ச.நாகராஜன்
ஒரு நாள் க்யோடோவில் இருந்த டைஷுயின் ஆலயத்தில் இருந்த கோடோ ஜுய்கன் ரோஷி என்ற குருவை சோகோ சந்தித்தார். மையோஷிஞ்ஜி மடாலயத்திலும் டைடோகுஜி மடாலயத்திலும் தலைமைப் பொறுப்பை ஏற்று வகித்து நடத்திய அவர் இப்போது ஓய்வு பெற்றிருந்தார்.கலைந்திருந்த படியாத தலைமுடி, அசிங்கமான உடை – இவற்றுடன் ரோஷி முன்னர் சென்று நின்றார் சோகோ.
அவர் கேட்ட முதல் கேள்வி : “ எதற்காக இங்கு வந்தாய்?”
தன் வாழ்வில் இது வரை நடந்ததை எல்லாம் விவரித்தார் சோகோ. இடையில் குறுக்கிடாமல் ஒரு மணி நேரம் சோகோ சொன்ன அனைத்தையும் மௌனமாகக் கேட்டார் ரோஷி. மனதில் இருந்த அனைத்தையும் கொட்டித் தீர்த்தார் சோகோ.
ரோஷி பிறகு தான் பேச ஆரம்பித்தார்:” நீ சொன்னதை எல்லாம் கேட்டேன்.உனக்கு யார் மீதும் எதன் மீதும் நம்பிக்கை இல்லை என்று தெரிகிறது. ஆனால் குருவின் மீது நம்பிக்கை இல்லை என்றால் ஜென் பயிற்சிகளைக் கற்கவே முடியாது. என்னை நம்புவாயா? நம்பினால் நீ இருக்கும் நிலையில் அப்படியே உன்னை ஏற்றுக்கொள்கிறேன். நம்பவில்லை என்றால் எனது நேரமெல்லாம் வீண் தான், நீ இடத்தை விட்டுக் கிளம்பலாம்”
இன்றைய சமுதாயத்தில் ஒரு விஷயத்தைக் கற்க ஆரம்பிக்கும்போது பயிற்றுவிக்கும் ஆசான் மீது அவர் ஜென் மாஸ்டராக இருந்தாலும் சரி பல்கலைக்கழக பேராசிரியராக இருந்தாலும் சரி நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பது அடிப்படையான விஷயம்,! ஆகவே ரோஷி அந்த அடிப்படை விஷயத்தை வலியுறுத்தினார். ஆனால் சோகோ எதற்கும் லாயக்கற்றவராக இருந்தார். வயதில் மூத்த அவரது வார்த்தைகளைக் கேட்டு சோகோவின் எண்ண ஓட்டம் அவரை மனதிற்குள் விமரிசிக்க ஆரம்பித்தது!
“இந்த முட்டாள் கிழவன் மையோஷிஞ்ஜி மடாலயத்திலும் டைடோகுஜி மடாலயத்திலும் தலைமைப் பொறுப்பை வகித்தவராக இருக்கலாம்! பெரிய இடங்களில் போலிகள் இருப்பது சகஜம் தானே! அவரை முழுவதுமாக நம்பும் படி என்னை எப்படிக் கேட்கலாம்?! இப்போது தான் அவரைப் பார்க்கிறேன். நம்ப வேண்டுமாமே! அப்படி நம்புவதாக இருந்தால் இங்கு வருவதற்கு முன்னர் எத்தனையோ பேரை இது வரை நம்பி இருக்கலாமே!”
ஆனால் இப்போது அது முக்கியமில்லை. பொய்யாக இருந்தாலும் கூட எதையாவது சமயத்திற்குத் தக்கபடி சொல்லித் தான் ஆகவேண்டும். ஆகவே சோகோ,” உங்களை முற்றிலும் நம்புகிறேன். என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றார். “அப்படியானால் கூட வா” என்று சோகோவை அழைத்துச் சென்ற ரோஷி ஒரு விளக்குமாறை அவரிடம் தந்து, “போய் இந்த விளக்குமாறால் தோட்டத்தைப் பெருக்கு!” என்றார்.
அவரை நம்ப வைக்க எதையாவது செய்து தானே ஆக வேண்டும். சோகோ விளக்குமாறை இங்கும் அங்கும் ஓடவிட்டு உதிர்ந்து கிடந்த இலைகளை மலை போலக் குவித்தார்!
இதைப் பார்த்து அவர் பாராட்டுவார் என்று எண்ணிய சோகோ அவரிடம்,” இந்தக் குப்பையை எங்கே கொட்ட வேண்டும்” என்று கேட்டார். ரோஷி உடனடியாக, ”இலைகள் குப்பை இல்லை” என்றார்.
“ஆனால்”.. என்று இழுத்தார் சோகோ. இலைகள் குப்பை இல்லை என்றால் அதற்கு என்ன அர்த்தம்?
ரோஷி, ”என்ன நான் சொல்வதில் உனக்கு நம்பிக்கை இல்லையா? ஷெட்டுக்குப் போய் அங்கு கரிகளை அள்ள வைத்திருக்கும் காலியாக இருக்கும் சாக்குகளைக் கொண்டு வா” என்றார்.
சாக்குகள் வரும் வரைக்கும் ரோஷி மிக கவனமாக இலைகளை மட்டும் சேகரித்து கல் மண் ஆகியவற்றை அந்தக் குவியலிலிருந்து அகற்றினார்.
சாக்குகளை சோகோ தந்தவுடன் இலைகளை அவற்றில் கொட்டினார். ஒரு இலை கூட விடவில்லை. சாக்குகள் இலைகளால் மிக இறுக்கமாக நிரம்பின. “இவற்றைக் கொண்டு போய் ஷெட்டில் வை. வெந்நீர் போடும் போது தீயில் போட்டுக் கிளற இவை உதவும்” என்று சோகோவைப் பார்த்துச் சொன்னார் ரோஷி “அட அதுவும் சரிதான்,இலைகள் குப்பை இல்லை தான் அவற்றிற்கும் ஒரு உபயோகம் இருக்கிறது” என்று தன்னைத் தேற்றிக் கொண்ட சோகோ ஆனால் இலைகள் தவிர மற்றவை எல்லாம் குப்பை தான் ஆகவே தான் சொன்னதில் தவறில்லை என்று நினைத்தார். ஆனால் அவர் திரும்பி வந்து பார்த்த போது…. சின்னச் சின்ன கூழாங்கற்களை ரோஷி தனியாகப் பிரித்து வைத்திருந்தார்.
“இந்தா, இவற்றை கூரையின் மீது பரப்பு. மழைத்துளிகள் உள்ளே இருக்கும் கருங்கற்கள் மீது விழுவதால் அவை தேய்ந்து போகின்றன. இவற்றை ஓட்டைகளை அடைக்க நான் உபயோகிப்பது வழக்கம்” என்றார் ரோஷி.
அந்த அழகிய கூழாங்கற்களுக்கு அப்படி ஒரு உபயோகம் இருப்பது சரிதான் என்று சோகோ நினைத்தார். ஆனால் மீதி உள்ள களிமண் குப்பை தானே என்று அவர் தன்னை நியாயப்படுத்திக் கொண்டார். ஆனால் ரோஷியோ அவற்றைக் கையில் கவனமாக உருட்டி எடுத்துக் கொண்டார். அங்கு தோட்டத்தின் தரையில் பள்ளமாக இருந்த இடங்களில் அவற்றைப் போட்டு நிரப்பித் தன் காலால் மிதித்து அந்த இடங்களைக் கெட்டிப் படுத்தினார். தோட்டம் பள்ளம் இன்றி சமதரையைக் கொண்டு அழகாய் ஆனது.
“இப்போது உனக்குக் கொஞ்சம் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்” என்று சோகோவைப் பார்த்துச் சொன்ன ரோஷி தொடர்ந்து கூறினார்:” “மனிதர்களிலோ பொருள்களிலோ அவை அசலாக இருக்கும் போது குப்பை என்று எதுவும் இல்லை” ரோஷியிடமிருந்து சோகோ தனது முதல் பாடத்தைக் கற்றுக் கொண்டார்.
சின்ன உண்மை
ஜென் பிரிவானது எந்த ஒரு புனித நூலையுமோ அல்லது உபதேசிக்கப்பட்ட எந்த ஒரு வார்த்தையையுமோ போதிப்பதில்லை. மாறாக, ஒருவனை மனதிற்குள் புகுந்து சென்று அவனது உண்மையான இயற்கை நிலையைப் பார்க்கத் தூண்டுகிறது. ஜென் வழிமுறையில் முக்கியமானது தியானமே!
தொடரும்


























You must be logged in to post a comment.