
COMPILED BY LONDON SWAMINATHAN
Post No. 9787
Date uploaded in London – –28 JUNE 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று ஞாயிற்றுக் கிழமை ஜூன் 27-ஆம் தேதி — ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர்
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது BRHANNAYAKI SATHYANARAYANAN
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.
XXX
வழக்கை சந்திக்க தயார் வி.எச்.பி., அறைகூவல்

நில முறைகேடு தொடர்பாக ராமர் கோவில் அறக்கட்டளை மீது புகார் தெரிவிப்போரை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார்’ என, வி.எச்.பி., எனப்படும், விஸ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துஉள்ளது.
உத்தர பிரதேசத்தில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை ராமஜென்ம பூமி அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.இந்த அறக்கட்டளையின் சார்பில் அதன் பொதுச் செயலர் சம்பத் ராய், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை 18 கோடி ரூபாய்க்கு வாங்கி ஊழல் புரிந்துள்ளதாக, ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன.
இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சம்பத் ராய், நிலத்திற்கு சந்தை விலையை விட குறைவாகவே கொடுத்ததாக கூறியுள்ளார். இந்நிலையில், விஸ்வ ஹிந்து பரிஷத் இணை பொதுச் செயலர் சுரேந்திர ஜெயின் கூறியதாவது:
ராமர் கோவிலுக்கு நிலம் கையகப்படுத்தியதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. அனைத்தும் வெளிப்படையாக, நேர்மையாக நடந்துள்ளது.
இதில் ஊழல் நடந்ததாக குற்றஞ்சாட்டும் எதிர்கட்சிகள், ஆதாரமில்லாத காரணத்தால் நீதிமன்றத்தை அணுகாமல் உள்ளன. எதிர்கட்சிகள் ஆதாரத்துடன் வழக்கு தொடுத்தால், அதை சந்திக்க தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
XXXX
யோகா நம்பிக்கை ஒளியாகத் திகழ்கிறது- பிரதமர் சிறப்புரை
உலகம் முழுவதும் ஜூன் 21ம் தேதி திங்கட் கிழமை சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார்.
அப்போது, ‘நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்’ என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர் மோடி, உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ விரும்புகிறேன் என்றார்.
ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு நாட்டு மக்களும் ஆரோக்கியமாக இருக்க பிரார்த்திக்கின்றேன். கொரோனா பெருந்தொற்று காலத்தில் யோகா நம்பிக்கை ஒளியாகத் திகழ்கிறது. யோகா செய்ய வேண்டும் என்ற உத்வேகம் மட்டும் இன்னும் குறையவில்லை என தெரிவித்தார்.



யோகா தினத்தையொட்டி நாடு முழுவதும் யோகா தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
இதைப்போல உலகம் முழுவதும் யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அமெரிக்காவின் புகழ்பெற்ற
நியூ யார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடி சமூக இடைவெளியை பின்பற்றி ஆசனங்களை செய்து அசத்தினர்
XXX

ரூ.15 கோடி ஐம்பொன் சிலைகள் கைப்பற்றிய அறநிலைய துறை
மகமாயி அம்மன் கோவிலுக்கு சொந்தமான, 15 கோடி ரூபாய் மதிப்புள்ள, 10 ஐம்பொன் சிலைகளை ஹிந்து அறநிலைய துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பி.புதுப்பட்டியில், மகமாயி அம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியை ஒட்டி, மூன்று நாள் திருவிழா நடப்பது வழக்கம். அந்நேரத்தில், கோவில் பூஜாரி தன் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் மகமாயி அம்மன், வீரபத்திரர் விநாயகர், கருப்பசாமி, ராக்காச்சி அம்மன்.நடராஜர், சிவகாமி அம்மன், இருளப்ப சுவாமி, முத்து கருப்பசாமி ஐம்பொன் சிலைகளை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து சென்று, சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் செய்வது வழக்கம்.
இக்கோவில், 1995ல் ஹிந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்ததை தொடர்ந்து, நான்கு ஆண்டுகளுக்கு முன், சென்னையில் இருந்து வந்த தொல்லியல் துறையினர், ஐம்பொன் சிலைகளை ஆய்வு செய்தனர்.சிலைகள், 400 ஆண்டுகள் பழமையானது என்றும்; மதிப்பு, 15 கோடி ரூபாய் இருக்கும் எனவும் தெரிவித்தனர். பின், பூஜாரி வீட்டின் பாதாள அறையில் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.
கோவில் தக்கார் தேவி தலைமையில், காரியாபட்டி போலீசார் முன்னிலையில், அறநிலைய துறை அதிகாரிகள், பூஜாரி வீட்டில் இருந்த ஐம்பொன் சிலைகளை கைப்பற்றினர்.. 10 ஐம்பொன் சிலைகளும், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவில் உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற வேண்டும்: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கோரிக்கை
நமது நாட்டின் பெயரை இந்தியா என்பதற்கு பதிலாக மீண்டும் பாரத் என்றே மாற்ற வேண்டும் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் இன்ஸ்டாகிராம் அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
ஆங்கிலேயர்கள் கொடுத்த அடிமை பெயர் தான் இந்தியா…சிந்து ஆற்றின் கிழக்கு என்பது அதன் அர்த்தம்.
இதனை மாற்றி நமது நாட்டின் பழைய பெயரான பாரதம் என்பதை மீண்டும் சூட்ட வேண்டும். இந்தியாவின் பண்டைய ஆன்மீகம், ஞானம் ஆகியவற்றில் வேரூன்றியிருப்பதே, நமது நாகரீகத்தின் ஆன்மாவாக திகழ முடியும். நகர்ப்புற வளர்ச்சியில் நாம் உயர்ந்தாலும், வேதங்கள் மற்றும் யோகாவில் ஆழமாக வேரூன்றி இருந்தால் உலகின் மிகப்பெரிய நாடாக வெளிப்படுவோம்.
ஆகவே, அடிமைப் பெயரான இந்தியாவுக்கு பதிலாக பாரத் என்று மாற்ற முடியுமா?. இந்தியா என்னும் பெயரை சிந்து நதியின் கிழக்கு பகுதியை குறிக்கும் விதமாக ஆங்கிலேயர் நமக்கு கொடுத்தனர். இப்படியெல்லாமா பெயரை வைப்பார்கள்? நமது குழந்தைகளுக்கு சின்ன மூக்கு, 2-வதாகப் பிறந்தவன் என்றெல்லாம் பெயரிட்டு அழைக்க முடியுமா? எனவே பழைய பெயரான பாரத் என்று மாற்றி, இழந்த பெருமையை மீட்போம், எனக் குறிப்பிட்டுள்ளார்.
கங்கனா நடித்த தலைவி ஜெயலலிதா படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதமே தலைவி ரிலீஸாக வேண்டியது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனையால் ரிலீஸ் தள்ளிப் போனது. அந்த படத்தில் அவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவாக நடித்திருக்கிறார்
XXX
காஞ்சி கோவில் பொக்கிஷ அறையில் 16 உற்சவர் சிலைகள் கண்டெடுப்பு
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் பொக்கிஷ அறையில், பல ஆண்டுகளுக்கு பின், 16 உற்சவர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், உற்சவர் சிலை முறைகேடு விவகாரத்தில், பல பிரச்னைகள் எழுந்துள்ளன. இரட்டை திருமாளிகை, திருவாச்சி மாயம் போன்ற புகார்களால், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், ஏகாம்பரநாதர் கோவிலுக்கு வந்து, அடிக்கடி விசாரணை நடத்தி செல்கின்றனர்.
இந்நிலையில், ஏகாம்பரநாதர் கோவிலின் பொக்கிஷ அறையில், புதிதாக, 16 உற்சவர் சிலைகள் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. சில நாட்களுக்கு முன், கோவில் ஊழியர்கள் நடத்திய ஆய்வில், விநாயகர், லக் ஷ்மி, நாயன்மார்கள் உட்பட, 16 சிலைகள் இருப்பது தெரிந்தது.
கோவிலில் உள்ள பொக்கிஷ அறையில், நகைகள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும். அந்த அறையில், இத்தனை ஆண்டுகளாக உற்சவர் சிலைகள் ஏன் இருந்தன என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சிலைகள், கோவில் ஆவணங்களில் குறிப்பிடப்படாமலேயே உள்ளன
.கண்டெடுக்கப்பட்ட சிலைகள், என்ன மாதிரி யான உலோகத்தால் செய்யப்பட்டவை என, ஆய்வு நடைபெற உள்ளது. கோவில் சிலைகள், ஆவணங்களில் இல்லாத காரணத்தால், அவை கடத்தப்படவும் வாய்ப்புள்ளது.எனவே, கண்டெடுக்கப்பட்ட சிலைகளை ஆவணப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
XXXX
கோவில்களில் அர்ச்சனை செய்யவும் தேங்காய் உடைக்கவும் அனுமதி இல்லை :அமைச்சர் பேட்டி
நாளை திங்கட்கிழமை முதல் திறக்கப்படும் கோவில்களில் அர்ச்சனை செய்யவும் தேங்காய் உடைக்கவும் அனுமதி இல்லை என்றும் திருநீறு, குங்குமம் தட்டில் வைத்து வழங்கப்படும் என்றும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை பெரம்பூர் பேரக்ஸ் ரோடு திருக்கோயில் பணியாளர்களுக்கான கொரோனோ நோய் தொற்று பரிசோதனை முகாமை இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசுகையில் இந்து அறநிலை துறை கோயில் நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. கோயில் நிலங்களை பிற பணிகளுக்கு தந்து அதில் வரும் வருமானம் மூலம் கோயில் வளர்ச்சிக்கு அளிக்கப்படும்.அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற முறைப்படி தற்போது தமிழகத்தில் 207.பேர பயிற்சி முடித்து உள்ளனர்.சைவ மற்றும் வைணம் வழிபாட்டு தலங்களில் பயிற்சி முடித்த அர்ச்சகர்கள் மீண்டும் ஒரு தேர்வு எழுத்திய பின் கோயில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் தமிழகத்தின் பாரம்பரிய சிலைகள் கடத்தப்பட்டு இருக்கிறது அதை உடனடியாக சட்டரீதியாக தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் தமிழக அரசு எடுக்கும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்
XXXX
திருப்பதி கோவிலுக்கு ரூ.1 கோடி காணிக்கை

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் அனப்பர்த்தி பகுதியைச் சேர்ந்த ஒரு தனியாா் நிறுவன உரிமையாளரும், பக்தருமான டி.உபேந்திராரெட்டி என்பவர் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் ஸ்ரீ வித்யாதான அறக்கட்டளைக்கு வித்யாதான அறக்கட்டளைக்கு வங்கி வரைவோலையாக ரூ.1 கோடியை காணிக்கையாக வழங்கினார்.
அந்தக் காணிக்கையை திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் வைத்து பெற்றுக்கொண்டார். அந்தப் பக்தருக்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசன ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வைத்தனர்.
XXXX
வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்க பாபா ராம்தேவ் முறையீடு

கடந்த மாதம், யோகா குருவான பாபா ராம்தேவ், ‘அலோபதி மருத்துவம் குறித்து வெளியிட்ட கருத்துக்களுக்கு , இந்திய மருத்துவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது.இதையடுத்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், அலோபதி மருந்துகள் குறித்த கருத்துகளை ‘வாபஸ்’ பெறும்படி, பாபா ராம்தேவிடம் வேண்டு கோள் விடுத்தார். அதை ஏற்று, பாபா ராம்தேவும், தன் கருத்தை திரும்ப பெற்றார்.எனினும், பாபா ராம்தேவுக்கு எதிராக, பல மாநிலங்களில், வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகளுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில், பாபா ராம்தேவ் முறையிட்டு உள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள தாவது:எனக்கு எதிராக, போலீசாரிடம் டாக்டர்கள் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில், என் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்த வழக்குகளில் எடுக்கப்படும் நடவடிக்கையில் இருந்து எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பல மாநிலங்களில் உள்ள வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
XXXX
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவ

நன்றி, வணக்கம்
TAGS – TAMILHINDU, NEWSRPONDUP, 27621