வேதத்தில் மரங்களின் கதை (Post No.4372)

Written by London Swaminathan 

 

Date: 6 NOVEMBER 2017

 

Time uploaded in London- 18-36

 

 

Post No. 4372

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Sacred Tree in Varanasi/ Benares

விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் நியக்ரோத, உதும்பர, அஸ்வத்த என்று மூன்று மரங்களின் பெயர்கள் விஷ்ணுவின் அம்சமாக வழிபடப்படுகின்றன. மஹாபாரதத்தில் உள்ளதும், ஸ்ஹஸ்ரநாமங்களில் பழையதுமான ஒரு துதியில் மூன்று மரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மர வழிபாடு வேத காலத்திலேயே உண்டு. மேலும் இந்துக்கள் ஐரோப்பாவில் குடியேறி அவர்கள் பண்பாட்டைப் பரப்பியபோது விட்டு வந்த மிச்ச சொச்சங்களை இன்றும் ஐரோப்பாவில் காணலாம். இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் ஹாலிவுட் (ஹோலி உட் = புனித மரம்) ஹோலிஓக் (புனித ஓக் மரம்) இப்படி நூற்றுக் கணக்கான இடப் பெயர்கள் உண்டு.

 

 

2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஓவிட் (Ovid) என்னும் ரோமானியப் புலவர் மரங்களுக்கு காணிக்கை செலுத்துவது, நூல் கட்டுவது, கந்தைத் துணிகள் சாத்துவது பற்றிப் பாடியுள்ளார். இந்துக்கள் இயற்கையின் எல்லா றை அம்சங்களையும் வணங்கினர். மற்ற நாடுகளில் பழைய மர வழிபாடு இலக்கியத்திலும் மியூஸியங்களிலும் மட்டும் உள்ளது. ஆனால் இந்தியாவிலோ இமயம் முதல் குமரி வரை இன்றும் மர வழிபாடு இருக்கிறது.

 

தமிழ் நாட்டின் கோவில்களில் தல விருட்சங்கள் இருப்பது போல வட இந்தியாவில் புனித க்ஷேத்ரம் முழுவதும் புனித மரங்கள் இருக்கின்றன. வேத காலத்தில் பிப்பலாடன் (அரச மரம்) என்ற பெயரில் ரிஷி முனிவர்கள் வாழ்ந்தனர். பிராமணர்கள் அரச மரக் குச்சி (ஸமித்து) இல்லாமலோ தர்ப்பைப் புல் இல்லாமலோ வாழ முடியாது– அந்த அளவுக்கு அவர்கள் வாழ்க்கையில் குஸ ( தர்ப்பை) புல், அரச, பலாச மரங்கள் இணைந்து பிணைந்துள்ளன. ராமனின் புதல்வர்கள் இருவரில் ஒருவர் பெயருக்குக் காரணமே தர்ப்பைப் புல் (குஸ) தான்.

ஓரிரு வேதக் கதைகளைக் காண்போம்

 

பூமி, பிரஜாபதி ஆகியோரின் முடி (மயிர்) தான் தாவரங்கள் என்று சதபத பிராமணம் கூறும்; அதாவது ஒரு காலத்தில் தாவரங்களே இல்லாத பூமியில் தாவரங்கள் வளர்ந்ததை கதை போலச் சொல்லும் பகுதி இது.

 

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு- என்ற முது மொழியின்படி பூமியில் உள்ள தாவரங்கள்= மனிதனின் உடலிலுள்ள முடி

பூமியிலுள்ள ஆறுகள்= மனிதனின் உடலிலுள்ள ரத்தக் குழாய்கள்

 

–இவ்வாறு பல விளக்கங்கள் உண்டு.

 

கதை போலச் சொல்லுவதால் அதன் பின்னுள்ள மறை  பொருளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 

 

முக்கியமான விஷயம் என்ன வென்றால் தர்ப்பை (குஸ), தூர்வா (அருகம் புல்) உதும்பர, அஸ்வத்த, வட/ஆலம் மரங்கள் பற்றிய குறிப்புகள் வேத காலம் முதற்கொண்டே இருக்கின்றன என்பதே.

Kadamba Tree in Chir Ghat near Yamuna River

காட்டிலுள்ள தாவரங்களையும் மரத்திலுள்ள பழங்களையும் சாப்பிடலாம் என்று பிராமண நூல்கள் சொல்லும்.

 

பிதகோரஸ் என்ற கிரேக்க தத்துவ அறிஞர், அவரை (Beans) விதைகளை சாப்பிடக்கூடாது என்று தடுத்ததாகச் சொல்லுவர். இந்துக்களும் இப்படிப் பல தாவரங்களைத் தவிர்த்தனர். ரோமன் கத்தோலிக்க மதத்தினரும் , விரத காலத்தில் சில வகை உணவுகளை உண்ண மாட்டார்கள்.

 

உதும்பர என்பது அத்தி வகைத் தாவரம். இதில் செய்யப்பட்ட நாற் காலி அல்லது ஆசனத்தின் மீதமர்ந்து குளிப்பது பற்றி பல குறிப்புகள் பிராமண நூல்களில் உள.

 

உதும்பர மரம் பறிய கதை ஒன்று:–

 

தேவர்களும் அசுரர்களும் பிரம்மாவிடம் தோன்றினர். அவர்கள் அக்னியை முன் நிறுத்தி, அசுரர்களிடம் சென்றனர். அவர்கள் அக்னியை வெட்டி வீழ்த்தவே அது பூமியில் ‘க்ரிமுக’ மரம் ஆனது இதனால்தான் அது செந்நிற,,,,,தில் உளது.

 

பிரஜாபதி, முதல் யாகம் செய்தபோது அங்கிருந்து ‘வின்கங்கட’ மரம் வந்தது. அதன் மூலம் அவர் கைகளை சுத்தப்படுத்திக் கொண்டார்.

 

தேவர்களும் அசுரர்களும் பிரஜாபதியிடம் தோன்றினர். அவர்கள் ஒன்றாகச் செய ல்பட்ட காலத்தில் உதும்பர மரம் தவிர ஏனைய மரங்கள் எல்லாம் அசுரர் தரப்பில் நின்றன. ஆனால் தேவர்கள் வெற்றி பெற்றவுடன் எல்லா மரங்களும் தேவர் வசம் வந்தன. தோற்றுப்போன மரங்கள் எல்லாம் உதும்பர மரத்தில்  நுழைந்து கொண்டன. இதனால்தான் உதும்பர மரம் பால் வடியும் மரமாகவும் ஏராளமான பழங்கள் உடைய (அத்திப் பழம்) தாகவும் உளது.

Picture from Lalgudi Veda

இப்படிப்  பல கதைகள் சதபத, ஐதரேய பிராமனங்களில் இருக்கின்றன. அந்தக் காலத்திலேயே மரங்கள் பற்றி அக்கறை செலுத்தியதும், அதில் ஒரே இனத்தைச் சேர்ந்த (பைகஸ்  FICUS குடும்பம்) மூன்று மரங்களை விஷ்ணு சஹஸ்ரநாமம் வேதம் முதலியன குறிப்பிடுவதும் தாவர இயல் அறிவைக் காட்டும்.

 

மறை பொருள் உடைய கதைகள் என்பதால் இதன் மூலம் வேறு ஏதேனும் சொல்ல முற்பட்டனரா என்பதும் ஆராய்ச்சிக்குரியது.

 

எல்லாவற்றையும் விட முக்கியமானது—

தேவர்களும் அசுரர்களும் பிரஜாபதி என்னும் பிரம்மாவிடம் தோன்றியதாக கி.மு 1000 ஆண்டைச் சேர்ந்த பிராமண நூல்கள் கூறுவதாகும். இவைகளை  மறைத்துவிட்டு ஒரு தரப்பை பழங்குடியினர் அல்லது திராவிடர் என்று சித்தரிப்பது பிரித்தாளும் சூழ்ச்சியில் வல்ல வெளிநாட்டினரின் சதியாகும். சூத்திரர்களையும் கடவுளின் ஒரு பகுதி என்று ரிக் வேதத்தில் உள்ள புருஷ சூக்தம் சொல்லும். தேவர்கள், அசுரர்கள், ராக்ஷசர்கள் ஆகியோர் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றும் வேதம் சொல்லும்— ஆனால் இவைகளை மறைத்து அவர்களை ஆதிப் பழங்குடி போல சித்தரிப்பது விஷமிகளின் வேலை. ஆக தாவரவியல் தவிர மானுடவியலும் சமூகவியலும் இந்த நூல்களில் காணக்கிடக்கின்றன என்ப தை அறிக.

 

—சுபம்—-

வியப்பூட்டும் அதிசய மரங்கள்

Picture shows Udumpara (Aththi in Tamil, Ficus glomerata, Ficus Racemosa)

உலகில் மரத்தின் பெயரை நாட்டின் பெயராகவுடைய நாடுகள் மிகச் சிலதான். பாரதம் அந்தப் பெருமையை உடைய நாடு. இதன் பழைய பெயர் ‘நாவலந்தீவு’. சம்ஸ்கிருதத்தில் ‘ஜம்புத்வீபம்’. இது சிலம்பு, மணிமேகலை காப்பியங்களிலும், வடமொழி நூல்களிலும் காணப்படுகிறது. பிராமணர்கள் கோவில்களிலும் வீட்டுப் பூஜைகளிலும் இந்தப் பெயரைத் தான் இந்தியாவுக்குப் பயன் படுத்துகின்றனர். அதாவது பாரதம், இந்தியா, இந்துஸ்தானம் ஆகிய பெயர்களுக்கு எல்லாம் முந்தியது ‘ஜம்புத்வீபம்’!

பகவத் கீதையில் ‘மரங்களில் நான் அஸ்வத்தம் என்னும் அரச மரம்’ என்கிறான் கண்ணன். விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் ஆலமரம் (ந்யக்ரோத), அரச மரம் (அஸ்வத்தம்), அத்திமரம் ஆகிய மூன்றும் விஷ்ணுவின் பெயர்களாக வருகின்றன. அதாவது மரமே கடவுள். மௌனத்தின் மூலம் மாபெரும் தத்துவத்தை உபதேசம் செய்யும் தட்சிணாமுர்த்தியொவெனில் ஆலமரத்தின் கீழே அமர்ந்திருக்கிறார். (இது குறித்து ‘இந்திய அதிசயம்:ஆலமரம்’ Indian Wonder: The Banyan Tree என்ற நீண்ட கட்டுரையில் ஏற்கனவே எழுதிவிட்டேன்).

தாவரவியல் என்பதும் மரங்களை இனம் வாரியாக, குடும்பம் வாரியாகப் பிரிப்பதும் 1735ஆம் ஆண்டு முதல்தான் லின்னேயஸ் என்பவரால் உண்டாக்கப்பட்டது. ஆனால் விஷ்ணு சஹஸ்ரநாமம் (மஹாபரதத்தின் ஒருபகுதி) 3000 ஆண்டுகளுக்கு முன்னரே இதைப் பின்பற்றிவிட்டது. விஷ்ணுவின் பெயராக வரும் ஆல், அரசு, அத்தி மூன்றும் மோரேசி என்னும் குடும்பத்தையும் பைகஸ் என்ற ஜீனஸ்—ஐயும் சேர்ந்தவை!! (Family Moraceae, Genus: Ficus)

புத்த கயாவில் புத்தர் நின்று போதித்த அரச மரம் உள்ளது. இதை போதி மரம் என்று அழைப்பர். கயாவில் அக்ஷய வடம் எனப்படும் அழியாத ஆலமரம் ஒன்றும் இருக்கிறது. இவ்விரு மரங்களையும் பக்தர்கள் பயபக்தியுடன் வணங்கிச் செல்வது வழக்கம்.

உலகிலேயே மரங்களை இன்றும் வழிபடும் ஒரே மதம் இந்து மதம்தான். ஆலமரம் அரசமரம், உடும்பரா எனப்படும் அத்திமரம் ஆகியனவற்றை புராணங்கள் முழுதும் போற்றுகின்றன. அரச மரத்தில் மும்மூர்த்திகளும் இருப்பதாக தர்ம சாத்திரங்கள் பகர்கின்றன.

வேதத்திலும் உபநிஷத்துக்களிலும் மரங்கள் பற்றிய குறிப்புகள் உண்டு. உபநிஷதத்தில் ஒரு ரிஷியின் பெயரே பிப்பலாடன் (அதாவது திருவாளர் அரசமரம்).

ஒவ்வொரு யாகத்துக்கும் அரச மரம், ஆலமரக் குச்சிகளுடன் வேறு பல மரக்குச்சிகளும் தீயில் ஆஹுதி செய்யப் படுகின்றன. சந்தன மரத்தின் பெருமையை தமிழ், வடமொழி இலக்கியங்கள் பக்கம் பக்கமாகப் புகழ்கின்றன.

மரத்தின் பெயரால் பிரதேசங்களை அழைக்கும் வழக்கம் தமிழிலும் புராணங்களிலும் உண்டு.(இதுபற்றி தமிழர்களின் பூக்கள் மோகம் Flowers in Tamil Culture என்ற கட்டுரையில் ஏற்கனவே எழுதிவிட்டேன்)

புனித ஆலமரம்

கண்ணன் பகவத் கீதையை உபதேசித்த குருக்ஷேத்திரத்தில் ஒரு பெரிய ஆலமரம் இருக்கிறது. இது 5000 ஆண்டு பழமையானது என்றும் கிருஷ்ணன் இங்கேதான் கீதோபதேசம் செய்தான் என்றும் மக்கள் நம்புகின்றனர். இதே போல புத்தர் தங்கி தியானம் புரிந்த போதி (அரச) மரத்தின் கிளைகள் இலங்கை முதலான நடுகளுக்கு அனுப்பப்பட்டது. ஒரிஜினல் ஆலமரமோ அரச மரமோ இன்று இல்லாவிட்டாலும் அவற்றின் கிளைகள், விதைகளில் இருந்து தழைத்த மரங்கள் இருக்க வாய்ப்பு உண்டு.

அத்திமர அதிசயம்

அத்திமரத்துக்கு அற்புத சக்தி இருப்பதாக அதர்வண வேதம் (AV.xix-31) கூறுகிறது. இதில் தாயத்து செய்து போட்டுக் கொண்டதாகவும், அரிச்சந்திர மகாராஜா இதிதான் கிரீடமும் சிம்மாசனமும் செய்துகொண்டார் என்றும் புராணங்கள் பேசுகின்றன.

தமிழ்நாட்டுக் கோவில்தோறும் ஸ்தல மரமும், மன்னர்களுக்கு காவல் மரமும் இருந்தன. இது பற்றியும் இலக்கியத்தில் நிறைய விஷ்யங்கள் உண்டு. திருஞான சம்பந்தப் எருமான் ஆன் பனையைப் பெண்பனையாக மாற்றி அற்புதம் செய்ததைத் தேவாரத்தில் காணலாம்.

அற்புத வில்வ மரம்

கடலாடி பர்வத மலையில் மல்லிகார்ஜுனர் கோவிலில் ஒன்பதும் பதினொன்றும் தளங்கள் (இலைகள்) உடைய மஹா வில்வ மரங்கள் இருக்கின்றன. இது அபூர்வமாகவே காணப்படும். சிவ பெருமானுக்கு மிகவும் விஷேசமானவை.மலை மீது வளரும் கல் மூங்கில்கள் காஞ்சி சங்கராசார்ய சுவாமிகளின் தண்டத்துக்காக (கையில் வைத்திருக்கும் கம்பு) வரவழைக்கப்படுகின்றன. மதுரையின் தல விருட்சம் கடம்ப மரம், காஞ்சியின் தல விருட்சம் மாமரம் (ஆம்ர) போன்று ஒவ்வொரு கோவிலும் ஒரு மரத்துக்கு ஆதாரமாக விளங்குகின்றன.

 

திருத்தணி கன்னிக் கோயிலில் 7 மரம்

(தினமணிக் கதிர், 7-8-1983)

திருத்தணியில் கன்னிக் கோயில் உள்ளது. இது சப்த கன்னிகையால் ஆதியில் பிரதிஸ்டை செய்யப்பட்ட ஆத்மசுத்தி பெற்ற மகா சித்தர்கள் வசித்த இடம் சித்தர்களின் ஞான கடாக்ஷத்தால ஞான சுத்தி பெறக்கூடிய மரங்களை பிரதிஷ்டை செய்து வளர்த்துள்ளனர். அவை இன்றும் உள்ளன. ஒரு பெரிய மரத்தையொட்டி வளர்ந்துள்ள ஏழு மூலிகை மரங்கள் பின்னிப் பிணைந்து ஒன்றாக இருக்கின்றன.

அவை 1.அரசு. 2.கல்லரசு 3.கரும்பிலி 4.தேவ ஆதண்டம் 5. இருளி 6.வேம்பு 7. கார்த்திகம்

இது எங்கும் காண இயலாத ஒரு அற்புதச் சேர்க்கை. இது தவிர ஏழு கன்னிகைகள் வழிபாடு நடக்கிறது. கடுங்கோடையிலும் வற்றாத ஏழு தீர்த்தங்கள் 1. தாமரை 2.தாழை 3.திருமஞ்சனம் 4. அல்லி 5. பஞ்சேந்திரம் 6. பொய்கை 7. கர்ப்பவர்த்தி இருக்கின்றன. (தினமணிக் கதிர் சுருக்கம்)

வற்கலையில் அதிசயம்

கேரளத்தில் உள்ள வற்கலை ஜனார்த்தனம் கோவிலில் ஐந்து ஸ்தல விருட்சங்கள் ஒன்றாகப் பின்னிப் பிணைந்துள்ளன. இவை வெவ்வேறு வகை மரங்களாகும் (ஞானபூமி ,ஏப்ரல் 1985)

யானைப் புளியன்கொட்டை மரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உரிகம் என்னும் ஊரில் அதிசய புளியமரம் ஒன்றுள்ளது. அதன் காய்கள் மிகமிகப் பெரிதாக உள்ளது. அந்த வியப்பிற்குரிய மரத்தின் காய்களை பலர் எடுத்துச் சென்று அம்மாதிரி ரக புளியை வளர்க்க முயன்றுவந்தனர். ஓசூரில் நடந்த ஒரு பொருட் காட்சியில் இதன் காய்களை வேளண்மைத் துறையினர் காட்சிக்கு வைத்திருந்தனர். (மின் தமிழ் உறுப்பினர் நூ.த.லோ.சு.மயிலை தந்த தகவல்)

(இந்த மரத்தை ஆனைப் புளியங்கொட்டை மரம் என்று சொல்லுவார்கள். தாவரவியல் படிப்பவர்களுக்கு இதுபற்றித் தெரியும் ஏர்க்காடு பகுதியில் தாவரவியல் சுற்றுலாச் சென்றபோது பேராசிரியர்கள் இதைப் பறித்து எங்களுக்கு பாடம்சொல்லிக் கொடுத்தனர். மதுரைக் கல்லூரி தாவரவியல் சோதனைக் கூடத்தில் இது காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இன்றும் இருக்கக் கூடும்: லண்டன் சுவாமிநாதன்).

வெள்ளை வேப்ப மரம்

நாகை மாவட்டம் திருவாவடுதுறையில் உள்ள வேப்ப மரம் ஒன்றின் இலைகள் முழுதும் வெள்ளையாகவே இருக்கின்றன. அதன் கீழே அமர்ந்துள்ள அம்மனும் வெள்ளை மாரியம்மன் என்றே அழைக்கப்படுகின்றார். திருவாவடுதுறையில் இருந்து வழிவிடும் விநாயகர் கோவிலை அடுத்து ஒரு பாதை செல்கின்றது. சிறிது தூரம் சென்றால் ஒரு ஆறு வரும். அந்த ஆற்றங்கரையில் அம்மன் வேப்பமரத்தின் அடியில் அமர்ந்திருப்பதைக் காணலாம். (இது மின் தமிழிலிருந்து எடுக்கப்பட்டது).

தினமலரில் வந்த செய்தி:

சேர்ந்தமரம்: சேர்ந்தமரம் அருகே வேப்பமரத்தில் பால் வடியும் அதிசயத்தால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.நெல்லை மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள வெள்ளாளன்குளத்தில் உள்ள நாகமலை பாலமுருகுன் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயில் அருகே மாரியம்மன் சிலை ஒன்றும் உள்ளது. இந்த சிலை அருகே சிறிய வேப்பமரம் உள்ளது. மரத்தின் அடிப்பாகத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் பால் வடிய துவங்கியது.  இதனையறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் பால்வடியும் வேப்பமரத்திற்கு பூஜை செய்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.Dinamalar 8th February 2012

மரங்களைப் பற்றிய நூற்றுக்கணக்கான அதிசயங்களில் சிலவற்றை மட்டுமே கண்டோம். தருணம் வரும்போது மேலும் பல அதிசயங்களைக் காண்போம்.