உலக செஸ் சாம்பியன் ஆனந்த்

இந்தியர்கள் கணிதத்தில் வல்லவர்கள். இந்துக்களுடைய எல்லா நூல்களிலும் கோடி ,ஆயிரம் கோடி என்பன சர்வ சாதாரணமாகப் புழங்கும் எண்கள். சிறு குழந்தைகள் சொல்லும் சாதாரண ஸ்லோகங்களிலும் கூட கடவுளை சூர்ய கோடி சமப்ரபா என்று புகழ்வார்கள். வராஹமிஹிரர், ஆர்யபட்டர் எழுதிய வான சாத்திர நூல்களிலும் அதற்கு முந்தைய வேத கால கல்ப சூத்திரங்களிலும் நிறைய கணக்குகள் இருக்கின்றன. வேதத்தில் ஆயிரம் என்ற எண்ணும் அதன் மடங்குகளும் பல இடங்களில் வரும். வள்ளுவரும் கூட தனது குறட் பாக்களில் கோடி என்பதைப் பல இடங்களில் எடுத்தாள்கிறார். இந்த அபார கணிதத் திறன், சதுரங்கம் (செஸ்) என்னும் ஒரு விளையாட்டைக் கண்டுபிடிக்கவும் உதவியது.

சதுரங்கம் என்றால் படையின் நான்கு பிரிவுகள், அதாவது காலாட் படை, யானைப் படை, குதிரைப் படை, தேர்ப் படை. இவர்கள் ராஜா ராணியைக் காப்பாற்றுவார்கள். மந்திரி இவர்களுக்கு பக்க பலமாக இருப்பார். இவர்கள் அனைவரும் காய்களாக சதுரங்க அட்டையில் நகர்த்தப்படும். இதற்கான விதி முறைகளை அறிந்தவர்கள் இதை மணிக் கணக்கில், நாட்கணக்கில் கூட ஆடுவார்கள்.

சதுரங்கம் இந்தியர்களின் கண்டுபிடிப்பு என்பதை உலகமே ஒப்புக் கொள்கிறது. ஒருகாலத்தில் இந்தியர்கள் கொடிகட்டிப் பறந்த இந்த ஆட்டத்தில் பின்னர் ரஷ்யர்கள் கை ஓங்கி நின்றது. சிறிது காலத்துக்கு அமெரிக்கர்களும் சாம்பியன் பட்டத்தை வென்றனர். கடந்த பல ஆண்டுகளாக மீண்டும் இது இந்தியர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. அதிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆனந்த் விஸ்வநாதன் இதில் முன்னிலையில் இருக்கிறார். மீண்டும் ஒரு முறை உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று நம் எல்லோருக்கும் மகிழ்ச்சியையும் பெருமையையும் அளித்திருக்கிறார்.

1500 ஆண்டுகளுக்கு முன்னரே பாரசீகம் (ஈரான்) வழியாக செஸ் மேலை நாடுகளுக்குச் சென்றுவிட்டது. முதலில் ராஜாக்களின் விளையாட்டாக இருந்த இந்த ஆட்டம் பின்னர் எல்லோரும் விளையாடும் ஆட்டமாக மாறிவிட்டது. இந்த விளையாட்டு கண்டுபிடிக்கப் பட்ட கதை மிகவும் சுவையானது; வியப்பானதும் கூட!

இந்தியாவில் அந்தக் காலத்தில் ஒரு மன்னன் இருந்தான். அவனுக்குப் பொழுது போக்குவதற்காக அந்த ஊரில் இருந்த ஒரு கணித மேதை சதுரங்கத்தை உருவாக்கி அதை மன்னனிடம் கொடுத்தார். மன்னனுக்கு மிகவும் மகிழ்ச்சி. அதை விளையாடத் துவங்கியவுடன் நேரம் போவதே தெரியவில்லை. அந்தக் கணித மேதைக்கு பரிசு கொடுக்கா வேண்டும் என்று தோன்றவே, ஐயா, நீங்கள் என்ன கேட்டாலும் தருகிறேன். எவ்வளவு தங்கக் காசுகள் வேண்டும்? என்றார்.

அதற்குப் பதில் கூறிய கணித மேதை ஒன்றும் தெரியாத அப்பாவி போல “இந்த சதுரங்க அட்டையில் 64 சதுரங்கள் இருக்கிறதல்லவா? முதல் சதுரத்தில் ஒரு கோதுமை தானியம் வையுங்கள். பின்னர் ஒவ்வோரு கட்டத்திலும் முந்தியதைப் போல இரண்டு மடங்கு தானியத்தை வையுங்கள் என்றார். முதல் கட்டத்தில் 1, இரண்டாம் கட்டதில் 2, மூன்றாம் கட்டதில் 4, பின்னர் 8, பின்னர் 16, 32, 64,128 இப்படியே 64 கட்டங்களுக்கும் வைத்தால் எனக்குப் போதும்” என்றார்.

மன்னருக்கோ ஒரே சிரிப்பு. பெரிய கணித மேதை என்று நினைத்தேன். சரியான முட்டாள் போல என்று எண்ணி சேவகர்களை அழைத்து, ஒரு கோதுமை மூட்டையைக் கொண்டுவரச் சொன்னார். அவர் கூறிய படியே தானிய மணிகளை வைக்க உத்தரவிட்டார். என்ன ஆச்சரியம். மூட்டை மூட்டையாக கோதுமைகளைக் கொண்டுவந்தபோதும் முதல் 32 கட்டங்களுக்குக் கூட கோதுமை தானியத்தை வைக்க முடியவில்லை.

இதைப் படிப்பவர்களும் ஒரு பேப்ப்ர், பேனாவை வைத்துக்கொண்டோ கால்குலேட்டரை வைத்துக் கொண்டோ கணக்குப் போட்டுப் பார்க்கலாம். ஒவ்வொரு கட்டத்திலும் இரண்டிரண்டு மடங்காக வைத்துக் கொண்டே போனால் 64 ஆவது கட்டத்தை நிரப்பிய பின் அதில் மட்டுமே  9,223,372,036,854,775,808 தானியங்கள் இருக்கும். செஸ் போர்டு முழுதுமுள்ள தானியங்களின் எடை 461,168,602,000 மெட்ரிக் டன்களாக இருக்கும். இதை உயரமாகக் குவித்து வைத்தால் எவரெஸ்ட் சிகரம் மறைந்து விடும். பிறகு மன்னர் தனது அறியாமையையும் கணித மேதையின் புலமையையும் ஒப்புக்கொண்டு அவருக்கு பெரும் பொருட் செல்வத்தைக் கொடுத்து அனுப்பினார்.

1260 ஆம் ஆண்டில் அப்பசித் பேரரசில் (ஈராக்) இருந்த இபின் கல்லிகான் என்பவர் எழுதிய கலைக் களஞ்சியத்தில் இந்தக் கதையை எழுதி இருக்கிறார். ஆனால் இந்திய மன்னரின் பெயரையும் கணித மேதையின் பெயரையும்  திரித்து எழுதியிருக்கிறார்.

சதுரங்கத்தின் ஒரு ஆட்டத்தில் உள்ள காய்கள் நிலையை, இன்னொரு ஆட்டத்தில் காண முடியாது. 64 கட்டங்களிலும் இரு தரப்பிலிருந்து 16+16=32 காய்களை நகர்த்தும் போது அவைகள் கோடிக்கணக்கான நிலைகளில் வர முடியும்.

***********************

பெண்களின் 64 கலைகள்!

Picture: Sixty Four Arts, Orissa Pata Chitra

ச.நாகராஜன்

ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்

ஏய உணர்விக்கும் என் அம்மை- தூய

உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே

இருப்பள் வாராதிங்கு இடர்.

 

எழிலரசிகளாக விளங்கியவர்கள் தொழிலரசிகளாகவும் விளங்கியுள்ளனர். ஆயிரக்கணக்கான பாரதப் பெண்களின் மகிமையைச் சித்தரிக்கும் வரலாற்று நூல்கள் நம்மிடம் இல்லை என்பது தான் பரிதாபம்.

(நம்முடைய மஞ்சளை பேடண்ட் (patent) எடுக்கும் அளவு பிற நாடுகள் உரிமை கோரும் இந்தக் காலத்தில் செகுலர் அரசை நம்பாமல் நமது கலைகளைப் பற்றிய அறிவை நமது பெண்மணிகள் கற்பதோடு அவற்றைப் பரப்ப முன்வருவார்களா? வரவேண்டும்!)

இன்றைய நவீன யுகத்தில் பெண்கள் மிகவும் ஆவலுடன் தேர்ந்தெடுத்து நிபுணத்துவம் பெறும் கலைகள் ஏராளம். ஆனால் இவை எல்லாம் முன்பே நமது பழைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன என்றால் ஆச்சரியமாக இல்லை? அது மட்டுமல்ல, இவற்றில் எப்படி பாண்டித்தியம் பெறுவது என்பதை விளக்கமாகக் கூறும் நூல்கள் சுவடிகளாக ஆயிரக்கணக்கில் உள்ளன.

இப்படி, பெண்களின் கலைகளாக 64 கலைகளை நமது பழைய நூல்கள் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளன. இன்று பெண்கள் ஆர்வம் காட்டுவனவற்றை அவர்கள் ஆங்கில மொழி வாயிலாகக் கற்பதால் எளிதில் புரிந்து கொள்வதற்காக ஆங்கிலத்தில் குறிப்பிடப் புகுந்தால் கீழ்க்கண்டவற்றை உடனே குறிப்பிடலாம்: டான்ஸ் (ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நடனங்கள்), கொண்டை அலங்காரம் உள்ளிட்ட ப்யூடி பார்லர், ஜெம்மாலஜி, ஆர்கிடெக்சர், டெக்னிகல் ஸ்டடீஸ், ஸ்டோரி டெல்லிங், இன்டீரியர் டெகொரேஷன், குக்கிங் வெரைட்டீஸ், கார்டனிங், கால் சென்டர், மேக்-அப் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

லலிதா சஹஸ்ரநாமத்தில் 236-வதாக வரும் நாமமான சதுஸ்சஷ்டி கலாமயி என்ற நாமம் 64 கலைகளின் ரூபமாக இருப்பவள் லலிதாம்பிகை என்று குறிப்பிடுகிறது. ரிக் வேதத்தில் பாஞ்சால மஹரிஷி இந்த 64 கலைகளைப் பற்றி முதன்முதலாகக் குறிப்பிடுகிறார். ஆக உலகின் ஆதி நூலான வேதத்திலேயே 64 கலைகள் குறிப்பிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம்! பெண்களுக்குரிய 64 கலைகளை விரிவாகக் கல்ப சூத்திரம் குறிப்பிட்டுள்ளது. (வாத்ஸாயனர் மஹரிஷி வேறு காமசூத்திரத்தில் பெண்களுக்குரிய 64 கலைகளைப் பட்டியலிட்டுள்ளார்!)

கல்பசூத்திரம் குறிப்பிடும் 64 கலைகள் வருமாறு:-

1) நாட்டியம் 2) ஔசித்யம் 3) ஓவியம் 4) வாஜித்ரம் 5) மந்திரம் 6) தந்திரம் 7) தனவ்ருஷ்டி 8) கலா விஹி 9) சம்ஸ்க்ருத வாணி 10) க்ரியா கல்பம் 11) ஞானம் 12) விஞ்ஞானம் 13) தம்பம் 14) ஜலஸ்தம்பம் 15) கீதம் 16) தாளம் 17) ஆக்ருதி கோபன் 18) ஆராம் ரோபன் 19) காவ்ய சக்தி 20) வக்ரோக்தி 21) நர லக்ஷணம் 22) கஜ பரிட்சை 23) அசுவ பரிட்சை 24) வாஸ்து சுத்தி 25) லகு வ்ருத்தி 26) சகுன விசாரம் 27) தர்மாசாரம் 28) அஞ்சன யோகம் 29) சூர்ண யோகம் 30) க்ருஹி தர்மம் 31) சுப்ரஸாதன் கர்ம 32) சோனா சித்தி 33) வர்ணிக வ்ருத்தி 34) வாக் பாடவ் 35) கர லாகவ் 36) லலித சரண் 37) தைல சுரபீகரண் 38) ப்ருத்யோபசார் 39) கோஹாசார் 40) வியாகரணம் 41) பர நிராகரண் 42) வீணா நாதம் 43) விதண்டாவாதம் 44) அங்கஸ்திதி 45) ஜனாசார் 46) கும்ப ப்ரம 47) சாரி ஸ்ரமம் 48)) ரத்னமணி பேதம் 49) லிபி பரிச்சேதம் 50) வைக்ரியா 51) காமா விஷ்கரண் 52) ரந்தன் 53)கேஸ பந்தன் 54) ஷாலி கண்டன் 55) முக மண்டன் 56) கதா கதன் 57) குஸ¤ம க்ரந்தன் 58) வர வேஷ 59) சர்வ பாஷா விசேஷ 60) வாணிஜ்ய விதி 61) போஜ்ய விதி 62) அபிதான பரிஞான் 63) ஆபூஷண தாரண் 64) அந்த்யாக்ஷ¡ரிகா

இவற்றில் பொருள் விளங்காமல் இருக்கும் கலைகளைப் பற்றி மட்டும் இங்கு ஓரிரு வரிகளில் அர்த்தத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

ஔசித்யம் என்றால் சரியானவற்றை, தகுந்தவற்றைத் தேர்ந்தெடுக்கும் அறிவு . இந்த ஒரு கலையிலேயே ஷாப்பிங்கில் பொருள்களைத் தேர்ந்தெடுப்பது முதல் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது வரை எல்லாமே அடங்கி விடும்! வாஜித்ரம் என்றால் வாத்ய யந்திரங்களைப் பற்றிய அறிவாகும் க்ரியா கல்பம் என்றால் இன்ன வியாதி தான் வந்திருக்கிறது என்று முடிவாக நிர்ணயம் செய்வதற்கான வழி முறைகள் பற்றிய அறிவு. ஆக்ருதி கோபன் என்றால் முக பாவங்களை மறைத்தல். ஆராம் ரோபன் என்றால் நந்தவனம் தோட்டம் உபவனம் ஆகியவற்றை உருவாக்கும் அறிவு. நர லக்ஷணம் என்றால் ஆண்கள் மற்றும் பெண்களின் சாமுத்ரிகா லக்ஷணத்தைப் பற்றிய அறிவு.

கஜ பரிட்சை என்றால் எட்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ள யானைகளைப் பற்றிய அறிவு. அசுவ பரிட்சை என்றால் பத்து வகையான குதிரைகளைப் பற்றிய அறிவு. வாஸ்து சுத்தி என்றால் கட்டிடக் கலை பற்றிய முழு அறிவு. லகு வ்ருத்தி என்றால் சிறியதாக இருப்பதை பெரியதாக அபிவிருந்தி செய்யும் கலை. சகுன விசாரம் என்றால் பட்சிகள் மற்றும் இதர வகையிலான சகுனங்களை அறிந்து காரியம் வெற்றி பெறுமா எனக் கூறும் அறிவு. சூர்ண யோகம் என்றால் நல்ல மணமுள்ள திரவியங்களைக் கலக்கும் கலை.

வர்ணிக வ்ருத்தி என்றால் குணங்களை விவரித்துச் சொல்லப்படும் பெரிய கதைகளைச் சொல்லும் கலை, வாக் பாடவ் என்றால் வாக்கு சாதுரியம், பேச்சுக்கலை கர லாகவ் என்றால் கைகள் மூலம் செய்யும் தந்திரங்கள் மற்றும் கலைகள்! லலித சரண் என்றால் சிருங்கார ரஸத்தை வெளிப்படுத்தும் அங்க அசைவுகள் (கோரோகிராபி). தைல சுரபீகரண் என்றால் எட்டு விதமான எண்ணெய்களைத் தயாரிக்கும் விதம், அதை மஸாஜ் உள்ளிட்ட வகைகளில் பயன்படுத்தும் அறிவு. ப்ருத்யோபசார் என்றால் சிருஷ்டியில் உள்ள ஜட சேதனங்களுக்கான சேவை பற்றிய கலை. கோஹசார் என்றால் இல்லத்தரசிகள் இல்லங்களை எப்படி நடத்த வேண்டும் என்பது பற்றிய கலை.

வியாகரணம் என்றால் இலக்கணம் கும்ப ப்ரம என்றால் தங்கம் போலவே தோற்றமளிக்கும் போலி தங்கத்தைத் தயாரிக்கும் அறிவு. ரத்னமணி பேதம் என்றால் ரத்னங்களின் பேதங்களை அறிவது அதை பரிட்சை செய்து பார்ப்பது உள்ளிட்ட நவரத்தினங்களைப் பற்றிய அறிவு. லிபி பரிச்சேதம் என்றால் எழுத்துக்களை அழகுற எழுதும் பல்வேறு முறைகள். காமா விஷ்கரண் என்றால் ஊடலும் கூடலும் மற்றும் இதர தாம்பத்ய விஷயங்கள் பற்றிய அறிவு.

ரந்தன் என்றால் உணவு தயாரிக்கும் கலை. கேஸ பந்தன் என்றால் கேஸப் பராமரிப்பு, கொண்டைகள் போடும் விதம் உள்ளிட்ட கேஸ சம்பந்தமான முழு அறிவு. ஷாலி கண்டன் என்றால் வசந்த காலத்தில் நடைபெறும் பெரும் கலைவிழா நடத்தும் அறிவு. கதா கதன் என்றால் கதை சொல்லும் திறமை. இது ஒரு பிரம்மாண்டமான கலை. வர வேஷ என்றால் பதி (கணவன்) போல வேஷம் போடுதல். சர்வ பாஷா விசேஷ என்றால் பல்வேறு மொழிகளில் நிபுணத்துவம் பெறுதல்.

வாணிஜ்ய விதி என்றால் அனைத்து வியாபாரங்களையும் செய்யும் திறன். அபிதான பரிஞான் என்றால் அகராதியில் உள்ளவை அனைத்தையும் அறிவது. ஆபூஷண தாரண் என்றால் ஆபரணங்களை அலங்காரமாக அணிந்து கொள்ளும் கலை. அந்த்யாக்ஷ¡ரிகா என்றால் உடனடியாக நினைவிலிருந்து கேட்ட பாடலைப் பாடும் திறன்.

மேலே உள்ள பட்டியலை ஒரு தரம் படித்தாலேயே நம் பண்டைய பெண்மணிகள் எதிலெல்லாம் சிறந்து விளங்கினார்கள் என்பது தெரிய வரும். அவர்கள் தொடாத துறை இல்லை; வெல்லாத விஷயம் இல்லை. எழிலரசிகளாக விளங்கியவர்கள் தொழிலரசிகளாகவும் விளங்கியுள்ளனர். ஆயிரக்கணக்கான பாரதப் பெண்களின் மகிமையைச் சித்தரிக்கும் வரலாற்று நூல்கள் நம்மிடம் இல்லை என்பது தான் பரிதாபம்.

சரஸ்வதி மஹால் உள்ளிட்ட பல்வேறு உலக நூலகங்களில் அபார அறிவு தரும் ஏராளமான நமது நூல்கள் சுவடிகளாக உள்ளன. ஒவ்வொரு ஊரிலும் பெண்கள் இணைந்து ஏற்படுத்திக் கொள்ளும் ஒவ்வொரு பெண் குழுவும் ஒரு சுவடி நூலைப் பதிப்பு நூலாக வெளியிடுவது என்று முடிவு செய்தால் புராதன கலை அறிவு இன்றைய 55 கோடி பெண்களை தேசம் முழுவதும் சென்று சேரும். இப்படிச் செய்யவில்லை என்றால் மஞ்சளை அமெரிக்கா பேடண்ட் எடுக்க முயன்ற கதை போல அனைத்து அறிவும் சுவடிகள் உள்ள அந்தந்தநாடுகள் உரிமை கொண்டாடி பேடண்ட் எடுக்கும் நிலை விரைவில் ஏற்படும்.
ஆகவே தமிழ் பெண்மணிகள் சேர்வார்களா? சேர்ந்து செய்வார்களா? சேர வேண்டும்! செய்ய வேண்டும்!!

 

 

இந்திய அதிசயம்: ஆலமரம்

அலெக்ஸண்டரை வியப்பில் ஆழ்த்திய மரம்

உபநிஷத ரிஷிகள், மாணவர்களுக்கு செய்முறைப் பயிற்சி கொடுக்க பயன்படுத்திய மரம்

இந்தியாவின் தேசிய மரம்

தமிழ், சம்ஸ்கிருத கவிஞர்கள் பாடிய மரம்

சால்மான் ருஷ்டி, சதே, டேனியல் டீபோ கதைகளில் வரும் மரம்

அங்கோர் வட் கோவிலுக்கு பெயர் கொடுத்த மரம்

பனியா என்ற சொல்லை ஆங்கில அகராதியில் நுழைத்த மரம்

பகவத் கீதையில் கண்ணன் சொன்ன மரம்

சிவன் உபதேசம் செய்த மரம்

கண்ணன் இலையில் மிதந்த மரம்

கின்னஸ் நூலில் புகழ் அடைந்த மரம்

அமெரிக்கா வரை சென்ற மரம்

வட சாவித்திரி விரதத்தில் வணங்கப்படும் மரம்

தமிழ் பழமொழிகளில் இடம்பெற்ற மரம்

தமிழ் நாட்டுக் கோவில்கள் ஆறில் தல விருட்சம் ஆன மரம்

 

உலகம் புகழும் இந்த இந்திய அதிசயம் உபநிஷத ரிஷிகள காலம் முதல் இன்று திரைப் படப் பாடல்கள் வரை மனிதனின் சிந்த்னையைத் தூண்டி வருகிறது. ஆல் போல் தழைத்து அருகு போல வேரூன்ற வேண்டும் என்று பெரியோர்கள் வாழ்த்துவதைக் கேட்கிறோம்.

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்று ஆலமரமும் வேல மரமும் புகழப்படுகின்றன. (நாலும் இரண்டும்=வெண்பா, குறள் பாக்கள் வகை).

தமிழ்நாட்டிலும் குஜராத்திலும் பல ஊர்ப்பெயர்களிலும் (வடோதரா, குஜராத்) ஆல மரம் மணம் கமழும். தமிழ்நாட்டில் ஆறு பெரிய கோவில்களில் இது ஸ்தல விருட்சம் (மரம்) ஆக திகழ்கிறது. ஆலங்காடு, திரு ஆலம்பொழில், திரு அன்பிலாந்துறை, திரு மெய்யம், திருப் பழவூர், திரு வில்லிப் புத்தூர்.

அங்கோர்வட் என்னும் கம்போடிய நாட்டு ஆலயம் உலக அதிசயங்களில் ஒன்று. அதன் பெயரில் உள்ள வட் என்பது “வட” என்ற சம்ஸ்கிருத சொல்லின் சுருக்கம் ஆகும். “வட” என்றால் ஆல மரம் என்பது பொருள்.

ஆண்டுதோறும் கோடைகால (ஆடி) பவுர்ணமியில் பெண்கள் அனுஷ்டிக்கும் வட சாவித்திரி விரத நாளில் ஆலமரத்துக்கு பூஜை நடக்கும். சாவித்திரியை வழிபடும் நாள் இது.

பஞ்சதந்திரக் கதைகளில் விஷ்ணு சர்மன் இந்த மரத்தை வானளாவப் புகழ்கிறான். மற்ற மரங்கள் பூமிக்குப் பாரமே என்பான். பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் வாழ்வளிக்கும், மனிதர்களுக்கு நிழல் அளிக்கும் இந்த மரம் மகிழ்ச்சிக் கடலின் இருப்பிடம் என்பான்.

“Deer recline in its shade;

Birds in multitude gather to roost

Darkening its dark-green canopy of leaves;

Troops of monkeys cling to the trunk;

While hollows hum with insect-throngs

Flowers are boldly kissed by honey-bees;

O! What happiness its every limb showers

An assemblage of various creatures;

Such a tree deserves all praise,

Others only burden the earth.”

 

ஆங்கிலக் கவிஞன் சதேயும் இதை ஆமோதிப்பான். நாலடியாரிலும் வெற்றி வேர்க்கையிலும் நமக்கு அறத்தைப் போதிக்கவும் இதுதான் உதவியது. கம்ப ராமாயணத்திலும், சிந்தாமணிச் செய்யுளிலும், காளிதாசன் காவியங்களிலும் இடம் பெறுகிறது.

“It was a godly sight to see

The venerable tree

For over the lawn, irregularly spread

Fifty straight columns propt its lofty heads

And many a long depending shoot

Seeking to strike a root

Straight like a plummet grew towards the ground

So like a temple did it seem that there

A pious hearts first, impulse would be prayer….”

எப்படி வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல கட்டிடங்களுக்கு அடியில் வேரை நுழைத்து ஆலமரம் அந்தக் கட்டிடங்களின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காணவைக்கிறதோ அது போல மன்னன் அஜன் மனதில் கவலைகள் நுழைந்தன என்று கவிபாடுவான் உலகப் புகழ் காளிதாசன்.

ஆலின் கீழ் அமர்ந்து பேசா மூர்த்தியாக சிவ பெருமான், தட்சிணாமுர்த்தி வடிவில், மவுன உபதேசம் செய்த மரம். கண்ணன் ஆலின் இலையில் மிதந்து பெருமை ஏற்றிய மரமும் இதுதான். ஆதிகாலத்தில் கோவில்கள் அனைத்தும் மரத்தின் கீழ்தான் இருந்தன. குறிப்பாக ஆலமரத்தின் கீழ் கோவில் கட்டினர். ஊர் மன்றம் நடத்தினர். விழாக்கள் நடத்தினர்.

அலெக்ஸாண்டர் இந்த மரத்தைக் கண்டு வியந்ததையும் 7000 படை வீரர்களுடன் முகாம் இட்டதையும் கிரேக்க நாட்டு ஆசிரியர்கள நமக்கு எழுதிவைத்திருக்கிறார்கள்.

சாந்தோக்கிய உபநிடதத்தில் ஸ்வேதகேது என்ற இளைஞனுக்கு அவன் தந்தை பல விஞ்ஞான சோதனைகள் மூலம் இறை ஞானம் அளிக்கிறார். அதில் ஒரு செய்முறைப் பயிற்சி ஆல மரம் தொடர்புடையது.

“ மகனே அதோ அந்த ஆல மரத்திலிருந்து ஒரு பழம் பறித்து வா.

“இதோ, கொண்டுவந்துவிட்டேன், தந்தையே

“மகனே அதைப் பிரித்து உள்ளே பார்,

தந்தையே, மிக மிகச் சிறிய விதைகள் இருக்கின்றன

மகனே அதில் ஒருவிதையை எடுத்து பிரித்துப் பார்.

தந்தையே, பிரித்துவிட்டேன்.ஒன்றுமே தெரியவில்லையே.

பார்த்தாயா, ஒன்றுமே கண்ணுக்குக் தெரியாத அந்த ஒன்றிலிருந்துதான் இந்த பிரம்மாண்டமான ஆலமரம் உருவாகி இருக்கிறது. அதுதான் பிரம்மம். அது வேறு யாரும் இல்லை. நீயேதான்.(உன்னையே நீ அறிவாய்).

ஆலமரக்குச்சிகள் பல் தேய்க்க உதவும். அதன் பட்டைகளும், பாலும் பழமும் மருதுவப் பயன் கொண்டவை.

அஸ்வத்தாமவுக்கு பாண்டவர்களைப் படுகொலை செய்யும் யோசனை தோன்றியதும் ஆல மரத்துகடியில்தான். இரவு நேரத்தில் காகங்கள் ஆந்தைகளைத் தாக்கியதைப் பார்த்தவுடன் அதே போல இரவு நேரத்தில் பாண்டவர்கள் முகாமுக்குள் சென்று படுகொலைகள் செய்கிறான்.

அதே ஆலமரத்தை மும்மூர்த்திகளின் வடிவாக இந்துக்கள் வணங்குவர். பிரம்ம, விஷ்ணு, சிவன் அந்த மரத்தின் வேர், பட்டை, கிளைகளில் இருப்பதாக ஐதீகம்.

பனியா என்ற சொல்லும், பானியன் ட்ரீ என்ற சொல்லும் ஆங்கில அகராதியில் உண்டு. அந்தக் காலத்தில் வியாபாரிகள் (பனியாக்கள்) இம்மரத்தின் கீழ் இருந்து வணிகம் செய்ததை வைத்து மரத்துக்கு பானியன் ட்ரீBanyan Tree என்ற ஆங்கிலப் பெயர் வந்தது.

தாவர இயல் ரீதியில் அரச மரம் (அஸ்வத்த), அத்தி மரம், ஆல மரம், உடும்பரா ஆகியன மோரேஸி Moraceae என்னும் குடும்பத்தைச் சேர்ந்தன. இவை அனைத்தும் பைகஸ் Ficus என்னும் பெயருடன் துவங்கும். இந்துக்கள் இதை அந்தக் காலத்திலேயெ அறிவர். இவை அனைத்திலும் இறைவன் உறைவதை அறிந்து விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் கூட ஏற்றிவிட்டனர்.(ந்யக்ரோத=ஆலமரம், அஸ்வத்த=அரச மரம், உடும்பர= அத்தி வகை, யமனுக்குரிய மரம், எமனின் மற்றொரு பெயர் அவுதும்பரன்)

உலகப் புகழ்பெற்ற ஆல மரங்கள்

வெளிநாட்டினர் இந்தமரங்களை அமெரிக்கா, ஸ்பெயின் ஆகிய இடங்களில் நட்டு அவை மிகவும் பெரிதாக வளர்ந்துவிட்டன. அமெரிக்காவில் ஹவாய் திவிலும், ப்ளோரிடா மநிலத்திலும் ஆல மரங்கள் உண்டு.

ஆயினும் சென்னை அடையாறு பிரம்ம ஞான சபை வளாக ஆலமரம், ஆந்திர கதிரி திம்மம்மா ஆல மரம், உலகப் புகழ் கல்கத்தா தாவரவியல் தோட்டத்திலுள்ள மாபெரும் ஆலமரம், பெங்களுருக்கு அருகிலுள்ள மரம், குஜராத்தில் இருக்கும் கபீர் வட், அண்மைக் காலத்தில் கண்டு பிடிக்கப்பட்ட பஞ்சாப் பதேகார் மாவட்ட ஆல மரம்– நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக இருக்கின்றன. ஆயிரக் கணக்கான விழுதுகளுடன் இன்னும் வளருகின்றன. ஒரே நேரத்தில் 3000 முதல் 10000 பேர் வரை இவைகளின் கீழ் நிழலில் தங்கி இளைப்பாறலாம். இந்த மரங்களை அழியாமல் காப்பதும் போற்றி வளர்ப்பதும் நம் கடமை.

பஞ்சாபில் கட்டி சோலன் கிராமத்தில் இருக்கும் மாபெரும் ஆலமரத்தின் குச்சிகளை அடுப்பெரிக்க விறகுக்காக கூட மக்கள் எடுக்கமாட்டார்கள். அதனால் குடும்பத்துக்கே ஆபத்துவரும் என்று பயப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கான பறவைகளை  ஆனந்தப் படுத்துமால மரத்தை துன்புறுத்த யாருக்கு மனம் வரும்?

“தெள்ளிய ஆலின் சிறுபழத் தொரு விதை

தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்

நுண்ணிதே யாயினும் அண்ணல் யானை

அணிதேர் புரவி ஆட்பெரும் படையொடு

மன்னக் கிருக்க நிழலாகும்மே” –(வெற்றிவேர்க்கை)

பொருள்: சிறிய மீனின் முட்டையை விடச் சிறியதான ஆல மர விதையானது நாற்பெரும் படையொடு வரும் மன்னரும் தங்க நிழல் தரும். அதுபோல மிகச் சிறிய செல்வமுடைய மேன் மக்கள் பிறருக்குப் பெரிதும் பயன்பட வாழ்வார்கள்..

அத்தி, ஆல் அரசு ஆகிய மரங்கள் எல்லாவற்றிலும் பூக்கள் வெளியே தெரியாமலே காய்கள் உருவாவதால் பூவாது காக்கும் மரங்கள் (கோளி ஆலம்) என்று சொல்லி இவைகளையும் உவமைக்குப் பயன்படுத்தினர் தமிழ் புலவர்கள்.

நாலடியார் என்னும் அற நூல் பல இடங்களில் ஆல மர உதாரணத்தைக் காட்டுகிறது. ஆலம் விதை சிறிதானாலும் மரம் பெரிதாவது போல ஒருவனின் அறச் செயல் பயன் தரும். இன்னும் ஒரு இடத்தில் ஆலமரத்தைக் கறையான்கள் அரித்தாலும் அதன் விழுதுகள் அதைத் தாங்கி நிற்பது போல தந்தையை மகன் காப்பாற்றவேண்டும் என்று சொல்லும்.

மரம் வளர்த்தால், மனித குலம் தழைக்கும்.

FAMOUS BANYAN TREES

LARGEST TREE: The latest discovery of a huge banyan tree in Fategarh district of Punjab surprised all nature lovers when they came to know its dimensions. The tree is in a village called Choti Kalan and the tree is called Kaya Kalpa Vriksha. It occupies four acres. A temple and a rest house have been constructed under the tree. Punjab Government has taken steps to preserve it as a bio diversity area. Though private lands surround the tree, people believe that stopping the growth of the tree will bring bad luck. The people are so scared they don’t even collect the fallen twigs for fire wood.

Great Banyan Tree- Kolkatta Botanical Gardens-250 year old-occupy four acres-3300 aerial roots

Thimmamma Marimanu, Near Kadiri,A.P-1100 aerial roots- said to be 600 year old-Thimmamma committed SATI and a banyan tree came in that place. Thousands of people go there on Shivratri day every year to worship Thimmamma.

Adyar Theosophcal Society Tree- Chennai -200 year old-3000 people can stand in its shade.

Kabir Vad tree, Gujarat-300 year old tree.

Doda lara mara- near Bangalore- spread over three acres-

William Owen Smith Banyan tree-Hawai,USA (Banyan trees were brought to USA by nature lovers)

************************************

ஷ்ரோடிங்கரின் பூனை விளக்கும் பிரம்ம ரகசியம்!

 

யாராலும் விளக்க முடியாத பிரம்ம ரகசியத்தை வியன்னா விஞ்ஞானி ஷ்ரோடிங்கரின் மாயப் பூனை விளக்குவது ஒரு விஞ்ஞான – மெய்ஞான விந்தை அல்லவா! பிரம்ம ரகசியத்தை விளங்கிக் கொள்ள கட்டுரையைப் படியுங்கள்!

விஞ்ஞானம் விளக்கும் மெய்ஞானம்!

 

ஷ்ரோடிங்கரின் பூனை விளக்கும் பிரம்ம ரகசியம்!

——————————————————————— 

ச.நாகராஜன்

காலம் காலமாக ஹிந்து மதத்தின் வேத உபநிடதங்கள் கூறும் பிரம்மம் பற்றிய உண்மையை அறிந்து கொள்ள மாபெரும் அறிஞர்களே சிரமப்படுகின்றனர்.

 

ஆதி சங்கரர் பிரம்மம் மட்டுமே சத்யம் மற்றது மாயை (ஜகம் மித்யா) என்று கூறுகின்ற போது அதை உணர்ந்து கொள்ள சிரமப்படுகிறோம். நாம் காண்கின்ற அனைத்துமே பொய்யா என்ற கேள்வி, மகாகவி பாரதியார் உள்ளிட்ட நம் அனைவருக்குமே எழுவது இயல்பு.(நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந்தானோ? பல தோற்ற மயக்கங்களோ?-பாரதியார் -பொய்யோ மெய்யோ கவிதையில்)

 

அது மட்டுமின்றி அணோரணீயான் மஹதோ மஹீயான் – அது பெரிதுக்கும் பெரிது; அணுவுக்கும் அணு; மிக மிக தூரத்தில் உள்ளது; மிக மிக அருகிலேயே உள்ளது என்று விளக்கப்படும் போது இரண்டு நேர் எதிர் துருவங்கள் எப்படி ஒன்றாக இணைக்கப்பட்டு விளக்கப்பட முடிகிறது என்று அதிசயிக்கிறோம்;புரியாமல் தவிக்கிறோம்.

அர்ஜுனனக்கு கிருஷ்ணன் பகவத்கீதையில்,” சாஸ்வதமாயுள்ள சத்யத்தில் நிலைத்திரு;புவியில் காணும் எதிர்நிலைகளுக்கு அப்பால்!” என்று கூறும் போதும் இதைச் சரியாகப்புரிந்து கொள்ள முடியாமல் வியப்பும் வேதனையும் தான் மிஞ்சுகிறது.

 

இந்த வியப்பும் வேதனையும் விஞ்ஞானிகளுக்கும் ஹிந்து தத்துவத்தைப் பொருத்த மட்டில் உண்டு. அளக்க முடியாத அதன் ஆழத்தை அளந்தவர்கள் வெகு சிலரே!

 

வியன்னாவைச் சேர்ந்த எட்வின் ஷ்ரோடிங்கர் (Austrian Physicist Schrodinger) நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி (பிறப்பு 12-8-1987 மரணம் 4-1-1961). ஹிந்து தத்துவத்தின் பால் ஈர்க்கப்பட்டு அதன் கருத்துகளோடு ஒன்றியவர்!  ஐன்ஸ்டீனுடன் தன் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டே இருந்த ஷ்ரோடிங்கர் 1935ம் ஆண்டு சிந்தனை சோதனை (Thought experiment) ஒன்றை அறிவித்தார். அவரது சிந்தனையில் இடம் பெற்றது ஒரு பூனை!

 

அந்தப் பூனை பிரம்ம ரகசியத்தை விஞ்ஞானபூர்வமாக விளக்கி உலகை பிரமிக்க வைத்தது!

 

அவரது சிந்தனை சோதனை இது தான்:-

இரு பகுதிகள் உள்ள ஒரு இரும்புக் கூண்டிற்குள் ஒரு பகுதியில் ஒரு உயிருள்ள பூனை இருக்கிறது.அதன் அடுத்த பகுதியை இரும்புக் கூண்டில் இருக்கும் பூனையால் ஒன்றும் செய்ய முடியாது.அந்த அடுத்த பகுதியில் ஒரு ரேடியோஆக்டிவ் பொருள் உள்ளது.இந்த ரேடியோ ஆக்டிவ் பொருள் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் செயல்படலாம் அல்லது செயல்படாமலும் போகலாம் ஐம்பதுக்கு ஐம்பது என்ற விகிதத்தில் அதில் உள்ள ஒரு அணு அழிந்து போகலாம் அல்லது அழியாமலும் இருக்கலாம். அந்த கூண்டில் இருக்கும் ஒரு குழாய் அணு அழிவு ஏற்பட்டால் செயல்பட்டு ஒரு சுத்தியலை செயல்பட வைக்கும். இந்த சுத்தியல் ஒரு சிறிய குடுவையில் உள்ள ஹைட்ரோசியானிக் அமிலத்தைக் கசிய வைக்கும். அவ்வளவு தான், பூனை அணுமயமாக ஆகி விடும்.

 

ஒரு மணி நேரத்திற்கு இந்த அமைப்பு அப்படியே இருப்பதாக வைத்துக் கொள்வோம். அணு அழிவு இல்லை என்றால் பூனை உயிருடன் அப்படியே இருக்கும். அணு அழிவு ஏற்பட்டால் பூனை இறந்து சிதறுண்டு அணுமயமாக ஆகியிருக்கும்.

 

இப்போது நம் முன் உள்ள கேள்வி பூனை உயிருடன் இருக்கிறதா அல்லது இறந்து பட்டதா!

 

ஷ்ரோடிங்கர் முரண்பாடு என்ற இந்த ‘சிந்தனை சோதனை சித்தாந்தம்’ ஒரு பெரிய உண்மையை விளக்குகிறது.

ஐம்பதுக்கு ஐம்பது என்ற விகிதத்தில் வாய்ப்பு இருப்பதால் பூனை இறந்தது என்று சொல்லவும் சொல்லலாம்; அது இறக்கவில்லை என்றும் சொல்லலாம்.

 

எல்லாம் பார்ப்பவர் பார்வையில் இருக்கிறது.

பிரம்மமும் அப்படித்தான். நோக்குபவர் எண்ணத்தில் தான் அது இருக்கிறது.

 

மாயையைக் கடந்த நிலையில் பிரம்மம் சத்யம்; ஜகம் மித்! மாயை இருக்கும் சூழ்நிலையில் கண் எதிரே ஜகம் உள்ளிட்ட அனைத்தும் நிஜம்!

 

க்வாண்டம் பிஸிக்ஸ்(quantum physics) என்றைய இன்றைய நவீன இயற்பியல் சப்-அடாமிக் (Sub atomic) மட்டத்தில் மேட்டர் (matter) எனப்படும் பொருளை இரு நிலைகளைலும் கூறலாம் என்று அதிசயக்கவைக்கும் வண்ணம் அறிவிக்கிறது. அதாவது பொருளானது அழிக்கப்படக் கூடியது ; அழிக்கப்பட முடியாதது! அது தொடர்ந்து இருப்பது, தொடராமல் விட்டு விட்டு இருப்பது! அது துகளாக இருக்கக் கூடியது, அலையாக இருக்கக் கூடியது!

 

(Matter is both destructible and indestructible, both continuous and also discontinuous, matter is both particle and also wave)

 

ஒரு இடத்தில் அணுத்துகள் இருக்குமா இருக்காதா என்பதை விளக்கப் புகுந்த ராபர்ட் ஓப்பன்ஹீமர் (இவர் அணுகுண்டு விஞ்ஞானி என்பதை அனைவரும் அறிவர்), “அணுத்துகள் ஒரே இடத்தில் இருக்குமா என்று கேட்டால் இல்லை என்றே நாம் சொல்ல வேண்டும்; எலக்ட்ரானின் நிலையானது, நேரம் மாறுபடும் போது மாறுமா என்று  கேட்டால் இல்லை என்றே சொல்ல வேண்டும்; எலக்ட்ரான் ஒரே இடத்தில் இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல வேண்டும்; எலக்ட்ரான் சலனத்துடன் இயங்குகிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்” என்கிறார்

 

(‘If we ask whether the position of the particle remains the same, we must say no, if we ask whether the electron’s position change with time, we must say no, if we ask whether the electron is at rest, we must say no, if we ask whether it is in motion, we must say no.’ – Robert Oppenheimer)

 

இதே வார்த்தைகளை ஈஸாவாஸ்ய உபநிடதம் (ஐந்தாம் செய்யுள்) கூறுகிறது!!

 

“தத் தூரே; தத் அந்திகே; தத் அந்தரஸ்ய சர்வஸ்ய; தத் சர்வஸ்ய பாஹ்யதே”

 

பிரம்மத்தின் நிலையை இந்த விளக்கங்ளால் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா, இப்போது!

 

அது எங்கும் பரவி உள்ளது. அண்டத்தில் உள்ளது; பிண்டத்திலும் உள்ளது. அனைத்திலும் உள்ளது. உலகம் பிரம்மத்தின் பிரதிபலிப்பு!

“பார்ப்பவர் அதை உணர்வர்”! பார்ப்பவர் பார்வையைப் பொறுத்து அது இருப்பதும் இல்லாததும்- சத்யமும் மாயையும் – அமைகிறது.

இதையே ஆதி சங்கரர் மிக அழகாக விளக்கி அருளியுள்ளார். நான் மற்றும் நான் இல்லை என்ற இரு நிலைகளும் ஒன்றுக்கொன்று எதிரான நிலைகள். பார்ப்பவர் மற்றும் பார்க்கப்படும் பொருள் (subject and object) ஆகிய இரு நிலைகளும் வெளிச்சமும் இருளும் போன்றவை. வெளிச்சத்தை எடுத்துக் கொண்டு போய் யாராலாவது இருளை விளக்க முடியுமா? ஒரு விளக்கை எரிய விடும் போதே இருள் அகல்கிறது அல்லவா? பிரம்மத்தையும் இப்படித் தான் மனித நிலையில் இருந்து கொண்டு விளக்க முடியாது. அதை முற்றிலும் விளங்கிக் கொள்ளும் நிலையின் போது நாம் பிரம்மமாக ஆகி விடுகிறோம். ஆகவே தான் கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்!

 

ஐன்ஸ்டீனுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் ஷ்ரோடிங்கர் கிறிஸ்தவம் காட்டும் தந்தை மற்றும் ஏசு கிறிஸ்து அவரது புதல்வர் என்ற கருத்தைத் தன்னால் ஏற்க முடியவில்லை என்று எழுதினார். ஆனால் வேதாந்தம் விளக்கும் ஒரே பிரம்மம் தான் சத்யம் என்பதையும் அது எல்லோருக்குள்ளும் பிரகாசிக்கும் ஐக்கியத்தன்மையையும் தன்னால் ஏற்க முடிகிறது என்றார்.

 

ஒரே ஆன்மா எல்லோருக்குள்ளும் பிரகாசிக்கும் தன்மையை விளக்கும் வேதாந்தத்தை ஷ்ரோடிங்கராலும் நவீன க்வாண்டம் இயற்பியலாலும் நம்மால் நன்கு விளங்கிக் கொள்ள முடிகிறது!

மாயையை விளக்கும் ஷ்ரோடிங்கரின் பூனை உண்மையில் ஒரு மாயப் பூனை தான்!

This article was written by my brother S Nagarajan.

******************

 

ஒன்றுக்கும் உதவாத உதிய மரமே

(தினமணி, 29-11-1977)

தஞ்சை, நவ.27 (1977): தஞ்சை மாவட்டத்தில் புயல் வீசி மரங்கள் சாய்ந்தன. இவைகள் சாலைப் போக்குவரத்தைப் பாதித்ததால், சாலையின் குறுக்கே விழுந்து கிடக்கும் மரங்களை பொது மக்கள் இலவசமாக எடுத்துச் செல்லலாம் என்று கலெக்டர் அறிவித்தார். உடனே ஏழை எளிய மக்கள் அவைகளை வெட்டி வீட்டுக்குக் கொண்டு சென்றனர். சில அரசு ஊழியர்கள் பணி முடிந்த்ததும் ஒரே வெட்டில் வெட்டக் கூடிய உதிய மரங்களை வெட்டி, சைக்கிளின் பின்னால் பெரிய மரங்களாக வைத்துச் சென்றனர். அவர்களை சட்ட மன்ற கொறடா துரை கோவிந்தராஜன் வழிமறித்து ஏன் பெரிய மரங்களை கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டார். அவர்கள் ,”கலெக்டர் அறிவித்ததால் நாங்கள் எடுத்துச் செல்கிறோம்” என்று பதில் சொன்னார்கள். உடனே கொறடா, புளிய மரக் கிளைகளை எடுத்துச் சென்றாலும் அடுப்பு எரிக்க உதவும். இவைகள் உதிய மரங்கள். அடுப்பில் வைதாலும் எரியாது, புகை தான் வரும், ஒன்றுக்கும் உபயோகம் இல்லாதவர்களை “ ஒன்றுக்கும் உதவாத உதிய மரமே” என்று கிராமங்களில் சொல்லுவதை நீங்கள் கேட்டதில்லையா என்றவுடன் அவர்கள் வெட்கமடைந்து அந்த பெரிய மரங்களை சாலை ஓரமாக போட்டுவிட்டுச் சென்றனர். (தினமணி செய்தியின் சுருக்கம்).

உதிய மரமும் ஒதிய மரமும் ஒன்றும் என்று சொல்லுவார்கள். ஆனால் இரண்டுக்கும் வெவ்வேறு தாவரவியல் பெயர்கள் கொடுக்கப்பட்டிருப்பதால் அது சரியா என்று சொல்ல முடியவில்லை.

உதிய மரம் உத்தரம் செய்யக்கூட பயன்படாது என்று கிராமப்புறத்தில் பழமொழி உள்ளத்.. எதற்கும் ஆகாத ஆட்களை, ஆள் உதுயமரம் போல வளந்திருக்கானே தவிர ஒரு பிரயோஜனமும் இல்லை என்று அப்பா, அம்மாக்கள் அலுத்துக்கொள்வதையும் பார்க்கலாம்.

ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ? (பழமொழி)

 

உடம்பைக் கடம்பால் அடி

படம்: மதுரையின் ஸ்தல விருட்சமான கடம்ப மரம்

கடம்ப மரம் உடலுக்கு நன்மை பயக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. உடம்பைக் கடம்பால அடி என்ற பழமொழி இதற்குச் சான்று. மதுரை நகரத்தைக் கட்டுவதற்கு முன் அந்த இடம் ஒரு பெரிய கடம்பவனக் காடாக இருந்தது. ஒரு நாள் இரவில் தனஞ்செயன் என்ற வணிகன் அக்காட்டு வழியே செல்கையில் இரவு நேரத்தில் அதிசய ஒளியைக் கண்டான். இந்திராதி தேவர்கள் காட்டின் நடுவே இருந்த சிவலிங்கத்துக்குப் பூஜை செய்வதைப் பார்த்து மறுநாள் பாண்டிய மன்னனுக்கு அறிவிக்கவே அங்கே கோவில் கட்டினான் என்று ஸ்தல புராணம் கூறுகிறது. இன்றும் மதுரை மீனாட்சி கோவிலில் காய்ந்து போன ஒரு கடம்ப மரத்தை வேலி கட்டி பாதுகாத்து வருகின்றனர்.

(என் பாட்டி கடம்ப மரத்தால் செய்யப்பட்ட கட்டிலில் படுத்து உறங்குவாள். அவள் இறுதி மூச்சு வரை நோய் நொடி இல்லாமல் வாழ்ந்தாள். நாங்கள் எனக்குத்தான இறுதிக் காலத்தில் இந்த கட்டில் சொந்தம் என்று சகோதரர்களுக்குள் “ஜோக்” அடித்துக் கொள்வோம்! அக்கட்டில் இன்னும் மதுரையில் இருக்கிறது.)

 

பார்ப்பனர் மாமிசம் சாப்பிடுவார்களா?

உடும்பின் படம் (varanus exanthematicus, garden lizard)

நான் சொல்லுவது பழந்தமிழகப் பிராமணர்களைப் பற்றியது. இப்பொழுதுள்ள பிராமணர்களைப் பற்றி அல்ல!!

புலன் அழுக்கற்ற அந்தணாளன் என்று கற்றோராலும் மற்றோராலும் புகழப்படும் கபிலர் பாடிய சில பாடல்களில் (புறம் 113, புறம் 14) மாமிச உணவு பற்றிய செய்திகள் வருகின்றன. இதனால் பழைய தமிழ் நாட்டில் பார்ப்பனர்கள் மாமிசம் (இறைச்சி) உண்டனரா என்ற கேள்விகள் எழுந்தன. உலகப் புகழ் காளிதாசனும் விதூஷகன் வாயிலாக வரும் வசனத்தில் மாமிசம் பற்றிப் பேசுவான். இதற்கெல்லாம் நீண்ட விவாதங்களுக்குப் பின்னர் ஆன்றோர்களும் சான்றோர்களும் பதில் கூறிவிட்டனர்.

அதாவது ஒருவன் இறைச்சி உணவு பற்றிப் பாடியதால் அவர்கள் உண்டதாகாது என்றும் பல தமிழ்ப் புலவர்கள் தங்களையே பாணர்கள் போல உருவகித்துப் பாடியபோதிலும் அவர்கள் பாணர் சாதியினர் அல்ல, அந்தணரே என்றும் விடை கூறி, எடுத்துக் காட்டுகள் தந்து சமாதானப் படுத்திவிட்டனர்.

பத்துப் பாட்டில் ஒன்றான பெரும்பாணாற்றுப் படையில் பார்ப்பார் வீட்டை கோழியும் நாயும் கூட நெருங்காது என்று அவர்கள் தூய்மை பெரிதும் போற்றப்படுகிறது. அதே நூல் வரிகள் 302-310 ஐயர் வீட்டில் என்ன என்ன கிடைக்கும் என்ற “மெனு” வையும் கொடுக்கிறது:

இராசன்னம் (அரிசிச் சோறு)

வெண்ணெயில் வெந்த கொம்மட்டி மாதுளைத் துண்டு

(மிளகு பொடியும் கருவேப்பிலையும் கலந்தது)

மாவடு

இதைப் பாடிய உருதிரங்கண்ணானார் ஒரு அந்தணரே.

இது இப்படி இருக்க, நீண்ட நாட்களாக எல்லா உரைகளிலும் வரும் பழமொழிப் பாட்டின் ஒரு வரி புதிராகவே இருக்கிறது:

 

கள்ளி அகிலும் கருங்காக்கைச் சொல்லும்போல்

எள்ளற்க யார்வாயின் நல்லுறையைத்—தெள்ளிதின்

ஆர்க்கும் அருவி மலை நாட ! நாய் கொண்டால்

பார்ப்பாரும் திண்பர் உடும்பு (பழமொழி நானூறு)

பொருள்: அருவி உடைய மலைநாடனே! பார்ப்பனரும் நாய் கவ்வியதாயினும் உடும்பின் தசையை அதன் உயர்வை எண்ணித் தின்பர். அதுபோல கள்ளியிடம் தோன்றும் அகிலையும் கரிய காக்கையின் சொல்லையும் அவை தோன்றிய இடத்தை எண்ணி இகழாது உயர்வாய்க் கருத வேண்டும்.

 

உடும்பு என்னும் பல்லி இனப் பிராணியை எந்த எந்த இனத்தினர் சாப்பிடுவர்? உடும்புக் கறிக்கு ஏதேனும் மருத்துவ சக்தி இருப்பதால் இப்படிச் சொன்னார்களா? அல்லது இதை அப்படியே பொருள் கொள்ளாது வேறு வகையில் பொருள் கொள்ள வேண்டுமா?

இது நீண்ட காலமாக விடை காணப்படாத ஒரு கேள்வி. விடை தெரிந்தால் எழுதுங்கள்.contact swami_48@yahoo.com

நாஸா (NASA) வியக்கும் சம்ஸ்கிருத மொழி!

ச.நாகராஜன்

கடவுளரின் மொழி!

வளர்ந்து வரும் விஞ்ஞானத் துறைகளுள் ஒன்று மொழியியல் துறை!

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இந்தத் துறை புதுப் புதுக் கண்டுபிடிப்புகளை உலகினருக்கு அறிவித்து வருகிறது. இந்தக் கண்டுபிடிப்புகளுள் ஒன்று சம்ஸ்கிருத மொழியின் அதிசயம்!

கடவுளரின் மொழி என்றும் தேவ நாகரி என்றும் அழைக்கப்படும் சம்ஸ்கிருதம் என்றால் சம்பூர்ணமான மொழி – perfect language – என்று பொருள்!

ஒலி அதிர்வுகளின் மகிமையை உள்ளுணர்வாலும் தவத்தாலும் அறிந்த மகரிஷிகள் ஒலி ஆற்றலைப் பயன்படுத்த சம்ஸ்கிருதமே சிறந்த கருவி என்று கண்டறிந்தனர். “உண்மையைத் தேர்வோம்” என நினைத்த அவர்கள் பயன்படுத்தியது சம்ஸ்கிருத மந்திரங்களேயாகும்.உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்று சம்ஸ்கிருதம்!

 

எளிமையானது, தூய்மையானது, கடவுளின் படைப்பின் மகிமையை உணர்த்துவது.ஜோஸப் காம்பெல் சொன்னது போல உலகின் ஆன்மிகக் களஞ்சியத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளது இது.

 

அல்பெரூனி வியந்த புராணம்

இந்தியா வந்த அல்பெரூனி இந்தியாவில் சம்ஸ்கிருதத்தில் இருக்கும் புராணங்களைக் கண்டு வியந்து “அதில் எல்லாம் இருக்கிறது” என்று அதிசயித்துக் கூறினான். 18 புராணங்களையும் வரிசையாகக் குறிப்பிட்டுள்ள அவன் தன்னால் மத்ஸ்ய, ஆதித்ய, வாயு புராணங்களின் சில பகுதிகளை மட்டும் பார்க்க முடிந்தது என்று ஆதங்கப்படுகிறான்.

ஐந்து லட்சத்து ஐம்பதினாயிரம் சுலோகங்களில் அனைத்தும் அடக்கம்!

இனி 18 புராணங்களில் உள்ள ஸ்லோக எண்ணிக்கையைப் பார்க்கலாம்:-

 

பிரம்ம புராணம் சுமார் 13000 ஸ்லோகங்கள்

பத்மம் சுமார் 55000 ஸ்லோகங்கள்

விஷ்ணு -சுமார் 23000 ஸ்லோகங்கள்

சிவ -சுமார் 24000 ஸ்லோகங்கள்

பாகவதம்- சுமார் 18000 ஸ்லோகங்கள்

பவிஷ்யம் -சுமார் 14500 ஸ்லோகங்கள்

மார்க்கண்டேயம் சுமார் 9000 ஸ்லோகங்கள்

ஆக்னேயம்- சுமார் 15000 ஸ்லோகங்கள்

நாரதீயம் – சுமார் 25000 ஸ்லோகங்கள்

பிரம்ம வைவர்த்தம் சுமார் 18000 ஸ்லோகங்கள்

லிங்கம் சுமார் 11000 ஸ்லோகங்கள்

வராஹம் சுமார் 24000 ஸ்லோகங்கள்

ஸ்காந்தம் சுமார் 81000 ஸ்லோகங்கள்

வாமனம் சுமார் 2400 ஸ்லோகங்கள்

கூர்ம சுமார் 5246 ஸ்லோகங்கள்

மத்ஸ்யம் சுமார் 1402 ஸ்லோகங்கள்

காருடம் சுமார் 19000 ஸ்லோகங்கள்

பிரம்மாண்டம் சுமார் 12000 ஸ்லோகங்கள்

ஆக சுமார் 370541 ஸ்லோகங்களுடன் தேவி பாகவதத்தில் உள்ள 18000 ஸ்லோகங்களையும் கணக்கிட்டால் 388548 ஸ்லோகங்கள் ஆகின்றன!

 

இது தவிர மஹாபாரதம் ஒரு லட்சம் சுலோகங்களாலும் வால்மீகி ராமாயணம் சுமார் 24000 ஸ்லோகங்களாலும் ஆகி இருப்பதை சேர்த்துக் கொண்டால் 512548 ஸ்லோகங்கள் ஆகின்றன.

 

நமக்குக் கிடைக்கக் கூடிய ஒரு சில பதிப்புகளை வைத்தே இந்த கணக்கீடு உள்ளது என்பதால் அனைத்துப் பதிப்புகளையும் நன்கு ஆராய்ந்தால் சில ஆயிரம் ஸ்லோகங்கள் கூடுதலாகவும் இருக்கலாம். ஆக சுமார் ஐந்து லட்சத்து ஐம்பதினாயிரம் ஸ்லோகங்களில் பிரபஞ்சம் பற்றிய மற்றும் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து அறிவையும்  இவ்வுலக வாழ் நெறிகளையும் மோட்ச வாழ் நெறிகளையும் மோட்ச மார்க்கத்தையும் நம் முன்னோர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர்.இவற்றில் இல்லாதது வேறெங்கும் இருக்கப் போவதில்லை!

நாஸா(National Aeronautics and Space Administration) வியக்கும் சம்ஸ்கிருத மொழி! இப்படிப்பட்ட மொழிக்கும் விஞ்ஞான ஆராய்ச்சிக்கும் என்ன சம்பந்தம்?

எல்லா மொழிகளையும் தன் பயன்பாட்டிற்காக ஆராய்ந்த நாஸா சம்ஸ்கிருதம் ஒன்றே பூமியில் உள்ள ஒரே தெளிவான மொழி என்று கூறுகிறது. விஞ்ஞான ரீதியாகவும் சரியான அமைப்புள்ளதாகவும் உள்ள மொழி இது. நாஸாவைச் சேர்ந்த ரிக் ப்ரிக்ஸ் தனது நீண்ட கட்டுரையில் இதன் பெருமைகள் பற்றி விளக்கமாகக் கூறுகிறார்.

இதனுடைய இலக்கணம் பரிபூரணமானது. உலகெங்கும் உள்ள அறிஞர்களைத் தன் வசம் இழுத்துள்ளது.சமீபத்தில் கணிணி விஞ்ஞானிகள் கணிணி பயன்பாட்டிற்கான சிறந்த மொழி சம்ஸ்கிருதமே என்று அறிவித்துள்ளனர்.

வியக்க வைக்கும் மொழி அமைப்பு!

1984ம் ஆண்டு ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் – AI- என்ற பத்திரிக்கை மெஷின் ட்ரான்ஸ்லேஷனுக்கு – இயந்திர மொழி பெயர்ப்பிற்கு சம்ஸ்கிருதம் சிறந்த இடை மொழியாக இருக்கிறது என்று அறிவித்தது. அதாவது ஜப்பானிய மொழியை ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்க வேண்டுமென்றால் முதலில் ஜப்பானிய மொழியை முதலில் சம்ஸ்கிருதத்திற்கு மொழி பெயர்க்க வேண்டும்; பின்னர் அதை ஆங்கிலத்திற்கு மாற்ற வேண்டும்.இதற்கான காரணம் சம்ஸ்கிருத மொழியின் அமைப்பேயாகும். உதாரணத்திற்கு ஒரே ஒரு எளிமையான எடுத்துக்காட்டு.

 

லிஸா புஸ்தகம் படிக்கிறாள் என்பதை ஆங்கிலத்தில் எழுதினால்

லிஸா ரீட்ஸ் எ புக் (Lisa reads a book) என்று ஆகும்.

இதையே சம்ஸ்கிருதத்தில் கீழே கண்டபடி எப்படி வேண்டுமானாலும் எழுதினாலும் அர்த்தம் மாறுவதில்லை.

லிஸா புஸ்தகம் படதி

புஸ்தகம் லிஸா படதி

புஸ்தகம் படதி லிஸா

படதி புஸ்தகம் லிஸா

படதி லிஸா புஸ்தகம்

லிஸா படதி புஸ்தகம்

 

ஆறு விதமாக மேலே கண்டபடி எழுதினாலும் அர்த்தம் ஒன்று தான்.

ஆனால் ஆங்கிலத்தில் Lisa reads a book என்பதை

A book reads Lisa என்பது அர்த்தத்தை விபரீதம் ஆக்கி விடும். ஒரு புஸ்தகம் லிஸாவைப் படிக்கிறது என்றால் எப்படிப்பட்ட விபரீத அர்த்தம்?

ஆகவே சம்ஸ்கிருதத்தின் இந்த ஒரே அமைப்பே கணிணி மொழிகளில் ஏராளமான நன்மைகளைச் செய்யும் போது அதன் இதர அமைப்பு முறைகள் அதை ஒப்பற்ற மொழியாக ஆக்குகிறது.

4000 மூலச் சொற்களில் அனைத்தும் அடக்கம்!

லட்சக்கணக்கான சம்ஸ்கிருத சொற்கள் சுமார் 4000 மூலச் சொற்களிலிருந்தே பிறக்கின்றன என்றால் ஆச்சரியமாக இல்லை? இவையும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மூலங்களால் ஆனவை.

 

மூலத்தின் அர்த்தத்தை உணர்ந்து கொண்டு அதன் அடிப்படை மூலங்களைப் பிரித்தால் வார்த்தையின் அர்த்தம் தானாகத் தெரிய வரும். இதனால் சம்ஸ்கிருத அகராதி 4000 மூலச் சொற்களுக்குள் அடங்கி விடும் அற்புதத்தைக் காணலாம்!

இயந்திரத் தகவல் தொடர்புக்கு பொருத்தமான ஒரு மொழியை விஞ்ஞானிகள் தேட ஆரம்பித்தனர்.ஆங்கிலம் இதற்குப் பொருத்தமானதாக இல்லை என்பதை உணர்ந்த அவர்களின் கவனம் சம்ஸ்கிருதத்தின் பால் திரும்பியது. அதன் அமைப்பை உணர்ந்து அதிசயித்த அவர்கள் அதைப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்.

ஒலி நுட்பம் உணர்ந்த பாணிணி!

வார்த்தையையும் அதன் ஒலியையும் ஆராய்ந்த பாணிணி அற்புதமாக சம்ஸ்கிருத இலக்கணத்தைச் செப்பனிட்டு உலகிற்கு ஈந்தார்.

யாக்ஞவல்ய ஸ்மிருதி வார்த்தையை உச்சரிக்கும் விதத்தை வர்ணிக்கும் போது எப்படி ஒரு புலி தன் குட்டியை வாயில் தூக்கிக் கொண்டு போகும் போது அதற்கு வலிக்காத படி அதைத் தூக்கிச் செல்கிறதோ அதே போல வார்த்தையை உச்சரிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது!.

 

இந்த உச்சரிப்பை ஆராய்ந்தவர் டாக்டர் ஹான்ஸ் ஜென்னி.

சம்ஸ்கிருதத்தை நன்கு ஆராய்ந்த அவர் அது ஒரு பெர்•பெக்ட் லாங்வேஜ்- செம்மொழி என அறிவித்தார். அதன் ஒலியை ஆராய்ந்த போது எந்த எழுத்தை உச்சரிக்கிறோமோ அதே போல அதன் வடிவம் வருகிறது என்பதை நிரூபித்தார். அது மட்டுமின்றை சில சொல் சேர்க்கைகள் மண்டல அமைப்புகளைக் காட்டுவதையும் சுட்டிக் காட்டினார்.

 

உயிருள்ள மொழி!

 

சம்ஸ்கிருதம் இறந்த மொழி அல்ல. கர்நாடகத்தில் ஷிமோகாவிலிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மாத்தூரில் கிரிக்கட் மைதானத்தில் கூட சிறுவர்கள் சீக்ர தாவே (வேகமாக ஒடு) என்று சம்ஸ்கிருத மொழியில் பேசி விளையாடுவதைப் பார்க்கலாம்.

இங்குள்ள 5000 பேர் பேசுவது தாய் மொழியான சம்ஸ்கிருதத்தில் தான்!

இது மட்டுமின்றி மேலை நாடுகளில் ஏராளமான சம்ஸ்கிருத ஆராய்ச்சி மையங்கள் மூலம் சம்ஸ்கிருதம் பேசப்படுகிறது; பரப்பப் படுகிறது.

இந்நிலையில் மெய்ஞான மொழியான சம்ஸ்கிருதம் கணிணி விஞ்ஞானத்தால் ஆராயப்பட்டு தன் பழம் பெருமையை மீட்டு ஜொலிப்பதைப் பார்க்க ஆரம்பித்து விட்டோம்.

இதைப் பேணிக் காப்பது இதன் சொந்தக்காரர்களான நமது கடமை அல்லவா? இதைப் போற்றுவோம்; காப்போம்!

Article written by my brother S Nagarajan

********

 

இந்திய அதிசியங்கள்: உலகிலேயே ஆழமான கிணறு

இந்தியாவிலுள்ள அதிசியங்கள் என்ன என்று கேட்டால் அஜந்தா, எல்லோரா, அமர்நாத் குகை, தாஜ் மஹால், மீனாட்சி கோவில், பனிமூடிய இமய மலை என்று அடுக்கிக் கொண்டே போவார்கள்- கட்டாயம் நூற்றுக்கும் மேலே வரும். ஆனால் நம் நாட்டிலுள்ள உலகிலேயே ஆழமான கிணறு அந்தப் பட்டியலில் வருமா என்பது சந்தேகமே. ஏனெனில் கின்னஸ் சாதனை நூல் போன்றவற்றைப் பார்ப்பவர்களுக்குத் தான் இத்தகைய விஷயங்கள் கண்ணில் அகப்படும். படிக்கட்டுகளை உடைய கிணறுகளில் மிகவும் ஆழமானது (Deepest Step well in the World) என்ற வகையில் இது சாதனை நூலில் இடம்பெறும்.

இந்த அதிசியக் கிணறு இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கிறது. இந்தக் கிணறு ஆழமானது மட்டும் அல்ல, மிக அழகானதும் கூட. ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் நகரிலிருந்து சிறிது தொலைவில் அபநேரி (Abhaneri) என்ற கிராமத்தில் இந்தக் கிணறு உள்ளது. 13 அடுக்குகளாக 3500 படிகலைக் கொண்டது இது. ஆழம் சுமார் நூறு அடி. கிணற்றின் பக்கங்கள் சுமார் 110 அடி (35 மீட்டர்) நீளம் உடைய சதுரமான கிணறு.

இது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உடையது. கி.பி 850ல் மன்னர் ராஜா சந்த் என்பவர் இதைக் கட்டினார். இந்த அபநேரியின் உண்மையான பெயர் அப நகரி (ஒளிமயமான நகரம்). ராஜா சந்த் கட்டியதால் கிணற்றின் பெயர் சந்த் பவ்ரி (பவ்ரி, பவ்டி என்ற சொற்கள் கிணற்றை குறிக்கும்).

இங்குள்ள பாமர மக்கள் இந்த கிணற்றை ஒரே இரவில் பூதங்கள் கட்டியதாக நம்புகின்றனர். ஏனென்று கேட்டால் இவ்வளவு ஆழமான கிணற்றை மனிதர்கள் கட்ட முடியாதென்று பதில் கூறுகின்றனர். உண்மையில் இதைப் பற்றிப் படிப்பதை விட பார்ப்பதே மேல்—காதால் கேட்பதைவிட கண்ணால் காண்பதே இதன் பெருமையைப் புலப்படுத்தும்.

இந்தக் கிணறு ஹர்சத் மாதா (Harshat Mata temple) கோவிலுக்கு முன்னால் இருப்பதால் இதில் மத நம்பிக்கைகளும் கலந்திருக்கலாம். ஆனால் முஸ்லீம் படை எடுப்புகளின் போது பல சின்னங்களும் அழிக்கப்பட்டுவிட்டதால் முழு விவரமும் இப்போது கிடைக்கவில்லை. ஹர்சத் மாதா என்பதன் பொருள் “மகிழ்ச்சி தரும் அன்னை”. கோவிலை மட்டும் அல்ல, இந்தக் கிணற்றைப் பார்க்கும்போதும் இந்தியர்களின் கட்டிடக் கலைத்திறனையும் கணிதப் புலமையையும் எண்ணி எண்ணி மகிழ்ச்சி அடைவோம் என்பதில் ஐயமில்லை.

ராஜஸ்தான் மாநிலம் தண்ணீர் பற்றாக்குறை நிறந்த மாநிலம். பெரும்பாலும் பாலைவனப்பகுதி. ஆகையால மழை நீரைச் சேமிப்பதற்கு இப்படி கிணறுகள் வெட்டுவது வழக்கம் என்றும் தெரிகிறது. ஜோத்பூர் அருகில் கடன் வாவ் என்னும் இடத்தில் மற்றொரு கிணறுஉள்ளது. ஆனாலும் அபநேரி கிணற்றின் அழகுக்கு ஈடு இணை இல்லை.

அபநேரியின் ஆழமான கிணற்றுக்கு மேலே மொகலாயர்கள் சில மண்டபங்கள், கட்டிடங்களைக் கட்டியிருக்கிறார்கள். மோர்னா லிவிங்ஸ்டன் என்பவர் ராஜஸ்தான் மாநிலப் படிக் கிணறுகள் பற்றி ஆய்வு செய்து புத்தகம் எழுதியுள்ளார் (The Ancient Step wells of India by Morna Livingston).

 

******************

 

அதிசய மேதை சுப்பராய சாஸ்திரி! – Part 2

ச.நாகராஜன்
ஜோதிடம் மட்டுமல்லாமல் வானவியல், பௌதிகம், இரசாயனம், உலோகவியல் உள்ளிட்ட ஏராளமான துறைகளில் ரிஷிகள் இயற்றிய நூல்களை அப்படியே ப்ரஹ்ம ஸ்ரீ சுப்பராய சாஸ்திரி கூறியது அனைவரையும் வியக்க வைத்தது. அவர் சுட்டிக் காட்டிய நூல்கள் கணக்கில் அடங்கா. சில நூல்களின் தலைப்பையும் அவற்றில் என்ன அடங்கி உள்ளது என்பதையும் கீழே பார்ப்போம்.
1)அக்ஷர லக்ஷ கணித சாஸ்திரம் :- வால்மீகி முனிவர் அருளியது. இதில் 64 கணித சித்தாந்தங்கள் விளக்கப்படுகின்றன.
2) அனுகரன சப்த சாஸ்திரம் :- கண்டிக ரிஷி அருளியது.எதிரொலிகள் பற்றியும் ஒவ்வொரு சப்தமும் என்ன பிரதிபலிப்பை உருவாக்குகிறது என்பது  பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.
3) ஸ்த்ரீ¢ லக்ஷண சாஸ்திரம் :- சகதாயன ரிஷி அருளியது.உலகில் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளிலும் பெண் பாலை எப்படிக் கண்டுபிடிப்பது?இதை அற்புதமாக விளக்கும் நூல் இது.
4) புருஷலக்ஷண சாஸ்திரம் :- பப்ரு ரிஷி அருளியது. மிருகங்களில் ஆண் பாலை எப்படிக் கண்டுபிடிப்பது. இதை விளக்கும் நூல் இது.
5) கன்யா லக்ஷண சாஸ்திரம்:- பப்ரு ரிஷி அருளியது.ஒரு பெண் கன்னித் தன்மையுடன் இருக்கிறாளா என்பதை எப்படி அறிவது? இதை விளக்கும் நூல் இது.
6)சகுன சாஸ்திரம்:- கர்க மஹரிஷி அருளியது. பறவைகளின் வெவ்வேறு ஒலிகளாலும் அவை பேசுகின்ற பாஷைகளின் மூலமும் மனிதர்களுக்கு நன்மை உண்டாகுமா அல்லது தீமை உண்டாகுமா என்று விளக்கும் சகுன சாஸ்திரம் இது.
7)சில்ப சாஸ்திரம்:- மயன் அருளியது.32 விதங்களாகக் கூறப்படும் தேவ சில்பி,கந்தர்வ சில்பி, யக்ஷ சில்பி, பைசாசிக சில்பி,அசுர சில்பி, மானுஷ சில்பி, முதலிய சில்பிகளை விவரிப்பதோடு  முழு விவரங்களையும் தரும் நூல் இது.
8)சுப சாஸ்திரம்:- சுகேசர் அருளியது.128 விதமான சுவையான சமையல்களைப் பற்றி விவரிக்கும் ருசியான நூல் இது.சுவையான நூல் மட்டுமல்ல இது; செய்முறையைச் சொல்லித் தரும் நூலும் கூட!
9)மாலினி சாஸ்திரம்:- ரிஷ்ய சிருங்க முனி அருளியது.உருமாற்றம், மாயத் தோற்றம், கானல் நீர் மாயைகள் ஆகியவை பற்றி விளக்கும் நூல் இது.
10) ப்ரளய சாஸ்திரம்:- மஹரிஷி வியாஸர் அருளியது.மஹா பிரளயங்கள் நான்கைப் பற்றியும் சிறு பிரளயங்களில் உள்ள 64 வகைகளையும் விளக்கும் நூல் இது.
11) கால சாஸ்திரம்:-ஷண்முகர் அருளியது.ஜோதிடம், வானவியல், பௌதிகம் ஆகிய துறைகளுக்கு ஆதாரமான மனித குலத்திற்கு மிகவும் முக்கியமான நூல் இது.காலம் என்றால் என்ன என்பதை பிரமிக்கத் தக்க விதத்தில் விளக்கும் இது அறுபத்திநான்காயிரம் காலபுருஷர்களின் விவரத்தையும் தருகிறது!
12)மாயா வாத சாஸ்திரம்:-ஆஞ்சனேயர் அருளியது. பெயர் சுட்டிக்காட்டுகின்ற படியே மாயா வாதத்தை விளக்கும் நூல்.
13) தாது வாதம்:- அஸ்வினி தேவர்கள் அருளியது.கனிமங்கள், கூட்டுப் பொருள்களைப் பற்றி விளக்கும் நூல்!அதிலிருந்து என்னென்ன பொருள்களை உருவாக்கலாம் என்பதையும் கூட இது விளக்குகிறது!
14)விஷ வாதம்:- அஸ்வினி தேவர்கள் அருளியது. வெவ்வேறு விதமான விஷங்களைப் பற்றியும் அதில் அடங்கிய விஷத்திற்கான மூலப் பொருளையும் விளக்கும் நூல் இது.செயற்கை விஷம் எது, இயற்கை விஷம் எது என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.
15) காருடம்: வைல ரிஷி அருளியது.இந்திய மாயாஜால நிபுணர்களால் உலகெங்கும் காண்பிக்கப்பட்டு அனைவரையும் வியக்க வைக்கும் 32 விதமான மாயாஜாலங்களை விளக்கும் நூல் இது. எந்த விஷத்தை எப்படி முறிப்பது என்பதையும் கற்றுத் தருகிறது!
16)சித்ர கர்மா:பீமர் அருளியது. வர்ணம் பூசுவது, ஓவியம் வரைவது, போட்டோ எடுப்பது எப்படி என்பதைக் கற்றுத் தரும் நூல் இது.
17)மல்ல சாஸ்திரம்:-மல்லர் அருளியது. மல்யுத்தம் மற்றும் உடல் பயிற்சிகள் பற்றி விளக்கும் நூல் இது.
18)பரதம்:-கணபதி அருளியது. நாட்டியம், அதற்கான இசை, தாளம்,அதற்கான கால நுட்பம் ஆகியவற்றை விளக்கும் நூல் இது.
19)பரகாய ப்ரவேசம்:-வால்கீய ரிஷி அருளியது.இன்னொரு உடலில் எப்படிப் புகுவது என்பதை விளக்கும் நூல் இது!
20)அஸ்வ ஹ்ருதயம்:-சுக்ரீவர் அருளியது. குதிரைகள் பற்றிய அனைத்து நுட்பமான விஷயங்களையும் விளக்கும் அற்புத நூல் இது. (சரஸ்வதி மஹால் நூல்நிலையம் வெளியிட்டுள்ள அஸ்வ சாஸ்திரத்தைப் படிப்பவர்கள் பிரமித்துப் போவார்கள் என்பதை இங்கு நினைவு கூரலாம்.)
21)கஜ ஹ்ருதயம்:- குமாரசுவாமி அருளியது.யானைகள் பற்றிய அனைத்து நுட்பமான விஷயங்களையும் விளக்கும் அற்புத நூல் இது.
22)ரத்ன பரிக்ஷ¡:-வாத்ஸாயன மஹரிஷி அருளியது.நவரத்னங்களை இனம் பிரித்து அறிந்து அவற்றை சோதிக்கும் முறையைக் கூறும் அபூர்வ நூல் இது!
23)இந்த்ரஜாலம்:-வீரபாகு முனிவர் அருளியது.மாயாஜால வித்தைகள், மாஜிக், புதிய பொருள்களை உருவாக்கிக் காட்டல் ஆகியவற்றை விளக்கும் நூல் இது.
24)மஹேந்திரஜாலம்:- வீரபாகு முனிவர் அருளியது ஜல ஸ்தம்பனம், அக்னி ஸ்தம்பனம் உள்ளிட்ட116 விதமான ஸ்தம்பங்கள் இதில் விளக்கப்படுகிறது.
25)அர்த்த சாஸ்திரம்:-மஹரிஷி வியாஸர் அருளியது. தர்ம வழியில் செல்வம் சேர்க்கும் முறையை விளக்கும் நூல் இது. இதே துறையில் இன்னும் 24 சாஸ்திரங்கள் தனியே உள்ளன. அவற்றை முற்றிலுமாக விளக்க இங்கு இடம் இல்லை.ஆகவே அதி நுட்பமான சிலவற்றை மட்டும் இங்கு காண்போம்.
அ) அகஸ்திய மஹரிஷி அருளிய சக்தி தந்திரம்:-மூல பிரகிருதியில் அடங்கியுள்ள 32 விதமான ஆற்றல்கள் அல்லது சக்திகளைப் பற்றி விளக்கும் நூல் இது.
ஆ)மஹரிஷி மதங்கர் அருளிய சௌதாமினி கலா:-அயல் கிரகவாசிகள், வானில் உள்ள வஸ்துக்கள் மற்றும் தேவதைகளை எப்படி போட்டோ எடுப்பது என்பதை விளக்கும் நூல் இது.இன்று நாம் கூறும் எலக்ட்ரானிக்ஸ் நூல் இது!
இ)மஹரிஷி ஆஸ்வாலயனர் அருளிய சுத்த வித்யா கலா:- பிரபஞ்சம் தோன்றியது எப்படி,நம்முடைய பிரபஞ்சம் தவிர வேறு எத்தனை பிரபஞ்சங்கள் உள்ளன, எங்கே உள்ளன, பிரபஞ்சத்தை உருவாக்கியது யார் என்பதை விளக்கும் ஆச்சரியமான நூல்.
உ) மஹரிஷி ஆங்கிரஸ் அருளிய மேகோற்பத்தி ப்ரகரணம்:- 12 விதமான மேகக் கூட்டங்கள், அவை ஒன்பது விதமாக உருவாகும் விதம் உள்ளிட்ட ஏராளமான மேக ரகசியங்களை விளக்கும் அபூர்வ நூல் இது!
ஊ) மஹரிஷி ஆங்கிரஸ் அருளிய காரக ப்ரகரணம்:- சூரிய கிரணங்கள் மேகங்களின் ஊடே செல்லும் போது அண்டஜம், ஸ்வேதஜம்,உத்பிஜம் ஆகிய வித்துக்கள் உருவாகின்றன.நவரத்தினங்கள், சங்கு,முத்து ஆகியவையும் உருவாகின்றன. இவை எப்படி உருவாகின்றன என்பதை விளக்கும் அபூர்வ நூல் இது.
எ)மஹரிஷி பாரத்வாஜர் அருளிய ஆகாச தந்த்ரம்:- ஆகாசத்தில் இல்லாத மர்மங்களே இல்லை.ஏழு விதமான ஆகாயங்கள் மனித குலத்தின் மீது என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை விளக்கும் நூல் இது.
1940ம் ஆண்டு தனது 74ம் வயதில் மறைந்த ப்ரஹ்ம ஸ்ரீ சுப்பராய சாஸ்திரி அவர்களின் மேதைத் தன்மை ஆகாயம் போல விரிந்தது, கடலை விட ஆழமானது. சூரியனை விட பிரகாசமானது, சந்திர ஒளியை விட மனதிற்குக் குளுமை தருவது. பாரத அறிவை முற்றிலும் ஜொலிக்க வைப்பது. சில ஜோதிட நூல்களுக்கு அவர் விளக்கவுரைகளும் எழுதியுள்ளார். அவரைப் பற்றிய நூல்களும் வெளி வரத் தொடங்கி உள்ளன. இந்த மாமேதை அருளிய நூல்கள் அனைத்தையும் படிக்க முயன்று அதில் நமக்கு உகந்த துறையில் நாம் திறமை பெற்று உலக அரங்கில் அதை ஜொலிக்கச் செய்வது ஒன்றே அவருக்கு நாம் செய்யும் சிறந்த கைம்மாறாகும்.

This is written by my brother S Nagarajan.
*****************

தமிழ் ஒரு கடல்!!


“கல்வி கரையில, கற்பவர் நாள் சில” என்பது ஆன்றோர் வாக்கு. கலைமகளும் கூட “கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு” என்று கூறினார். தமிழ் மொழியிலுள்ள இலக்கியங்களை எல்லாம் ஒருவர் கணக்கெடுத்தால் அவையனைத்தையும் கற்றறிய ஒரு வாழ்நாள் போதாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியெனப் புலப்படும்.

உலகில் பழமையான இலக்கியம் படைத்த மொழிகள் ஒரு சில மொழிகளே. தமிழ், சமஸ்கிருதம், கிரேக்கம், எபிரேயம், சீனம் என்று விரல் விட்டு எண்ணி விடலாம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாகியும் தன் சீரிளமைத்திறம் குன்றாதது தமிழ். இந்தக் காலக் கட்டத்தில் வளர்ந்த முக்கிய சில நூல்களின் நீளத்தை அல்ல து அளவை மட்டும் சிறிது சிந்தித்துப் பார்ப்போம். சங்க இலக்கியம் என்பதில் எட்டு நூல்களைக் கொண்ட எட்டுத்தொகையும் பத்து நூல்களைக் கொண்ட பத்துப்பாட்டும் அடக்கம். இந்த 18 நூல்களில் 473 புலவர்கள் பாடிய 2381 பாடல்கள் உள்ளன. ஏறத்தாழ 30,000 வரிகள்! ஒரு நாளைக்கு நூறு அடிகள் வீதம் படித்தாலும் கூட சங்க இலக்கியத்திற்கு மட்டும் முந்நூறு நாட்கள் தேவைப்படும்.!!

இதற்கு முன்னர் எழுந்த தொல்காப்பியம், அதற்குப் பின்னர் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், ஏழாம் நூற்றாண்டு முதல் பெருகிய பக்தி இலக்கியங்கள் (தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம்) ஆகிய அனைத்திலுமுள்ள பாடல்களை எண்ணிக் கூட்டினால் தமிழைக் கற்பதற்குப் பல பிறவிகள் எடுக்க வேண்டும் என்பதை உணர்வீர்கள். கையில் ஒரு கணக்கிடும் கருவியை (கால்குலேட்டர்) வைத்துக்கொண்டு பின்வரும் செய்யுட்களின் எண்ணிக்கையைக் கூட்டுங்கள். ஒவ்வொரு நாளும் நீங்கள் எவ்வளவு செய்யுட்களை நன்கு மனதில் பதியுமாறு படிக்க முடியும் என்பதைத் தீர்மானித்து அதனால் இந்தச் செய்யுட்களின் எண்ணிக்கையை வகுத்துப் பாருங்கள். இப்படிச் செய்தால் இனி ஒரு வினாடி கூட தாமதிக்காமல் தமிழைப் படிக்கத் தோன்றும். ஒரு அறை முழுவதும் பொன்னும் மணியும் குவித்து வைக்கப்பட்டுள்ளது. உங்கள் கையில் அறைக்கான சாவியும் (தமிழ் அறிவு) உள்ளது. இனியும் தாமதிப்பது நியாயமா?

புள்ளிவிபரம்

தொல்காப்பியம் 3,999 அடிகள் 
எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் 30, 000 அடிகள்
சிலப்பதிகாரம் 5,001 அடிகள்
மணிமேகலை 4,759 அடிகள்
பெருங்கதை 16,230 அடிகள்

பாடல் கணக்கு

பதினெண் கீழ்க்கணக்கு (குறள் உள்பட 18 நூல்கள்) 3,250 பாடல்கள்
கம்ப ராமாயணம் 10,500 பாடல்கள்
சீவக சிந்தாமணி 3,145 பாடல்கள்
திவ்யப் பிரபந்தம் (ஆழ்வார் பாடியவை) 4,000 பாடல்கள்
பன்னிரு திருமுறை 18, 326 பாடல்கள்
தாயுமானவர் 1,454 பாடல்கள்
அருணகிரி 1,361 பாடல்கள்


இராமலிங்க சுவாமிகள் 5,800 பாடல்கள்

20,000 பழமொழிகள்

தமிழில் 20,000க்கும் மேலாக பழமொழிகள் இருக்கின்றன. மூன்று வெள்ளைக்காரர்கள் இவைகளைத் தொகுத்து தனித்தனி புத்த்கங்களாக வெளியிட்டனர். அவைகளுக்கான ஆங்கில மொழிபெயர்ப்புகள் அல்லது ஆங்கிலத்திலுள்ள இணையான பழமொழிகளைக் கொடுத்தனர். பழமொழிகள் ஒவ்வொன்று பற்றியும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதலாம்!!
முக்கியமான சில பாடல் தொகுப்பை மட்டுமே கொடுத்துள்ளேன். பாரதி வரையுள்ள ஆயிரக்கணக்கான புலவர்களின் பாடல்களை எல்லாம் கணக்கிட்டால் அந்த நூல்களின் பெயர்களை எழுத மட்டுமே தனியாக ஒரு நூல் தேவைப்படும். தமிழ் ஒரு பெருங்கடல்! முத்துக்குளிப்போம் வாருங்கள்!

******************