வீணைக் கொடியுடைய வேந்தனே! (Post No.9124)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9124

Date uploaded in London – –9 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வீணைக் கொடியுடைய வேந்தனே!

கொடிகளைக் கண்டுபிடித்தவர்கள் இந்துக்கள்.  சின்னங்கள் முத்திரைகளைக் கண்டுபிடித்தவர்கள் இந்துக்கள் ; வாகனங்களையும் இறைவனுக்கு அர்ப்பணித்தவர்கள் இந்துக்கள் (READ MY OLD RESEARH ARTICLES ON VAHANAS, SYMBOLS AND FLAGS PLEASE). தொல்காப்பியத்திலேயே பலராமனின் பனைக்கொடி உளது.

புறநானூற்றுப் பாடல் 56, மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனாரால் பாடப்பட்டது அதில்  சிவனின் ரிஷபக் கொடி, முருகனின் மயில் கொடி, பலதேவனின் பனைக்கொடி, விஷ்ணுவின் கருடக்  கொடி  ஆகிய அனைத்தும்  குறிப்பிடப்படுகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்கள்  அதி தீவிர இந்துக்கள் . அவர்களுக்கு ராமாயண, மஹாபாரத, புராணக் கதைகள் அத்துபடி!! திருப்பறங்குன்றத்தில் இருந்த இந்திரன்-அகலிகை ஓவியத்தை ஒரு கிராமத்தான், அவனுடைய  மனைவிக்கு விளக்கிய பரிபாடல் காட்சி மூலமும் இது தெரிகிறது

துரியோனாதணனுக்கு பாம்புக் கொடி ; ராவணனுக்கு வீணைக் கொடி என்பதும் நமக்குத் தெரியும் .

ஆயினும் திருக்குறள் காலம் வரை யாழ் பற்றிய குறிப்பே கிடைக்கிறது. சங்கம் மருவிய காலத்தில் எழுத்து வடிவில் உருவான சிலப்பதிகாரத்தில்தான் முதல் முதலில் வீணையை சந்திக்கிறோம்.(6-18). ‘நாரதர் வீணை’ (6-18, 22) பற்றி இளங்கோ பாடுகிறார். பின்னர் மணிமேகலையில் (CHAPTER 29) காண்கிறோம் . ஆனால் கம்பன் பல இடங்களில் வீணைக் கொடியைக் குறிப்பிடுகிறான்; பாடுகிறான்

சம்பூர்ண ராமாயணம் திரைப்படத்தில் வரும் இராவணன் பற்றிய பாடல் எல்லோரும் கேட்டு ரசித்த பாடல் …………….

வீணைக் கொடியுடைய வேந்தனே

வீரமே உருவாகிடும் இசை வெள்ளமே

உயிரெனவே நினைந்து உலவும் வீணைக் கொடியுடைய வேந்தனே

ஆனந்தகான அமுத மழையே

பொழிந்து மனம் தனை உருக வழி செய்த

வீணைக் கொடியுடைய வேந்தனே (பாடல் – ஏ.மருதகாசி

வால்மீகி ராமாயணத்தில்தான் இதற்கான மூலம் உளது. ஸீதையைத் தேடிச் சென்ற அனுமன், ராவணனின் அந்தப்புரத்தில் நுழைந்த போது, ‘விபஞ்சி’ என்ற ஒரு வகை வீணையுடன் பல பெண்கள் தூங்குவதைக் காண்கிறான். ஒரு பெண்மணி வீணை வாசித்த களைப்பில் அதைக் கட்டிக்கொண்டு உறங்கும் காட்சியும் வருகிறது . இவை சுந்தர காண்டத்தில் உளது. ஆயினும் இராவணன் சாம கானப் பிரியன், சிவ பக்தன் , வீணை வாசிப்பதில் வல்லவன் என்று கேட்டபோதிலும் அவன் வீணை வசிக்கும் காட்சியை வால்மீகி வருணிக்கவில்லை. அவனுக்கும் வீணாவுக்கும் உள்ள தொடர்பை ஒரு அற்புத உவமை விளக்குகிறது. அவன் போர்க் களத்தையே வீணை வாசிப்பதற்கு ஒப்பிடுகிறான்.

யுத்த காண்டத்தில் வரும் வால்மீகி ஸ்லோகம் ஒரு புதுமையான உவமை! போர்க்களம் என்பது  ‘வீணை யாம்’ . அதில் அவன் பயன்படுத்தும் வில், அம்புகள் வீணை வாசிக்கும் கருவியாம் . இதைப் புரிந்துகொள்ள ராவணன் வைத்திருந்த விநோத வகை வீணையை நாம் அறியவேண்டும். அவனிடம் ‘ராவண ஹஸ்தக’ என்ற விசேஷ வகை வீணை இருந்தது. இதை வயலின் வாசிப்பது போல அவன் (violin bow)வில்லால் வாசிப்பானாம். ஆகையால்தான் போர்க்களத்தை வீணைக்கு ஒப்பிடும் உவமையை வால்மீகி பயன்படுத்துகிறார்.

கம்பனும் ‘ராவணன்- வீணை’ தொடர்பை பல பாடல்களில் ‘வீணைக்கொடி’ மூலம் விளக்குகிறான் .

ஆரண்ய காண்டத்தில் ராவணனுடன் சடாயு போரிட்ட காட்சியை வர்ணிக்க வந்த கம்பன் கொடியை மறக்கவில்லை

“இடிப்பு ……………

…………….

கடிப்பக் கடிது உற்றவன் காண் தகும் நீண்ட வீணைக்

கொடிப் பற்றி ஒடித்து உயர் வானவர் ஆசி கொண்டான்”

பொருள் —

இடி முழக்கத்துடன் பறந்துவந்து, சிறகுகளால் ராவணன் தலைகளைத் தள்ளிவிட்டு , நீண்ட வீணைக்கொடியைப் பழித்து ஒடித்து , அச்செயல் மூலம் தேவர்களின் வாழ்த்துக்களைப் பெற்றான்

Xxx

பின்னரும் சடாயு உயிர் நீத்த படலத்தில் கொடியை மறக்கவில்லை கம்பன் …

இராமனும் இலக்குவனும் தெற்கு நோக்கி பயணம் செய்கையில் சடாயு இறந்த இடத்தில் வீணைக்கொடி ஒன்று தரையின் மீது கிடந்ததைக் கண்டனர்

“பாக வீணையின் கொடி ஒன்று கிடந்தது பார்மேல் “–

இதற்கு அடுத்த சில பாடல்களில் சடாயுதான் சீதையைக் கவர்ந்த பகைவருடன் போரிட்டு இதைச் செய்திருக்க வேண்டும் என்று இலக்குவனிடம் சொல்லி கண்ணீர் விடுகிறான்.

Xxxx

கம்ப இராமாயண யுத்த காண்டத்தில், முதற் போர் புரி படலத்தில் வரும் பாடல் இதோ ………………………

ஏழிசைக் கருவி வீற்றிருந்தது என்னினும்

சூழிருந்திசைகளைத் தொடரும் தொல்கொடி

வாழிய உலகு எலாம்  வளைத்து வாய் இடும்

ஊழியின் அந்தகன் நாவின் ஓங்கவே

பொருள் ……….

“தேரிலே ஏழிசைக் கருவியாகிய வீணையின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது .அந்தக் கொடி காற்றில் திக்குகள் தோறும் படபடத்தது. அது யமனுடைய நாக்கு போல இருந்தது ஊழிக் காலத்தில் உலகத்தை எல்லாம் தனது வாய்க்குள் போட்டு விழுங்கும் யமனின் நாக்கு போல உயர்ந்து விளங்கியது”.

யுத்த காண்டத்தில், இன்னும் ஒரு பாடலில் வீணைக்கொடியின் அவல நிலையைப் பாடுகிறான் கம்பன் …

எழுத்து வீணை கொடு ஏந்து பதாகை மேல்

கழுகும் காகமும் மொய்த்தன 

பொருள்

வரையப் பெற்ற வீணையைச் சின்னமாகக் கொண்ட ராவணனின் கொடி மீது  காகமும் கழுகும் மொய்த்தன .

XXXX

MY OLD ARTICLE………

அகத்தியரும் வீணை வாசிப்பதில் வல்லவர்

நச்சினார்க்கினியர் சொல்லும் இராவணன் வீணைக்  கதை 

ராவணன் – பாண்டியர் சமாதான …

tamilandvedas.com › 2014/06/24 › ர… 

24 Jun 2014 — ராவணன் – பாண்டியர் சமாதான உடன்படிக்கை ! pandya-flags. Pandya Flags drawn by me. தமிழ் இலக்கியத்தில் ஓர் அதிசயத் தகவல்!! ஆராய்ச்சிக் …

–subham—

tags- வீணைக் கொடி, நச்சினார்க்கினியர், ,ராவணன் 

ராவணன் கிரீடம் பற்றி கம்பன் தரும் அதிசயத் தகவல் (Post No.3790)

Written by London swaminathan

 

Date: 5 APRIL 2017

 

Time uploaded in London:-15-36

 

Post No. 3790

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

மகரம் என்றால் சுறாமீன் , முதலை என்ற இரண்டு பொருள் இருந்தும் சுறாமீன் என்ற அர்த்தத்திலேயே ஆபரணங்களில், அணிகலன்களில் பயன்படுத்தப்படுகிறது. ராவணன் இப்படி சுறாமீன் வடிவ அல்லது சுறாமீன் பொறித்த ஒரு நீண்ட கிரீடத்தை அணிந்து வந்தான் என்று கம்பன் போகிறபோக்கில் (சுந்தர காண்டம்) சொல்லி விடுகிறான். இது ஒரு அதிசயமான விஷயம். ஏனெனில் இப்படிப்பட்ட மணிமுடி பற்றிய குறிப்பு வேறு எங்கும் இல்லை.

 

வளர்ந்த காதலர் மகரிகை நெடுமுடி

அரக்கரை வரக் காணார்

தளர்ந்த சிந்தை தம் இடையினும் நுடங்கிட

உயிரொடு தடுமாறி

களம் தவா நெடுங்கருவியில்கைகளில்

செயிரியர் கலைக் கண்ணால்

அளந்த பாடல் வெவ் அரவு தம் செவிபுக

அலமரலுறுகின்றார்

பொருள்:

“ராவணன் மீது நாள்தோறும் வளரும் காதலை உடைய வித்தியாதர மகளிர் சிலர், சுறாமீன் வடிவு பொறித்த நீண்ட மகுடத்தைப் பூண்ட ராவவணன், தம்மிடம் வருவதைக் காணவில்லை. அதனால் தளர்ந்த மனம்,  இடையைக் காட்டிலும் அதிகமாமகத் துடித்தது. அவர்கள் தடுமாறினர். இசைக் கலைஞர்கள் கருவிகளை இசைத்து கண்களால் அவற்றை அளந்து பாடிய பாடல்கள் காதுக்குள் பாம்பு புகுந்தது போலப் புகவே அவர்கள் துன்புற்றனர்.”

 

உலகில் பல பண்பாடுகளில் மகர தோரணங்கள் உண்டு; மகர மோதிரங்கள் உண்டு; மகர காதணிகள், கை வளையங்கள் உண்டு; ஆனால் மகர வடிவில் கிரீடம் கிடையாது; மகரம் பொறித்த கிரீடமும் இல்லை. ராவணன் ஏன், எப்படி இப்படி ஒரு கிரீடம் அணிந்தான் என்பதற்கான விளக்கமும் இல்லை. உலகில் வேறு எங்குமில்லாத அளவுக்கு ஐரோப்பியர்கள் மட்டும் மன்னரின் மணி முடிளை அப்படியே சேகரித்து வைத்துள்ளனர். அதிலும் கூட இப்படி ஒரு கிரீடம் இல்லை.

 

நம்முடைய மன்னர்களின் கிரீடங்கள் அழிக்கப்பட்டு, நகைகளாகவும் சங்கிலிகளாகவும் செய்யப்பட்டு விட்டன. ஆயினும் எல்லாக் கோவில்களிலும் சுவாமிக்கும் அம்மனுக்கும் உள்ள கிரீடங்கள் ஓரளவுக்கு நம்முடைய பழம்பெரும் கலாசாரத்தைப் பிரதிபலிப்பனவாக உள்ளன. அங்கும் இப்படி இருப்பதாகத் தெரியவில்லை.

 

Elephant Crown of Demetrios

பல்லவ கீரிட அதிசயம்

பல்லவ சாம்ராஜ்யத்திலும் இப்படி ஒரு அதிசய மணிமுடி/ கிரீடம் பற்றிய குறிப்பு கிடைக்கிறது

இந்த வியப்பான விஷயம் பல்லவர் கல்வெட்டில் உள்ளது. இது பற்றி வரலாற்றுப் பேரறிஞர்   டாக்டர் இரா.நாகசாமி , “யாவரும் கேளிர்” என்ற அவரது நூலில் கூறுவதாவது:-

“காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோவிலில் நந்தி வர்மனின் வரலாற்றைக் குறிக்கும் சிற்பங்கள் உள்ளன. அவற்றில் நந்திவர்மனுக்குச் சூட்டுவதற்காக மகாமாத்திரர் முதலானோர் ஒரு தட்டில் முடியை ஏந்தி வந்தனர் என்றும், நந்தி வர்மனின் தந்தையால் அதை என்ன என்று அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை என்றும் அது பல்லவர் முடி என்றும், யானை உருவில் இருந்தது என்றும் குறிப்பு உள்ளது. இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் ஆண்ட அரசர்கள் யானைத்தலை  போன்ற முடிகளைப் பூண்டிருப்பது காண்பிக்கப்பட்டுள்ளது வைகுண்டப் பெருமாள் கோவில் கல்வெட்டு இவ்வாறு கூறினும் சிற்பத்தில் யானைதத்லை போன்ற முடி காணப்படவில்லை”.

எனது கருத்து:

கல்வெட்டிலுள்ள பல விஷயங்கள் சிற்பத்தில் இல்லை. சிற்பத் திலுள்ள பல விஷயங்கள் இலக்கியத்தில் இல்லை என்பதற்குப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.

 

துர்கையின் மான் வாஹனம் பற்றி சிலப்பதிகாரம், தேவாரம் (கலையதூர்தி) போன்ற பல நூல்களில் குறிப்புகள் உள்ளன. ஆனால் நமது கோவில்களில் மான் வாஹன துர்கையைப் பார்க்க முடியாது. படங்களிலும் கூட மான் வாஹனம் கிடையாது. சிங்கம் அல்லது புலி வாஹனம்தான் இருக்கும். ஆனால் இராக், துருக்கி, கிரீஸ் போன்ற நாடுகளில் மான் வாஹனத்தில் தேவியர் பவனி வரும் சிலைகள் உள்ளன. இது துர்கைதான். ஆனால் ஒவ்வொரு ஊரிலும் வேறு வேறு பெயர்களால் அவளை அழைப்பர்.

 

ஆக, “கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம்” என்ற கதை இலக்கியத்திலும், வரலாற்றிலும் உளது. எங்கேயாவது சுறாமீன் கிரீடத்தின் சிலையோ படமோ கிடைக்கிறதா என்று ஆராய்வது நமது கடமை.

 

–Subham—

 

 

பிள்ளையார் விளையாடிய கால்பந்து! கைப்பந்து! (Post No.3253)

img_8871

Written by London Swaminathan

 

Date: 15 October 2016

 

Time uploaded in London: 8-16 AM

 

Post No.3253

 

Pictures are taken from various sources; thanks.

 

Contact swami_48@yahoo.com

 

 

ராவணனைப் பிள்ளையார் பந்தாடிய கதை,  கணேச புராணத்தில், மிகவும் சுவைபடச் சொல்லப்பட்டிருக்கிறது.

 

கயிலை மலைக்குச் சென்று தவம் புரிந்தான் ராவணன். அவன் தியானத்தை மெச்சிய சிவபெருமான் அவனுக்கு முன் காட்சி தந்தார். நினக்கு வேண்டியவைகளைக் கேள் என்றார். அடியேன் வாழும் இலங்கையும் நானும் அபசயம் அடையா வண்ணம் அருள் புரிய வேண்டும் என்றனன். இவன் மொழிகேட்ட கருணை வள்ளல், அவன் கையில் ஒரு சிவலிங்கத்தைக் கொடுத்து, இதனை அருமையுடன் ஆராதித்து வா. ஆனால் ஆசாரத்தின் பொருட்டு இவைகளை வாஹனாதிகளில் ஏற்றாமலும், கீழே வையாமலும் எடுத்துச் செல் என்றார் இப்படி ஆசார அனுட்டானத்துடன் கொண்டு சென்று இலங்கையில் தாபித்தால் நீயும் அழிய மட்டாய், இலங்கையும் அழியாது என்றார். எங்கேனும் கீழே வைத்தால் லிங்கத்தை எடுக்க முடியாது அது அங்கேயே தாபிதமாகிவிடும் என்றும் கருணை வள்ளலான சிவ பெருமான் மொழிந்தார்.

 

உடனே ராவணன் அந்தச் சிவலிங்கத்தினை கையில் ஏந்தி தெற்கு நோக்கி நடந்து வந்தனன். இதைத் தேவர்கள் கண்டனர். நடு நடுங்கினர். இந்த ஆள் ஏற்கனவே நமக்குச் சொல்லொணாத் துய ரம் தருகின்றனன். இந்த லிங்கம் ராவணனின் தலைநகருக்குச் செல்லாமல் தடுப்பது எங்கனம் என்று ஆலோசித்தனர். இவன் இலங்கைக்கு இதைக் கொண்டு சென்றால் நமக்கு எல்லாம் முன்னை விட அதிக உபத்திரவம் செய்வான் என்று அஞ்சினர்.

 

முழுமுதற் கடவுளான விநாயகனை வேண்டி வழி காணுவோம் என்று விரைந்தோடினர். அவர்களைப் புன்சிரிப்புடன் வரவேற்றார் கணேசப் பெருமான். பெருமானே! மகா துஷ்டனான ராவ ணன் ஒரு சக்திவாய்ந்த லிங்கத்தினை இலங்கையில் பிரதிட்டி செய்ய விரைந்து செல்லுகிறான. அவனைத் தடுத்து நிறுத்தி இலங்கைக்கு அந்த லிங்கம் போகா வண் ணம் அருள்பாலிக்க வேண்டும் இதுவே எங்கள் விக்ஞாபனம் (appeal) என்றனர்.

 

உடனே பிள்ளையார் வருணனை அழைத்தார். நீ உடனே சென்று ராவணனின் உதரத்தில் (stomach) புகுந்து சலோபாதியை (மல, மூத்ர விசர்ஜன நெருக்கடி Nature’s call) உண்டாக்ககடவை. யாம் அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை அவன் உதரத்தில் இருக்கவும் (உதரம்=வயிறு) என்றார். வருணனும் அவ்வாறே செய்தான். இதற்கிடையில் தேவர்களும் கண்டு வியக்கும் வண் ணம், விநாயகப் பெருமானும் ஒரு அழகிய பார்ப்பனச் சிறுவன் வடிவம் கொண்டு ராவணனைப் பின் தொடர்ந்தார்.

ravana-3ht

 

ராவணன், காலைக் கடன் முடிக்கும் நெருக்கடிக்குள்ளானான்.; யாராவது ஆள் கிடைத்தால் அவன் தலையில் சிவலிங்கத்தை வைத்துவிட்டு குளத்தையோ ஏரிக் கரையையோ நோக்கி ஓடலாமே என்று வெண்ணிச் சுற்றிப் பார்க்கையில் விநாயகப் பெருமான் முஞ்சிப் புல்லரைஞாணும், முன் கையிலேந்திய தண்டமுமாக, ஒரு பிரம்மாச்சரியைப் போல ராவணன் முன் தோன்றினார்.

 

பையா! நீ தூய்மை உடைய பிரம்மச்சாரியாகக் காணப்படுகிறாய். நான் சலமோசனம் செய்துவருங்காறு இச் சிவலிங்கத்தினை நீ வைத்திரு. ஸ்நான முதலிய சுசி (சுத்தம்) இலாதவர் இதைத் தொடப்படாது; தரையிலும் வைக்கப்படாது என்றனன்.

பிள்ளையாரும், அதற்கென்ன, பேஷாய்ச் செய்கிறேன். ஆனால் நேரம் தாழ்த்தக் கூடாது; நான் நேரம் ஆகிவிட்டால் மூன்று முறை விளிப்பேன். அதற்குள் வராவிடில், வாங்கிக் கொள்ளாவிடில் கீழே வைத்துவிடுவேன் என்றார். ராவணன் , இதோ ஒரு நொடியில் திரும்புவேன் என்று சொல்லி ஓடினன். ஆனால் அவன் வயிற்றுக்குள் இருந்து வருணன் குடைந்த குடைவில் நேரம் போனதே தெரியவில்லை. விநாயகரும் முன்று முறை விளித்துவிட்டு சிவலிங்கத்தினை சுத்தமான தரையில் வைத்துவிட்டார். அதற்குப் பின் ராவணன் வயிற்றில் இருந்த வருணன், தன்னிடம் போய்ச் சேர்ந்தார்.

 

ராவணன் திரும்பி வந்தான் பிரம்மச்சாரி கையில் (விநாயகன்) சிவலிங்கம் இல்லாமை கண்டு திகைத்தான்; பதறினான். சிவலிங்கம் எங்கேடா? என்றான். அதற்கு அந்தப் பையன் நானோ துர்பலனுள்ள சிறுவன்; நெடுநேரம் ஆகியும் நீர் வராததால்  உன்னை மூன்று முறை கூப்பிட்டேன். அப்படியும் உம்மைக் காணமாட்டோமாய் அந்த இடத்தில் வைத்துவிட்டேன். நீவீர் அதை எடுத்துக்கொண்டு போம் என்றான்.

ravana6

ராவணனுக்கு ஒரே கோபம்; விழிகளை  உருட்டினான்; பிள்ளையாரை மிரட்டினான்; அதட்டினான்

அவசர புத்திக்காரனே!  இன்னும் சிறிது நேரம் பொறுக்கப்படதா? என்று சொல்லிக்கொண்டே கயிலை மலையையே பெயர்த்தெடுத்த எனக்கு இந்த சின்ன சிவலிங்கம் ஒரு பொருட்டா? என்று எண்ணி அதைத் தூக்க முயற்சித்தான். அதுவோ பாதாள ம் ஏழினும் கீழே படந்து வேரூன்றிவிட்டதனை அறியான். அதை பலம் கொண்ட மட்டும் இழுத்தான். ஒரு பக்கம் மட்டும் பசுவின் காதினைப் போல இழுபட்டு உருக்கொண்டது. ஆயினும் அது இருந்த இடத்தைவிட்டு அகலவில்லை. அந்த இடத்திலேயே அதை விட்டுச் சென்றான் இன்று வரை அந்த இடம் கோகர்ணம் (பசுவின் காது) என்றே அழைக் கப்படுகிறது. சிவனுக்கு மஹாபலநாதன்  என்ற பெயர் ஏற்பட்டது.

 

 

பிரம்மச்சாரி சிறுவனைப் பர்ர்த்து (பிள்ளையாரைப் பார்த்து) அடா! உன்னாலன்றோ இக்கேடு உண்டாயிற்று, என்று சொல்லி அவன் தலையில் குட்டவே, விநாயகப் பெருமான் சுயரூபம்  கொண்டார். யானை முகத்துடன் தோன்றி துதிக்கையினால் அவனைப் பிடித்து கறகரவென்றுசுழற்றி விண்ணுலக பரியந்தம் செல்லுமாறு தூக்கி வீசினார். அவன் மேலே சென்று தலை கீழாக கீழே விழுகையில் அவனைப் பிடித்து மீண்டும் தூக்கி எறிந்தார். இவ்வாறு அநேக முறை பிள்ளையார் அவனைப் பந்தாடினார். ராவணனுக்கு மூச்சு முட்டியது. என்னை மன்னிக்க வேண்டும், என்று பலமுறை சொல்லிக் கதறினான்.

 

உடனே விநாயகப் பெருமான் பந்தாடுதலை நிறுத்தி அவனை பூமியில் நிறுத்தினார். ராவணன் நடுநடுங்கி, விநாயப் பெருமானை துதித்தார். தவற்றுக்காக நெற்றியை பலமுறை நிலத்தில் மோதி மன்னிப்பு கேட்டார். அவரும் களி கூர்ந்து நின்னை மன்னித்தனம் நீ இப்போது குட்டிக்கொண்டது போல யார் குட்டிக் கொள்கிறாரோ அவர் குறைகளை எல்லாம் போக்குவன் என்றும் சொன்னார்.இதை கணேசப் புராணச் செய்யுளால் அறிக:

img_8724

மெல்லிய ஆக்கை யேனான் விழுச் சிவலிங்கந் தாங்கும்

வல்லமை   யுடையேனல்லேன் வலிதினீதருதிதந்தா

னல்லதே முக்காற்கூவ நண்ணிடாயாயின் மண்மேற்

செல்லுற விடுப்பனென் றான்றேவர் கடேவதேவன்

 

குட்டலும் மறைச் சிறான் போற்குறுகிய நாதன் வலே

யட்டும் மும்மத மாலயானை யானனாகி விண்ணின்

முட்டவொள்ளொளி கான்மோலி முதிர்ந்தபேருருவு கொண்டு

சட்டவல்லரக்கன் றன்னைத் தடக்கைப் பந்தாடினானே.

 

img_8881

ஹா, ராம, ஹா, தேவர், தாத, மாதா!

ராவணன் சீதையை தூக்கிச் செல்லுதல்

Written by S NAGARAJAN

Research Article No: 1828

Date: 26 April 2015; Uploaded in London at  7-19 am

 

சம்ஸ்கிருதச் செல்வம்பாகம் 3

3. ஹா, ராம, ஹா, தேவர், தாத, மாதா!

.நாகராஜன்

கவிதைப் புதிர்களின் தொடர் வரிசையில் இன்னும் ஒரு பஹிர் ஆலாப வகை புதிர்:-

 

கே ப்ரவீணா: குதோ ஹீனம் ஜீர்ணம் வாசோம்ஷுமாஞ்ச்ச : I

நிராகரிஷ்னவோ பாஹ்யம் யோகாசாராச்ச கீத்ருஷா: II

 

 

இதன் பொருள் :- யார் புத்திசாலி? (விஞ்ஞானா: – படித்த மனிதர்கள்)

பழைய துணி எதில் குறைபாடுடையது? – (நவாத்புதியதில்)

யார் கிரணங்களைக் கொண்டுள்ளார்? – (இனா: – சூரியன்)

புத்த மத யோகசாரா பிரிவைச் சேர்ந்தோர் எப்படி இருப்பர்? (விஞ்ஞானவாதினபுத்தமத தத்துவத்தைச் சேர்ந்தோர் விஞ்ஞானவாதிகள் என அழைக்கப்படுகின்றனர்)

விஞ்ஞானவாதின: என்ற சொற்றொடரைப் பிரித்தால் விஞ்ஞானா:, நவாத், இனா, விஞ்ஞானவாதின: என்ற அனைத்துச் சொற்களும் கிடைப்பதைப் பார்க்கலாம். அனைத்துக் கேள்விகளுக்கும் இந்த ஒரே சொற்றொடர் விடையைத் தருகிறது. இதைக் கண்டு பிடிப்பது தான் கஷ்டம்!

இனி அந்தர் ஆலாப வகை புதிர் ஒன்று. இதில் பாடலுக்குள்ளேயே விடை இருப்பதால் புரிந்து கொள்வது சுலபம்.

கே பூஷயந்தி ஸ்தனமண்டலானி

கோத்ருஷ்யுமா சந்த்ரமச: குத: ஶ்ரீ:

கிமாஹ சீதா தசகண்டநீதா

ஹாராமஹாதேவர்தாதமாத:

கடைசி வரி புதிர்களுக்கு விடையாக அமைகிறது. ஆகவே புதிரை விடுவிப்பது வெகு சுலபம்.

இதன் பொருளைப் பார்ப்போம்:-

வட்டமான மார்பகங்களை எது அலங்கரிக்கிறதுஹாரம்

பார்வதி எப்படி இருக்கிறாள்? மஹாதேவனுடன் இணைந்து இருக்கிறாள் (மஹாதேவ)

சந்திரனின் பிரகாசம் எப்போது வருகிறது? – இருளிலிருந்து (ராத்)

சீதையை தசகண்ட ராவணன் தூக்கிச் செல்லும் போது அவள் என்ன கூறினாள்ஹா, ராம, ஹா, தேவர், தாத, மாத)

(ஹா, ராமா, ஹா, மைத்துனரே, அப்பா, அம்மா என்று சீதை அலறினாள்)

இது அமைந்துள்ள விருத்தம் உபஜாதி (இந்திரவ்ரஜா மற்றும் உபேந்திரவ்ரஜா) விருத்தமாகும்.

இப்படிப்பட்ட ஆயிரமாயிரம் புதிர்களை பதம் பதமாகப் பிரித்து அர்த்தம் கண்டு புதிர்களை அவிழ்த்து விடை கண்டு மகிழலாம்.

பொறுமையும், ஆவலும் இருந்தால் போதும்; புதிருக்கு விடை கண்ட மகிழ்ச்சி ஏற்படும்!

*************

ராவணன் – பாண்டியர் சமாதான உடன்படிக்கை !

pandya-flags

Pandya Flags drawn by me.

தமிழ் இலக்கியத்தில் ஓர் அதிசயத் தகவல்!!

ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியவர்:– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:- 1127; தேதி:- 24th June 2014.

N.B. If you want to reproduce this article, please email me for permission. Previously I gave blank cheque to some people. They have been uploading all the 1100 posts from my blogs which is not allowed from today. You must get written permission from me for each and every article separately. swami_48@yahoo.com

அகத்திய முனிவருடன் அமர்ந்து பாண்டியர்கள் தமிழ் ஆராய்ந்த செய்தி பாண்டியர் செப்பேடுகளில் வருகிறது. மற்றொரு புதுமையான செய்தியும் பாண்டியர் செப்பேடுகளில் காணப்படுகிறது.

“அகத்தியனோடு தமிழாய்ந்தும் மிகத் திறனுடைய வேந்தழித்து
தசவதனன் சார்பாகச் சந்து செய்துந் தார்தராஷ்ட்ரன்
படை முழுதுங் களத்தவிய பாரதத்து பகடோட்டியும்
……………………………………………….. “
இது பாண்டியன் பராந்தக வீரநாராயணனின் தளவாய்புரச் செப்பேடுகள் (ஒன்பதாம் நூற்றாண்டு) கூறும் செய்தி.
Pandya_territories
Mighty Pandyan Empire praised by Kalidasa

பாண்டியர்களின் குல குரு அகத்தியன் என்றும் அவர் மூலமாகவே பாண்டியர்கள் முடி சூட்டப்பட்டதாகவும் வேறு சில பாண்டியர் கல்வெட்டுகளும் செப்புகின்றன.
ஆயினும் –தசவதனன் சார்பாகச் சந்து செய்வித்தும் — என்பதற்கு இதுவரை சரியான விளக்கம் கிடைக்கவில்லை என்றே அறிஞர்கள் எழுதி வந்துள்ளனர்.

“ஒரு பாண்டியன் இராவணனைச் சமாதானம் செய்துகொள்ளும்படிச் செய்தான் என்று சாசனம் கூறுகிறது. இந்தப் புராணக் கதையின் விவரம் சரியாகத் தெரியவில்லை” – என்று பாண்டியர் செப்பேடுகள் பத்து ( தமிழ் வரலாற்றுக் கழக வெளியீடு, 1967 ) என்ற நூல் கூறும்.

‘உச்சி மேற் புலவர் கொள்’ நச்சினார்க்கினியர் எழுதிய உரையில் ஒரு சுவையான விஷயம் கூறுகிறார். இது உ.வே சாமிநாதைய்யர் பதிப்பித்த பத்துப் பாட்டு உரையில் சுருக்கமாக உள்ளது:–
“தென்னாட்டை ஆண்டு குடிகளைத் துன்புறுத்திவந்த இராவணனை, அகத்தியர் பொதியின் மலை உருகும்படி இசைபாடி இலங்கைக்குப் போக்கினரென்பது பண்டைய வரலாறு” – என்று சாமிநாதையர் குறித்துள்ளார்.
Agastya
Statue of Agastya found all over South East Asia.

“தென்னவற் பெயரிய துன் அரு துப்பின்
தொன்முது கடவுள் பின்னர் மேய
வரைத் தாழ் அருவி பொருப்பின் பொருந
– என்ற மதுரைக் காஞ்சி பாடல் வரிகளுக்கு (வரி 40-42) எழுதப்பட்ட உரை இது.

இதற்குப் பின் வேறு சில நூல்களிலும் மிகவும் அறியப்படாத செய்திகள் வருகின்றன. திருவாசகத்தில் மண்டோதரிக்காக சிவன் கடலில் நடந்த வரலாறு ஒன்றும் வருகிறது. உத்தரகோச மங்கை தல புராணம் இதை விரித்துரைக்கிறது. ஆக பாண்டியர்—அகத்தியர் உறவும், தமிழ்நாடு—இலங்கை தொடர்பும் இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன.
mount_kailash_tibet_465065
Ravana lifting Kailash, Ellora Cave sculpture.

காளிதாசன் என்னும் உலக மஹா கவிஞன், அவனது ரகுவம்ச காவியத்தில் தரும் தகவலைக் கொண்டு ஆராய்கையில் பாண்டியன் – ராவணன் புதிருக்கு விடை கிடைக்கிறது.
நான் ஏற்கனவே எழுதிய பல ஆராய்ச்சிக் கட்டுரைகளில் காளிதாசன் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு என்றும் மாணிக்க வாசகரின் காலம், அப்பர்-சம்பந்தருக்குச் சற்று முந்தியது என்றும் ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளேன்.

ராவணன் அவ்வப்போது தென் இந்தியாவுக்குள் புகுந்து அட்டூழியம் செய்தது வேறு பல இடங்களிலும் வருகிறது. ராவணனை வென்று அவனை மடியில் கட்டிக் கொண்டு நாற்கடலில் நீராடி, வாலி, சந்தியா வந்தனம் செய்த செய்தி வால்மீகி ராமாயணத்தில் வருகிறது.

இராமாயண முனிவர்கள் என்ற அரிய நூலில் முத்தமிழ் வித்தகர் தி.வே. கோபாலய்யர் சொல்லும் கதை இதோ:–

அகத்திய முனிவர், தமிழிலும் இசையிலும் வல்லவர் என்பது தமிழ் இலக்கியத்தில் எண்ணற்ற இடங்களில் காணக்கிடக்கிறது. “பொதிய மலையின் கண் இருந்து அவர் ராவணனை, ஆங்கு இயங்காதவாறு, கந்தருவத்தால் (இசையால்) பிணித்தார் என்று தொல்காப்பிய பாயிர உரையில் நச்சினார்க்கினியர் சொல்கிறார்.

“ராவணன் ஒரு கால் பொதியமலையில் ஒரு பாறையில் அமர்ந்த வண்ணம் நீண்ட சிந்தனையில் ஈடுபட்டிருந்தான். அவன் அங்கு வந்திருந்ததனை அறிந்த அகத்தியர் அவனால் முனிவர்களுக்குத் தீங்கு நேரலாம் என்ற நினைப்போடு யாழினை இனிமையாக வாசிக்கவே இராவணன் தங்கியிருந்த பாறை உருக, இராவணனுடைய கை, கால்கள் உருகிய பாறைத் திரவத்தில் அமிழ்ந்தன.

இந்நிலையில் அகத்தியனார் தம் யாழ் எழுவுதலை நிறுத்தவே, பாறை மீண்டும் கெட்டிப்படத் தொடங்கியது. சற்று நேரத்தில் பண்டுபோல (முன்னைப் போல) உறுதி உடையதாயிற்று. சுற்றுச் சூழலில் ஏற்பட்ட மாறுதலை உணராது நினைப்பிலேயே நெடிதும் ஆழ்ந்திருந்த இராவணனுடைய கை, கால்கள் மீண்டும் வன்மையை அடைந்த பாறைக்குள் அகப்பட்டுக் கொள்ள அவனால் எழுந்திருக்க முடியவே இல்லை. அவன் அகத்தியரை வேண்ட, அவன் அவனிடம் அப்பொதிய மலைப் பகமே இனி அவன் வருவதில்லை என்ற உறுதி மொழியைப் பெற்ற பின்னரே, அகத்தியர் மீண்டும் யாழ் எழுவிப் பாறையை உருக்கி அவனை விடுதலை செய்தார் என்ற கதை ஒன்று வழங்கி வருகிறது” –

நச்சி. உரையின் பேரில் கோபாலய்யர் சொன்ன கதை இது. வீணைக் கொடியுடைய வேந்தன் ராவணனின் வீணையும் பாறையில் சிக்கியதாகவும், இருவருக்கும் நடந்த இசைப் போட்டியின்போது இச்சம்பவம் நடந்ததாக வேறு சிலரும் கூறுவர்.
ravana-lifting-kailash

இதற்கெல்லாம் ஆதாரம் வேண்டாமா?

காளிதாசன் தரும் அரிய தகவல்
புறநானூற்றின்மிகப் பழைய பாடலிலேயே (பாடல் 2, முரஞ்சியூர் முடிநாகராயர்= நாகபூஷணம்) பொதியம்- இமயம் ஒப்புமை வருவது அகத்தியர், வட இமயத்தில் இருந்து தென் பொதியத்துக்கு வந்ததைக் காட்டும்.

காளிதாசன் ரகுவம்ச காவியத்தில் இந்துமதி சுயம்வரத்தில் ஆறு ஸ்லோகங்களில் பாண்டியன் புகழ் பாடுகிறார். அதில் முக்கியமான செய்தி – அகத்தியர் – பாண்டியர் – இராவணன் தொடர்பு ஆகும். வேறு எங்கும் கிடைக்காத இந்தச் செய்தி காளிதாசன் மூலமே கிடைக்கிறது அதுமட்டுமல்ல யாகத்திற்காக செய்த அவப்ருத ஸ்நானத்தில் ( குளியல்) பாண்டிய மன்னர்கள் எந்நேரமும் இருப்பதையும் சொல்கிறார். புற நானூற்றில் பெரிதும் போற்றப்படும் பலயாகசாலை முது குடுமிப் பெருவழுதி கி.மு. முதல் நூற்றாண்டு என்பது நிரூபணமானால் காளிதாசன் குறிப்பிடும் பாண்டியன் அவன் என்ற வரலாற்றுச் செய்தியும் கிடைக்கும்.

பாண்டியன் புகழ் பாடும் முக்கிய ஸ்லோகம்:–
அஸ்த்ரம் ஹராதாப்தவதா துராபம் யேன இந்த்ரலோகாவ ஜயாய த்ருப்த:
புரா ஜனஸ்தான விமர்த்தசங்கீ சந்த்யாய லங்காதிபதி: ப்ரதஸ்தே (ரகு.6-62)

இதன் பொருள்:– தான் இல்லாத போது ஜனஸ்தானம் என்னும் இடத்தைப் பாண்டியர் அழித்துவிடுவரோ என்று பயந்த ராவணன், பரம சிவனைத் துதிபாடி பிரம்ம சிரஸ் என்ற அஸ்திரத்தைப் பெற்றுள்ள பாண்டியரோடு சமாதானம் செய்துகொண்டு இந்திரலோகத்தை வெற்றி கொள்ளப் புறப்பட்டான் (ரகுவம்சம் 6-62).

ராவணனும் பயப்படும் அளவுக்கு பாண்டியர்களின் பராக்ரமம் இருந்தது!!
_coin_of_the_Pandyas_Sri_Lanka_1st_century_CE
Pandya coin found in Sri Lanka, First Century CE

ரகுவம்சம் நாலாவது சர்க்கத்திலும் பாண்டியர்-அகத்தியர் புகழ் அடுத்தடுத்து வருகிறது. தமிழுக்கும் வெளியே இப்படி ஒரு அரிய சான்று கொடுப்பது காளிதாசனின் வடமொழிக் காப்பியம் ஒன்றே ஆகும்.
ஆக நச்சினார்க்கினியர், காளிதாசன் ஆகியோர் மூலம் பாண்டிய வம்சம் மிகப் பழமை உடையது என்பதும் ராமாயண கலத்திலேயே ராவணனை நடுங்கச் செய்தது பாண்டியர்களின் படைபலம் என்பதும் தெளிவாகிறது.

இனவெறி பரப்பும் ஆரிய—திராவிடக் கொள்கைக்கு காளிதாசனும், நச்சினார்க்கினியரும் கொடுக்கும் அடி இது, என்பதும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியது. ராவணன், இலங்கையில் அரசும், தண்டகாரண்யப் பகுதியில் ஒரு ‘காலனி’யும் வைத்திருந்தான் என்பதும், அதைத் தளமாகக் கொண்டே இமயம் வரை சென்று சிவனின் கயிலாயத்தையும் அசைக்க முயற்சித்தான் என்பதும் இதனாற் பெறப்படும்!

–சுபம்–