
Written by London Swaminathan
Post No. 15,690
Date uploaded in London –3 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
விபூதி அணியும் பெருமாள்!
I took this picture from a dark area; no lights.
திருக்கண்ணங்குடி (க்ருஷ்ணாரண்ய க்ஷேத்திரம்)
மூலவர் – லோகநாதன், ச்யாமளமேனிப் பெருமாள், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
உத்ஸவர் – தாமோதர நாராயணன்.
தாயார் – லோகநாயகி உத்ஸவர் – அரவிந்தவல்லி.
தீர்த்தம் – ராவண புஷ்கரிணி.
ஸ்தல விருக்ஷம் – மகிழமரம் (வகுளம்)
விமானம் – உத்பல விமானம்.
ப்ரத்யக்ஷம்- ப்ருகு, ப்ருஹ்மா, உபரிசரவஸு, கெனதமர், திருமங்கையாழ்வார்.
‘காயாமகிழ், உறங்காப்புளி, தோலாவழக்கு, ஊறாக்கிணறு திருக்கண்ணங்குடி’ என்பது பழமொழி.
விசேஷங்கள் – இவ்வூரின் முக்கிய அடையாளங்களான ஊறாக்கிணறும், உறங்காப்புளியும் இப்போது இல்லை. காயாமகிழ் (காய்ந்து பட்டுப் போகாத வரம்பெற்ற ஸ்தலவ்ருக்ஷம்) ஸந்நிதியின் பின்புறம் இருக்கிறது.
தாயார் ஸந்நிதியில் மூலவரும் உத்ஸவரும் ஒரே முகஜாடையுடனிருப்பது வேறெங்கும் காணமுடியாத அதிசயம். வஸிஷ்டர் தம் பக்தியால் வெண்ணை மயமான க்ருஷ்ணனை இளகி, த்ரவமாகாமல் கட்டி, திவ்யமங்கள விக்ரஹம்செய்து, த்யானம் செய்வார். இப்படி வெகு காலம் கடந்தபின், ஒரு நாள் பகவான் கோபாலன் உருவம்கொண்டு வஸிஷ்டர் ஆராதனம் செய்யும் வெண்ணை கண்ணனை அமுது செய்ததைப் பார்த்து கோபாலனைப் பிடிக்க ஒட, கோபாலனும் மேற்கு திசை நோக்கி ஒட, மகிழ மரத்தடியில் தவம் செய்து கொண்டிருந்த மஹரிஷிகள் பக்தியாகிய பாசக்கயிற்றால் கட்டியதால், கட்டுண்டு கோயில்கொண்டு கண்ணன் எழுந்தருளியதால், திருக்கண்ணங்குடி என்ற பெயர் உண்டாயிற்று.
திருமங்கையாழ்வார், நாகப்பட்டினத்திலிருந்து தங்கமயமான புத்த விக்ரஹத்தை ரங்கநாதன் கோபுரம் பிராகாரங்கள் முதலிய திருப்பணிகளை செய்ய கொண்டுவந்து புதைத்து, பகவான் அருளால் எடுத்துச் சென்ற ஸ்தலம் இது.
நாகப்பட்டினத்திலிருந்து பஸ் வழியாக சிக்கலுக்கும் கீவளுருக்கும் இடையேயுள்ள ஆழியூர் என்ற இடத்தில் இறங்கி அங்கிருந்து முக்கால் மைல் தூரம் நடந்தோ வண்டியிலோ செல்லலாம். தஞ்சாவூர்- கீவளூர் ரயில் பாதையிலுள்ள கீவளூர் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 2 மைல் தூரம் சென்றும் அடையலாம்.
***
விபூதி அணியும் பெருமாள்!
நாகை மாவட்டம் திருக்கண்ணங்குடியில் உள்ள லோகநாதப் பெருமாள் கோயிலில் பெருமாள் விபூதி (திருநீறு) அணிந்து காட்சி தரும் அபூர்வ வைபவம் நடைபெறுகிறது. சித்திரை பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாளில், விஷ்ணு சிவனை வணங்கும் ஐதீகத்தின் அடிப்படையில், பெருமாளுக்கு விபூதி காப்பு சாத்தப்பட்டு ‘திருநீரணி விழா’ சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. [1, 2]
- திருக்கண்ணங்குடி லோகநாதப் பெருமாள்: இந்தத் தலத்தில் பெருமாள், திருநீறு அணிந்து, நெற்றியில் விபூதியுடன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
- திருநீரணி விழா: இந்த அபூர்வ விழா சித்திரை மாதத்தில் 7-ஆம் நாள் நடைபெறும்.
- ஐதீகம்: பொதுவாக விஷ்ணுவிற்கு நாமம் (திருமண்) சாத்தப்படும் நிலையில், இங்கு சிவபெருமானுக்குரிய விபூதியை பெருமாள் அணிந்து கொள்வது, அரி-ஹரன் (ஹரிஹர) சங்கமத்தைக் குறிக்கும்.
- சைவ-வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் இந்த வழிபாடு, விபூதியின் மகிமையை குறிக்கும்.

திருக்கண்ணங்குடி பாசுரங்கள்
திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழியில் 10 பாசுரங்கள் பாடியுள்ளார். இந்தப் பாசுரங்கள் “வங்கமா முந்நீர்” (பெரிய திருமொழி 9-1-1) என்ற பாடலுடன் தொடங்கி, திருக்கண்ணங்குடி பெருமாளின் பெருமைகளை எடுத்துரைக்கின்றன.
இத்தலத்தை ‘கண்ணன் வாழும் குடி’ (திருக்கண்ணங்குடி) என்று ஆழ்வார் போற்றுகிறார்.பாசுரங்கள் பெரும்பாலும் பெருமாளின் சாமளமேனி (நீலமேகவண்ணன்) மற்றும் லோகநாதன் என்ற திருக்கோலத்தை விவரிக்கின்றன.
மங்களா சாஸனம் –
திருமங்கையாழ்வார் – 1748-57 – 10 பாசுரங்கள்.
1748.
வங்கமா முந்நீர் வரிநிறப் பெரிய* வாள்அரவின் அணை மேவி,*
சங்கம்ஆர் அம்கை தடமலர் உந்தி* சாமமா மேனி என் தலைவன்,*
அங்கம்ஆறு ஐந்துவேள்வி நால்வேதம்* அருங்கலை பயின்று,* எரி மூன்றும்-
செங்கையால் வளர்க்கும் துளக்கம்இல் மனத்தோர்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே. (2)
**
1749.
கவளமா கதத்த கரி உய்ய* பொய்கைக் கராம்கொளக் கலங்கி, உள் நினைந்து-
துவள* மேல் வந்து தோன்றி வன் முதலை துணிபட* சுடுபடை துரந்தோன்,*
குவளைநீள் முளரி குமுதம் ஒண்கழுநீர்* கொய்ம்மலர் நெய்தல் ஒண் கழனி,*
திவளும் மாளிகைசூழ் செழுமணிப் புரிசைத்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே
**
1750.
வாதை வந்து அடர வானமும் நிலனும்* மலைகளும் அலைகடல் குளிப்ப,*
மீது கொண்டுஉகளும் மீன்உருஆகி* விரிபுனல் வரி அகட்டுஒளித்தோன்,*
போதுஅலர் புன்னை மல்லிகை* மௌவல் புதுவிரை மதுமலர் அணைந்து,*
சீதஒண் தென்றல் திசைதொறும் கமழும்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே
**
1751.
வென்றிசேர் திண்மை விலங்கல் மாமேனி* வெள்எயிற்று ஒள்எரித் தறுகண்*
பன்றிஆய் அன்று பார்மகள் பயலை தீர்த்தவன்* பஞ்சவர் பாகன்*
ஒன்றுஅலா உருவத்து உலப்புஇல் பல்காலத்து* உயர்கொடி ஒளிவளர் மதியம்,*
சென்றுசேர் சென்னிச் சிகர நல்மாடத்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே.
**
1752.
மன்னவன் பெரிய வேள்வியில் குறள்ஆய்* மூவடி நீரொடும் கொண்டு,*
பின்னும் ஏழ்உலகும் ஈர்அடிஆக* பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்,*
அன்னம்மென் கமலத்து அணிமலர்ப் பீடத்து* அலைபுனல் இலைக்குடை நீழல்,*
செந்நெல் ஒண்கவரி அசைய வீற்றிருக்கும்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே.
**
1753.
மழுவினால் அவனி அரசை மூவெழுகால்* மணிமுடி பொடிபடுத்து* உதிரக்-
குழுவுவார் புனலுள் குளித்து* வெம்கோபம் தவிர்ந்தவன் குலைமலி கதலிக்*
குழுவும்வார் கமுகும் குரவும் நல்பலவும்* குளிர்தரு சூதம்மாதவியும்*
செழுமைஆர் பொழில்கள் தழுவும் நல்மாடத்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே
**
1754.
வான்உளார் அவரை வலிமையால் நலியும்* மறிகடல் இலங்கையார் கோனை,*
பானுநேர் சரத்தால் பனங்கனி போலப்* பருமுடி உதிர வில் வளைத்தோன்,*
கான்உலாம் மயிலின் கணங்கள் நின்றுஆட* கணமுகில் முரசம் நின்றுஅதிர,*
தேன்உலாம் வரிவண்டு இன்இசை முரலும்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே.
**
1755.
அரவநீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை* அஞ்சிடாதே இட,* அதற்கு-
பெரியமா மேனி அண்டம் ஊடுருவ* பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்,*
வரையின்மா மணியும் மரகதத் திரளும்* வயிரமும் வெதிர்உதிர் முத்தும்,*
திரைகொணர்ந்து உந்தி வயல்தொறும் குவிக்கும்* திருக்கண்ணங்குடியுள் நின்றானே
**
1756.
பன்னிய பாரம் பார்மகட்கு ஒழிய* பாரத மாபெரும் போரில்,*
மன்னர்கள் மடிய மணிநெடுந் திண்தேர்* மைத்துனற்கு உய்த்த மாமாயன்,*
துன்னு மாதவியும் சுரபுனைப் பொழிலும்* சூழ்ந்துஎழு செண்பக மலர்வாய்,*
தென்னஎன்று அளிகள் முரன்றுஇசை பாடும்* திருக்கண்ணங் குடியுள் நின்றானே.
**
1757.
கலைஉலா அல்குல் காரிகை திறத்து* கடல்பெரும் படையொடும் சென்று,*
சிலையினால் இலங்கை தீஎழச் செற்ற* திருக்கண்ணங் குடியுள் நின்றானை,*
மலைகுலாம் மாட மங்கையர் தலைவன்* மானவேல் கலியன் வாய் ஒலிகள்,*
உலவுசொல் மாலை ஒன்பதோடு ஒன்றும்* வல்லவர்க்கு இல்லை நல்குரவே. (2)
—subham—
Tags- திருக்கண்ணங்குடி பாசுரங்கள், Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-12; திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள், விபூதி அணியும் பெருமாள்