

WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,660
Date uploaded in London – 27 April 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கடவுளுக்காக ஏங்கு: உனக்கு ஒரு வழி கிடைக்கும்! பிரார்த்தனை செய்: உனக்கு இறைவனின் கருணை கிடைக்கும்!!
ச. நாகராஜன்
31-8-1981 அன்று சத்யசாயி ஆடிடோரியத்தில் ஶ்ரீ சத்ய சாயிபாபா நிகழ்த்திய உரை:-
தெய்வீகம் இல்லை என்றால் எல்லாமே அரக்கத்தன்மையாக இருக்கும். ஆகவே, ஆசிரியர்களும் மாணவர்களும் கடவுளிடம் நம்பிக்கை வைத்து கடவுளை தைரியமாக அழைக்க வேண்டும்; பிரார்த்தனை புரிய வேண்டும். அது நமது எல்லையிலிருந்து அரக்கத்தன்மையை துரத்தி அப்புறப்படுத்தும்.
கடவுளை பிரார்த்திக்காமல் இருப்பது என்பது வெளிவேஷம் தான்! பரிட்சையின் போது ஒவ்வொரு மாணவனும் இறைவனைப் பிரார்த்திக்கிறான். துன்பங்கள் நேரும் போதும், நஷ்டங்கள் ஏற்படும் போதும், குடும்ப உறுப்பினர்கள் வியாதியினால் பீடிக்கப்படும் போதும், உயிருக்கே ஆபத்து என்கின்ற போதும் அவர்கள் பிரார்த்தனை புரிகிறார்கள். ஆகவே எதற்காக வீணான கர்வத்திற்கு ஆளாகி, கடவுளைத் தொழ மறுக்கவேண்டும். இது வெறும் வெளி வேஷம் தான்!
படித்த அறிவாளிகளின் இன்னொரு குணாதிசயம் அவர்களது கர்வம் தான். அகம்பாவம் என்ற மகுடத்தை அணிந்து கொண்டு அவர்கள் அலைகிறார்கள். அனாத்மாவிடமிருந்து ஆத்மாவை கர்வம் என்ற சுவரே தடுத்து ஒளித்து வைக்கிறது. சத்யத்திற்கும் அசத்யத்திற்கும் இடையில் திரையாக இருக்கிறது. தெய்வீகம் உருவெடுக்கவும் ஐக்கியமான தன்மை அறியப்படவும் இந்தத் தடை அகற்றப்பட வேண்டும். மாணவர்கள் பலர் இந்த நோயை தங்களிடம் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் உடல் அழகு, கல்வியில் மேன்மை, பண பலம் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவற்றை அகற்ற அவர்கள் விழிப்புணர்வு கொண்டவர்களாக இருத்தல் வேண்டும்.
முன்னொரு காலத்தில் சாக்ரடீஸிடம் ஒரு மாணவன், “ஐயா! கடவுள் மனிதனுக்கு அவன் வாழ நூறு வருடமே கொடுத்திருக்கிறார். ஆனால் அபூர்வமாகவே அவன் அவ்வளவு காலம் வாழ்கிறான். 25 வருடங்கள் குழந்தைப் பருவத்திலும் இளமையிலும் போய் விடுகிறது. அடுத்து 25 வருடங்கள் குடும்பத்திலும் சமூக நிகழ்ச்சிகளிலும் போய் விடுகிறது. அடுத்த 25 வருடங்கள் சொத்துக்களை குழந்தைகளுக்குப் பிரிப்பதிலும் அவற்றை அவர்களுக்குத் தருவதிலும் போய்விடுகிறது. 75 வயது ஆகி விட்டாலோ அவனை நோய் பீடித்துக் கொள்கிறது அல்லது அவனது மகனையோ அல்லது மகளையோ இழப்பதினால் துக்கம் அவனை ஆட்கொள்கிறது. அவனுக்கு கடவுளை நினைக்கவே நேரம் கிடைப்பதில்லை. இன்னும் ஒரு இருபத்தைந்து வருடங்களை அவனுக்குக் கடவுள் கொடுத்தால் அவரைப் பற்றி மட்டுமே நினைக்க ஏதுவாக இருக்கும் இல்லையா? என்றான்.
சாக்ரடீஸ் அவனுக்கு இன்னொரு துன்பமயமான சூழ்நிலையைச் சுட்டிக் காட்டி பதில் கொடுத்தார்.
“மகனே! கடவுள் இந்த பூமி என்ற பெரிய இடத்தை நமக்கு வசிப்பதற்காக அளித்திருக்கிறார். ஆனால் இதில் மூன்று பங்கு கடலால் நிறைந்திருக்கிறது. மீதி ஒரு பங்கிலோ மலைகள், பாலைவனம், ஏரிகள், காடுகள் ஆகியன உள்ளன. வாழ்வதற்கு எனக்கு இடமே இல்லை” என்று சொல்லி விட்டு சாக்ரடீஸ் அழ ஆரம்பித்தார்.
உடனே மாணவன் அவருக்கு ஆறுதல் கூறினான்: “ ஏன் இல்லை? கோடிக்கணக்கானவர்கள் பூமியில் வாழும் போது உங்களுக்கும் ஒரு இடம் நிச்சயம் கிடைக்கும்” என்றான் அவன்.
சாக்ரடீஸ் கூறினார்: “கோடிக்கணக்கான எண்ணங்கள் உன் மனதை ஆக்ரமிக்கும் போது, மகனே, உனக்கும் நிச்சயம் கடவுளை நினைக்க நேரம் இருக்கும். சோம்பேறிகள் தாம் கடவுளை நினைக்க நேரம் இல்லை என்று புகார் செய்வார்கள்.”
கடவுளுக்காக ஏங்கு: உனக்கு ஒரு வழி கிடைக்கும்! பிரார்த்தனை செய்: உனக்கு இறைவனின் கருணை கிடைக்கும்!!
நிரந்தரமான அடிப்படைகளுக்கும் நிலையற்றவையாக மதிப்பற்றவையாக இருப்பவைக்கும், உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ளும் அரிய விஷயத்தை அனைவரும் அறியுமாறு செய்தல் வேண்டும்.
**