பெருமை மிகு தமிழகத்தில் பாண்டிய மண்டலம்! (Post No.15,689)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,689

Date uploaded in London – 3 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மாலைமலர் 30-4-26 தேதியிட்ட இதழ் விளம்பர மலர் சிறப்பிதழாக வெளி வந்தது. பெருமை மிகு தமிழகம் என்பதை மையப்பொருளாகக் கொண்ட அந்த சிறப்பிதழில் பெருமை மிகு தமிழகத்தில் பாண்டிய மண்டலம், சோழ மண்டலம், கொங்கு மண்டலம், பல்லவ மண்டலம் என நான்கு சிறப்புக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றை இங்கு ஒவ்வொன்றாகக் காணலாம். 

பெருமை மிகு தமிழகத்தில் பாண்டிய மண்டலம்! 

ச. நாகராஜன் 

பெருமை மிகு தமிழகத்தில் 38 மாவட்டங்கள் உள்ளன.

பழம் பெரும் தொண்டை மண்டலத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், இராணிப்பேட்டை ஆகிய பத்து மாவட்டங்களும், புகழ் மிகு சோழ மண்டலத்தில் அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருவாரூர் ஆகிய ஒன்பது மாவட்டங்களும், சீர் மிகு கொங்கு மண்டலத்தில் தர்மபுரி, திண்டுக்கல், கோயம்புத்தூர், கரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, சேலம், திருப்பூர் ஆகிய பத்து மாவட்டங்களும் தமிழ் வளர்த்த பாண்டிய மண்டலத்தில் கன்னியாகுமரி, மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் ஆகிய ஒன்பது மாவட்டங்களும் உள்ளன.

தமிழகப் பரப்பில் உள்ள ஒவ்வொரு அடி நிலப்பரப்பும் தமிழ், கலை, பண்பாடு, இலக்கியம், ஆன்மீகம், தொழில், நுண்ணறிவுத் துறைகள் என அனைத்திலும் மேம்பட்ட உயரத்தைத் தொட்டது என்று சொன்னால் அது மிகையல்ல.

 கல் தோன்றி மண் தோன்றாக் காலதே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க் குடி என்பது ஆன்றோர் வாக்கு.

 ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி

ஏங்கொலி நீர் ஞாலத்து இருளகற்றும் – ஆங்கவற்றுள்

மின்னேர் தனி ஆழி ஒன்று; ஏனையது

தன்னேர் இலாத தமிழ்

என்பது பழம் பெரும் பாடலாகும். உலகில் இருள் அகற்றுபவை இரண்டே இரண்டு தாம்; ஒன்று புற இருளை அகற்றும் சூரியன்; இன்னொன்று அக இருளை அகற்றும் தமிழ் என்பதே இதன் சாரம்.

தமிழ் வளர்த்த மதுரையின் பெருமையைக் காலமெல்லாம் சொன்னாலும் முற்றிலும் சொன்னதாக ஆகாது.

பாண்டிய மன்னர்கள் அற நெறியுடன் கோலோச்ச வழி வகுத்த அன்னை மீனாட்சி ஆண்ட நாடு பாண்டிய நாடு. மதுரை மீனாட்சியின் ஆட்சி பெண்ணின் பெருமையைச் சொல்லும் ஆட்சி. மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சங்கப் புலவர்களின் மண்டபத்தில் இறையனார் தலைமை வீற்றிருப்பதை இன்றும் காணலாம். இங்குள்ள பொற்றாமரைக் குளத்தில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் இயற்றி அருளிய திருக்குறள் மற்ற நூல்களைப் புறம் தள்ளி பொற்றாமரைக் குளத்தில் மிதந்து உலக சரித்திரம் படைத்த பெருமையை அனைவரும் அறிவோம்.

இங்குள்ள கூடல் அழகர் பெருமாள் கோவிலின் அருகே ஓடிய கிருதமால் நதியில் தான் உலகின் முதல் அவதாரம் தோன்றியது. (இன்று அந்த நதி சாக்கடை கால்வாயாக ஆகி விட்டது). பெரும் புனல் வைகையும், ஆறு கிடந்தன்ன அகல் நெடும் தெருக்களும் கொண்டு விளங்கிய மதுரை இன்றும் தூங்கா நகரமாக எப்போதும் விழித்திருக்கும் அதிசயக் காட்சியைக் கண்டு ஆனந்திக்கலாம்.

அருகில் உள்ள பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம் ஆகியவை ஆறுபடை வீடுகளில் அமைந்தவையாகும்.

எல்லாக் கலைகளையும் போற்றி வளர்த்த இங்கு தான் மகாத்மா காந்தி தனது ஆடம்பரமான உடுப்பைக் கழற்றி எறிந்து இடையில் மட்டும் அணியும் எளிய ஆடையை மேற்கொண்டு வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தார்.

சங்க காலப் புலவர்களிலிருந்து இன்று வரை தமிழ் வளர்க்கும் அறிஞர்கள்  தமிழ்ச் சங்கங்களை அமைத்த பெருமை பாண்டிய மண்டலத்திற்கு உண்டு.

நூற்பாலைகள் பலவற்றைக் கொண்டு தரம் வாய்ந்த ஆடைகளை உற்பத்தி செய்து தொழில் துறையில் முன்னோடியாகத் திகழ்வதும் மதுரை மண்டலமே.

அழகிய தேனி, தேக்கடி என்று இயற்கை வண்ணம் கொஞ்சும் எழில் காட்சிகளும் இங்கே தான் உண்டு.

பொதியமலையிலிருந்து தமிழ் வளர்த்த பெருமை அகத்திய மாமுனிக்கு உண்டு.

கொற்கைத் துறைமுகம் வணிகத் தலைநகரமாகவும், முத்துக்கள் கொழித்த முத்து மண்டலமாகவும் திகழ்ந்தது.

திருநெல்வேலி அருகே உள்ள குற்றால நீர்வீழ்ச்சியும் அதன் வளி மண்டலப் பரப்பும் தூய ஆக்ஸிஜனை ஏராளமாகத் தரும் அழகிய பரப்பாகும். எழில் மிகு தாமிரபரணி ஆற்றின் மூலிகை நீர் பற்றிப் புகழாதவர்களே இல்லை எனலாம்.

திருநெல்வேலி காந்திமதி அம்மன், தென்காசி ஈசன், திருச்செந்தூர் முருகன் என்று ஆன்மீகப் புகழோங்கி பக்தர்களை ஈர்க்கும் மண்டலம் இது.

நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்று பாடிய தேசீய கவி சுப்ரமண்ய பாரதியார் தோன்றிப் புகழ்படைத்த எட்டயபுரம் இருப்பதும் இந்த மண்டலத்தில் தான்.

 தூத்துக்குடி துறைமுகம் இந்திய பொருளாதாரத்தை ஏற்றமிகும் ஒன்றாக ஆக்குகிறது எனில், கப்பலோட்டிய தமிழனாக அவதரித்து இந்திய சுதந்திரத்திற்காகப் போராடி சிறை சென்று செக்கிழுத்த பெம்மானாக வாழ்ந்த வ.உ.சி வாழ்ந்த இடமும் இது தான்.

 நீலத்திரை கடல் ஓரத்திலே நின்று தவம் செய்யும் குமரி அம்மனின் எழில் மிகு மூக்குத்தியின் ஒளி திக்கெட்டும் பரவி மாலுமிகளுக்குக் கூட வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழ்வதை வரலாறு சொல்லும்.

 அருகில் உள்ள விவேகானந்தர் பாறையில் தவம் இயற்றி உத்வேகம் பெற்று அமெரிக்கா சென்று சர்வமத மாநாட்டில் உரையாற்றி உலகையே வென்று இந்து மத மாண்பை உலகிற்கு உணர்த்தியவர் விவேகானந்தர். அவர் வெற்றி பெற்று வரும் போது அவரை வணங்கி வரவேற்று வரவேற்பளித்தவர் பாஸ்கர சேதுபதி என்பதையும் வரலாறு பெருமையுடன் சொல்லும்.

 இந்திய ஒருமைப்பாட்டை விளக்கும் இராமேஸ்வரம் ஆன்மீக பூமியாகத் திகழ்கிறது. இங்கு ராமபிரான் அமைத்த சேது பாலத்தை நாஸா படமெடுத்து அதன் உண்மையை உலகிற்கு அறிவித்தது. காசியில் இருப்போர் ராமேஸ்வரத்திற்கு வந்து யாத்திரையை முடிப்பதும், ராமேஸ்வரத்தில் இருப்பவர்கள் காசியில் யாத்திரை முடிப்பதையும் தொன்று தொட்டு பழக்கமாகக் கொண்டிருந்ததை பாரத சரித்திரம் விளக்குகிறது. உலகின் அதி நீளமான பிரகாரம் கொண்ட இராமேஸ்வரம் கோவிலும், தனுஷ்கோடியும், அழகிய கடலும் காலத்தை வென்ற இயற்கை படைப்புகளாகும்.

காரைக்குடி அருகே சிறுகூடல்பட்டியில் சமீப காலத்தில் தோன்றி சுமார் 9000 கவிதைகள் மற்றும் திரைப்படப்பாடல்களை இயற்றி உலகை பிரமிக்க வைத்த கவியரசர் கண்ணதாசன் இந்த பூமியின் இலக்கியவளத்திற்கான சான்றாக மிளிர்கிறார்.

 படிப்பறிவின்றி ஒரு குழந்தையும் இருக்க கூடாது என்ற பெரும் கொள்கையைக் கொண்டு ஏழைப் பிள்ளைகளுக்கு உணவளித்து அவர்களுக்கு கல்வியறிவு ஊட்டிய பெருந்தலைவர் காமராஜரின் விருதுநகர் ஊரும் பாண்டிமண்டலத்தைச் சேர்ந்ததே.

 சுதந்திரத்திற்காக இன்னுயிரைத் தியாகம் செய்த சிவகங்கை மருது பாண்டியரும், வீரபாண்டிய கட்டபொம்மனும் என்றும் புகழுடன் பேசப்படும் முன்னோடி சுதந்திரப் போர்வீரர்களாவர்.

 இன்னும் நேதாஜி புகழ் வளர்த்து தேசீயம் போற்றிய முத்துராமலிங்கத் தேவர், தமிழ் வளர்க்க சங்கம் அமைத்த பாண்டித்துரை தேவர் என்று பெரியோர்களின் பட்டியல் மிக நீண்ட ஒன்றாக அமைகிறது.

மதுரையில் பிறந்து மதுரை ஷண்முகவடிவு சுப்புலெட்சுமி என்ற பெயருடன் உலக இசை அரங்கில் கோலோச்சி ஐ.நா. சபை வரை சென்று பாடிய பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமியின் பெருமையைச் சொல்ல வார்த்தைகளே இல்லை.

 பூமாது பொன்னம் புயத்தினில் மேவிப் பொலிந்திருக்க

நாமாது சங்கப் பலகையி லேறி நலம்பெருக்கக்
கோமான் மலயத் துவசன் பயந்த குமரியெனு
மாமாது நீதி யரசாளும் பாண்டியன் மண்டலமே

 என்று பாண்டிமண்டலத்தைப் புகழும் பாண்டிமண்டலச் சதகத்தின் நூறு பாடல்களில் இப்பகுதியின் சிறப்புகள் அனைத்தையும் காணலாம்.

 இப்படி அறத்தின் அடிப்படையில் கலை, இலக்கியம், ஆன்மீகம், பண்பாடு, தொழில் வளர்ச்சி என அனைத்துத் துறையிலும் மேலோங்கி நிற்கும் தமிழ் மதுரை மண்டலப் பகுதியின் புகழுக்கு எல்லை ஒன்று உண்டோ! 

***

Leave a comment

Leave a comment