
Written by London Swaminathan
Post No. 15,681
Date uploaded in London –1 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
2026 மே மாதம் முதல் நாள் வெசாக் ; 2026 மே மாதம் முப்பதாம் தேதி வைகாசி விசாகம்
வெசாக் பண்டிகை
விசாகம் என்பதை சிங்கள மக்கள் வெசாக் என்று ஆங்கிலேயர் போல சுருக்கி விட்டனர்; வெசாக் பண்டிகை (Vesak) என்பது பௌத்தர்களால் மே மாத பௌர்ணமி தினத்தில் கொண்டாடப்படும் மிக முக்கியமான புனித நாளாகும். இது புத்தரின் பிறப்பு, ஞானோதயம் (Buddha Enlightment) மற்றும் பரிநிர்வாணம் (மறைவு) ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளைக் குறிக்கிறது. இந்நாளில் வீடுகள், தெருக்கள் வெசாக் கூடுகளால் (Lanterns) அலங்கரிக்கப்பட்டு, தானசாலைகள் வழங்கப்பட்டு, பௌத்த மத வழிபாடுகள் சிறப்பாக இடம்பெறும்.
இது பௌத்தர்களின் மிக முக்கியமான தினமாகும், பெரும்பாலும் தெற்காசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
ஒளி வழிபாடு: வெசாக் கூடுகள் மற்றும் தோரணங்கள் கட்டப்பட்டு வீதிகள் ஒளிமயமாகக் காட்சியளிக்கும்.
தானசாலைகள்: பசித்தோருக்கு உணவு மற்றும் பானங்கள் தானமாக வழங்கப்படும் (தானசாலைகள்).
வழிபாடு: விகாரைகளுக்குச் சென்று பௌத்த மத போதனைகளைக் கேட்டல், தியானம் செய்தல் மற்றும் பஞ்சசீலங்களைப் பேணுதல்.
இலங்கையில் வெசாக்: இலங்கையில் இது மிக உற்சாகமாகக் கொண்டாடப்படும் தேசியப் பண்டிகையாகும். கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் அலங்காரப் பந்தல்கள் அமைக்கப்படுகின்றன.
***
வைகாசி விசாக விழா
வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாள், முருகப் பெருமான் அவதரித்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதனை வேனில் விழா என்றும் கூறுவர்.
முருகன் கோவில்களில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். ஆறுமுகப்பெருமான் அவதரித்த தினமாதலின் விசாகம் விசேஷ தினமாகக் கொண்டாடப்படுகின்றது. இத்தினத்தில் கோயில்களில் வசந்தோற்சவமும், பிரமோற்சவமும் நடைபெறும்,
முருகன் கோவில்களில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக மும் சிறப்பு அலங்காரமும் செய்வார்கள் ; பக்தர்கள் கூட்டமும் பெருகும்
முருக பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து அணி அணியாக வருவார்கள்
இத்தினம் பலசமயத்தாருக்கும் ஒரு புனித நாளாகும்.வைணவத்தில் நம்மாழ்வார் அவதார நாளாகவும் இந்நாள் கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் திருசெந்தூரில் மிகவும் சிறப்பான வழிபாடு நடக்கும்.
***
நம்மாழ்வார் அவதார நட்சத்திரம்
வைணவத்தில் வைகாசி விசாகத் திருநாள் நம்மாழ்வார் அவதாரத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
நம்மாழ்வாரின் அவதார நட்சத்திரம் வைகாசி விசாகம் ஆகும்.
பிறந்த ஊர்: ஆழ்வார் திருநகரி
பெற்றோர்: காரி – உடையநங்கை.அம்சம்: திருமாலின் படைத்தலைவரான விஷ்வக்சேனரின் அம்சம்.
சிறப்புப் பெயர்: சடகோபன், மாறன், பராங்குசன்.
படைப்புகள்: திருவாய்மொழி, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி. சுமார் 1300 பாடல்கள்
***
கல்வெட்டுகளில் வைகாசி
குறைந்தது இரண்டு கல்வெட்டுகளில் வைகாசித் திருநாள் பற்றிய கு றிப்புகள் கிடைக்கின்றன ,
தஞ்சாவூரில் சோழ மன்னன் ராஜேந்திர தேவனின் CE 1050-63 கல்வெட்டு உள்ளது .வைகாசி விழாவில் ராஜ ராஜேஸ்வர நாடகம் நடிக்க வேண்டும் என்றும் அதற்காக அந்த நடிகர்களுக்கு தினமும் உணவுக்கு நெல் அளிப்பதற்காக நிலம் தானம் செய்யப்பட்டது என்றும் கல்வெட்டு அறிவிக்கிறது.
இரண்டாவது கல்வெட்டு திருச்சி மாவட்ட ரத்னகிரியிலுள்ள ரத்னாசலேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் காணப்படுகிறது திரிபுவன சக்ரவர்த்தி கோனெரு மேல்கொண்டானின் 16 ஆவது ஆட்சி ஆண்டில் 340 ஆவது நாளில் வெளியிட்ட இக்கல்வெட்டு வைகாசித் திருநாள் நடத்த நிலம் தானம் செய்யப்பட செய்தியைக் கூறுகிறது.
***
சிம்மசலத்தில் வைகாசித் திருநாள்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள சிம்மசலம் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் வைகாசி மாதம் சிறப்பாகத் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
சிம்மசலம் நரசிம்மர் ஆண்டு முழுவதும் சந்தனப் பூச்சில் காட்சியளிப்பார். ஆனால், வைகாசி விசாகம் (அல்லது அக்ஷய திருதியை சமயத்தில்) மட்டுமே அந்த சந்தனம் களையப்பட்டு, மூலவரின் நிஜ ரூப தரிசனம் (சந்தன காப்பு இல்லாத வடிவம்) பக்தர்களுக்குக் கிடைக்கும்.
சிறப்பு பூஜைகள்: இந்த விசேஷ தினத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மூலவரை தரிசிக்க சிம்மசலத்திற்கு வருகை தருகின்றனர்.
***
மழுவேந்திய கூத்தர் தரிசனம்:
திருமழபாடி (அரியலூர் மாவட்டம்) வைகாசி விசாகத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.
மழுவேந்திய கூத்தர் தரிசனம்: வைகாசி விசாகத்தன்றுதான், சிவபெருமான் (திருமழபாடி வைத்தியநாதசுவாமி) மழு எனும் ஆயுதத்தை ஏந்தி, தன் பக்தர்களுக்காக அற்புதத் திருநடனம் புரிந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
இந்தத் தலத்தில் மூலவர் வைத்தியநாத சுவாமியாகவும், அம்பாள் சுந்தராம்பிகையாகவும் அருள்பாலிக்கின்றனர். வைகாசி திருவிழாவின்போது இவர்களுக்குச் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படும்.
மழுவேந்திய பெருமான்: ‘திருமழபாடி’ என்ற பெயரே, சிவபெருமான் மழு ஏந்தியதால் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
***
சுவாமிமலையில் வைகாசித் திருநாள்
அரிகேச அசுரன் கதை :தாரகாசுரன் மற்றும் சூரபத்மனின் வம்சாவளியைச் சேர்ந்த அரிகேச அசுரன், தேவர்களையும் முனிவர்களையும் மிகவும் துன்புறுத்தி வந்தான். இவனது தொல்லை தாங்காத இந்திரன் பல புனிதத் தலங்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டான் ; சுவாமி மலை தரிசனத்துக்குப் பின்னர் அசுரர் தொல்லை அடியோடு நின்றது
அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது; இதே நாளில் தான் முருகப்பெருமான் தந்தை சிவபெருமானுக்கு ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை குருவாக இருந்து உபதேசம் செய்ததாகவும் நம்பப்படுகிறது.வைகாசி விசாகத்தையொட்டி, அதிகாலையிலேயே கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமிநாத சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் போன்ற வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெறும்.
முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சிதருவார் . ஆயிரக் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.
***
அறிவியல் விஷயம்
முக்கியமான அறிவியல் விஷயம், துலாத்தில் சூரியன் இணையும் போது இரவும் பகலும் சம அளவு என்று ஆகிறது. இரவையும் பகலையும் சமமாகக் காட்டும் தராசு (பாலன்ஸ்) துலாம் தான். அத்துடன், கோடை காலத்தையும் குளிர் காலத்தையும் பிரித்து பருவத்தை சமமாக்கும் மாதம் வைகாசி. விசாக நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமியை ஒட்டி அந்த மாதத்திற்கு வைகாசி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
27 நட்சத்திரங்களில் 16வது நட்சத்திரமாக அமையும் இது துலா ராசியில் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்திற்கு ராதா என்ற இன்னொரு பெயரும் உண்டு. ஆகவே தான் இதைத் தொடர்ந்து அடுத்து வரும் நட்சத்திரத்தை ராதாவைத் தொடர்ந்து வருவது என்ற பொருளுடைய அனுராதா (அல்லது அனுஷம்) என்ற பெயரால் அழைக்கிறோம்.
—subham—
Tags- முருகப்பெருமான், நம்மாழ்வார், புத்தர் ,அவதரித்த, வைகாசி விசாகம், வெசாக், சிம்மாசலம் சந்தனக் காப்பு, திருமழபாடி