
COMPILED BY LONDON SWAMINATHAN
Date: 12 January 2016
Post No. 2483
Time uploaded in London :– 9-38 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact
swami_48@yahoo.com)
(லண்டன் ஸ்ரீ முருகன் கோவில் மஹா கும்பாபிஷேக மலர், 1984)
“நாம் இப்போது நுகர்கின்ற இன்ப துன்பங்கட்கு முற்பிறப்பில் செய்த நல்வினை, தீவினைகளே காரணமாகும். அவரவர் செய்தவினை ஊழாக மாறிவந்து உருத்து வந்தூட்டும். நம் உடம்பின் நிழல் நாம் நடந்தால் நம்மைத் தொடர்ந்து வருமாப்போல நாம் செய்த வினையும் நம்முடன் தொடர்ந்துவரும்.
இறைவன் நடுநிலை தவறாதவன். நாம் செய்த நல்வினைகளுக்கு ஏற்ப சுக, துக்கங்களை வகுத்து விதிக்கின்றான். இறைவனுடைய அருளாணையால் விதிக்கப்படட்டது ‘விதி’ எனப்படும்.
“விதி காணும் உடம்பைவிடா வினையேன்
கதிகாண மலர்க்கழல் என்றருள்வாய்”
என்பது கந்தரனுபூதி. விதியை வென்றவர் எவருமிலர். விதி வழி மதி செல்லும்.
“அவ்வினைக்கு இவ்வினை”
முதிர்தவ ராயினும் முனிவ ராயினும்
மதியின ராயினும் மன்னராயினும்
பொதுவறு திருவொடு பொலிவராயினும்
விதியினை யாவரே வெல்லும் நீர்மையார்?
–கந்த புராணம்
நாட்டையும் நகரத்தையும் பொன்னையும் மணியையும் விலையுயர்ந்த உடைகளையும் தூசாக எண்ணித் துறந்து உடுத்த உடையுடன் கானகம் சென்ற குணவதியாகிய சீதா தேவி ஒரு மானை விரும்பினாள் – கணவனுக்குக் கட்டளையிடாத அக்கற்புக்கரசி கணவனைப் பார்த்து “இம்மானைப் பிடித்துக்கொடும்” என்று ஏவினாள். கண்ணை இமை காத்து நின்றது போல் காத்துநின்ற பரம பக்தனாகிய இலெட்சுமணனை உள்ளம் வருந்த சூடாக வைது நெடிய வனத்திடை அனுப்பினாள்.
ஒருபோதும் மனைவியின் வார்த்தையையும் கேளாத வீர ராகவர் மனைவியின் சொல்லைக் கேட்டு கோதண்டமாகிய வில்லைத் தூக்கி மான் பின்னே சென்றார். வில்லையா தூக்கினார்? இல்லை பழிச் சொல்லைத் தூக்கினார். இவைகட்கு காரணம் விதிதான்.

“வெஞ்சின விதியினை வெல்ல – வல்லமோ?”
அதிசயம் ஒருவரால் அமைக்கலாகுமோ
துதியறு பிறவியின் இன்ப துன்பந்தான்
விதிவயம் என்பதை மேற்கொள்ளாவிடின்
மதிவலி யான்விதி வெல்ல வல்லமோ
–கம்பராமாயணம்
விதியின் வலிமையை விளக்க ஒரு சான்று
ஒரு குளக்கரையில் ஓரந்தணர் மான் தோல்மீது அமர்ந்து காயத்திரி மந்திரம் ஜெபம் செய்துகொண்டிருந்தார். ஒரு புலையன் பசுவை வெட்டும்பொருட்டு கத்தியைத் தீட்டிக் கொண்டிருந்தான்.அறிவுள்ள அப்பசு, நம்மைக் கொல்லும்பொருட்டே இவன் கத்தியைத் தீட்டுகின்றான் என்று அறிந்து கட்டுத் தறியை அறுத்துக்கொண்டு அக்குளக்கரை வழியே ஓடியது. அந்தப் புலையன் பசுவைத் தேடிக்கொண்டு வந்தான்.அந்த ஜெபம் புரியும் பிராமணனைப் பார்த்து, “ஐயரே, பசு இந்த வழியாகச் சென்றதா?” என்று கேட்டான்.
ஜெபம் செய்துகொண்டிருந்த அந்தணர் இருகரங்களையும் நீட்டி பசு ஓடின வழியைக் காட்டினார். அவர் காட்டிய வழியே சென்று புலையன் பசுவைக் கொலை செய்துவிட்டான்.
வட நாட்டில் தாழ்ந்த குலத்தில் ஸஜ்ஜன சாருகர் என்பவர் பிறந்தார். சாருகர் என்ற குலத்தில் பிறந்தவர் உயர்ந்த குணங்களை உடையவராக விளங்கினார். அதனால் ஸஜ்ஜன சாருகர் என்று பெயர் பெற்றார். அவர் இளமையிலிருந்தே உத்தம குணங்களுக்கு உறைவிடமாகத் திகழ்ந்தார். அடக்கம், பொறுமை, சாந்தம், ஈஸ்வர பக்தி ஒழுக்கம், பண்பு முதலிய நற்குணங்களை அணிகலமாக அணிந்த அவர் ஆசார சீலராக இருந்தார். அவர் பண்டரிநாதனை உபாசனை புரிந்துவந்தார். பண்டரி நாதா! பண்டரிநாதா! எனு கூறி அலறுவார்.”விட்டல், விட்டல்” என்று பஜனை செய்வார். இரவு பகலாக எட்டெழுத்தை ஓதி உள்ளம் உருகுவார்., கண்ணீர் பெருகுவார்.
பண்டரீபுரம் பூலோக வைகுந்தம். அந்த க்ஷேத்திரத்தில் சதா தம்புராவின் நாதம் முழங்கிக்கொண்டிருக்கும். பக்த ஜனங்கள் மத்தளம், ஜால்ரா முதலிய வாத்தியங்களை ஒலித்து ஆடியும் பாடியும் பரவசம் அடைவார்கள் பாண்டுரங்கனைச் சேவிக்க வருகிற பக்த கோடிகளின் கூட்டம் அளவிட முடியாது. பாண்டுரங்கன், பக்தர்களின் வினைகளைக் களைந்து, விரும்பிய நலன்களை வழங்கி வரத மூர்த்தியாக விளங்கினார்.

பண்டரீபுரத்துக்கு அருகே சந்திரபாகா என்ற நதி அழகாக ஓடிக்கொண்டிருக்கும். அந்த நதி பன்னிரு ஜோதிலிங்கங்களில் ஒன்றான பீமா சங்கர் என்ற இடத்திலிருந்து உற்பத்தியாவது. அதனால் பீமாநதி என்று பெயர் பெற்றது. பண்டரீபுரத்துக்கு அருகில் பிறைச் சந்திரனைப் போல் வளைந்து போவதால் சந்திர பாகா என்ற பெயர் பெற்றது. தூய்மையான நீர் சல சலவென்று ஓடிக் கொண்டிருக்கும். நாமதேவர், துர்காராம், சக்குபாய், கோராகும்பர், ராமதாசர், கபீர்தாசர் முதலிய பலப்பல பக்தர்கள் வழிபட்டு முக்தியடைந்த திருத்தலம். பல ஞானியர்களின் சமாதிக் கோயில்கள் அங்கே காட்சி தருகின்றன.
ஸஜ்ஜன சாருகருக்கு பண்டரீபுரம் சென்று விட்டல நாதனைச் சேவிக்க வேண்டும் என்ற தாகம் மேலிட்டது. “பண்டரிநாதா, உன்னைச் சேவிக்கும் நாள் எந்நாளோ, அருட்கடலே! கருணைத் தெய்வமே! உன்னைக் கண்ட கண்களே கண்கள். உன்னை வணங்கும் பேறு எல்லோருக்கும் கிடைக்குமா? பல பிறவிகளில் செய்த புண்ணிய பலன் இருந்தால்தானே உன் தெரிசனம் கிடைக்கும்” என்று கூறிப் புலம்புவார், திசை நோக்கித் தொழுவார், அழுவார், மூர்ச்சித்து விழுவார்.“ நாளை பண்டரிக்குப் புறப்படலாம்” என்று கூறுவார். ஒரு சமயம் துணிந்து பண்டரிபுரத்தை நோக்கிப் புறப்பட்டார்.
அந்தக் காலத்தில் ரயில் பஸ் முதலிய வாகன வசதிகள் கிடையா. சாருகர் பஜனை செய்துகொண்டு நடந்து போகிறார். பகல் முழுதும் நடப்பார். பொழுதுபோன ஊரில் பிட்சை எடுத்து உண்டு சத்திரங்களில் தங்கி பஜனை செய்வார்.
ஒருநாள் ஒரு நகரத்தில் தங்கினார்.இரவில் வேறு இடமின்மையால் ஒரு தனவந்தரின் வீட்டுத் திண்ணயில் அமர்ந்து ஜெபம் செய்துகொண்டிருந்தார். இரவு ஒரு மணி. நகரம் இருள் சூழ்ந்திருந்தது. ஒலியடங்கி இருந்தது. அங்கங்கே நாய்கள் குலைத்துக் கொண்டிருந்தன. அந்த வீட்டுப் பெண் சிறுநீர் கழிக்க கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள். சாருகரைக் கண்டாள். அவர் மீது மையல் கொண்டாள். அவரருகே சென்று, “தாங்கள் பூலோக மன்மதரைப் போல காட்சி தருகிறீரே! தாங்கள் யார்? என்று கேட்டாள்.
“அம்மா! வணக்கம், நான் ஒரு யாத்ரீகன்.என் பேர் சாருகன். நான் பண்டரிபுரம் போகின்றேன். “என் உள்ளததைக் கொள்ளைகொண்ட உத்தமரே! தாங்கள் என் இதய ராஜா. நான் உங்கள் இதய ராணி. இந்த விநாடி முதல் தாங்கள் என் இன்னுயிர்க் கணவர்.”
“அம்மா! இந்த உலகம் கடுகளவு. பாவத்தால் வரும் துன்பம் மலையளவு. நான் மனத்தினாலும் மாதரைத் தீண்டாதவன். பிரம்மச்சாரி. தாங்கள் உங்களுடைய கணவருடன் வாழ்வதுதான் கண்ணியம்; கற்பு நெறியில் நிற்பதுதான் புண்ணியம். அவநெறியில் புக வேண்டாம்.”
அவள் வெறி பிடித்தவளைப் போல ஓடி கொடுவாளை எடுத்து அயர்ந்து தூங்குகின்ற கணவனுடைய தலையை வெட்டித் துணித்தாள். “என் உயிரினும் இனிய உத்தமரே! என் கணவரைக் கொன்றுவிட்டேன். இனி நீர்தான் என் கணவர்”—என்று கூறி அவரைக் கட்டித் தழுவ வந்தாள்.
இந்தக் கொடுஞ்செயலைக் கண்டு சாருகர் நடுநடுங்கினார். ஐயோ! கணவரைக் கொன்ற இவள் ஒரு பெண்ணா? பூதமா?பேயா? என்று எண்ணித் திண்ணையை விட்டுக் குதித்து ஓடினார். அந்தப் பெண் அவரைத் தொடர்ந்தாள்.சாருகரைப் பற்ற முடியவில்லை. நான்கு தெரு கூடுமிடத்தில் நின்று அப்பெண் ஓவென்று கதறி ஓலமிட்டாள். அங்கு உறங்கியிருந்தவர்கள் கூடினார்கள்.
“பெரியோர்களே! இந்தப் பாவி எங்கள் வீட்டுத் திண்ணையில் படுத்திருந்தான். நான் சிறு நீர் கழிப்பதற்காக கதவைத் திறந்து வெளியே வந்தேன். என் கணவரை வெட்டிவிட்டு என்னைக் கற்பழிக்க என்னைத் துரத்தி வந்தான் என்று கூறி கதறியழுதாள்.

ஊரவர், சாருகரைப் பிடித்து அடித்துத் துன்புறுத்தினர். காவல் துறையினர், அவரைச் சிறையில் அடைத்தார்கள். பொழுது விடிந்தபின். அவ்வூர் சிற்றரசன் வழக்கை விசாரித்தான். “எல்லாம் பாண்டுரங்கன் அறிவான். நான் ஒரு குற்றமும் செய்யவில்லை: என நடந்ததை உள்ளபடி சொன்னார். குற்றம்புரிந்தவன் ஒப்புக்கொள்வானா? என்று எல்லோரும் சொன்னார்கள். சாருகருடைய கரங்களைத் துண்டிக்குமாறு அரசன் ஆணையிட்டான். சாருகருடைய இரு கரங்களும் துண்டிக்கப்பட்டன. குற்றம் செய்யாத குணப் பெருங்குன்றான அவர் துடிதுடித்தார்.
“பாண்டுரங்கா! பரம தயாளா!அருட் பெருங்கடலே! ஒழுங்கு நெறியில் நின்ற எனக்கு இந்த தண்டனையா?ஐயனே! சர்வ பூத சாட்சியான தேவரீரை நம்பிய எனக்கு இத்துன்பமா? என்று கூறி அழுதார்.
பின்னர் எங்கும் தங்காமல் பண்டரீபுரம் வந்து சேர்ந்தார். அன்றிரவில் கோயில் அர்ச்சகர்கள், அறங்காவலர்கள், தக்கார்களின் கனவில் பண்டரீநாதர் தோன்றி, “நமது பரம பக்தனான ஸஜ்ஜன சாருகன் வருகிறான். கோயில் மேளம், குடை, சுருட்டி, பூரண கும்பம் வைத்து உபசரித்து அழைத்து வாருங்கள்” என்று பணித்தருளினார்.
எல்லோரும் வந்து சாருகருக்கு கோவில் பரிவட்டம் கட்டி கனவில் பாண்டுரங்கன் கூறியதைச் சொல்லி பேரன்பு காட்டினர். சாருகர் இதனைக் கேட்டு அழுதார். பாண்டுரங்கன் திருவுருவம் முன் நின்றார். கைகளில்லாமையால் தொழ முடிய வில்லையே என்று கதறினார்.”தேவ தேவா! உன்னை என்னடியார் என்று அருள் புரிந்தனையே. அன்று அரசன் என் கரங்களை வெட்டுமாறு ஆனையிட்டானே. அப்போது இவன் குற்றமற்றவன் என்று அசரீரியாகவாது ஒரு குரல் கொடுத்திருக்கலாமே. அன்று என்னைக் கை நழுவவிட்டீரே. இது நியாயமா? இதுதான் உன் கருணையா? இது தருமமா? நான் இப்பிறவியில் எவருக்கும் எந்தத்தீங்கும் செய்யவில்லையே. உன்னைக் கையெடுத்துக் கும்பிடக்கூட முடியவில்லையே என்று சொல்லி அழுதார்.
பாண்டுரங்கண் கூறினார்: “அன்பனே அழாதே. அவரவர் வினைகளை அவரவர் அனுபவித்தே தீர வேண்டும். அன்று ஒரு நாள் குளக்கரையில் ஓரந்தணன் காயத்ரி மந்திரம் ஜெபித்துக் கொண்டிருந்தான். பசுவை வெட்ட வந்த புலையன் பசு ஒடிப்போன வழியைக் கேட்டவுடன் இரு கரங்களையும் நீட்டி அது போன பக்கத்தைக் காட்டினான். புலையன் அவ்வழியே சென்று பூலோக காமதேனுவாகிய பசுவைக் கொன்று விட்டான். நீதான் அந்த காயத்ரி ஜபம் செய்த அந்தணன். பசுவின் கொலைக்குக் காரணமான உனது இரு கரங்களும் வெட்டப்பட்டன. கொலையுண்ட பசுதான் அப்பெண் (தனவந்தனின் மனைவி); பசுவைக் கொலை செய்த புலையன்தான், அவளுடைய கணவன். ஆகையால் இவை அனைத்தும் முற்பிறப்பில் செய்த தீவினையால் வந்தவை என்று கூறினார். பண்டரிநாதனின் திருவாக்குகளைக் கேட்டவுடன், அவர் ஆறுதலடைந்தார். பண்டரீநாதன் கருணையால் அவர் கரங்கள் வளர்ந்தன. பண்டரிநாதனின் இரு பாத மலரினைத் தொட்டுக் கட்டித் தழுவி அருச்சித்த காலத்தில் சஜ்ஜனசாருகர் பரமபதம் அடைந்தார்.
–சுபம்-
You must be logged in to post a comment.