WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,635
Date uploaded in London – 20 April 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் வரங்கள் (54) விபீஷணனுக்கு பிரம்மா வரம் அளித்தது!
ச. நாகராஜன்
உத்தரகாண்டத்தின் பத்தாவது ஸர்க்கமாக அமைவது ‘ராவணன் முதலியவர்கள் வரத்தைப் பெறுவது’ என்ற ஸர்க்கமாகும்.
அகஸ்திய முனிவர் ஶ்ரீ ராமரிடம் ராவணனும் அவனது சகோதரர்களும் பெற்ற வரம் பற்றி விளக்க ஆரம்பித்தார். அவர்களில் விபீஷணன் பெற்ற வரத்தைப் பற்றி அவர் விளக்கமாக எடுத்துரைத்தார்.
விபீஷணன் பரிசுத்த மனம் உடையவனாய் ஐயாயிரம் வருடங்கள் ஒற்றைக் காலில் நின்று தவம் புரிந்தார். பின்னர் கைகளைத் தலைக்கு மேலே தூக்கியபடியே கும்பிட்டு இன்னும் ஐயாயிரம் வருடங்கள் தவம் புரிந்தார். அதுமட்டுமின்றி சூரிய பகவானையும் தியானம் செய்யலானார். இதனால் திருப்தி அடைந்த பிரம்மா விபீஷணன் முன் தோன்றி
பரிதுஷ்டோஸ்மி தர்மாத்மன்வரம் வரய சுவ்ரத|
உத்தரகாண்டம் பத்தாம் ஸர்க்கம், ஸ்லோக எண் 27
“தர்மத்திலேயே செலுத்திய புத்தியை உடைய உன்னால் பூர்ண திருப்தி அடைந்தேன். இஷ்டமானவற்றைக் கேட்டுக் கொள்” என்றார்.
பகவான்க்ருதக்ருத்யோஹம் யன்மே லோககுரு: ஸ்வயம் | ப்ரீதேன யத்ஹி தாதவ்யோ வரோ மே ஸ்ருணு சுவ்ரத ||
சுவ்ரத – சிறந்த விரதமுடைய பகவன் – பகவானே லோக குரு – லோக குரு ஸ்வயம் – தேவரீரே ப்ரீதேன – ப்ரீதி கொண்ட உம்மால் தாதவ்ய: – வரமளிக்க உரியவன் யதி – என்கிறபடியால் அஹம் – நான் க்ருதக்ருத்ய – கிருதகிருத்யன் ஆகினேன் மே – எனக்கு வர: – இஷ்டமான வரம் யத் – எதுவோ அதை ஸ்ருணு – கேட்பீராக
பரமாபத்கதஸ்யாபி தர்மே மம மதிர்பவேத் | அஷிக்ஷிதம் ச ப்ரஹ்மாஸ்த்ரம் பகவன்மதிபாது மே ||
பகவன் – பகவானே மம – நான் பரமாபத்கதஸ்ய – பரம ஆபத்திற்கு ஆளானவனாய் அபி – இருக்கையிலும் கூட தர்மே – தருமத்தில் மதி: – மனம் பவேத் – நிலை பெற்றிருக்க வேண்டும் ச – அதுவும் தவிர ப்ரஹ்மாஸ்த்ரம் -பிரம்மாஸ்திரமானது அஷிக்ஷிதம் – சிக்ஷையாகாதபடி மே – எனக்கு ப்ரதிபாது – விளங்க வேண்டும்
யா யா மே ஜாயதே புத்திர்யேஷு யேஷ்வாஸ்ரமேஷு ச | ஸா ஸா பவது தர்மிஷ்டா தம் து தர்ம ச பாலயே ||
தம் – அந்த தர்ம ச – தர்மம் ஒன்றையே பாலயே – நான் பற்றி வருகிறேன் து – இன்னமும் மே – எனது யா யா – எந்த எந்த புத்தி – அறிவு யேஷு யேஷு – எந்த எந்த ஆஸ்ரமேஷு – அவஸ்தைகளில் ஜாயதே – நாடியதாகிறதோ ஸா ஸா – அந்த அந்த ச – எல்லாமும் தர்மிஷ்டா – புண்ணியத்தை நாடியதாக பவது – இருக்க வேண்டும்
ஏஷ மே பரமோதார வர: பரமகோ மத: | ந ஹி தர்மாபிரக்தானாம் லோகே கிஞ்சன் துர்லப ||
உத்தரகாண்டம் பத்தாம் ஸர்க்கம் ஸ்லோக எண்கள் 29 முதல் 32 முடிய
பரமோதார – பரம தயாளுவே லோகே – உலகில் தர்மாபிரக்தானாம் – தர்மத்தில் இடைவிடாத ஆஸக்தி உடையவர்களுக்கு துர்லபம் – அடைய முடியாதது என்று கிஞ்சன் ந – எதுவும் இல்லை ஹி – என்கிறபடியால் மே – எனக்கு பரமக: – முடிவாய் விரும்பிய மத: – உத்தேசமாகிறது ஏஷ: வர: – இந்த வரம்
இப்படி விபீஷணன் சொன்னதைக் கேட்ட பிரம்மா, “தர்மிஷ்டனாகவே நீ எப்படி இருக்கிறாயோ அப்படியே இதுவும் ஆகுக” என்று வரம் அளித்தார்.
மேலும் அவர் கூறினார்: “ராக்ஷஸ யோனியில் பிறந்த உனக்கு அதர்மத்தில் புத்தி புகாதிருக்கின்ற காரணத்தால் உனக்கு சிரஞ்சீவித்வத்தை கொடுக்கிறேன்”.
யஸ்மாத் ராக்ஷஸயோனௌ தே ஜாதஸ்யாமித்ரநாஷன | நாதர்மே ஜாயதே புத்திரமரத்வம் ததாமி தே
உத்தரகாண்டம் பத்தாம் ஸர்க்கம் ஸ்லோக எண் 34
அமித்ரநாஷன: – சத்ருக்களை சம்ஹரிப்பவனே ராக்ஷஸயோனௌ – ராக்ஷஸயோனியில் ஜாதஸ்ய தே – பிறந்த உனக்கு அதர்மே – அதர்மத்தில் புத்தி ந ஜாயதே – புத்தி புகாதிருக்கும் காரணத்தால் தே – உனக்கு அமரத்வம் – சிரஞ்சித்வத்தை ததாமி – கொடுக்கிறேன்
இப்படியாக பிரம்மாவிடமிருந்து சிரஞ்சீவித்வத்தை விபீஷணன் வரமாகப் பெற்றார்.
இத்துடன் ராமாயணத்தில் வரங்கள் – இரண்டாம் பாகம் முற்றிற்று
***