பாட்டுக்கு ஒரு பட்டம்மாள்! (Post.15,645)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,645

Date uploaded in London – 23 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

16-3-26 கல்கி ஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை

பாட்டுக்கு ஒரு பட்டம்மாள்! 

ச. நாகராஜன் 

1947 ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி நள்ளிரவு 12 மணி. இந்தியா எங்கும் ஒரே கொண்டாட்டம். சென்னையில் எங்கு பார்த்தாலும் மாவிலைத் தோரணம். மக்கள் ஆடிப்பாடி ஆரவாரித்து சுதந்திரத்தை வரவேற்றனர்.

ஆல் இந்தியா ரேடியோவில் ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று என்ற மகாகவி பாரதியாரின் தீர்க்கதரிசனப் பாடல் இனிமையாக ஒலித்தது. 

பாடியவர் டி.கே.பட்டம்மாள் என்று பிரபலமான தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள்! நிலைய டைரக்டராக இருந்த கோபாலன் அவருக்கு சன்மானமாக ஒரு செக்கை அளித்தபோது அதை வாங்க மறுத்து விட்டார் டி.கே.பட்டம்மாள். “விடுதலை கிடைத்ததற்கு காசு வாங்கினால் அது அபசாரம்” என்று தெளிவாகக் கூறிய அவர் ஒரு மஹா தேசபக்தை!

 1919ம் வருடம் மார்ச் மாதம் 19ம் தேதியன்று காஞ்சிபுரத்தில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார் பட்டம்மாள்.

அவர் மூன்று மாதக் குழந்தையாக இருந்தபோது அவரது பெற்றோர் அவரைத் திருவண்ணாமலைக்கு எடுத்துச் சென்றனர். அங்கே பகவான் ரமண மஹரிஷியின் காலடியில் ஆசீர்வாதம் வாங்க அவர் வைக்கப்பட்டபோது பகவான் அவர் நாக்கில் தேன்துளிகளைத் தெளித்தார். ஆசீர்வாதம் செய்தார்.

 அதன் பலனை நாடு நன்கு அனுபவித்தது. எங்கும் தெய்வீக இசை! முறையாகச் சங்கீதம் பயிலவில்லை என்றாலும் ராக தேவதை அவரிடம் குடியிருந்தாள். அவரது இசைத் திறமையைச் சோதிக்க அவரை  பரிசோதித்தவர் அம்பி தீக்ஷிதர் – முத்துசாமி தீக்ஷிதரின் பேரன். அவரது திறமையைக் கண்டு வியந்த அவர், ‘உனக்குப் பாட்டுச் சொல்லித் தர எனக்கு ஆசை’ என்று கூறி பட்டம்மாளுக்கு வீணையுடன் இசையைக் கற்றுத் தந்தார்.

பட்டம்மாளின் பாணி தனித்வம் பெற்ற ஒன்று. அழுத்தம் கொடுத்து அவர் இசைப்பதைக் கேட்ட அனைவரும் அந்த அழுத்தத்தை நன்றாக ரசித்தனர். இதை பட்டம்மாள் ஸ்டைல் என்றே அழைத்தனர். அவரது பல்லவிகளின் நேர்த்தியைப் பார்த்த மக்கள் அவரை பல்லவி பட்டம்மா என்றே அழைத்தனர்.

முத்துசாமி தீக்ஷிதரின் கிருதிகளை அவர் விசேஷமாகப் பாட ஆரம்பித்தார். அது மக்களைப் பெரிதும் கவர்ந்தது.

கர்நாடக சங்கீத கிருதிகள், தேச பக்திப் பாடல்கள், சியாமளா தண்டகம் உள்ளிட்ட ஸ்தோத்திரங்கள்,திரைப்படப் பாடல்கள் என அனைத்திலும் அவர் கோலோச்ச மக்கள் மயங்கினர். அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் அவரைப் பாராட்டி, “ப(பா)ட்டம்மா.. சங்கீதத்திற்காகப் பாடு பட்ட அம்மா” என்று வர்ணித்துப் பாராட்டினார்.

முதன் முதலில் கொலம்பியா கிராமபோன்  கம்பெனி அவரை அணுகி பாடுமாறு வேண்ட ‘முக்தி அளிக்கும் திருமூல” என்ற பாடலை ரிகார்டு செய்தார். தொடர்ந்து அவர் திரைப்படங்களில் பாடிய பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் எதிரொலிக்க அவர் பிரபலமானார். கல்கி எழுதிய கதையான தியாகபூமியில் அவரது பாடல் வரிகளைப் பாடி, அவரது திரைப்பட சேவை 1939ல் தொடங்கியது. இசை மேதை பாபநாசம் சிவன் அவரை திரைத்துறையில் அறிமுகப்படுதினார். பின்னர் நாம் இருவர், மிஸ்மாலினி, வேதாள உலகம், வாழ்க்கை உள்ளிட ஏராளமான படங்களில் அவர் பாடினார்.

2000ம் ஆண்டு இந்தியக் குடியரசின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தில் ஏ.ஆர் ரெஹ்மான் அமைத்த

‘ஜனகனமண’ ஆல்பத்தில் அவரே சீனியர் பாடகர். அவருக்கு அப்போது வயது 80.

 பல விருதுகள் அவர் வாழ்க்கை முழுவதும் அவரைத் தேடி வந்தன. 1971ம் ஆண்டு பத்ம பூஷண் விருதையும் 1999ம் ஆண்டு பத்ம விபூஷண் விருதையும் அளித்து இந்திய அரசு அவரைக் கௌரவித்தது. அவரது உருவம் பொறித்த ஐந்து ரூபாய் தபால்தலைகளை அற்புதமாக வடிவமைத்து இந்திய அரசு வெளியிட்டது.

இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களிலும் உள்ள சங்கீத சபாக்கள் அவரை வரவேற்று அவர் இசை அமிர்தத்தை மக்கள் பருக வழி வகுத்தன. அத்துடன் அமெரிக்கா, கனடா,பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, ஶ்ரீ லங்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்று அங்கு உள்ள சங்கீத ரசிகர்களை தன் இசைத்திறத்தால் அவர் மகிழ்வித்தார்.

 1939ல் திரு ஈஸ்வரனை மணந்த அவர் ஒரு சங்கீத குடும்பத்தையே உருவாக்கினார்.

2009ம் ஆண்டு ஜூலை மாதம் 16ம் நாளன்று வயது மூப்பின் காரணமாக அவர் சென்னையில் காலமானார்.

 இன்றும் காலை நேரத்தில் பல வீடுகளில் அவர் இசைக்கும் சியாமளா தண்டகம் மற்றும் தீக்ஷிதர் கிருதிகள் உள்ளிட்டவற்றை ஏராளமான குடும்பத்தினர் கேட்டு மகிழ்வது கண்கூடு!

சங்கீதத்திற்கு முடிவு ஏது, மறைவு தான் ஏது?

என்றும் டி.கே.பட்டமாள் நிரந்தரமாக இருப்பார்!

**

Leave a comment

Leave a comment