Written by London Swaminathan
Post No. 15,618
Date uploaded in London –14 April 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 75
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 75
***
வள்ளியைக் காண முருகன் போட்ட வேஷங்கள்
வேடர் நாட்டில் விளை புன ஏனல் காத்த சிறுமியை வேட
மாற்றி வழி படும் இளையோனே … வேடர்கள் வாழும்
வள்ளிமலையில் தினைக் கொல்லையைக் காவல் புரிந்த சிறுமியாகிய
வள்ளியை, (உனது உண்மையான உருவைக் காட்டாது) பல*
வேடங்களில் வந்து, வணங்கிய இளைஞனே,
ஞாலம் ஏத்தி வழிபடும் ஆறு பேர்க்கும் மகவு என நாணல்
பூத்த படுகையில் வருவோனே … பூமியில் உள்ளோர் போற்றி
வழிபடும் ஆறு கார்த்திகைப் பெண்களுக்கும் குழந்தை என்று
சொல்லும்படி நாணல் புல் சூழ்ந்த மடுவில் (சரவணப் பொய்கையில்)
தோன்றியவனே,
நாத போற்றி என முது தாதை கேட்க அநுபவ ஞான
வார்த்தை அருளிய பெருமாளே. … தலைவா போற்றி என்று
தந்தையாகிய மூத்த சிவபெருமான் கேட்க, பேரின்ப அனுபவத்தைத்
தரும் ஞான மொழியாகிய பிரணவத்தை உபதேசித்த பெருமாளே.
* வள்ளியைக் காண முருகன் பூண்ட வேடங்கள்:
வேடன், வளையல் செட்டி, வேங்கை, கிழவன் முதலியன.
***
ஞானாசாரிய மூர்த்தியாக முருகன் தோன்றிய கதை
ஒரு கணை ஏவு ராகவன் மருக … ஒப்பற்ற அம்பைச் செலுத்திய
ராமனின் மருகனே,
விபூதி பூஷணர் உணர உபதேச தேசிக … திருநீறு அணிந்த
சிவபெருமான் உணர்ந்து கொள்ள உபதேசம் செய்த குரு மூர்த்தியே,
வரை ஏனல் பரவிய கான வேடுவர் தரும் அபிராம நாயகி
பரிபுர பாத சேகர … வள்ளி மலையில் தினைப் புனத்தே, (உன்னைக்)
குல தெய்வமாகப் போற்றித் துதித்த, காட்டில் உள்ள வேடர்கள் வளர்த்த,
அழகிய வள்ளி நாயகியின் சிலம்பு அணிந்த திருவடிகளைத் தலையில் சூடினவனே,
சுர ராஜன் பதி குடி ஏற வேல் தொடு முருக மயூர வாகன …
தேவர்களுக்கு அரசனான இந்திரன் பொன்னுலகில் குடி ஏறுவதற்காக
வேலைச் செலுத்திய முருகனே, மயில் வாகனனே,
பரவச ஞான யோகிகள் பெருமாளே. … ஆனந்த நிலையில்
இருக்கும் ஞான யோகிகளின்* பெருமாளே.
* துங்கபத்திரை நதிக்கு வட திசையில் உள்ள ஞானபுரத்தில் கெளசிக முனிவர் தத்துவ ஞானம் கைகூட வேண்டி சரவணபவ மந்திரத்தைத் தியானித்துக் குகப் பெருமானை நோக்கிக் கடுந் தவம் புரிந்தார். கந்தக் கடவுள் ஞானாசாரிய மூர்த்தியாகத் தோன்றிச் சிவஞானம் எனப்படும் பதி ஞானமே தெளிவை உண்டாக்கும் என்று உபதேசித்தார். அதனால் ஞான தேசிக மூர்த்தி எனப் பெயர் பெற்றார்.
இந்தப் பதி ஞானம் தான் பரம ஞானம், சிவ ஞானம், குக ஞானம், தத்துவ ஞானம், திருவடி ஞானம், அருள் ஞானம், அத்துவித ஞானம், மெய்யுணர்ச்சி எனப் பலவாறு கூறப்படும்.
***
நானார் நானார் நானார் நானார் நானார் பாடல்!
ஊனே றெலும்பு … சதையின் மேல் மூடியுள்ள எலும்பு,
சீசீ மலங்களோடே … சீச்சீ என அருவருக்கத்தக்க அழுக்குகளுடன்,
நரம்பு கசுமாலம் … நரம்புகள், பிற அசுத்தங்கள்,
ஊழ்நோ யடைந்து … ஊழ்வினை சம்பந்தமான நோய்கள்,
மாசான மண்டும் ஊனோடு … இவைகள் சேர்ந்து, குற்றங்களே நிறைந்த உடலோடு
உழன்ற கடைநாயேன் … அலைந்து திரிந்த நாயினும் கீழான அடியேன்
நானார் ஒடுங்க … அடங்கி ஒடுங்குதல் என் வசத்தில் உள்ளதா?
நானார் வணங்க … வணங்கிப் பணிதல் என் இச்சையில் உள்ளதா?
நானார் மகிழ்ந்து உனையோத … மகிழ்ச்சியோடு உன்னைப் போற்றுதல் என் செயலில் உள்ளதா?
நானார் இரங்க … உயிர்களிடத்தே இரக்கம் காட்டுதல் என் வசத்தில் உள்ளதா?
நானார் உணங்க … சிந்தை நொந்து வாடுதல் என்னால் கூடுமோ?
நானார் நடந்து விழநானார் … நடப்பதுதான் என் இச்சையா அல்லது விழுவதுதான் என் செயலா?
தானே புணர்ந்து தானே யறிந்து … சேரும் அனைத்தும் தானே ஆகி, அறியும் பொருளும் தானேஆகி,
தானே மகிழ்ந்து அருளூறி … மகிழ்பவனும் தானே ஆகி, அருள்சுரந்து,
தாய்போல் பரிந்த … தாய் போன்ற அன்பைக்காட்டும்
தேனோடு உகந்து … தேன் போன்ற இனிய தேவியுடன் மகிழ்ந்து,
தானே தழைந்து சிவமாகி … தானே செழிப்பாய் வளர்ந்து சிவமாகித் திகழ்பவனும்
தானே வளர்ந்து தானே யிருந்த … வளர்பவனும் அழியாது
இருப்பவனும் தானே ஆகி, இவ்வாறு தன்னந்தனியாய் நிற்கும் பெருமான்,
தார்வேணி யெந்தை யருள்பாலா … பூமாலை அணிந்த சடையினன் எம்பெருமான் சிவனார் அருளிய குழந்தையே,
சாலோக தொண்டர் சாமீப தொண்டர் … இவ்வுலகிலுள்ள
அடியார்களுக்கும், உன்னருகே நெருங்கும் அடியார்களுக்கும்,
சாரூப தொண்டர் பெருமாளே. … உன்னுருவத்தோடு ஒன்ற நினைக்கும் அடியார்களுக்கும் பெருமாளே*.
* சாலோக, சாமீப, சாரூப, சாயுஜ்யம் என்ற நால்வகைத் தொண்டர்களில் மூவரைப் பற்றி மட்டும் கூறினார். ஏனெனில் சாயுஜ்ய பதவியில் அவர்கள் முருகனோடு இரண்டறக் கலந்துவிடுகிறார்கள்.
***
ஒரே வரியில் 10 மலர்கள் , இலைகள் !
மெய்கள் தோணிப் பிறவி அலை வேலை மெள்ள ஏறி …
உண்மைப் பொருள்கள் தோன்றி விளங்க, பிறவியாகிய அலை கடலைமெதுவாகக் கடந்து செல்ல (என்ன செய்யவேண்டும் என்றால்),
குரவு வெள்ளில் ஆர் வெட்சி தண் அ(ம்) முல்லை வேர்
உற்பலம் முளரி நீபம் வில்ல(ம்) … குராமலர், விளா இலை, ஆத்தி,வெட்சி, குளிர்ச்சி பொருந்திய முல்லை, குறு வேர், நீலோற்பல மலர்,தாமரை, கடம்பு, வில்வம் முதலியவற்றை
நீள் பொன் கனகம் அல்லி மேல் இட்டு உனது சொல்லை
ஓதிப் பணிவது ஒரு நாளே … பெரியதும், அழகுள்ளதும், பொன் போல் ஒளி வீசுவதுமான, அல்லிமலர் போன்ற உனது திருவடியின் மீது இட்டு, உனது புகழை உரைத்து உன்னைப் பணிவதுமான ஒரு நாள் எனக்குக் கிடைக்குமா?
***
பிள்ளையாருக்கு கொடுத்தது மாம்பழமா, மாதுளம் பழமா ?
ஒளிர் ஆனையின்கரமில் … விளங்கும் யானைமுக விநாயகனுக்குக்
கரத்தில்
மகிழ்மாதுளங்கனியை ஒருநாள் பகிர்ந்த … மகிழும்படியாகமாதுளங்கனியை முன்பொருநாள் அளித்தவளும்
உமை யருள்பாலா … ஆகிய உமாதேவி பார்வதி அருளிய பாலகனே,
அவமேபி றந்தஎனை யிறவாமல் … வீண் காலம் போக்கும்
பிறவியை எடுத்த எனக்கு இறவாத வரத்தைத் தந்து
அன்பர்புகும் அமுதாலயம் பதவியருள்வோனே … அன்பர்கள்
புகுகின்ற அமுதக்கோயிலாகிய உயர் நிலையை அருள்வோனே,
***
பேய்களின் நடனம்
குடிப்பன முகப்பன நெடிப்பன நடிப்பன … (போர்க்களத்தில்
ரத்தத்தைக்) குடிப்பன ஆகவும், மொள்ளுவன ஆகவும், ஊறுவன
ஆகவும், கூத்தாடுவன ஆகவும்,
கொழுத்த குருதிக் கடல் இடை ஊடே குதிப்பன மதிப்பன
குளிப்பன களிப்பன … செழிப்புற்றுக் குழம்பாக இருக்கும் ரத்தக்
கடலுள் குதிப்பன ஆகவும், ரத்தக் கடலின் அளவை அளவிடுவன
ஆகவும், அதில் குளிப்பன ஆகவும், அதைக் கண்டு மகிழ்வன ஆகவும்,
குவட்டினை இடிப்பன சில பாடல் படிப்பன திருப்புகழ்
எடுப்பன முடிப்பன … (அந்த மகிழ்ச்சியில்) மலைகளையும் இடிப்பன
ஆகவும், சில பாடல்களை படிப்பன ஆகவும், (முருகன்) திருப்புகழை
ஆரம்பித்து முடிப்பன ஆகவும்,
பயிற்றி அலகைக் குலம் விளையாட … இத்தகைய நிகழ்ச்சிகளுடன்
பேய்க் கூட்டங்கள் விளையாட,
பகைத்து எழும் அரக்கரை இமைப் பொழுதினில் பொடிபடப்
பொருது உழக்கிய பெருமாளே. … பகைத்து எழுந்த அசுரர்களை
ஒரு நொடிப் பொழுதில் தூளாகும்படி போர் புரிந்து கொன்ற பெருமாளே.
இப்பாடலின் கடைசி எட்டு வரிகள் போர்க்களத்தில் பேய்களின் நடனத்தை தாளத்துடன் வருணிக்கின்றன.
—SUBHAM—
TAGS- பேய்களின் நடனம் மாதுளங்கனி, வள்ளி, முருகன் வேஷங்கள் ,திருப்புகழில் அருணகிரிநாதர் ,அரிய செய்திகள், Part 75