நவீன கால விஞ்ஞான ரிஷி

அனைத்து விஞ்ஞானத் துறை நூல்களையும் காண்பித்த அதிசய மேதை ப்ரஹ்ம ஸ்ரீ சுப்பராய சாஸ்திரி! –  Part1

 
ச.நாகராஜன்
பண்டைய ரிஷிகளையும்  ஜோதிட மேதைகளையும் பற்றியே பேசுகிறோமே நவீன காலத்தில் இப்படிப்பட்ட மேதை யாரும் இல்லையா என்று கேட்பவர்க்கு பளிச்சென பதில் அளிக்க வந்த மாமணி ப்ரஹ்ம ஸ்ரீ சுப்பராய சாஸ்திரி! இவரது வரலாறு மிகவும் சுவாரசியமானது; அதிசயமானது; அற்புதமானது. அதே சமயம் நம்மை சோகத்திலும் ஆழ்த்தும். நமது கடமை தவறிய பாங்கையும் சுட்டிக் காட்டும்; எதிர்காலத்தில் எச்சரிக்கையாக இருக்க வழி வகுக்கும்.
பிரபல விஞ்ஞானியான ஜகதீஸ் சந்திர போஸ¤க்குத் தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றவே சுப்பராய சாஸ்திரி தனது வாழ்க்கை வரலாறை எழுதியுள்ளார். இல்லாவிடில் இப்படிப்பட்ட ஒரு பெரிய மகானைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வழியே இருந்திருக்காது. 1973ம் ஆண்டு தான் இவரது வரலாறு அச்சிடப்பட்டது. அபூர்வமான அந்த வரலாறின் சுருக்கத்தைப் பார்ப்போம்.

 
சாஸ்திரிகளின் இளமை வாழ்க்கை
சாஸ்திரிகள் 1866ம் ஆண்டு தமிழ்நாட்டில் தர்மபுரி ஜில்லாவில் உள்ள ஹோசூர் தாலுக்காவில் டோகரே அக்ரஹாரம் என்னும் சிற்றூரில் பிறந்தார்.பிராமண குடும்பத்தில் மூத்தவராகப் பிறந்த சாஸ்திரிகள் இளமைப் பருவத்தில் மிகவும் வறுமையில் வாடினார்.இளமையிலேயே பெற்றோரையும் இழந்ததால் பிச்சை எடுக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் அவருக்கு 12 வயது ஆகும் போது எட்டு வயது சிறுமியை மணம் வேறு செய்து முடித்தார்கள். அப்போது அங்கு பரவிய கொடுமையான காலரா தொத்து வியாதியால் சாஸ்திரிகளின் குடும்பத்தில் உள்ளவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பலி ஆனார்கள்.
காட்டிலுள்ள குகையில் குருஜி தரிசனமும் உபதேசமும்

 
இனி தாங்க முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட சாஸ்திரிகள் இந்த உலகில் வாழ வேண்டாம் எனத் தீர்மானித்து மனம் போன படி நடந்து கோலார் ஜில்லாவில் அவனி என்ற இடத்தில் ஒரு காட்டிற்குள் புகுந்தார்.அங்கு கொடிய புலிகளும் விஷப் பாம்புகளும் நிறைந்த இடத்தில் வாழ ஆரம்பித்தார்.இலை தழை கிழங்குகளையும் நீரையும் மட்டும் ஆகாரமாகக் கொண்டு பல வருடம் அங்கு வாழ்ந்து வந்தார்.ஒரு நாள் ஒரு குகைக்குள் நுழைந்த அவர் பாதாளத்தில் தென்பட்ட ஒரு வழியில் சென்றார். அங்கே அதிசயமான ஒரு பெண்மணி தோற்றமளித்தார். சாஸ்திரிகள் அவர் தன் தாயார் தான் என்பதைத் தெரிந்து கொண்டார். திடீரென்று அந்தத் தோற்றமும் மறைந்தது. இந்த குகையில் தான் தனது குருஜியை அவர் கண்டார்.குருஜி தரிசனத்திற்குப் பின்னர் அவர் வாழ்வே மாறியது. குருஜி அவர் வாழ்க்கையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தினார்.அவரிடமிருந்து ஏராளமான வித்தைகளையும் பௌதிக சாஸ்திரங்களையும் கற்றார்.இந்த சாஸ்திரங்களை அழிவுக்காகப் பயன்படுத்தக் கூடாது என்றும் தன் அனுமதியின்றி யாருக்கும் கற்றுக் கொடுக்கக் கூடாது என்றும் அவர் சாஸ்திரிகளுக்கு அறிவுறுத்தினார்!சாஸ்திரிகளது சரஸ்வதி நாடியை அவர் தூண்டி விட ஒரு பெரும் ஒளிப்பிழம்பு சாஸ்திரிகளிடம் நுழைந்து ஐக்கியமானது.பிறகு குருஜி அவர் நாக்கில் ஒரு தர்ப்பையை வைத்து எழுதினார்.இதைத் தொடர்ந்து அனைத்து பௌதிக சாஸ்திரங்களிலும் அபார வல்லமையை சாஸ்திரிகள் அடைந்தார்.

 
உலகின் முதல் விமானத்தை அமைக்க விஞ்ஞானம் தந்தவர்
பின்னர் குருஜி அனுமதி தர சாஸ்திரிகள் 25 வருட காலம் தனது மனைவியுடன் அனெகல் என்னும் சிற்றூரில் தங்கி இருந்தார். அவரைப் பேரும் புகழும் வந்தடைந்தன.பாரதமெங்கும் அவரது புகழ் பரவவே பூஞ்ஜிலால் கிரிதர் என்ற பெரும் தொழிலதிபர் பம்பாய்க்கு சாஸ்திரிகளை அழைத்தார். டாக்டர் டால்படே என்பவர் அப்போது ஆகாயவிமானங்களை அமைக்க ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். அவர் சாஸ்திர்களைச் சந்திக்கவே பாரத்வாஜர் இயற்றிய ஆகாய விமானம் கட்டும் முறையை விளக்கும் வைமானிக சாஸ்திரத்தை உபதேசித்து அவருக்கு விமானக் கட்டுமானக் கலையைக் கற்பித்தார்.

உலகின் முதல் விமானம் சௌபாத்தி கடற்கரையிலிருந்து 1900ம் வருட வாக்கில் ஒரு நாள் ஆகாயத்தில் பறந்து அனைவரையும் வியப்படைய வைத்தது. இதற்குப் பின்னரே 17-12-1903ல் ரைட் சகோதரர்கள் தங்களின் முதல் விமானத்தைப் பறக்க வைத்தது குறிப்பிடத் தகுந்தது.பம்பாயில் சாஸ்திரிகளைப் பார்க்க தினமும் கூட்டம் நிரம்பி வழிந்தது.சாஸ்திரிகளின் மேதாவிலாசத்தைக் கண்டு வியந்த இந்திய விஞ்ஞானிகள் அவர் கூறும் அனைத்து நூல்களையும் மக்களின் நன்மைக்காக வெளியிடுமாறு வேண்டினர்.தனது குருஜியிடம் அனுமதி வாங்க சாஸ்திரிகள் பெங்களூர் திரும்பினார். இந்த இடத்தோடு ஜகதீஸ் சந்திர போஸ¤க்காக எழுதிய சுய சரிதம் திடீரென்று முடிகிறது.பம்பாயில் ஜகதீஸ் சந்திர போஸை சாஸ்திரிகள் சந்தித்த விஷயம் இறுதி அத்தியாயங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அஸ்ட்ராலஜிகல் மாகஸைன் நிறுவனரின் சந்திப்பு

 
அஸ்ட்ராலஜிகல் மாகஸைனை நிறுவிய சூர்யநாராயண ராவ் இவரை ஷிமோகாவுக்குச் செல்லும் போது 1885ம் ஆண்டு அதிர்ஷ்டவசமாக சந்தித்தார்;அவருடன் இடைவிடாது தொடர்பை வைத்திருந்தார்.அவரது பெருமுயற்சியால் பல புத்தகங்கள் பிரசுரிக்கப்பட்டன. சாஸ்திரிகளின் இறுதிக் காலம் சோகமயமானது.சுதந்திரப் போர் உச்சகட்டத்தை அடைந்ததால் அவருக்கான ஆதரவைப் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அவரது பணிகள் முற்றிலுமாக நிறைவு பெறவில்லை.வாழ்க்கையில் அவருக்கு விரக்தி ஏற்பட்டது. ஒரு பெரும் மேதையை அவர் வாழ்நாளில் நன்கு கௌரவிக்காது அவரது பணியை முற்றுப் பெற வைக்காது இருந்த சமுதாயத்தின் அவல நிலையை எண்ணி வருந்த வேண்டியது தான். மஹாகவி பாரதி உள்ளிட்டோர் வாழ்ந்த காலத்தில் ஆதரவும் பெறவில்லை;உரிய சிறப்புக்களையும் அடையவில்லை. அதே கதி தான் சாஸ்திரிகளுக்கும் ஏற்பட்டது. அற்புதமான அந்த மேதையின் பரம்பரையினர் இன்றும் பெங்களூரில் வாழ்ந்து வருகின்றனர்.
ஜோதிட புத்தகங்கள்

 
சாஸ்திரிகளின் ஜோதிட ஞானம் அபாரமானது.ஏராளமான புத்தகங்களை அவர் எழுதியுள்ளார்.ஜோதிட நூல்களுக்கான அபாரமான விரிவுரைகளையும் அவர் எழுதியுள்ளார். அவரது நூல்களைப் பற்றி எழுதப் புகுந்தால் அது பெரும் நூலாக ஆகி விடும் என்பதைக் கருதி அவரது சில புத்தகங்களின் தலைப்பையும் அது கூறும் விவரங்களையும் சிறு குறிப்புகளாக இங்கு காணலாம்:

 
1) ப்ரஹ்மாண்ட சாரம்:- மஹரிஷி வியாஸர் அருளியது.இதில் பல ப்ரஹ்மாண்டங்களைப் பற்றியும் அதில் உள்ள உலகங்கள் மற்றும் சக்திகள் பற்றியும் அசையும் ஜந்துக்கள் மற்றும் அசையாப் பொருள்கள் பற்றியும் விவரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2) அம்ச போதினி :-மஹரிஷி பரத்வாஜர் அருளியது. இதில் சூரியன், சந்திரன் போன்ற கிரகங்கள் பற்றியும் அதன் கிரணங்கள், வெப்ப சக்தி ஆகியவை பற்றியும் விவரங்கள் உள்ளன.வெவ்வேறு விதமான கண்ணாடிகளை உருவாக்குவது பற்றியும் ஒவ்வொரு கிரகத்திலிருந்து வரும் வெவ்வேறு ஆற்றல்களை அளவிடும் முறையும் விளக்கப்பட்டுள்ளது.சூரிய கிரணங்களைச் சேமிக்கும் இயந்திரங்கள் பற்றியும் அந்த கிரணங்களை ஆற்றலுக்குத் தக்கவாறு பிரிக்கும் முறைகளும் இதில் விளக்கப்பட்டுள்ளது.

 
சாஸ்திரிகளின் நூல்களின் தலைப்புக்களையாவது நாம் தெரிந்து கொண்டால் பாரத ரிஷிகளின் எல்லையற்ற விஞ்ஞான அறிவை ஒரு சிறிதாவது புரிந்து கொள்ள முடியும் என்பதால் இன்னும் சில நூல்களின் தலைப்பைப் பார்ப்போம்.
-தொடரும்

 
இந்தக் கட்டுரை ஸ்ரீ ஜோஸியம் பத்திரிக்கையில் வெளியான கட்டுரை
இதை விரும்புவோர் இதர அபூர்வ ஜோதிட மேதைகள் பற்றியும் நாடி ஜோதிடம் பற்றியும் இந்தக் கட்டுரை ஆசிரியர் எழுதிய கட்டுரைகளைப் படிக்க விரும்புவர்

My brother’s contact details : santhanam nagarajan snagarajans@gmail.com

நமக்கில்லை, இனி குறைவான ஆயுள் எல்லை!

.நாகராஜன்

ஷிகியாகி ஹினோஹரா என்பது அந்த ஜப்பானியரின் பெயர். அவருக்கு வயது 97 வருடம் 4 மாதங்கள். உலகையே அதிசயப்பட வைக்கும் இந்த அதிசய மனிதர்  “நமக்கில்லை குறைவான ஆயுள் எல்லை”  என்று  முழங்குகிறார். அவர் ஒரு டாக்டர். கல்வியைப் பரப்பும் கல்வியாளர்.
1941 ஆம் ஆண்டிலிருந்து டோக்கியோவில் உள்ள செயிண்ட் ல்யூக்ஸ் இண்டர்நேஷனல் ஹாஸ்பிடலில் அவர் பணி புரிந்து வருகிறார். செயிண்ட் ல்யூக்ஸ் காலேஜ் ஆ•ப் நர்ஸிங்கில் ஆசிரியராகவும் பணி புரிகிறார். இந்த இரு பெரும் நிறுவனங்களையும் நிறுவியவரே இவர் தான்! இரண்டாவது உலக மகா யுத்தத்திற்குப் பிறகு உலகில் அனைவராலும் பேசப்படும் விதத்தில் தரம் வாய்ந்த மருத்துவ மனை ஒன்றை டோக்கியோவில் அமைப்பது பற்றி அவர் யோசிக்க ஆரம்பித்தார்.அதை செயல் படுத்தவும் செய்தார்.
உறுதி வாய்ந்த மனம், எப்போதும் உற்சாகம்,சேவை புரியத் துடிக்கும் மனப்பான்மை,வணிகம் செய்வதில் திறமை எல்லாவற்றிற்கும் மேலாக மருத்துவம் செய்வதில் திறமை எல்லாமாகச் சேர்ந்து அவர் அமைத்த மருத்துவ மனையும் நர்ஸிங் கல்லூரியும் இன்று உலக அளவில் பேசப்படும் ஒன்றாக அமைந்து விட்டன.இந்த இரு நிறுவனங்களுக்கும் அவர் தான் சேர்மன்.
அவரது 75வது பிறந்த நாளிலிருந்து இன்று வரை 150 சிறந்த புத்தகங்களை அவர் எழுதியுள்ளார்.அதில் ஒரு புத்தகத்தின் பெயர் “லிவிங் லாங், லிவிங் குட்” (Living Long Living good) என்பது. இந்த நூல் இது வரை 12 லட்சம் பிரதிகள் விற்பனையாகி விட்டது. ‘புதிய மூத்தோர் இயக்கம்’ என்ற இயக்கத்தை நிறுவி மூத்த குடிமக்களிடம் நீண்ட நாள் வாழ்வது எப்படி, மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்பதைச் சொல்லி அவர்களுக்கு ஊக்கமூட்டுகிறார் அவர்.
நீண்ட நாள் வாழும் இந்த அதிசய அபூர்வ மனிதர் மனித குலத்திற்கு தன் வாழ்வைப் பற்றியும் நீண்ட நாள் வாழ்வதைப் பற்றியும் நல்ல செய்தி ஒன்றைத் தருகிறார்.
அதைப் பார்ப்போமா? அவரது செய்தி இது தான்:-
“நலமாக இருக்கிறோம் என்று உணர்வதிலிருந்தே சக்தி பிறக்கிறது; நன்கு சாப்பிடுவதாலோ அல்லது நீண்ட நேரம் உறங்குவதாலோ அல்ல! சிறு குழந்தைகளாக மகிழ்ச்சியுடன் விளையாடிய அந்த நாட்களில் நாம் சாப்பிடவோ தூங்கவோ எத்தனை நாட்கள் மறந்திருக்கிறோம்! இதே மனப்பான்மையை வயதானோரும் கடைப்பிடிக்கலாம் என்று நான் நம்புகிறேன். உணவு உண்ணும் நேரம் இது, தூங்கும் நேரம் இது என்று ஏராளமான விதிகளைப் போட்டுக் கொண்டு நம்மை நாமே களைப்படையச் செய்து கொள்ள வேண்டாமே!
எந்த தேசத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் எந்த இனம், பால் என்று இருந்தாலும் சரி ஒரே ஒரு விஷயம் அனைவருக்கும் பொது. யாரும் அதிக எடையைக் கொண்டிருக்கக் கூடாது என்பது தான் அது! காலை உணவில் காப்பி, ஒரு கோப்பை பால், ஆரஞ்சு பழச்சாறு ஆகியவற்றை ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து நான் சாப்பிடுகிறேன். ஆலிவ் ஆயில் ரத்த நாளங்களுக்கும் தோலுக்கும் மிகவும் நல்லது. ஆரோக்கியமாக வைத்திருப்பது. மதிய உணவில் சில குக்கீஸ் மற்றும் பால் மட்டும் சாப்பிடுகிறேன்.மிகவும் வேலை இருந்தால் சாப்பிடவே மாட்டேன். வேலையிலேயே எப்போதும் கவனத்துடன் இருப்பதால் எனக்குப் பசி உணர்வே தோன்றுவதில்லை. இரவு உணவில் சில கறிகாய்கள், ஒரு துண்டு மீன், சிறிது சாதம் எடுத்துக் கொள்வேன். வாரம் இரு முறை 100 கிராம் இறைச்சி சாப்பிடுவதுண்டு.

எப்போதுமே முன்னாலேயே திட்டமிடுங்கள். 2014 வரை எனக்கு மருத்துவ மனை வேலைகள், விரிவுரை செய்வது என நிறைய வேலை இருக்கிறது. 2016ம் ஆண்டு வேண்டுமானால் சிறிது ஓய்வு எடுக்க முடியும்.அப்போது டோக்கியோ ஒலிம்பிக் பார்க்கலாமே!
ஓய்வு எடுப்பது அதாவது ரிடயர்மெண்ட் என்பதே அவசியம் இல்லை. ஆனால் ஒவ்வொருவரும் ஓய்வு பெற்றுத் தான் ஆக வேண்டுமென்றால் 65 வயதுக்கு பின்னரும் நீண்ட காலம் கழித்துத் தான் ஓய்வு எடுக்க வேண்டும். இப்போதைய ஓய்வு பெறும் வயது 65 என்ற நியதி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நிர்ணயிக்கப்பட்ட ஒன்று.அந்தக் காலத்தில் ஒருவன் வாழும் ஆயுள் 68 ஆக இருந்தது. அப்போது ஜப்பானில் நூறு வயதைத் தாண்டியவர்கள் 125 பேர் தான்! இன்றோ ஆயுளின் எல்லை அதாவது ஒருவரின் சராசரி வயது பெண்களுக்கு 86 ஆகவும் ஆண்களுக்கு 80 ஆகவும் உள்ளது. 36000 பேர் இன்று ஜப்பானில் நூறு வயதுக்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.இன்னும் இருபதே வருடங்களில் ஜப்பானில் இது 50000 என்ற எண்ணிக்கையைத் தாண்டப் போகிறது.
உங்களுக்குத் தெரிந்ததைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நான் ஒரு வருடத்திற்கு 150 சொற்பொழிவுகள் ஆற்றுகிறேன். சில ஆரம்ப நிலைப் பள்ளியில் படிக்கும் நூறு குழந்தைகளுக்காக. மற்றும் சில  வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் 4500 பேருக்காக! 60 முதல் 90 நிமிடங்கள் வரை நான் பேசுகிறேன். மிக்க வலிமையுடன் நின்று கொண்டே தான் பேசுகிறேன்.
ஒரு டாக்டர் உங்களை அறுவை சிகிச்சை செய்யுமாறோ அல்லது ஒரு சோதனையை எடுத்துக் கொள்ளுமாறோ ஆலோசனை சொல்லும் போது அவரிடம் அவரது மனைவிக்கோ அல்லது அவரது குழந்தைக்கோ இதை பரிந்துரை செய்வாரா என்று கேளுங்கள்.

அனைவரும் நம்பிக்கொண்டிருப்பதற்கு மாறாக உண்மை என்னவெனில் டாக்டர்கள் எல்லோரையும் குணப்படுத்தி விட  முடியாது.ஆகவே ஏன் அறுவை சிகிச்சை செய்து கொண்டு வலியுடன் அவதிப் படுகிறீர்கள். இசையும் அனிமல் தெராபியும் டாக்டர்கள் நினைப்பதை விட மேலான உதவியை அனைவருக்கும் செய்யும் என நான் நம்புகிறேன்.
ஆரோக்கியத்துடன் வாழ உங்கள் பொருள்களை நீங்களே எடுத்துக் கொண்டு மாடிப்படி மேல் ஏறிச் செல்லுங்கள். நான் இரண்டு இரண்டு படிகளாகத் தாவி ஏறுகிறேன்! எனது தசைகளுக்கு இயக்கம் வேண்டும் அல்லவா!
எனக்கு ஊக்கம் தரும் கவிதை ஒன்று உண்டு. ராபர்ட் ப்ரௌன் எழுதிய “Abt Vogler” என்ற கவிதை தான் அது! அதை எனது தந்தையார் எனக்குப் படித்துக் காண்பிப்பது வழக்கம், அது என்னைப் பெரிதாக நினைக்கச் செய்கிறது. சிறிய கிறுக்கல்களைச் செய்ய விடாமல் பெரிய ஓவியத்தை உருவாக்க ஊக்குவிக்கிறது.அந்தக் கவிதை, ‘வட்டத்தை வரையும் போது அதை நம் வாழ் நாளில் அதை முடிக்க முடியாத அளவு பெரிதாகப் போடு’ என்று சொல்கிறது! நாம் பார்ப்பது வட்டத்தின் ஒரு பகுதியான வில்லைத் தான்! மற்றது நமது காட்சிக்கு அப்பாற்பட்டது, ஆனால் அது தொலைவில் இருக்கிறது!

வலி என்பது ஒரு மர்மமான விஷயம். ஆனால் அதை மறப்பதற்கு விளையாடுவது ஒன்று தான் வழி. ஒரு குழந்தைக்கு பல் வலித்தது என்றால் அதனுடன் நீங்கள் சேர்ந்து விளையாடுகிறீர்கள். அது தன் வலியை மறக்கிறது.

மருத்துவ மனைகள் நோயாளிகளின் அடிப்படை வசதியை நன்கு பராமரிக்க வேண்டும். நம் அனைவருக்கும் வேடிக்கை விநோதம் அவசியம் தேவை. செயிண்ட் ல்யூக்ஸில் நாங்கள் இசை , ஓவிய வகுப்புகள் அனிமல் தெராபி ஆகிய அனைத்தையும் கொண்டிருக்கிறோம்.

உலோகாயதமான பொருள்களில் அதிக ஆசை கொண்டு அதைச் சேர்க்க முயலாதீர்கள்.ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்: உங்கள் நேரம் எப்போது முடியும் என்பது உங்களுக்குத் தெரியாது. “சேர்த்த பொருள்களை” “அடுத்த இடத்திற்குக்” கொண்டு செல்ல முடியாது.

மருத்துவ மனைகள் பேரழிவுகளை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். தங்கள் வாயிலில் வந்து நிற்கும் ஒவ்வொரு நோயாளியையும் வரவேற்க வேண்டும். செயிண்ட் ல்யூக்ஸை எப்படி வடிவமைத்திருக்கிறோம் தெரியுமா? ஆபரேஷனை எந்த இடத்தில் வேண்டுமானாலும் அங்கு செய்ய முடியும்! அடித்தளத்த்தில், நடை பாதையில், அறைகளில், எங்கு வேண்டுமானாலும்!
பேரபாயத்தை எதிர்கொள்ளும் என் கொள்கையைப் பற்றி தவறாகப் புரிந்து கொண்ட சிலர் என்னை ஒரு கிறுக்கன் என்று நினைத்தனர்.ஆனால் 1995 ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதி  டோக்கியோ சப்வே ஒன்றில் ஆம் ஷின்ரிக்யூ மத அமைப்பைச் சார்ந்தவர்கள் ஒரு தீவிரவாத தாக்குதலைச் செய்த போது நான் சொன்னது சரி தான் என அனைவரும் உணர்ந்தனர்.அதில் பாதிக்கப்பட்ட 740 பேரை நாங்கள் அட்மிட் செய்து கொண்டோம். இரண்டே மணி நேரத்தில் அவர்கள் சரின் வாயுவால் பாதிக்கப்பட்டார்கள் என்பதைக் கண்டு பிடித்தோம். ஒரே ஒரு நோயாளியைத் தான் துரதிர்ஷ்டவசமாக இழக்க நேர்ந்தது. 739 பேரின் உயிர்களைக் காப்பாற்றி விட்டோம்!
அறிவியல் மட்டும் அனைவரையும் குணப்படுத்த முடியாது, அனைவருக்கும் உதவி செய்ய முடியாது!ஒவ்வொரு தனி மனிதனும் தனித்தன்மை வாய்ந்தவன். வியாதிகள் அவர்களது இதயத்தோடு தொடர்பு கொண்டவை. நோயைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவி செய்ய, நமக்கு தாராளமான காட்சிக் கலைகள் (விஷ¤வல் ஆர்ட்ஸ்) வேண்டும், மருத்துவ சாதனங்கள் மட்டும் போதாது.

வாழ்க்கை என்பது சம்பவங்கள் நிறைந்த ஒன்று! 1970 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி எனக்கு 59 வயது முடிந்தது. நான் டோக்கியோவிலிருந்து •ப்யூகுவோகா போவதற்காக யோயோகோவில் விமானத்தில் ஏறினேன். அருமையான இளவெயில் அடிக்கும் காலை நேரம் அது.மவுண்ட் ப்•யூஜி எங்களுக்கு முன்னால் வந்தது. திடீரென்று எங்கள் விமானத்தை ஜப்பனிய கம்யூனிஸ் லீக் – ரெட் ஆர்மி பிரிவினர் ஹைஜாக் செய்து விட்டனர்.அடுத்த நான்கு மணி நேரம் நான் 40 டிகிரி செல்ஸியஸ் உஷ்ணத்தில் என் இருக்கையில் விலங்கு போடப்பட்டு அவதிப்பட்டேன். அதை ஒரு சோதனையாக நான் எடுத்துக் கொண்டேன். என் உடல் அந்த அபாய நிலைமையில் எப்படி ஈடு கொடுக்கிறது என்பதை ஆச்சரியத்துடன் பார்த்தேன்!

 
ஒரு நல்ல ரோல் மாடலாக ஒருவரைக் கொள்ளுங்கள் அந்த ‘மாதிரி மனிதரை’ விட இன்னும் அதிகமாக சாதிக்க குறிக்கோளைக் கொள்ளுங்கள் என்னுடைய தந்தை 1900ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள நார்த் கரோலினாவில் ட்யூக் பல்கலைக் கழகத்தில் படிப்பதற்காகச் சென்றார்.அவர் ஒரு முன்னுதாரண புருஷர். எனது ஹீரோக்களில் ஒருவர். பின்னால் இன்னும் சில வாழ்க்கை வழிகாட்டிகளையும் நான் கண்டேன். ஒரு பிரச்சினையில் நான் சிக்கிக் கொள்ளும் போது இது போன்ற அபாயகரமான கட்டங்களில் அவர்கள் பிரச்சினையை எப்படிச் சமாளிப்பார்கள் என்ற் என்னை நானே கேட்டுக் கொள்வேன்.
நீண்ட காலம் வாழ்வது அற்புதமான விஷயம். 60 வயது முடிய ஒருவர் தன் குறிக்கோளை எய்த முயல்வதிலும் தன் குடும்பத்திற்காகப் பணி புரிவதிலும் உழைப்பது சுலபம். ஆனால் பின்னால் உள்ள வருஷங்களில்  சமூகத்திற்கு சேவை செய்ய முயல வேண்டும். 65ஆம் வயதிலிருந்து நான் ஒரு தன்னார்வத் தொண்டராக உழைக்கலானேன். வாரத்திற்கு ஏழு நாட்களும் நாள் ஒன்றுக்கு 18 மணி நேரம் உழைக்கிறேன். அதில் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் நேசிக்கிறேன்.”

 
ஒரு உன்னதமான மனிதரின் உள்ளத்திலிருந்து வரும் அற்புதமான அறிவுரையைத் தான் நாம் மேலே படித்தோம். அதன் படி வாழ்வது நம் கையில் தான் இருக்கிறது.
அப்படி வாழ்ந்தால் நமக்கில்லை இனி குறைவான ஆயுள் எல்லை!
ஹெல்த்கேர் மாத இதழில் ஏப்ரல் 2012 இதழில் வெளிவந்துள்ள கட்டுரை. இந்தக் கட்டுரையை விரும்புவோர் படிக்க விரும்பும் தொடர்புடைய கட்டுரை; வாழும்போதே தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள்! ஆசிரியரின் மின்னஞ்சல் முகவரி:snagarajans@gmail.com

*******************************

கொலவெறி வைரம்!!!!!

Picture shows Hope Diamond

(தமிழ்நாட்டில் பல குடும்பங்களில், குறிப்பாக பிராமண மற்றும் செட்டியார் குடும்பங்களில் வைரம் வாங்குவதற்கு முன் அதை வீட்ல் சில நாள் வைத்து நல்ல செய்திகள் வருமா என்று பார்த்தே வாங்குவார்கள். ஏனெனில் சில வைரங்களில் குறைகள் இருக்கும். இதோ, கிருஷ்ண பரமாத்மாவை படாத பாடு படுத்திய வைரம் பற்றிப் படியுங்கள்)

 

வைரங்கள் பெண்களின் சிறந்த நண்பர்கள் என்று ஆங்கிலத்தில் சொல்லுவதுண்டு. அது உண்மையாக இருக்கலாம். ஆனால் கட்டாயம் கடவுளுக்கும் வைரத்துக்கும் ரொம்ப தூரம்!! சியமந்தக மணி எனப்படும் வைரம் கண்ண பிரான் காலத்தில் இருந்தது. அது யாதவ குலத்தில் மூன்று கொலைகளுக்கும் பல சண்டைகளுக்கும் காரணமாகிவிட்டது பின்னர் இது பிரான்ஸ், பிரிட்டன் ,அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்று அங்கும் பல சாவுகளுக்கும் சண்டைகளுக்கும் வித்திட்டது. இதை இப்போது வாஷிங்டனில் உள்ள ஸ்மித்சோனியன் மியூசியத்தில் பார்க்கலாம். ஆனால் அவர்களுக்கே இது கண்ணனின் வைரம் என்று தெரியாது.

 

சத்ரஜித் என்பவர் ஒரு யாதவர் தலைவர். அவர் சூரிய தேவனை வழிபடுவார். ஒரு நாள் சூரிய தேவனே அவருக்கு ஒரு பெரிய வைரத்தைக் கொடுத்தார். (அதாவது அவர் கோவிலுக்குச் சென்றபோது அது பூமியிலிருந்து கிடைத்தது.) அது பள பள என்று ஜொலித்தவுடன் கிருஷ்ணருக்கும் கூட பொறுக்கவிலை. அதை உக்ரசேனன் என்பவனிடம் கொடு என்றார். ஆனால் சத்ரஜித் அதற்கு மறுத்துவிட்டார்.

 

சத்ரஜித் அவருடைய தம்பி ப்ரசேனன் என்பவரிடம் கொடுத்துவைத்தார். அவன் அதை எடுத்துக் கொண்டு வேட்டை ஆடப்போனான். அவனை ஒரு சிங்கம் அடித்துக் கொன்றது. இந்த வைரத்தை கரடி இனத் தலைவர் ஜாம்பவான் எடுத்துச் சென்றார். முன் காலத்தில் மக்கள் தங்களை அடையாளம் கூற ஒரு பறவை அல்லது மிருகம் பெயரைச் சொல்லுவார்கள். ஜம்பவான் கரடி இனம் எனப்படும்  மலை ஜாதி இனத்தைச் சேர்ந்தவர். அவருடைய பிள்ளைகள் அந்த வைரத்தை வைத்து விளையாடத் துவங்கினர்.

 

எல்லோரும் கண்ண பிரானைச் சந்தேகப் பட்டனர். உடனே அவர்ப்ரசேனனைத் தேடிச் சென்றார். காட்டில் அவனது சடலத்தையும் மற்ற அடிச் சுவடுகளையும் கண்டு அதைப் பின்பற்றினான். ஒரு மாதம் சண்டை போட்ட பின்னர் ஜாம்பவானுடன் ஒரு சமரச ஒப்பந்தம் ஏற்பட்டது. அவருடைய பெண் ஜாம்பவதியைக் கல்யாணம் செய்து கொண்டால் சியமந்தக மணியைத் திருப்பித் தருவதாகச் சொன்னார். கண்ணனுக்கு அடித்தது யோகம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். ஒரு பெண்+ ஒரு வைரம்!!

 

துவாரகைக்குத் திரும்பிவந்தார். வைரத்தை சத்ரஜித்திடமே திருப்பித் தந்தார். அவருக்கு ஏக சந்தோஷம். அவருடைய பெண் சத்யபாமாவையும் கண்ணனுக்கு மணம் முடித்தார். சியமந்தக வைரத்தால் இரண்டு பெண்கள் லாபம் !! இந்த நேரத்தில் ஹஸ்தினாபுரத்திலிருந்து எஸ்.ஓ.எஸ். (அவசர உதவி தேவை என்று) செய்தி வந்தது. பாண்டவர்கள் அனைவரும் அரக்கு மாளிகை தீ விபத்தில் இறந்துவிட்டதாக வந்தது செய்தி. அங்கே சென்றால் எல்லோரும் சுபம்.

 

இதற்குள் சத்ரஜித் வீட்டில் சததன்வா என்பவன் புகுந்து சத்ரஜித்தைக் கொன்றான். வைரத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான். சத்யபாமாவுக்கு ஒரே துக்கம். துவாரகைக்குத் திரும்பி வந்த கண்ணனிடம் கதறி அழுதாள். கண்ணனும் பலராமனும் சததன்வாவைத் தேடினர். அவன் பீஹாருக்கு ஓடிவிட்டான். குஜராத்திலிருந்து ஆயிரம் மைல் துரத்திச் சென்று அவனைக் கண்ணன் கொன்றான். பின்னர்தான் தெரிந்தது. அதை அவன் அக்ரூரன் என்பவனிடம் கொடுத்து வைத்தான் என்பது. கிருஷ்ணன் துவாரகைக்குத் திரும்பி வருவதற்குள் அவன் உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசிக்கு ஓடிவிட்டான். ஆட்களை அனுப்பி அவனை கண்ணன் அழைத்து வந்தார். மீண்டும் ஒரு சமரச ஒப்பந்தம். அக்ரூரனே அதை வைத்துக் கொள்ளலாம் என்றும் ஆனால் துவாரகையை விட்டு வெளியே போகக் கூடாது என்றும் உத்தரவு போட்டார். இதற்குப் பின் அந்த வைரத்தின் கதை தெரியவில்லை.

 

ஹோப் வைரம்

 

சியமந்தக மணியை ஒரு கோவில் அம்மனின்  நெற்றியில் பதித்து வைத்தனர். அதைத் திருடிய அர்ச்சகருக்கு மரண தண்டனை கிடைத்தது. அதைத் திருட்டுத்தனமாக வாங்கிய பிரெஞ்சுக்காரர் ஜீன் பாப்டிஸ்ட் டவர்னியர் வெறி நாய்கள் கடித்து இறந்தார். இதற்கு ஹோப் வைரம் என்று பின்னர் பெயர் சூட்டப்பட்டது!

 

இந்தியாவிலிருந்து பிரான்ஸ், பிரிட்டன் ,அமெரிக்கா சென்ற ஹோப் வைரம் இதே போல படுகொலைகள், வழக்கு வாய்தாக்கள், சண்டை சச்சரவுகள், கடன் திவாலாக்கள் எல்லாவற்றையும் உண்டாக்கியது. மேலும் ஹோப் வைரம் புற ஊதா கதிர்களில் தக தக என்று சிவப்பாக ஜொலிக்கிறது. இதைத்தான் பாகவதமும் சூரியன் போல ஜொலித்த வைரம் என்று சியமந்தக மணி பற்றியும் கூறுகிறது. பலரும் அதை மாணிக்கம் என்று நம்பினர். ஆனால் அது வைர வகைகளில் ஒரு அபூர்வ வைரம். இப்போது அது அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் ஸ்மித்சோனியம் மியூசியத்தில் உள்ளது.

 

இது மனிதர் கையில் இருந்தால் பல துரதிருஷ்டங்கள் ஏற்படுவதால் கடைசியாக இதை வைத்திருந்த வாட்சன் என்பவரிடமிருந்து இதை அந்த மியூசியத்துக்கு நன்கொடையாக வாங்கிவிட்டனர். அவரும் உடும்பு வேண்டாம் கையை விட்டால் போதும் என்று கொடுத்துவிட்டுப் போய்விட்டார். அவருக்கு முன் ஹோப் என்பவர் வைத்திருந்ததால் இதற்கு ஹோப் வைரம் என்று பெயர். உண்மையில் இது ஹோப்லெஸ் (அவ நம்பிக்கை) வைரம்!!!

முதலில் இது லாம்பெல் இளவரசி கைக்குப் போனது. அவரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. அதன் பின்னர் ஜாக்ஸ் செலோட் என்பவர் கைக்குப் போனது. அவர் புத்தி சுவாதினம் இழந்து தற்கொலை செய்துகொண்டார். இதற்குப் பின்னர் ரஷிய இளவரசர் கனிடொவ்ஸ்கியை அடந்தது. அவர் தனது காதலிக்குக் கொடுத்துவிட்டு பின்னர் அவளை கொலையும் செய்தார். பிறகுதான் ஹென்ரி தாமஸ் ஹோப் வாங்கினார்.

 

பிரெஞ்சுப் புரட்சியில் லூயி மன்னரையும் அவருடைய மனைவி மேரி அன்டாய்னெட்டையும் கில்லட்டின் எந்திரத்தில் வைத்து பகிரங்கமாக கொடூரமாகக் கொன்றதைப் படித்திருப்பீர்கள். அப்போது இந்த ஹோப் வைரம் (கண்ண பிரானின் சியமந்தகம்) அவர்கள் கையில் இருந்த்தது. உலக வரலாற்றில் ஒரு மன்னரும் ராணியும் இவ்வளவு பரிதாபமாக இறந்தது கிடையாது. அதற்குப் பின் வேறு ஒருவர் கைக்குப் போய் அவர்கள் குடும்பத்தில் பெரிய சண்டை ஏற்பட்டு பல ஆண்டுகள் வழக்கு நடந்தது. இதை வாங்கிய ஒருவர் பணம் எல்லாம் இழந்து திவால் ஆனார்.

 

சில வைரங்கள் அதிக யோகத்தைக் கொண்டு வரும். இந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்தில் கிடைத்த கோஹினூர் வைரம் சென்ற இடம் எல்லாம் சிறப்பை ஈட்டித் தரும். அது இப்போது இலண்டன் டவர் மியூசியத்தில் உள்ளது. அது இருப்பதால் எலிசபெத் மஹாராணியார் கொடிகட்டிப் பறக்கிறார். அவருடைய 60ஆவது வருட பதவி ஏற்பு நிறைவு வைபவம் லண்டனில் ஜூன் மாதம் நடைபெறப் போகிறது. கோஹினூர் அவர் கையில் இருக்கும் வரை அவரை யாரும் அசைக்க முடியாது.

தாவரங்களின் அறிவு!–Part 4

அறிவியல் அதிசயங்கள்

தாவரங்களின் அறிவு! -4

———————————-

ச.நாகராஜன்

ஒரு செடியானது கீழே போட்டு மிதித்துக் கொலையுண்ட பின்னர் மீதியிருந்த இன்னொரு செடி  லை – டிடெக்டருடன் இணைக்கப்பட்டது. ஒவ்வொரு மாணவனும் அதன் முன்னே நடந்து செல்லுமாறு கூறப்பட்டான். ஐந்து மாணவர்கள் அந்தச் செடியின் அருகே சென்ற போது அந்தச் செட் எந்த விளைவையும் காண்பிக்கவில்லை. ஆனால் ஆறாவது மாணவனான ‘செடியின் கொலைகாரன்’அதன் அருகே சென்றவுடன்  லை – டிடெக்டருடன் இணைக்கப்பட்டிருந்த எலக்ட்ரோடு வெகு வேகமாக அசையத் தொடங்கியது. அது கொலையாளி யார் என்பதை அடையாளம் காட்டியது!

இந்தச் சோதனையின் மூலம் தாவரங்களுக்கு ஞாபக சக்தி உண்டு என்பதையும் அது தமக்குத் தீங்கு செய்த மனிதரையோ அல்லது இதர வஸ்துவையோ யார் அல்லது எதாக இருந்தாலும் கூட இனம் காண்பித்து விடும் என்பதும் நன்கு தெரிய வந்தது!

தாவரங்கள் அதை வளர்க்கும் எஜமானர்களுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கின்றன!

ஒரு முறை பாக்ஸ்டர் நியூஜெர்ஸியிலிருந்து நியூயார்க் நகருக்குத் திரும்பினார். தனது ரிகார்டரில் பதிவு செய்யப்பட்ட கிராப் பேப்பர்களைப் பார்த்த போது  எல்லா தாவரங்களும் தன் எண்ணங்களை வெளிப்படுத்தியதை அவரால் காணமுடிந்தது. சில தாவரங்கள் ‘ அப்பாடா’ என்ற பெருமூச்சை வெளியிட்டன. (எஜமானர் திரும்பி வந்து விட்டார்; இனி கவலை இல்லை!) சில தாவரங்களோ அவருக்கு நல்வரவு கூறி வரவேற்றன!

இந்த ‘அப்பாடா’ என்ற பெருமூச்சும், ‘நல்வரவு’டன் கூறிய வரவேற்பும் எப்போது எந்த நேரத்தில் பதிவு செய்யப்பட்டது என்பதை அவர் கூர்ந்து கவனித்துப் பார்த்தார்.

அது அவர் நியூஜெர்ஸியிலிருந்து நியூயார்க் திரும்ப முடிவு செய்த அதே நிமிடத்திலேயே பதிவு செய்யப்பட்டிருந்தது!

சின்ன ‘செல்லானாலும்’ கூட உயிருடன் இருக்கும் திசு ஒன்று இறந்து போனால் அதைக் கண்டு கொள்ளத் தவறுவதில்லை. இதை பாக்ஸ்டர் எதேச்சையாக ஒரு நாள் கண்டுபிடித்தார். ஒரு நாள் அவர் தன் சாப்பிடவிருந்த யோஹர்ட்டுடன் (தயிர்) ஏதோ ஒரு பழ ஜாமைக் கலந்தார். தயிரில் இருந்த ‘லாக்டோபஸில்லி’ செல்களை ஜாமில் சேர்க்கப்பட்டிருந்த ப்ரிஸர்வேடிவ் கொன்று விட்டது. இதைக் கூடத் தாவரங்கள் உணர்ந்து விட்டன.

பாக்ஸ்டர் சிங்க்கில் (Sink) கொதிக்கும் நீரை ஓட விட்ட போதும் தொட்டியில் இருந்த சில நுண்ணிய  பாக்டீரியாக்கள் இறந்து விட்டதை எண்ணி அவை அலறின போலும் என்று கூறுகிறார் அவர்!

இதை உறுதி செய்வதற்கான இன்னொரு சோதனையை அவர் மேற்கொண்டார். உப்பு நீரில் இருந்த ஒரு ‘ஷ்ர்ம்ப்’ ஒன்றை தானியங்கி மெக்கானிஸம் வாயிலாக தானாகவே சுடுநீரில் கரையும் படி அவர் ஒரு ஏற்பாட்டை அமைத்தார். மனிதன் யாராலும் தொடப்படாமல் இருப்பதை உறுதி செய்யவே ஆடோமாடிக் மெக்கானிஸம் பயன்படுத்தப்பட்டது. சுடு நீரில் ‘ஷ்ரிம்ப்’ விழுந்தவுடன் தாவரம் அதைப் பதிவு செய்து விட்டது!

இப்படி ஏராளமான சோதனைகளை நடத்தியதன் மூலமாக பாக்ஸ்டர் தாவரங்களின் அதிசயிக்கத்தக்க அறிவைக் கண்டு வியந்தார். இந்த சோதனைக¨ளையும், தனது முடிவுகளையும் உலகிற்கு அறிவித்தார்.

உண்மையிலேயே தாவரங்களின் அறிவு அதிசயிக்கத் தக்க ஒன்று தானே!!

தமிழர்களின் எண் “ ஜோதிடம் “ !

தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணையும் நான்கின் வர்க்கங்களையும் நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- நியுமெராலஜி- (Numerology) பித்து வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர்தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள்.

நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி”

என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும்

இதோ நூல்களின் பட்டியல்:

(4) நாலடியார் (400)

நான் மணிக் கடிகை (4)

சதுர் (4) அகராதி

கார் நாற்பது (40)

களவழி நாற்பது (40)

இனியவை நாற்பது (40)

இன்னா நாற்பது (40)

புற நானூறு (400)

அக நானூறு (400)

நற்றிணை நானூறு (400)

குறுந்தொகை நானூறு (400)

பழ மொழி நானூறு (400)

நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (4000)

நாலாயிரக் கோவை (4000)

இவ்வாறு எண்களின் பெயரில் புத்தகம் ,பாக்கள் இயற்றுவது வேத காலத்திலேயும் உண்டு. தசம், சதம், சஹஸ்ரம் (1000) என்ற டெசிமல் (Decimal) முறைப் பெயர்கள் நிறைய வரும். இந்த தசாம்ச முறையைக் (Decimal System) கண்டுபிடித்தவர்களே இந்தியர்கள்தான். யஜூர் வேதத்தில் சத ருத்ரீயம் (100)  என்று சிவன் பெயரில் முக்கியமான துதி வருகிறது. அதில்தான் சைவர்களுக்கு உயிர் போன்ற நம சிவாய மந்திரம் முதல் தடவையாக வருகிறது. சமகம் என்னும் பகுதியில் எண்களின் பெயர்களில் மட்டுமே வரும் மந்திரங்களும் உண்டு. அதற்குப் பின்னுள்ள காலத்தில் முதல் இலக்கணப் புத்தகம் எழுதிய பாணிணி தனது புத்தகத்துக்கு அஷ்டாத்யாயீ ( 8 அத்தியாயம்) என்று பெயர் வைத்தார்.

தமிழில் மற்ற எண்களிலும் நூல்கள் இருக்கின்றன. ஏர் எழுபது (70), முப்பால் (3), திரி(3)கடுகம், சிறு பஞ்ச(5) மூலம்,பதிற்றுப் பத்து (10X10) ஐங்குறு நூறு (5X100).

எல்லா நூல்களையும் தொகுத்த போதும் அவைகளுக்கும் எட்டுத் தொகை, பத்துப் பாட்டு, பதினெண் கீழ்க் கணக்கு என்று எண் பெயராகவே வைத்ததால்தான் இவர்களுக்கு நியூமெராலஜி பைத்தியம் இருந்திருக்குமோ என்று எண்ண வேண்டியுள்ளது.

சம்ஸ்கிருதத்தைப் பொறுத்த வரை தசாம்ஸப் பெயர்கள் அதிகம் வரும்.

பதிகம் (10), சதகம் (100) சஹஸ்ர நாமம் (1000 , 1008), லட்சார்ச்சனை, கோடி அர்ச்சனை என்று. மொத்தத்தில் இந்தியர்கள் எல்லோருமே எண்கள் மீது காதல் உள்ளவர்கள் தான்.

பல வட மொழித் துதிகள் பஞ்ச ரத்னம் (5), அஷ்டகம் (8) என்று ஐந்துக்கும் எட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றன. சங்க காலத்திலும் ஐம்பெருங்குழு (5), எண்பேராயம் (8) என்று சபைகளை அமைத்து தமிழர்களும் இவ்வாறு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

 

(ஏற்கனவே இன்னொரு கட்டுரையில் 9,18,108,1008, 10008 பற்றி எழுதியுள்ளேன். தஞ்சை உலகத் தமிழ் மாநாட்டில் சமர்ப்பித்த சங்க இலக்கியத்தில் நிறம், சங்க இலக்கியத்தில் எண்கள் என்ற கட்டுரைகளில் மேலும் பல அதிசயச் செய்திகள் உள்ளன.)

தாவரங்களின் அறிவு!–பகுதி 3

ச.நாகராஜன்

பாக்ஸ்டரும் அவரது சகாக்களும் நாடெங்கும் சென்று பல்வேறு கருவிகள் வாயிலாக ஏராளமான சோதனைகளை நடத்த ஆரம்பித்தனர். முடிவுகள் அனைத்தும் தாவரங்கள் கொண்டிருக்கும் அதீத புலன் ஆற்றலை மீண்டும் மீண்டும் நிரூபித்தன!

ஒரு தாவரத்தின் இலைகளைப் பறித்து அதைத் துண்டுகளாக்கி  லை -டிடெக்டரின் எலக்ட்ரோடுகளின் அருகே வைத்த போதும் கூட இதே முடிவுகள் வெளியாயின! ஒரு நாயோ அல்லது அறிமுகமில்லாத, நட்பில்லாத நபர் யாராவது வந்தால் எதிர்மறை விளைவுகளை தாவரம் காண்பித்தது.

முதலில், நாம் லை – டிடெக்டர் எப்படி வேலை செய்கிறது என்பதைச் சற்று அறிய வேண்டும். அதன் எலக்ட்ரோடுகள் பொய் சொல்கிறாரோ என்று சந்தேகப்படும் நபருடன் இணைக்கப்படுகிறது. பிறகு அவரிடம் நன்கு வடிவமைக்கப்பட்ட கேள்விக் கணைகள் சரமாரியாக வீசப்படும். ஒவ்வொருவருக்கும் அற்புதமான பிரக்ஞை என்ற உணர்வு (consciousness)இருக்கிறது.ஆகவே எவ்வளவு தான்  முயன்றாலும் காரணங்கள் பலவற்றைக் கண்டுபிடித்துக் கூறினாலும் ஒரு பொய்யைக் கூறும் போது பிரக்ஞைக்கு அது நிச்சயமாகப் பொய் என்று தெரியும்.ஆகவே உடலில் உள்ள மின்சார தளம் (electric field) மாறுகிறது.இந்த மாறுதலை ரிகார்டர் துல்லியமாகப் பதிவு செய்கிறது.இதுவே லை – டிடெக்டர் வேலை செய்வதன் அடிப்படைத் தத்துவம்!

 

பாக்ஸ்டர் விநோதமான ஒரு சோதனையைச் செய்து பார்த்தார். லை – டிடெக்டரை ஒரு தாவரத்துடன் முதலில் இணைத்தார். பிறகு சோதிக்க வேண்டியவரிடம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். அந்த மனிதர் பொய் சொல்கிறாரா இல்லையா என்பதைத் தாவரம் துல்லியமாகக் கண்டுபிடித்தது! அவரிடம் நீ பிறந்த  வருடம் எது என்று பாக்ஸ்டர் கேட்டார். ஏழு வருடங்களை விருப்பத்தேர்வுகளாகத் தந்தார். சரியான வருடத்தைச் சொன்ன போதும் கூட‘இல்லை’ என்று அவர் கூறினார். சரியான வருடத்தை அவர் ‘இல்லை’ என்று கூறி பொய் சொன்னபோது  தாவரம் அதை உணர்த்திக் காட்டியது! கிராப் பேப்பரில் உச்சகட்டத்தை வரைந்து அவர் பொய் சொல்கிறார் என்பதை உணர்த்தியது!

 

நியூயார்க்கில் உள்ள ராக்லேண்ட் ஸ்டேட் ஹாஸ்பிடலில் அதன் மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவின் டைரக்டராகப் பணியாற்றி வருபவர் டாக்டர் அரிஸ்டைட் எஸ்ஸர் (Dr Aristide Esser). அவர் ஒரு சோதனைக்குள்ளாகும் மனிதரிடம் தாம் கேட்கும் கேள்விகளுக்குத் தப்பான பதிலைத் தருமாறு கூறினார். அந்த தாவரம் தப்பான பதிலைத் தரவிருக்கும் அதே நபர் வளர்த்தது தான்! என்றாலும் கூட பொய் கூறிய போது தன் எஜமானரை அது ‘காப்பாற்றவில்லை’; மாறாகக் ‘காட்டிக் கொடுத்தது!’

 

சரியில்லாத பொய்யான பதில்கள் கிராப் பேப்பர் பதிவுகள் மூலம் சுலபத்தில் அறியப்பட்டன! பாக்ஸ்டரை நம்பிய போதும் கூட எஸர் தானே சோதனைகளை நேரடியாகச் செய்து பார்க்க வேண்டும் என்று விரும்பினார்; செய்து பார்த்து திருப்தி அடைந்தார். பாக்ஸ்டரின் கொள்கைகள் மற்றும் சோதனை முடிவுகள் அனைத்தும் உண்மையே என்று கண்டறிந்தார்.

 

இன்னொரு சோதனையையும் பாக்ஸ்டர் நடத்தினார். இதில் ஆறு மாணவர்கள் அழைக்கப்பட்டனர். அவர்கள் கண்கள் கட்டிவிடப்பட்டது.ஒரு தொப்பியில் போடப்பட்ட பேப்பர் சுருள்களிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்குமாறு அவர்களிடம் கூறப்பட்டது. சோதனை நடந்த அறையில் இரண்டு செடிகள் இருந்தன.

 

ஒரு பேப்பர் சுருளில் இரண்டு செடிகளில் ஒன்றை வேருடன் பிடுங்கி தரையில் போட்டு அதைத் தேய்த்து அழிக்குமாறு எழுதப்பட்டிருந்தது. இப்படி ஒரு செடியைக்‘கொலை செய்பவர்’ யார் என்று பாக்ஸ்டர் உள்ளிட்ட யாருக்குமே தெரியக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காகவே கண்கள் கட்டப்பட்டது. ஒருவரது எண்ணம் இன்னொருவருக்குத் தெரியாது; யார் செய்வதையும் யாரும் பார்க்க முடியாது – இரண்டு செடிகளைத் தவிர!

ஒரு செடி கொல்லப்படும்! அதைப் பார்க்கும் நேரடி சாட்சியாக இன்னொரு செடி இருக்கும். நடந்தது என்ன?

-தொடரும்

 

தமிழ் பூதமும் கிரேக்க பூதமும்

Picture: Oedipus kills Sphinx

கிரேக்க நாட்டிலுள்ள டெல்பி ஆரக்கிளுக்கும் (ஒரு பெண் சாமி ஆடி குறி சொல்லுதல்) தமிழ் நாட்டிலுள்ள சாமி ஆடிகள், கோடங்கி அடிப்போர், குறி சொல்லுவோருக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது (இதைப் பற்றி தனி கட்டுரையில் தந்திருக்கிறேன்). இது போலவே கிரேக்க ஸ்பிங்ஸ் (SPHINX)  பூதத்துக்கும் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் பல வகை பூதங்களுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. ஏற்கனவே அப்பர், சுந்தரர் ஆகியோருக்கு உதவிய பூதங்கள் பற்றி தனி கட்டுரையில் கூறிவிட்டேன். எகிப்திலும் ஸ்பிங்ஸ் சிலகள் உண்டு. ஆனால் கிரீஸ் நாட்டின் தீப்ஸ் நகரில் உள்ளது பற்றித்தான் இந்தக் கதை.

இதோ சிலப்பதிகார பூதக் கதைகள்:

இந்திரன் தலை நகரான அமராவதியை முசுகுந்தன் என்ற சோழ மன்னன் காத்தான் என்றும் அதற்கு நன்றி தெரிவிக்கும் முகத்தான் காவல் பூதத்தையும் ஐந்து வகை மன்றங்களையும் அனுப்பிவைத்தான் என்றும் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் எழுதியுள்ளார் (5: 65-67, 6:7-17). (முசுகுந்தன் என்ற மன்னன் பெயரை உரைகாரர்கள் தந்தனர்).

காவல் பூதம் அமராவதியில் அசுரர் விடுத்த இருள் அம்பினைப் போக்கியது. இந்திரன் அனுப்பியதால் பூம்புகாருக்கு வந்து நாளங்காடியில் தங்கி பலிகளை ஏற்றுவருகிறது என்று சிலம்பு கூறும் (7: 14)

ஐவகை மன்றம் பற்றி சிலப்பதிகாரம் மிகவும் விரிவான தகவல்களைத் தருகிறது (5: 111- 140). 1.) சுருக்கமாகச் சொன்னால், களவாட நினைப்போரை நடுங்க வைக்கும் வெளியிட மன்றம் 2.) நோயால் அழுகியவரைக் குணப்படுத்தும் மன்றம். அதாவது ஒரு பொய்கையில் குளித்தவுடன் நோய்கள் ஓடிவிடும். நம் ஊர் புஷ்கணிகள் போல 3.) நஞ்சாலும் பேயாலும் துன்புற்றாரின் துயர் நீக்க ஒளியை வீசும் மன்றம். அதாவது நவீன லேஸர் ஒளிக் கற்றை சிகிச்சை போல.4.) ஒழுக்கம் கெட்டவரை நிலத்தில் புடைத்துச் சாப்பிட்டு விடும் சதுக்க பூதம் ( இது உண்மையில் இருந்தால் ஜனத்தொகைப் பெருக்கப் பிரச்சினை பற்றி நாம் கவலையே பட வேண்டாம். அதுவே மக்கட் தொகையைக் குறைத்துவிடும்!! 5.) அரசன் செங்கோல் தவறி ஆட்சி புரியினும் சபையோர் நேர்மை குன்றினாலும் கண்ணீர் விட்டு அழும் பாவை மன்றம் ( இது இன்று இருந்தால் நித்திய அழுகைதான்!!)

இது தவிர அழற்படுகாதையில் ஆதி பூதம், அரச பூதம், வணிக பூதம், வேளாண் பூதம் ஆகிய நால் வருணப் பூதங்களும் மதுரை தீப்பற்றி எரிவதற்கு முன்னரே வெளியேறி விட்டதாகவும் இளங்கோ பாடுகிறார்.

அடைக்கலக் காதையில் பத்தினிப் பெண் ஒருத்தியைப் பற்றிப் பொய்யுரை உரைத்த ஒருவனை ஒரு பூதம் பாசக் கயிற்றால் பற்றிப் புடைத்து உண்டதாகவும் இருக்கிறது. பொய்க்கரி சொன்னவனுடைய தாயார் தனது மகனை விட்டுவிட்டு தன்னைப் பிடித்துக் கொள்ளலாம் என்று கெஞ்சிக் கேட்டபோதும் அதை பூதம் ஏற்கவில்லை. அந்த மனிதனை அவர்கள் கண் முன்னாலேயே அறைந்து கொன்று உண்டு விட்டது என்கிறார் இளங்கோ.

காடுகாண் காதையில் மதுரைக்கு வழி கேட்ட கோவலனுக்குப் பதில் கூறிய மறையவன், திருமாலிருஞ் சோலை பக்கத்தில் மூன்று பொய்கைகள் உள்ளதாகவும் அங்குள்ள தெய்வங்கள் என்ன என்ன கேள்விகள் கேட்கும் என்றும் என்ன பதில் கூறினால் நல்லது என்றும் சொல்லித் தருகிறான். இவை எல்லாம் கிரேக்க பூதக் கதையில் வரும் சில அம்சங்கள்.

புலவர் பெயர்களிலும் பூதம், பேய் உண்டு. சதுக்க பூதனார், பேய்மகள் இளவெயினி, காரைக்கால் பேயார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்—இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

கிரேக்க பூதம்

எகிப்திலும் கிரீஸிலும் ஸ்பிங்ஸ் உண்டு. ஸ்பிங்ஸ் சிலை பாதி சிங்கமாகவும், பாதி பெண் ஆகவும் இருக்கும். இரண்டு நாடுகளிலும் தீப்ஸ் என்ற நகரும் உண்டு. ஆனால் பூதக் கதை கிரேக்க வீரன் ஈடிபஸ் பற்றியது. அவன் பாதி சிங்க உடலும் பாதி பெண் உருவமும் கொண்ட ஸ்பிங்ஸைப் பார்க்கிறான். அது கேள்விகள் கேட்கும். பதில் சொல்லாதவர்களைப் பிடித்துச் சாப்பிட்டு விடும். தீப்ஸ் நகர மக்களுக்கு இது ஓயாத கவலை தந்தது. வழிப்போக்கர்களைக் கேள்வி கேட்டு அச்சுறுத்தி வந்தது. இதைப் படிக்கும் போது மஹாபாரதத்திலுள்ள யக்ஷப் ப்ரஸ்னம் கதையும் ,விக்ரமாதித்தன் வேதாளம் கதைகளும் ஞாபகத்துக்கு வரும்.

ஈடிபஸ் போனபோது அவனிடம் கேட்ட கேள்விகள்: எது சில நேரம் இரண்டு காலகளோடும் சில சமயம் மூன்று கால்களோடும் சில சமயம் நான்கு கால்களோடும் நடக்கும். எது அப்படி 4 கால்களோடு நடக்கையில் பலவீனமாக இருக்கும்?

ஈடிபஸ் கொடுத்த விடை: மனிதன். குழந்தையாக இருக்கும் போது எழுந்து நிற்க முடியால் நாலு “கால்”களில் தவழ்ந்து செல்லுவான். பின்னர் இரண்டுடன் நடந்து கைத்தடியுடன் நடக்கையில் மூன்று கால்களோடு இருப்பான்.

ஒருவரை ஒருவர் பாதிக்கும் சகோதரிகள் யார்? பகலும் இரவும் என்று ஈடிபஸ் பதில் கொடுத்தான். இறுதியில் ஸ்பிங்ஸ் ஒரு மலையிலிருந்து விழுந்து இறந்தது.

ஆக கேள்விகள் கேட்டு அச்சுறுத்துவது, தவறிழைப்போரைச் சாப்பிடுவது ஆகிய அம்சங்களில் சிலப்பதிகார தமிழ் பூதத்துடன் ஒற்றுமையைக் காணலாம்.

***************************

 

டெல்பி ஆரூடமும் குறி சொல்வோரும்

கிரேக்க (Greece) நாட்டில் உள்ள டெல்பி ஆரூடம் ( Delphi Oracle ) உலகப் புகழ் பெற்றது. காரணம் என்னெவென்றால் கிரேக்க நாட்டின் அறிஞர்களும் ரோமானிய மன்னர்களும் இங்கு வந்து ஜோதிடம் கேட்டனர். அது மட்டுமல்ல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் மக்கள் இதில் (கி.மு 800 முதல் கி.பி.300 வரை) நம்பிக்கை வைத்து அங்கே போனார்கள். இப்போதும் இது ஒரு பெரிய சுற்றுலா தலமாக விளங்குகிறது.

 

தமிழ் நாட்டில் குறிசொல்லும் குறத்திகள், சாமி ஆடுவோர், கோடங்கி அடித்து சோதிடம் சொல்லுவோர், நாடி சோதிடக் குறிப்புகள் எழுதுவோர் என்ன என்ன எல்லாம் செய்தார்களோ அத்தனையும் இங்கே செய்திருக்கிறார்கள். கிரேக்க நாட்டில் இது போல பல குறி சொல்லும் இடங்கள் இருந்தபோதும் பிதகோரஸ், ஹெரோடாட்டஸ், ஈடிபஸ், ப்ளூடர்ச், சாக்ரடீஸ், அலெக்சாண்டர், ரோமானிய மன்னர்கள்  மற்றும் பல தலைவர்கள் வந்த இடம் டெல்பியே. அங்கு இசைப் போட்டி நடத்தி பரிசு கொடுப்பதும் வழக்கம்.

 

பர்னாசஸ் மலைப் பகுதியில் ஒரு குகை போன்ற அறையில் ஒரு பெண் உட்கார்ந்திருப்பாள். அங்கு புகை வரத் துவங்கும். பின்னர் வந்திருப்பவர்கள் கேள்வி கேட்டால் அதற்கு தெளிவில்லாத, விளங்கிக் கொள்ள முடியாத வகையில் பதில்கள் கிடைக்கும். அம்மையார் ஓரிரு வரிகளில் பதில் தருவார். பல விஷயங்கள் இரு பொருள்பட இருக்கும். பக்கத்தில் உள்ள ஒரு பூசாரி, அந்த அம்மையார் கூறிய ஆரூடத்தை விளக்குவார். அங்கு பூமியிலிருந்து வந்த புகை “எதிலின்” என்ற ரசாயன வாயு என்றும் அது போதையை உண்டாக்கவே இப்படி அம்மையார் உளரத் துவங்கினார் என்றும் சில ஆராய்ச்சியாளர் சொன்னதெல்லாம் இது வரை நிருபணமாகவில்லை.

டெல்பியில் நடந்ததை ஒவ்வொரு அம்சமாகப் படியுங்கள். நீங்களே தமிழ் நாட்டில் நடந்த, நடக்கும் விஷயங்களுடன் ஒப்பிட முடியும். (சிலப்பதிகாரத்தில் இதே போல கேள்வி கேட்கும் பூதங்கள் பற்றி வருகிறது. அப்பர் பெருமானுக்கும் சுந்தரருக்கும் பூதங்கள் வந்து உதவி செய்தன. அவைகளை ஏற்கனவே தனிக் கட்டுரைகளில் கொடுத்துள்ளேன்).

1.இங்கே அபல்லோ தெய்வத்தின் கோவில் உள்ளது. அவர் பைதான் என்னும் பாம்பைக் கொன்று உலகைக் காப்பாற்றினார். அவர் டால்பின் வடிவு எடுத்து, முதுகில் கிரீட் தீவு பூசாரிகளை ஏற்றிக் கொண்டு வந்தார். (கிருஷ்ணனின் காளிங்க நர்த்தனமும் மச்சாவதரக் கதையும் உங்களுக்கு நினைவுக்கு வந்திருக்கும்).

2.இங்கே மூன்று பொன்மொழிகள் எழுதப்பட்டிருக்கும் 1.உன்னையே நீ அறிவாய். 2.அளவுக்கும் மிஞ்சாதே (அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷமாகும் 3. உறுதி எடு, விஷமம் செய்யாதே. இந்தப் பொன்மொழிகள் ஏழு முனிவர்கள் கொடுத்தது. (இப்போது சப்த ரிஷிக்களும், உபநிஷத வாக்கியங்களும் நம் நினைவுக்கு வரும்)

3. சாமி ஆடும் பெண் வேகமாகப் பேசுவார். அதை பூசாரிகள் விளக்கி அர்த்தம் சொல்லுவார்கள் (இதுவும் நம் ஊர் மாதிரிதான். நாடி சோதிடத்தில் அவர் ஒன்று செய்யுள் வடிவில் சொல்ல பக்கத்தில் உள்ளவர்கள் வேறு ஒன்று உரை நடை வடிவில் சொல்லுவார்கள்.)

4. பூசாரினி சொல்லுவதில் ஒரு சொல்லையோ, கமா (காற்புள்ளி) வையோ இடம் மாற்றிப் போட்டால் அர்த்தம் அனர்த்தம் ஆகிவிடும். “Go Return Not Die in War”. என்று பூசாரினி கூறுவாள். இதில் ஆங்கிலச் சொல் “நாட்” என்பதற்கு முன் காற்புள்ளியை (,,,,,) ப் போட்டால் போருக்குப் போ, திரும்பி வா, போரில் இறக்க மாட்டாய் என்று அர்த்தம் வரும். ஆங்கிலச் சொல் “நாட்” என்பதற்குப் பின்னால் காற்புள்ளியை வைத்தால் போருக்குப் போ,,திரும்பி வராதே, செத்துத் தொலை என்று பொருள் வரும். ஆக எப்படியும் பொருள் கொள்ளக் கூடிய நாட்ர்தாமஸ் எழுதிய செய்யுள் வடிவ சோதிடம் போல குழப்பத்தோடு வீடு திரும்புவார்கள் (இதுவும் நம் ஊர் ஜோதிடர்களையும் அவர்கள் கூறும் பரிகாரங்களையும் நினைவு படுத்தும்

5. பூசாரினி இருக்கும் இடத்துக்குக் கீழேயிருந்து நறுமணப் புகை வருவதாக அங்கே பூசாரியாக வேலை பார்த்த ப்ளூடார்ச் எழுதி வைத்துள்ளார். இது இயற்கையான ஊற்றிலிருந்து எழுந்த ரசாயன வாயு என்றும் செயற்கையாகப் போட்ட போதை ஊட்டும் பொருள் என்றும் கூறுவர் ( இதுவும் நம் ஊர் வேத கால சோம பானம் பற்றி மேல் நாட்டார் எழுதி வைத்தது போல எல்லோரையும் குழப்பும்).

6. பூசாரினிகளை இளம் வயதுப் பெண்களிலிருந்து தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் பிரம்மசர்ய விரதத்தைக் கடுமையாகக் கடைப் பிடிக்க வேண்டும். இது நம் ஊர் சந்யாசினிகளை நினைவுக்குக் கொண்டு வரும்.

7. ஒரு மன்னன் வந்து “நான் எதனால் சாவேன் என்று கேட்டானாம். பூசாரினி சொன்னாள்: மூஸ், மூஸ், மூஸ் என்று. பக்கத்தில் இருந்த பூசாரி எலி என்று மொழி பெயர்த்தானாம். கிரேக்க மொழியில் எலி (மூஷிகம்),தசை (மஸில்), மனிதனுடைய பெயர் (எடுத்துக் காட்டு: மோசஸ்) என்று பல பொருள்கள் உண்டு. ஆகையால் அந்த மன்னன் எலிகளை எல்லாம் ஒழித்தானாம். மூஸ் என்ற பெயருடையவர் எல்லோரையும் விரட்டிவிட்டானாம். கடைசியில் தசைப் (மஸில்) பிடிப்பால் இறந்தானாம். இதே போல கம்சன்–கிருஷ்ணன், இந்திரன் – விருத்தாசுரன், ஹிரண்யகசிபு—பிரஹ்லாதன் கதைகளில் நாம் படிக்கிறோம்.

8. ஒரு நாள் ஒரு ஆட்டிடையன் பர்னாசஸ் மலை அடிவாரத்துக்குப் போனான் என்றும் ஆடுகள் குகைக்குள் போகவே அவை வினோதமாகக் கூச்சலிட்டன என்றும் அவன் உள்ளே போனபோது சாமி ஆடி வருங்காலம் உரைக்கும் கணியன் ஆக மாறினான் என்றும் எழுதி வைத்துள்ளனர். (இது நம் ஊர் ஸ்தல புராணக் கதகள் போல இருக்கிறது!!)

சுருக்கமாகச் சொன்னால் கிரேக்க நாட்டு பழக்க வழக்கங்கள் இந்திய, அதிலும் குறிப்பாக, தமிழ் நடைமுறைகளை ஒத்து இருக்கும். (கிரேக்க—தமிழ் மொழி தொடர்பு பற்றிய வேறு இரண்டு கட்டுரைகளில் மேல் விவரம் காண்க)

 

 

முதல் திராவிட ராணி:கி.மு.1320

Kerala Royal Lady-Painting by Raja Ravivarma

திராவிடா என்ற ஒரு பெண்ணின் பெயர் மிக மிகப் பழைய பெயராக சம்ஸ்கிருத இலக்கியத்தில் இடம்பெறுகிறது. இவர் திராவிட நாட்டிலிருந்து சென்ற அரச குலப் பெண்ணாக இருக்க வேண்டும். இவர் த்ருணபிந்து என்பவரின் மகள். விஸ்ரவஸ் என்பவரின் தாய். இந்த வம்சங்களை ஆராய்ந்து பர்ஜிட்டர் (parjiter)  போன்ற புராண ஆராய்ச்சியாளருடன் ஒப்பிடும்  ஆர்.மார்ட்டன் ஸ்மித் (R. Morton Smith: Dates and Dynasties in Ancient India, Motilal Banarsidas)  இப்படி வரிசைப்படுத்துகிறார்.

த்ராவிடா—விஸ்ரவஸ்—விசால—ஹேமசந்திர—உசந்திர—தூம்ராஸ்வ—ஸ்ரீஞ்சய—சஹதேவ—க்ர்சாஸ்வ—சோமதத்த—ஜனமேஜய—ப்ரமாதி

ப்ரமாதி என்ற மன்னன் தசரதனின் தந்தையான அஜன் காலத்தவன். மார்ட்டன் ஸ்மித் கணக்குப்படி த்ருண பிந்துவின் காலம் கி.மு.1320. இந்த அரசர் வரிசை புராணங்களில் கொடுக்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் சுமேரிய, பாபிலோனிய, எகிப்திய கதைகளிலுள்ள மன்னர்களுக்கெல்லாம் காலம் கணித்த பின்னரும் நாம் மட்டும் புத்தர் காலம் (கி.மு ஆறாம் நூற்றாண்டு) முதல் வெள்ளைக்காரர் எழுதிய சரித்திரத்தையே இன்று வரை படித்து வருகிறோம். உண்மையில் ராமர், தசரதர் காலம் எல்லாம் இதற்கும் முன்னிருக்க வேண்டும். ஆனால் மார்ட்டன் ஸ்மித் , பர்ஜிட்டர் போன்றவர்கள் ஒவ்வொரு மன்னனுக்கும் 20 முதல் 30 ஆண்டு மட்டுமே ஒதுக்கியும் கூட அவர்கள் காலம் கி.மு.1300ஐ ஒட்டிச் செல்கிறது!

ஆனால் இதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. விஜயன் என்ற மன்னன் இந்தியாவின் ஒரிஸ்ஸா/ வங்காளப் பகுதிலிருந்து நாடு கடத்தப் பட்டு இலங்கையை அடைந்தவுடன் அவனுக்கும் அவனுடைய மந்திரிகளுக்கும் மணம் முடிக்க பெண்கள் இல்லை. பாண்டிய நாட்டுப் பெண்கள்தான் அங்கு சென்று அவர்களைக் கல்யாணம் செய்துகொண்டனர் என்று இலங்கை வரலாற்றைக் கூறும் மஹாவம்சம் என்ற நூலில் உள்ளது. இது நடந்தது கி.மு ஐந்தாம் நூற்றாண்டு.

மன்னர்கள் பல நாட்டுப் பெண்களை மணப்பது தொன்று தொட்டு நடந்துவருகிறது. காந்தார (ஆப்கனிஸ்தான்) நாட்டுப் பெண்ணான காந்தாரியை திருதராஷ்ட்ரன் மணந்தான். கேகய (ஆப்கனிஸ்தான் /ஈரான்) நாட்டுப் பெண்ணான கைகேயியை தசரதன் மணந்தான். செல்யூகஸ் நிகடார் என்ற கிரேக்க மன்னனின் மகளை மௌர்ய சந்திர குப்தன் மணந்தான்.

மஹாபாரத வீரன் அர்ஜுனன் மணக்காத இனமே இல்லை. அர்ஜுனன் பாண்டிய குமாரியை மணந்ததாக நாட்டுபுற பாடலும் உண்டு. (அர்ஜுனனும் வந்துவிட்டார் அல்லி ராணி).

2000 ஆண்டுகளுக்கு முன் அகத்திய மகரிஷி தென்கிழக்காசிய ( நாக நாட்டு) மங்கையை மணந்து அங்கு இந்து சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தார். அது முஸ்லீம்கள் வரும் வரை 1300 ஆண்டுகளுக்கு நீடித்தது. ஆனால் லோபமுத்ரா என்ற பெண்ணை மணந்த ரிக் வேத அகத்தியர் வேறு. மணி மேகலை கதையிலும் இதே போல நாகநாட்டு மங்கை பீலிவளையைச் சோழ மன்னன் கிள்ளிவளவன் மணந்த வரலாறு வருகிறது.

பாண்டியர் –குஜராத்தி தொடர்பு

“ஆவஸ்யக சூர்னி” என்ற சமண மத நூல் ஒரு அரிய தகவலைத் தருகிறது. மதுரைக்கும் சவுராஷ்ட்ர தேசத்துக்கும் (குஜராத்தின் ஒரு பகுதி) இடையே தொடர்ந்து கப்பல் போக்குவரத்து இருந்ததாகவும் பாண்டு சேனன் என்ற மதுரை மன்னன் தனது இரண்டு மகள்களுடன் சென்றபோது புயல் காற்று வீசி கப்பல் உடைந்தவுடன் முருகனையும் சிவனையும் வேண்டிக் கொண்டதாகவும் கூறுகிறது. முருகனும் சிவனும் தமிழுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பதோடு அவர்கள் இருவரும் தமிழ் சங்கத்தில் தமிழ் ஆராய்ந்ததாகவும் நாம் படிக்கிறோம். ஆக, இது சங்க காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி என்றும் கருதலாம். புறநானூற்றில் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற மன்னன் கடல் பயணத்தில் இறந்ததையும் நினைவிற்கொள்ள வேண்டும்.

மதுரை மன்னன் மலயத்வஜ பாண்டியன் சூர சேன (குஜராத்) மன்னன் மகளான காஞ்சன மாலாவை மணந்து மீனாட்சியைப் பெற்றெடுத்தான். இதிலிருந்துதான் தற்கால மதுரையின் வரலாறே துவங்குகிறது. மதுரையைச் சுற்றி கி.மு. மூன்றாம் நூற்றாண்டு கல்வெட்டுகள் இருப்பதைக் கருத்தில் கொண்டால் மலயத்வஜன் காலமும் 2000 ஆண்டுகளுக்கு முந்தியதே.

(திராவிடம் என்பதை இப்போது அரசியல்வாதிகள் பயன்படுத்தும் சொல்லுடனும், வெளிநாட்டார்,  நம் மீது திணித்த ஆரிய திராவிடவாதச் சொல்லுடனும் குழப்பிக் கொள்ளக் கூடாது. சங்க இலக்கியத்திலும் பழைய வடமொழி நூல்களிலும் ஆரியர் என்பது முனிவர்கள் வாழும் பகுதி, வட நாடு, பண்பாடுமிக்கவர்கள் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டது. திராவிடம் என்பது தென் பகுதியைக் குறிக்கும் சொல். இப்போது ஆங்கிலத்தில் மத்திய கிழக்கு, தூரக் கிழக்கு என்றெல்லாம் பெயரிட்டது போல இது ஒரு நிலவியல் சொல்.)

தசரதன் எழுதிய கடிதங்கள்

எகிப்து நாட்டு அரசனுக்கு இரண்டு பெண்களை மணம் முடித்த தசரதன் (Tushratta கி.மு.1354) என்ற மன்னனின் கடிதங்கள் மிகவும் புகழ் வாய்ந்த கடிதங்கள். அவை 3500 ஆண்டுகளுக்கு முன் எகிப்திய மன்னனுக்கு எழுதப்பட்ட கடிதங்கள். இவை விக்கி பீடியா போன்ற தளங்களில் முழு விவரங்களுடன் கிடைக்கும். மிட்டன்னி மன்னனான தசரதன் தனது சகோதரி ஜிலுகிபாவையும்(Gilukhipa), மகள் ததுகிபாவையும்(Tadukhipa) எகிப்பதிய மன்னன் மூன்றாம் அமணதேவனுக்கு( Amenhotep III)  மணம் முடித்தான். இதற்குப் பின் அவன் எழுதிய 10 கடிதங்கள் மிகவும் சுவையானவை. இப்பொது கியூனிபார்ம் எழுத்தில் மியூசியத்தில் உள்ளன. நமக்குத் தெரிந்து 4, 5 தசரதன்கள் இருப்பதால் இவர் ராமாயண தசரதனுக்கு முந்தியவரா பிந்தியவரா என்பது ஆய்வுக்குரிய விஷயம். மிக மிகப் பழமையான கலப்பின கல்யாணம் இதுதான். எகிப்து நாட்டுக்கே மிஸ்ரம் (கலப்பின) நாடு என்றுதான் பெயர்.

வட மொழி தென் மொழி நூல்கள் ஒரு உண்மையை மறைக்காமல் ஒத்துக் கொள்கின்றன. விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் முதல் அவதாரமான மச்சாவதாரம் தென்னாட்டில்தான் நடந்தது என்ற கதை வடமொழிப் புராணங்களிலேயே உள்ளது. திருஞான சம்பந்தரும் அவர் பிறந்த சீர்காழியைத் “தோணிபுரம்” (Boat City) என்றும் பிரளய காலத்தில் தோனி (Noak’s Ark) ஒதுங்கிய இடம் என்றும் பாடுகிறார். கடல் கோளும் சுனாமியும் சங்க இலக்கியத்தில் பல இடங்களில் குறிப்பிடப் படுகிறது. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கையில் தென்னாட்டு / திராவிட ராணிகள் பல நாடுகளுக்குச் சென்றது உண்மையே என்று அடித்துக் கூறலாம்.

தமிழ் இலக்கியங்களில் தென்னவன் என்ற சொல் யமனையும் பாண்டியனையும் ராவணனையும் குறிக்கும். இலங்கை ராவணன் , மிதிலைப் (பீஹார்- நேபாள எல்லை ) பெண்ணான சீதையைக் குறிவைத்ததும் இதனால் அன்றோ. ராமனுக்கெல்லாம் முன்னோனான அஜன் — இந்துமதி ஸ்வயம்வரத்துக்கு பாண்டிய மன்னனும் வந்ததாக புகழ் பெற்ற கவிஞன் காளிதாசனும் பாடுகிறான். அவனும் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவன். ஆக இது எல்லோருக்கும் தெரிந்த ஒரு வழக்குதான்.

*****************************

கிரேக்க – தமிழ் மொழி தொடர்பு -பகுதி 2

Oicture shows Asoka’s Greek-Aramaic inscription at Kandahar,Kabul Museum

(Please read the first part of Greek-Tamil Connection before reading this)

கிரேக்க மொழியும் தமிழ், சம்ஸ்கிருத மொழிகள் போல அ-வில் துவங்கி ஒ-வில் முடிகிறது. முதல் எழுத்து ஆல்பா, கடைசி எழுத்து ஒமேகா.

 

தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் பெரிய புலவர்களுக்கு தெய்வ என்ற அடைமொழியைக் கொடுப்பார்கள். இலக்கண மா மேதை பாணிணியை பகவான் என்ற அடைமொழி போட்டு பதஞ்சலி அழைக்கிறார். நாமும் தெய்வப் புலவன் என்று வள்ளுவனை அழைக்கிறோம். ஹோமரையும் தெய்வ ஹோமர் (Homer Theis) என்று கிரேக்கர் புகழ்வார்கள்.

 

தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் வலது பக்கத்தைப் புனிதமாகக் கருதுவார்கள். கடிகாரச் சுற்று முறையைக் கண்டு பிடித்தவர்களே இந்தியர்கள் என்பது எனது ஆய்வில் கண்ட முடிவு. கோவிலை வலமாகச் சுற்றவேண்டும். வலது காலை எடுத்து வைத்து வீட்டுக்குள் நுழைய வேண்டும் ( மண மகளே மண மகளே வா வா, உன் வலது காலை எடுத்து வைத்து வா வா என்ற சினிமா பாட்டை இப்பொழுதும் எல்லா திருமண அரங்குகளிலும் போடுகின்றனர்).

 

வலப் பக்கம் விழுந்த உணவைத்தான் புலி சாப்பிடும், இடப்பக்கம் விழுந்தால் சாப்பிடாது என்று சங்க இலக்கியத்தில் ஏராளமான இடங்களில் படிக்கிறோம். காளிதாசனும் தீ வலப் பக்கமாகச் சுழித்து எரிந்தது நல்ல சகுனம் என்று பாடுகிறான். ஹோமர் எழுதிய ஆடிசியிலும் வலது பக்கம் புனிதம் என்று (2-172) உள்ளது. லத்தீன் மொழியில் சினிஸ்டர் Sinister (இடது) என்றாலே தீயது என்று பொருள்.

 

பாண்டியோன் என்ற குழந்தையின் தலைமையில் வந்த ஒரு குழு ஏதென்ஸ் நகரில் குடி ஏறியதாக வரலாற்றின் தந்தை எனக் கருதப்படும் ஹெரொடோட்டஸ் (Herodotus) கூறுகிறார். அவர்கள் கிரீட் (Crete) என்னும் தீவிலிருந்து வந்ததாகவும் கூறுகிறார். கிரேக்க நாட்டின் பழங்குடி மக்கள் டெர்மிலை (Termilai) என்றும் அவர் கூறுவார். இது த்ரமிளர்=தமிழர் என்ற சொல்லைப் போல உள்ளது

 

பழந்தமிழகத்தில் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை ஆகிய ஐந்து நிலங்களுக்கும் தனிதனி பண்கள் இருந்தன. இவ் வழக்கம் கிரேக்கரிடையேயும் இருந்தது. அப்பண்களை தமிழ்ப் பண்களோடு ஒப்பிட்டவர்கள் சில ஒற்றுமை இருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளனர். வாணிகத் தொடர்பினால் தமிழ்ப் பண்களைத் தழுவி அவர்கள் எட்டுக்கட்டி இருக்கலாம்.

 

இவை எல்லவற்றையும் ஒரு புறம் ஒதுக்கிவைத்துவிட்டு ஆங்கிலம்- தமிழ் மொழி ஒற்றுமையைப் பார்த்தால் ஆயிரக்கணக்கான சொற்கள் ஒரே மாதிரி இருப்பதை அறியலாம். ஆங்கிலமோ சம்ஸ்கிருதம் தொடர்புடைய இந்தோ ஐரோப்பிய குடும்பத்தைச் சேர்ந்த மொழி. தமிழுடன் எப்படி தொடர்பு வர முடியும்?

 

தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் ஒரே மூலம் இருந்தால்தான் இது நடக்க முடியும். அந்த மூலத்தைக் கண்டு பிடித்தால் பழைய மொழிக் கொள்கைகள் தகர்ந்துபோகும்.

(சாத்தூர் சேகரன் என்பவர் இது குறித்து ஆராய்ந்து பல புத்தகங்களில் எழுதியுள்ளார். அவரை 20 ஆண்டுகளுக்கு முன் பி.பி.சி. தமிழோசையில் பேட்டி கண்டேன். அப்போது இது பற்றி எழுப்பிய கேள்விகளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக விடை கிடைத்து வருகிறது.)

 

உலகில் எல்லோரும் ஒரு கூரையின் கீழ் வாழ்ந்தபோது பேசிய மொழியின் மிச்ச சொச்சங்கள் இப்பொழுதும் ஒவ்வொரு மொழியிலும் இருக்கின்றன. இதனால் எந்த இரண்டு மொழிகளுக்கும் இடையே சில சொற்களாவது ஒரே மதிரியாக இருக்கும். ஆனால் எண்கள். உறவு முறைகள், நான், நீ, அவன் அவள் போன்ற சொற்கள், முக்கியமான வினைச் சொற்கள் ஆகியன ஒன்றாக இருந்தாதான் நெருக்கம் அதிகம் என்று கருத முடியும்.

 

ஹிப்பொக்ரடீஸ், பிதகோரஸ் (Hippocrates, Pythagoras)  ஆகியோர் கி.மு ஐந்தாம் நூற்றாண்டிலேயே இந்திய மருத்துவ கணித சாத்திரங்களை அறிந்திருந்தனர். இதற்கான நல்ல ஆதரங்கள் கிடைத்துள்ளன.

பிதகோரஸ் மறு பிறப்பிலும் ஆத்மாவிலும் நம்பிக்கை உடையவர். அவருடைய பெயர் புத குரு என்று ஈ. போகாக் என்னும் அறிஞர் கூறுவார். அவர் எழுதிய ஆங்கிலப் (India in Greece by E Pococke published in 1851) புத்தகத்தில் நிறைய ஒப்புமைகளைக் காட்டுகிறார். அவர் இந்தியாவிலுள்ள பழங்கால இடப் பெயர்களை அதிகமாக ஒப்பிடுகிறார்.

 

ஒலிம்பிக்ஸ் (Olympics) போட்டி 2750 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கத்தில் துவங்கியது. ஆனால் அதற்கு முன்னரே நாம் ஜல்லிக்கட்டு நடத்தி பரிசு கொடுத்தோம். இந்திரப்பிரஸ்தம், ஹஸ்தினாபுரம் போன்ற இடங்களில் அரசர்கள் மட்டும் கலந்து கொள்ளும் போட்டிகள் நடந்தன. மகாபாரதத்தில் இது பற்றி விரிவான செய்திகள் இருக்கின்றன.

கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸின் (Socrates) சீடர் பிளாட்டோ (Plato). அவருடைய சீடர் அரிஸ்டாடில்(Aristotle) . அரிஸ்டாடிலின் சீடர் அலெக்ஸாண்டர் (Alexander) . அவர் இந்தியா மீது படை எடுத்ததற்கு முக்கிய காரணங்கள் இந்தியாவின் செல்வச் செழிப்பும் தத்துவ ஞானச் சிறப்பும் தான் காரணம். இவை இரண்டிலும் அலெக்சாண்டருக்கு ஆர்வம் அதிகம். ஒரு சன்யாசியையாவது தன் நாட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று தலை கீழாக நின்றார். ஆனால் முடியவில்லை.

போரஸ் என்னும் மன்னனர் புருஷோத்தமனை வெல்லுவதற்குள் அவருக்குப் போதும் போதும் என்று ஆகிவிட்டது. உன்னை எப்படி நடத்த வேண்டும் என்று கேட்ட கேள்விக்கு அவன் கொடுத்த பதில் அலெக்ஸாண்டாரை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது. போரஸின் வேண்டுகோளின்படியே அவரை மன்னருக்குரிய மரியாதையுடன் நடத்தினார். இந்தியாவின் மீது அவருக்கு அவ்வளவு மதிப்பு.

**************