திருவாவடுதுறை கோயில் படம்
Written by London Swaminathan
Post No. 15,619
Date uploaded in London –14 April 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஐந்து சிவன் கோவில்களில் தரிசனம்! சனி பகவான் குடும்பத்தையும், சுக்கிரனையும் தரிசித்தேன்- Part 2
***
திருவாவடுதுறை
திருவிடை மருதூர், திருபுவன சிவன் கோவில்களில் தரிசனத்தை முடித்துக்கொண்டு அடுத்துள்ள திருவாவடுதுறைக்குச் சென்றேன் .
திருவாவடுதுறை (திரு ஆவடுதுறை) மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம், இங்குள்ள கோமுக்தீஸ்வரர் (மாசிலாமணீஸ்வரர்) கோயில் காவிரி தென்கரைத் தலங்களில் 36-வது தலம்; சுமார் 1,400 ஆண்டுகள் வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் .
அம்பிகை பசு வடிவில் சிவனை வழிபட்ட தலம், திருமூலர் முக்தி அடைந்த தலம், மற்றும் புகழ்பெற்ற திருவாவடுதுறை ஆதீன மடம் இருக்கிறது.
மூலவர்: கோமுக்தீஸ்வரர் / மாசிலாமணீஸ்வரர் (இறைவன் பசுவின் முகம் (கோ முகம்) வழி வெளிப்பட்டதால் இப்பெயர்).
அம்மன்: ஒப்பிலாமுலையம்மை (கோருபாம்பிகை).
திருமூலர் தலம்: திருமூலர் தன் ‘திருமந்திரம்’ நூலை இயற்றிய தலம் மற்றும் முக்தி பெற்ற இடம்.
சமய குரவர் பாடல்: திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற தலம்.
நீண்ட வரலாற்றைக் கொண்ட திருவாவடுதுறை ஆதீனம் இங்கு அமைந்துள்ளது.
தருமபுரம், திருவாவடுதுறை மடங்கள் ஏராளமான சைவத் திருமுறை நூல்களை வெளியிட்டுத் தமிழ் மொழிக்கு மகத்தான சேவை செய்துள்ளன.
முதலாம் பராந்தக சோழனால் கட்டப்பட்ட கற்கோயில், சோழர் காலக் கட்டடக்கலைக்குச் சான்றாகும்.
நோய் தீர்க்கும் தலம், குழந்தை வரம் அருளும் தலம் என பக்தர்கள் நம்புகிறார்கள்
மயிலாடுதுறை – கும்பகோணம் சாலையில், குத்தாலம் தாலுகாவில் அமைந்துள்ளது. அருகிலுள்ள இரயில் நிலையம் நரசிங்கம்பேட்டை.
கோபுரம் மிகவும் பழையதாகக் காணப்பட்டது வெளியே பழைய சிலைகளை காட்சிக்கு வைத்திருந்தனர் . காலை பத்து மணிக்குச் சென்ற போதும் முக்கிய சிவன் சந்நிதி பூட்டப்பட்டிருந்தது. ஆனால் கம்பிக்கிராதிகள் வழியாக சிவபெருமானை தரிசனம் செய்ய முடிந்தது!
எல்லா சிவன் கோவில்களிலும் கர்ப்பக்கிரகத்தில் சிவ பெருமான் லிங்க வடிவத்திலேயே உள்ளார் ; பிரகாரத்தில் ஆகம விதிப்படி கோஷ்ட தேவதைகள் காணப்பட்டன.
திருமூலர் சந்நிதி
திருமூல நாயனாருடன் திருவாவடுதுறை தலம் தொடர்புடையதால், தனி சந்நிதியும், அங்கே திருமூலரின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் சுவர் ஓவியங்களும் இருந்தன . அவரையும் தரிசித்தோம் ; சுவர்களில் திருமந்திரப் பாடல்களும் இருந்தன.
***
கஞ்சனூர்
அடுத்தகாக கஞ்சனூருக்குச் சென்றேன் ; நவக்கிரஹத் தலங்களில் வெள்ளி கிரஹம் எனப்படும் சுக்கிர பகவானை வழிபடும் க்ஷேத்ரம் இது; அங்கே ஓரளவு கூட்டம் இருந்தது. பலரும் அர்ச்சனை செய்யவே, பட்டரும் அவ்வப்போது தீபாராதனை காட்டினார். தொலை தூரத்திலுள்ள மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான கோவில் இது .
காவிரி வடகரைத் தேவாரத் தலங்களில் இது 36-வது தலம்.
சுக்கிரன் (VENUS/ Sukran) தலம் – திருமணத்தடை நீங்கவும், சுக்கிர யோகம் (செல்வம், சுகபோகம்) பெறவும் பக்தர்கள் இங்கு வழிபடுகின்றனர்.
மூலவர்: அக்னீஸ்வரர் (சுயம்பு லிங்கம்).
அம்பாள்: கற்பகாம்பிகை.
தல விருட்சம்: பலா, புரசு.
தீர்த்தம்: அக்னி தீர்த்தம், பராசர தீர்த்தம்.
இத்தலத்தில் சுக்கிரன், சிவபெருமானின் வயிற்றுப்பகுதியில் வாசம் செய்வதாக நம்பப்படுவதால், இங்கு சுக்கிரனுக்குத் தனி சந்நிதி கிடையாது. அறிவிப்பில் சுக்கிரன் சந்நிதி என்றே இருக்கும்
கும்பகோணத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தூரத்திலும், சூரியனார் கோயிலில் இருந்து 2 கி.மீ. தொலைவிலும், மயிலாடுதுறையில் (மாயவரம்) இருந்து 20 கி.மீ. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.
பிரம்மாவுக்குத் திருமணக் காட்சி அருளிய தலம், ஹரதத்த சிவாச்சாரியார் அவதரித்த தலம் மற்றும் கஞ்சமாற நாயனார் சிவபெருமான் அருள்பெற்ற தலம்.
இத்தலம் பலாச வனம், பிரம்மபுரி, அக்னித்தலம் என்றும் அழைக்கப்படுகிறது.
சோழர் மற்றும் விஜயநகர மன்னர்களின் கல்வெட்டுகள் உள்ளன .
சுக்கிர தசை நடப்பவர்கள் மற்றும் சுக்கிர தோஷம் உள்ளவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபடுகிறார்கள்
ஹரதத்தர் சிவபூசை செய்வதுபோல உள்ள ஹரதத்தர் தனிக்கோயிலும் இத்தலத்தில் உள்ளது. மானக்கஞ்சாறர், கலிக்காமர் திருவுருவங்களை அடுத்து, பக்கத்தில் சுரைக்காய்ப் பக்தர் என்ற அடியார் மனைவியுடன் காட்சி தருகின்றார். நடராச சபையில் நடராசர் மூலத்திருமேனியில் சிவகாமியுடன் (சிலாரூபமாக) இருப்பது தனிச் சிறப்பு; இம்மூர்த்தியே பராசரருக்கு தாண்டவக் காட்சித் தந்தவர். இத்தாண்டவம் முத்தித் தாண்டவம் எனப்படுகிறது.
***
திருநறையூயூரில் சனி பகவானுக்கு தனி சந்நிதி
கும்பகோணம் – திருவாரூர் சாலையில், கும்பகோணத்துக்குத் தெற்கே சுமார் 10 கி.மீ தொலைவில், அமைந்துள்ளது நாச்சியார்கோவில். இங்கிருந்து பிரியும் சாலையில், 1 கி.மீ., துாரத்தில் உள்ளது,
ராமர் வழிபட்ட மூலவரின் திருநாமம் ஸ்ரீராமநாதஸ்வாமி. அம்பாளின் திருநாமம் ஸ்ரீபர்வதவர்த்தினி இங்குள்ள இறைவனை ராமர் வழிபட்டு, ராவண வதத்தால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்து கொண்டார் அதனால் இத்தல ஈசன் ராமநாதசுவாமி ஆனார்.
இந்த ராமநாத சுவாமி கோவில், சனி பகவானுக்குரிய ஒரு சிறந்த பரிகார கோவில்; . மேலும் இக்கோயிலில் வேறெங்கும் காணமுடியாத அதிசயமாக சனீஸ்வரபகவான் தன் இரு மனைவியரான மந்தா தேவி, ஜேஷ்டா தேவியுடனும், மாந்தன், குளிகன் எனும் இரண்டு மகன்களுடனும் குடும்ப சமேதராய் மேற்கு திசை நோக்கி தரிசனமளிக்கிறார்.
ஜாதகத்தில் இருக்கும் எப்பேர்ப்பட்ட சனிதோஷங்களையும் நீக்கவும், நீண்ட கால நோய்கள் தீரவும், சகல ஐஸ்வரியங்கள் கிடைக்கவும் சிறந்த பரிகார தலமாக இது இருக்கிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் பழமையான அருள்மிகு இராமநாதர் திருக்கோயில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டதாகும். இக்கோயிலின் கோபுர வாயில் கிழக்கு நோக்கி உள்ளது. மூலவர் அருள்மிகு இராமநாத சுவாமி கிழக்கு முகமாகவும், அம்பாள் பார்வதவர்தினி தெற்கு முகமாக நோக்கியும் அருள்புரிகின்றனர். இராமேஸ்வரத்தை தரிசிக்க முடியாத பல பக்தர்கள், தங்கள் பரிகாரங்களை இங்கேயே செய்கிறார்கள்.
இந்த கோயிலில், மூலவருக்கு பலி பீடமோ, த்வஜஸ்தம்பமோ கிடையாது. ஆனால், இங்கு தனி சந்நிதியில் சனீஸ்வரருக்கு இரும்பினால் ஆன த்வஜஸ்தம்பம், பலி பீடம், மற்றும் சந்நிதி முன் காக வாகனமும் அமைந்துள்ளது. இந்த சனீஸ்வர சந்நிதியை வலம் வருவதற்கு பிரகாரம் உள்ளது. ஸ்ரீ ராமபிரானின் தந்தையான தசரத சக்கரவர்த்தி இவர்களை வணங்கியபடி நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.
பிரகாரத்தில் விநாயகர், வள்ளி மற்றும் தேவசேனருடன் சுப்பிரமணியர், கஜலட்சுமி, அண்ணாமலையார், பிரம்மா, துர்காதேவி, சண்டிகேஸ்வரர், ஹனுமந்த லிங்கம் மற்றும் நவக்கிரக சந்நிதியும் உள்ளது. இங்கு ஸ்ரீ தட்சிணாமூர்த்தி பகவான் ரிஷப வாகனத்தில் அமர்ந்தபடி காட்சி தருவது சிறப்பாகும்.
ஸ்தல விருட்சம் : எருக்கு
ஸ்தல தீர்த்தம் : இராமதீர்த்தம்.
சூரிய பகவானுக்கும் சாயாதேவிக்கும் மைந்தனான இவர், மனிதர்கள் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அவர்களுக்கு நல்லதையோ, கெட்டதையோ அளிக்கிறார். இவர் “ஆயுள்காரகர்” எனப்படுகிறார். “சனைச்சரன்” (மெதுவாகச் சஞ்சரிப்பவன்) என்ற பெயரும் உண்டு, மற்றும் மந்தன், காரி, முடவன் ஆகிய பட்டப் பெயர்களும் இவருக்கு உள்ளது.
நவகிரகங்களில் சனிபகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாவார். இவரே ஒருவரின் வாழ்வில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்துவார் என்பது ஜோதிட நம்பிக்கை. “சனியைப் போல கொடுப்பாரும் இல்லை; அவரைப் போல கெடுப்பாரும் இல்லை” என்றொரு பழமொழி உண்டு. இவர் நம் கர்ம வினைகளுக்கு ஏற்ப நல்லதையோ, கெட்டதையோ அளிக்கிறார். ஆனால் மக்கள் இதை சரியாகப் புரிந்துகொள்ளாமல், இவரைக் கண்டு பயப்படுகிறார்கள்.
அயோத்தியை ஆண்ட தசரத சக்ரவர்த்தி தன்னை பாதித்திருக்கும் பிணி தீர இங்கு இருக்கும் புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, சிவபெருமானையும், சனி பகவானையும் வழிபட்டு நிவாரணம் பெற்றதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
அதேபோல் ஸ்ரீஇராமரும், இராவண வதம் முடிந்த பிறகு, அயோத்தி திரும்புகையில் தந்தை வழிபட்ட இத்தலத்திற்கு வந்து புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, மண்ணால் லிங்கம் செய்து வழிபட்டிருக்கிறார். அனுமனும் இவ்வாலய சிறப்புணர்ந்து இங்கு சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து, சிவ வழிபாடு செய்திருக்கிறார். இந்த ஹனுமந்த லிங்கம் பிரகாரத்தில் அமைந்திருக்கின்றது.
கும்பகோணம்- திருவாரூர் சாலையில், கும்ப கோணத்துக்குத் தெற்கே சுமார் 10 கி.மீ. தொலைவில், அரசலாறு மற்றும் திருமலைராஜன் ஆறுகளுக்கு இடையில் அமைந்துள்ளது திருநறையூர்/நாச்சியார்கோவில். 108 வைணவத் தலங்களில் ஒன்றான இங்கு ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயில், சித்தநாத சுவாமி திருக்கோயில் ஆகியவற்றுக்கு இடையே அமைந்துள்ளது ஸ்ரீபர்வதவர்த்தனி உடனுறை ராமநாத ஸ்வாமி திருக்கோயில்.
சனிப் பெயர்ச்சி அன்று இங்குள்ள சனி பகவானுக்கு (உற்சவமூர்த்திக்கு) திருக்கல்யாணம் நடைபெறும். அன்று அவர் திருவீதி உலா வருவதும் வேறெங்கும் காண முடியாத சிறப்பு. சனிக்கிழமை தோறும் காலை 6 முதல் 7:30 மணிக்குள் மாந்திக்கும், 9 முதல் 10:30 மணிக்குள் சனி பகவானுக்கும் நடக்கும் அபிஷேகத்தைக் காண இங்கு வருபவர்களது எண்ணிக்கை அதிகம்.
நான் மார்ச் 12 ஆம் தேதி சென்றபோது சனி பகவான் சந்நிதியில் நல்ல கூட்டம் ; பிராமணர் அல்லாதோரும் கூட கைவிரலில் பவித்ரத்தை (தர்ப்பைய்ப் புல் ) அணிந்து கொண்டு பட்டர் / குருக்கள் மந்திரம் சொல்லச் சொல்ல திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்கள் ; சனி தோஷம் உள்ளவர்கள் போலும்! திரை திறந்தவுடன் தீபாராதனையுடன் நல்ல தரிசனம் கிடைத்தது. சிவபெருமானையும் தரிசித்து வெளியே வந்தேன்
***
முக்கியக் குறிப்பு
நான் சென்ற கோவில் வேறு ,தேவார பாடல் பெற்ற திருத்தலம் வேறு. திருநறையூர் சித்தநாதேசுவரர் கோயில் (திருநறையூர்ச்சித்தீச்சரம்), தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.
சித்தர்கள் வழிபட்டதால் சித்த நாதேஸ்வரர் எனவும், தேவர்கள் வழிபட்டதால் வேதேஸ்வரர் என்றும் சித்தர்கள் இங்கு கோயில் கொண்டிருப்பதால் இப்பகுதி சித்தீஸ்வரம் என அழைக்கபடுகிறது. துர்வாச முனிவரால் பறவை உருவமாகமாறி, சாபம் பெற்ற நரன் வழிபட்டதால் இத்தலத்திற்கு நரபுரம் என்ற பெயரும் உண்டு. மிகப் பழமையான லிங்கம். அந்தக் கோவிலுக்குச் செல்லும் பாக்கியம் இன்னும் கிட்டவில்லை.
*****
திருவாவடுதுறை கோயில் படங்கள்
திருமூலர் சந்நிதி படங்கள்
—SUBAHAM–
TAGS- ஐந்து சிவன் கோவில்களில் தரிசனம்! சனி பகவான் குடும்பத்தையும், சுக்கிரனையும் தரிசித்தேன்- Part 2