏலாதி சில அபூர்வமான செய்திகளையும் ஆங்காங்கே தெளித்துச் செல்கிறது!
ஒருவன் தவத்தினைச் செய்வானாயின் அவனுக்கு மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழாம் பிறப்பில் வீடு பேறு வாய்க்கும் என்று உறுதி படக் கூறுவது சுவையான செய்தி.

அடுத்து பல்வேறு வகையில் பிறப்பு நேரிடுவதைச் சுட்டிக் காட்டி அப்படிப் பிறக்கும் பிள்ளைகளுக்கு உரிய பெயரையும் பட்டியலிட்டுத் தருகிறது!(பாடல்கள் 31,32).இது வேறு எந்த நூலிலும் காணக் கிடைக்காத ஒரு பட்டியல்!

ஔரதன் – கணவனுக்குப் பிறந்தவன்; கேத்திரசன் – கணவன் இருக்கும் போது பிறனுக்குப் பிறந்தவன்;கானீனன் – திருமணம் ஆகாதவளுக்குப் பிறந்தவன்;கூடோத்துபன்னன் – களவில் பிறந்தவன்; கிரிதரன் – விலைக்கு வாங்கப்பட்டவன்;பௌநற்பவன் – கணவன் இறந்த பிறகு பிறனை மணந்து பெறப்பட்டவன்;தத்தன் – சுவீகார புத்திரன்;சகோடன் – திருமணத்தின் போதே கருவில் இருந்தவன்;கிருத்திருமன் – கண்டெடுத்து வளர்த்துக் கொள்ளப்பட்டவன்;புத்திர புத்திரன் – மகனுக்குப் பிறந்தவன்;அபவித்தன் – பெற்றோர்கள் கைவிட மற்றவர்களால் வளர்க்கப்பட்டவன்;உபகிருதன் – காணிக்கையாக வந்தவன்!

இப்படிப் பற்பல செய்திகளை நூலில் பரக்கக் காணலாம்!

சொல்வளம்
நூலின் சொல்வளம் மிகவும் அழகாகவும் ஆழமாகவும் இருப்பதால் படிக்கப் படிக்கச் சுவை கூடுகிறது.ஒரே ஒரு பாடலை எடுத்துக்காட்டாகச் சுட்டிக் காட்டலாம்:

பொய் தீர் புலவர் பொருள் புரிந்து ஆராய்ந்த
மை தீர் உயர் கதியின் மாண்பு உரைப்பின் – மை தீர்
சுடர் இன்று; சொல் இன்று; மாறு இன்று; சோர்வு இன்று;
இடர் இன்று; இனி துயிலும் இன்று (பாடல் 66)

பொய் இல்லாத பெரியோர் ஆராய்ந்த வீடு பேற்றின் மாட்சிமையை உணர்ந்தால் ஒளி இல்லை;சொல் இல்லை; மாறுபாடு இல்லை; சோர்வு இல்லை;துன்பமில்லை; இனி தூக்கமும் இல்லை!

tamil puu parithal

நூலின் யாப்பு
உலகிலேயே சம்ஸ்கிருதம் உள்ளிட்ட எந்த மொழியிலும் இல்லாத ஒரு பா வகை வெண்பா. சொல் நயத்தையும் ஓசை நயத்தையும் கருத்து நயத்தையும் தரும் வண்ணம் இதன் இலக்கணம் அமைக்கப்பட்டுள்ளது அதிசயத்திலும் அதிசயமே.

ஆகவே இதை மனப்பாடம் செய்வது மிகவும் சுலபம்! ஆகவே தான் ‘வெண்பா ஒரு கால் கல்லானை’ என்ற மொழி வழக்கில் உள்ளது. ஒரு முறை கேட்டாலேயே வெண்பா மனனம் ஆகி விட வேண்டுமாம்! வாழ்வியல் நீதிகளைக் கூறும் இந்த நூலை அதனால் தான் கணி மேதாவியார் வெண்பாவில் அமைத்துத் தந்தார் போலும்.அனைவரும் இதனை சுலபமாக மனத்தில் இருத்திக் கொள்ளலாமே!

ஆறு பொருள்களைச் சொல்ல வேண்டியிருப்பதால் உவமை நயங்கள், அலங்கார சாஸ்திரம், அணிகள் ஆகியவற்றிற்கு நூலில் அதிகம் இடம் இல்லாமல் போய் விட்டது. அதிலும் அழகிய பெண்ணை அழைத்து நீதியைச் சொல்வதால் அதில் சில சொற்கள் போய்விடுவதால் சொற்களின் இழப்பைப் புலவர் சந்திக்க வேண்டி இருக்கிறது. ஆனால் பெண்களின் அழகை வர்ணித்து அந்த இடத்தில் உவமை நயத்தைக் காட்டி உவமைகள் உள்ள நூலாக இதை ஆக்கியுள்ளார் அவர்!

மனிதனுக்கு ஏற்றம் தரும் வாழ்வியல் நீதிகளை எண்பது பாக்களில் தர வேண்டும் என்று நினைக்கும் கணிமேதாவியாரின் துடிப்பு ஒவ்வொரு எழுத்திலும் தெரிவதால் ஏலாதி அனைவரும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய நூல் ஆகி விட்டது.

பல முறை இதைப் படித்தால் அறம்,பொருள், இன்பம், வீடு ஆகிய இந்த நான்கையும் அடையும் ரகசியம் புலப்படும்!

((லேடீஸ் ஸ்பெஷல் 2010ஆம் ஆண்டு தீபாவளி மலரில் வெளியான கட்டுரை.))

****************************************************
தொடர்புடைய இதர கட்டுரைகள்: மந்திர மொழி தமிழ், பத்தும் பெற்ற தமிழ்,சர்க்கரை போற்றிப் பணிந்த தமிழ், ஆசிரியரின் மின்னஞ்சல் முகவரி: snagarajans@gmail.com

ஏற்றம் தரும் ஏலாதி!-Part 1

05FRLIBRARY8_UVS_1507555g (1)

ச.நாகராஜன்

Post No 1098; Dated 11th June 2014.

தமிழ் அறநூல்கள்

தமிழில் அறநூல்களுக்கு ஒரு தனி இடம் உண்டு. திருக்குறள் உள்ளிட்ட வாழ்வாங்கு வாழ வேண்டிய அற நெறிகளைக் கூறும் நூல்கள் ஏராளம் தமிழில் உள்ளன.

இந்த வகையில் பதிணென்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான ஏலாதி சுவையான விதத்தில் அறநெறிகளைக் கூறுவதோடு சற்று வித்தியாசமாகவும் அமைந்துள்ள ஒரு நூல்.பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று புறம் பற்றியும்,ஆறு நூல்கள் அகம் பற்றியும் ஏனைய பதினோரு நூல்கள் அறம் பற்றியும் கூறுவது உற்று நோக்கத் தக்கது. கி.பி.100 முதல் கி.பி 500 முடிய உள்ள காலத்தில் மலர்ந்த இந்த நூல்கள் பெரும்பாலும் அறநெறிகளை வலியுறுத்த எண்ணிய முனிவர்கள், பொய்மை இல்லாப் புலவர்கள் மற்றும் சமண ஆசாரியர்களால் எழுதப்பட்டவையாகும். இதே காலகட்டத்தில் வாழ்ந்தவராகக் கருதப்படும் பர்த்ருஹரியின் நீதி சதகம் நூறு பாடல்களில் அற்புதமாக பல நீதி உரைகளை விளக்குகிறது. வடமொழியில் அமைந்துள்ள இந்த நூலை மேற்கோள் காட்டாதவர் இல்லைஆக பற்பல அற நூல்கள் பாரதமெங்கும் எழுந்தமையால் இதை அறநூல்களின் காலம் என அழைக்கலாம்.

அறநெறிகளின் முக்கியத்துவம்
அறநெறிகளின் முக்கியத்துவத்தை, “தனது ஆளுமையின் அகத்தன்மையின் நிறைவான நிலையை அடைய மனிதனின் செயல்பாடுகளே அறநெறிகள்” (Ethics is the activity of man directed to secure the inner perfection of his own personality) என்று ஆல்பர்ட் ஸ்வைட்சர் கூறுவார். உலகின் பெரும் விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனோ, தனது ஒப்புமைத் தத்துவத்தையே எடுத்துக் கொண்டு ஒப்புமைத் தத்துவம் இயற்பியலுக்கு மட்டும் தான்;அறநெறிகளுக்கு அல்ல (Relativity applies to physics, not ethics) என்று கூறி மாற்றுக் குறையாத அறநெறி கடைப்பிடிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்! இந்த வகையில் ஏலாதி போன்ற அறநூலின் தேவையும் வலிமையும் நமக்கு நன்கு புலனாகிறது!

கணிமேதாவியார்
ஏலாதி நூலை எழுதியவர் கணிமேதாவியார். கணித்தலில் மேதையாக இவர் இருப்பதாக இவரது பெயர் சுட்டுவதால் இவர் சோதிடத்தில் வல்லவராக இருத்தல் வேண்டும் எனக் கருதப்படுகிறது. இறைவாழ்த்து நீங்கலாக எண்பது பாடல்களைக் கொண்டது ஏலாதி. அருகக் கடவுளை இவர் வாழ்த்துவதால் இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிகிறது.

cardamom

ஏலாதி என்ற பெயர் ஏன்
ஏலாதி சூர்ணம் பழைய தமிழ் மருத்துவ நூல்களில் காணப்படும் முக்கியமான ஒரு சூர்ணம். ஏலம் ஒரு பங்கும்,இலவங்கப்பட்டை இரண்டு பங்கும்,நாககேசரம் மூன்று பங்கும், மிளகு நாலு பங்கும், திப்பிலி ஐந்து பங்கும் சுக்கு ஆறு பங்கும் கலந்த ஒரு கலவை ஏலாதி சூர்ணம்.அரிய மருத்துவ குணங்கள் கொண்ட இந்த சூர்ணம் உடல் நலத்தைச் சீராகக் காக்கும் ஒரு அற்புத சூர்ணம்.
இதே போல மன நலத்தையும் அதை முதலாகக் கொண்ட வாழ்க்கை நலத்தையும் சீராக ஆக்கிக் கொள்வதற்கான வழிமுறைகளைக் காண்பிக்கும் வாழ்வியல் நூல் என்பதால் இதற்கு ஆசிரியர் கணிமேதாவியார் ஏலாதி என்ற அதிசயப் பெயரை, அற்புதப் பெயரைச் சூட்டியுள்ளார்.அத்தோடு ஏலாதி சூர்ணத்தை உருவாக்குவதில் ஆறு மூலப்பொருள்கள் இருப்பது போல ஏலாதி பாடல்களில் ஆறு பொருள்களை கணிமேதாவியார் வகுத்து வலியுறுத்துகிறார்.
அற ஸ்பரிசஸங்கள் அன்றாடம் வாழ்க்கையில் ஏற்பட ஏற்பட அறம், பொருள்,இன்பம், வீடு ஆகிய பெறுதற்கரிய நான்கு பேறுகளையும் பெறலாம் என்பதை அனைத்து அறநூல்களும் வலியுறுத்துகின்றன.

இல்லற நூல், துறவற நூல், நல்லற நூல்
இந்த நூலின் சிறப்புப் பாயிரம்
“இல்லற நூல் ஏற்ற துறவற நூல் ஏயுங்கால்
சொல்லறநூல் சோர்வின்றித் தொக்குரைத்து – நல்ல
அணிமேதையாய் நல்ல வீட்டு நெறியும்
கணிமேதை செய்தான் கலந்து” என்று வலியுறுத்துவது போல ஏலாதி ஒரு இல்லற நூல்; அத்தோடு துறவிலக்கணம் கூறும் துறவற நூல் அனைத்து அறங்களையும் வலியுறுத்துவதால் ஒரு நல்லற நூல் என்பது நூலைப் படித்தால் விளங்கும்.

பழங்காலத்தில் உளவியல் அடிப்படையில் வாழும் நல் மன வாழ்க்கையைப் பெரியோர் பெரிதும் வற்புறுத்தி வந்தனர். அதற்கான செம்மையான நலங்களை அறநெறி நூல்கள் சுட்டிக் காட்டின.ஆகவே அவற்றைக் கடைப்பிடித்தோர்க்கு மனத்தினால் உண்டாகும் நோய்கள் அறவே இல்லாமல் போனது; அவர்களுக்குப் புகழுடைய வாழ்க்கையும் அமையப் பெற்றது.

யாருக்கு இந்த அறநூல் தேவை இல்லை!
கணி மேதாவியார், அற நூல் எதுவும் தேவை இல்லை என்று அறுதியிட்டு உறுதி கூறுகையில் யாருக்குத் தேவை இல்லை என்ற வினா ‘சஸ்பென்ஸாக’ நம் மனதில் எழுகிறது.
பொய்யான் புலாலொடு கள் போக்கி தீயன
செய்யான் சிறியார் இனம் சேரான் – வையான்
கயல் இயல் உண் கண்ணாய், கருதுங்கால் என்றும்
அயல அயலவர் நூல் (பாடல் 14)

பொய்யே சொல்லாதவன், மாமிசம், மது இவற்றை நீக்கியவன், மற்றவர்க்குத் தீங்கு செய்யாதவன், சிறியவர் சேர்க்கையைக் கொள்ளாதவன் மற்றவர்க்கு இன்னாதவற்றைச் சொல்லாதவன் ஆகிய நல் குணங்களைக் கொண்டவனுக்கு மீன் போன்ற கண்களை உடையவளே அறநூல்கள் தேவை இல்லை என்ற பாடலைப் படித்தவுடன் அதில் உள்ள பொருளின் ஆழம் நமக்குப் புரியும்.

chola-flag-2

பொய் பற்றிய அறிவியல் ஆராய்ச்சி
சமீபத்தில் பெனிஸில்வேனியா பல்கலைக் கழகத்தில் டாக்டர் டேனியல் லாங்பெலோ நடத்திய ஆராய்ச்சி ஒன்றில் மனிதர்கள் உண்மை பேசுவதற்காகவே படைக்கப்பட்டவர்கள் என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு நிகழ்வைக் கண்டார். ஒரு மனிதனைப் பொய் பேசுமாறு சொல்லி அவன் மூளையில் என்ன மாறுதல்கள் ஏற்படுகிறது என்பதை ஸ்கேன் செய்து பார்க்கையில் மூளைப் பகுதிகளுக்கு அதிக இரத்தம் செலுத்தப்படுவதோடு அங்கு ரசாயன மாறுதல்கள் ஏற்படுவதை விஞ்ஞானிகள் கண்டு அதிசயித்தனர்! சிவப்பும் மஞ்சளுமுமாக மூளை ஸ்கேனிங் இயந்திரத்தில் பதிவான மூளைப் படலங்களை அவர்கள் கண்டு வியந்து மேலும் அதிக ஆராய்ச்சிகளைச் செய்தனர். மிகவும் சிக்கலான பொய்களைக் கூட ஒருவன் பேசும் போது கண்டுபிடித்து விடலாம் என்பது அவர்களின் ஆய்வின் முடிவு. பொய் சொல்லச் சொல்ல அந்தப் பொய்யே சொன்னவனைச் சுடும் (தன்னஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும் – குறள் 273) என்று அற நூல்கள் சொல்வதை விஞ்ஞான ஆய்வுகளும் இன்று அங்கீகரிக்கின்றன!

இதே போல மாமிசமும் மதுவும் உடலுக்கும் மனதிற்கும் ஏற்படுத்தும் தீங்குகளையும் இன்று மருத்துவ வல்லுநர்கள் திறம்பட எடுத்துரைக்கின்றனர்.ஆக வாழ்வாங்கு வாழ ஆறு குணங்கள் தேவை என்பதை இந்தப் பாடல் எடுத்துரைக்கிறது.தனது பல பாடல்களில் பொய்யை உரைக்காதே என்று அவர் வலியுறுத்திக் கூறுவது அமெரிக்க ஆராய்ச்சியை நினைவுபடுத்தி விஞ்ஞான பூர்வமான வாழ்க்கையை வாழத் தூண்டும் நூல்களின் பெருமை நமக்குப் புலப்படுகிறது!

குபேர பட்டம் பெற வழி!
குபேர பட்டமும் கை கூடும் என்று ஒரு பாடல் வலியுறுத்தும் போது அது எப்படி கை கூடும் என்ற கேள்வி நமக்கு இயல்பாகவே எழும்!. 49ம் பாடல் பதில் கூறுகிறது!

யானை குதிரை பொன் கன்னியே ஆநிரையோடு
ஏனை ஒழிந்த இவை எல்லாம் – ஆன் நெய்யால்
எண்ணன் ஆய் மாதவர்க்கு ஊண் ஈந்தான் வைசிர
வண்ணன் ஆய் வாழ்வான் வகுத்து
வகையறிந்து யானை, குதிரை, பொன், கன்னி,பசு இவற்றையும் தவம் புரிவோர்க்கு பசு நெய்யோடு உணவளிப்பவர் வைசிரவண்ணன் எனும் குபேரனது வாழ்க்கையை அடைவர் என்று கூறுகிறது இந்தப் பாடல். தானம் புரிவோருக்கு தனம் தானே வந்து சேரும் என்பது பொருள்!

((லேடீஸ் ஸ்பெஷல் 2010ஆம் ஆண்டு தீபாவளி மலரில் வெளியான கட்டுரை .))

(This two part article is written by my brother S Nagarajan:Second part will be published tomorrow: swami)