Written by London Swaminathan
Post No. 15,668
Date uploaded in London –28 April 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
xxxx
திருப் புள்ளம்பூதங்குடி
மூலவர்: வல்வில் ராமர், சக்கரவர்த்தி திருமகன்
தாயார்: பொற்றாமரையாள், ஹேமாம்புஜவல்லி
தலவிருட்சம்: புன்னை மரம்,
தீர்த்தம்: ஜடாயு தீர்த்தம்
விமானம் : சோபான விமானம்
ஜடாயு என்ற புள்ளுக்கு (பறவை) மோட்சம் அருளி ஈமக்கிரியை செய்த நிகழ்வைக் குறிக்கும் தலம் என்பதால் திருபுள்ளபூதங்குடி என்று பெயர் பெற்றது..
சீதாப்பிராட்டியை இராவணன் கவர்ந்து சென்றபோது ஜடாயு என்னும் கழுகு, இராவணனை எதிர்த்து போரிட்டு உயிர் துறந்தது. சீதையைத் தேடிக் கொண்டு வந்த இராமபிரான், ஜடாயுவிற்கு இறுதிக் கடன்களைச் செய்தமையால் இத்தலம் ‘புள்ளம்பூதங்குடி’ (புள் – பறவை) என்று அழைக்கப்படுகிறது.
நவக்கிரகங்களில் புதன் கிரகத்திற்குரிய பரிகார கோவிலாக வல்வில் ராமன் கோயில் இருக்கிறது. இத்தலத்தில் பித்ருக்களுக்கு பரிகாரம் செய்வது நன்மை பயக்கும். திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடத் திருமணத் தடை நீங்கும்.
அருகிலேயே திரு ஆதனூர் திவ்ய தேசமும் இருக்கிறது. சுவாமி மலையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது இந்தக் கோயில் அஹோபில மடத்தின் நிர்வாகத்தில் உள்ளது . மட்டத்தில் வசதிகள் உண்டு .அஹோபில மடத்தின் 19 ஆவது ஜீயர் ஸ்ரீனிவாச யதீந்திர மஹாதேசிகனின் பிருந்தாவனம் / சமாதி இருக்கிறது
***
திரு புள்ளம்பூதங்குடி பாசுரம்
திருப்புள்ளம்பூதங்குடி (தஞ்சாவூர் மாவட்டம்) வல்வில் ராமர் கோயிலைப் பற்றி திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் பாடிய பாசுரம்:
பாசுரம்:
“மையார் தடங்கண் கருங்கூந்தல் ஆய்ச்சி மறைய வைத்ததயிர்
நெய்யார் பாலோடு அமுது செய்த நேமியங்கை மாயனிடம்
செய்யார் ஆரல் இரைகருதிச் செங்கால் நாரை சென்றணையும்
பொய்யா நாவில் மறையாளர் புள்ளம் பூதங்குடி தானே.”
— (பெரிய திருமொழி 2.5.3)
பாசுரத்தின் பொருள்:
மை போன்ற கருமையான கண்களையும், நீண்ட கூந்தலையும் உடைய ஆய்ச்சி (யசோதை) மறைத்து வைத்திருந்த தயிர், நெய் மற்றும் பாலை அமுதாக உண்ட, சக்கரத்தை ஏந்திய கைகளை உடைய மாயன் (திருமால்) எழுந்தருளியிருக்கும் இடம் இது. செந்நிறக் கால்களை உடைய நாரைகள், செங்கயல் மீன்களை இரையாகக் கருதி வந்து தங்கும், பொய் சொல்லாத நாவினையுடைய மறையவர்கள் (வேத விற்பன்னர்கள்) வாழும் புள்ளம்பூதங்குடி இதுவாகும்.
***
108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.
சோழ நாட்டு பத்தாவது திருத்தலம்
பொதுவாக இராமர் நின்ற திருக்கோலத்தில் தான் சேவை சாதிப்பார். இந்த ஸ்தலத்திலும், பாண்டியநாட்டு திவ்யதேசமான திருப்புல்லாணியிலும் சயன (கிடந்த) திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
***
திருப்புள்ளம்பூதங்குடி பாசுரம்
1348.
அறிவது அறியான் அனைத்து உலகும் உடையான்* என்னை ஆள் உடையான்*
குறிய மாணி உரு ஆய* கூத்தன் மன்னி அமரும் இடம்*
நறிய மலர்மேல் சுரும்பு ஆர்க்க* எழில் ஆர் மஞ்ஞை நடம் ஆட*
பொறி கொள் சிறை வண்டு இசை பாடும்* புள்ளம்பூதங்குடி தானே.(2)
1349.
கள்ளக் குறள் ஆய் மாவலியை வஞ்சித்து* உலகம் கைப்படுத்து*
பொள்ளைக் கரத்த போதகத்தின்* துன்பம் தவிர்த்த புனிதன் இடம்*
பள்ளச் செறுவில் கயல் உகள* பழனக் கழனி-அதனுள் போய*
புள்ளு பிள்ளைக்கு இரை தேடும்* புள்ளம்பூதங்குடி தானே.
1350.
மேவா அரக்கர் தென் இலங்கை* வேந்தன் வீயச் சரம் துரந்து*
மாவாய் பிளந்து மல் அடர்த்து* மருதம் சாய்த்த மாலது இடம்*
காஆர் தெங்கின் பழம் வீழ* கயல்கள் பாய குருகு இரியும்*
பூஆர் கழனி எழில் ஆரும்* புள்ளம்பூதங்குடி தானே.
1351.
வெற்பால் மாரி பழுது ஆக்கி* விறல் வாள் அரக்கர் தலைவன் தன்*
வற்பு ஆர் திரள் தோள் ஐந் நான்கும்* துணித்த வல் வில் இராமன் இடம்*
கற்பு ஆர் புரிசைசெய் குன்றம்* கவின் ஆர் கூடம் மாளிகைகள்*
பொற்பு ஆர் மாடம் எழில் ஆரும்* புள்ளம்பூதங்குடி தானே.
1352.
மையார் தடங் கண் கருங் கூந்தல்* ஆய்ச்சி மறைய வைத்த தயிர்*
நெய்யார் பாலோடு அமுது செய்த* நேமி அங் கை மாயன் இடம்*
செய்யார் ஆரல் இரை கருதிச்* செங் கால் நாரை சென்று அணையும்*
பொய்யா நாவின் மறையாளர்* புள்ளம்பூதங்குடிதானே.
1353.
மின்னின் அன்ன நுண் மருங்குல்* வேய் ஏய் தடந் தோள் மெல்லியற்கா*
மன்னு சினத்த மழ விடைகள்* ஏழ் அன்று அடர்த்த மாலது இடம்*
மன்னும் முது நீர் அரவிந்த மலர்மேல்* வரி வண்டு இசை பாட*
புன்னை பொன் ஏய் தாது உதிர்க்கும்* புள்ளம்பூதங்குடிதானே.
1354.
குடையா விலங்கல் கொண்டு ஏந்தி* மாரி பழுதா நிரை காத்து*
சடையான் ஓட அடல் வாணன்* தடந் தோள் துணித்த தலைவன் இடம்*
குடியா வண்டு கள் உண்ண* கோல நீலம் மட்டு உகுக்கும*
புடை ஆர் கழனி எழில் ஆரும்* புள்ளம்பூதங்குடி தானே.
1355.
கறை ஆர் நெடு வேல் மற மன்னர் வீய* விசயன் தேர் கடவி*
இறையான் கையில் நிறையாத* முண்டம் நிறைத்த எந்தை இடம்*
மறையால் முத்தீ அவை வளர்க்கும்*மன்னு புகழால் வண்மையால்*
பொறையால் மிக்க அந்தணர் வாழ்* புள்ளம்பூதங்குடி தானே.
1356.
துன்னி மண்ணும் விண் நாடும்* தோன்றாது இருள் ஆய் மூடிய நாள்*
அன்னம் ஆகி அரு மறைகள்* அருளிச்செய்த அமலன் இடம்*
மின்னு சோதி நவமணியும்* வேயின் முத்தும் சாமரையும்*
பொன்னும் பொன்னி கொணர்ந்து அலைக்கும்* புள்ளம்பூதங்குடி தானே.
1357.
கற்றா மறித்து காளியன்தன்* சென்னி நடுங்க நடம்பயின்ற*
பொன் தாமரையாள் தன் கேள்வன்* புள்ளம்பூதங்குடி தன்மேல*
கற்றார் பரவும் மங்கையர் கோன்* கார் ஆர் புயல்கைக் கலிகன்றி*
சொல்தான் ஈர் ஐந்து இவை பாட* சோர நில்லா துயர் தாமே.
–Subham—
Tags- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-7; திவ்யதேசம்-7, லண்டன் சுவாமிநாதன் படங்கள், திருப் புள்ளம்பூதங்குடி, வல்வில் ராமர்