
Written by London Swaminathan
Post No. 15,691
Date uploaded in London –3 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
English version was posted yesterday; here is the Tamil version.
மதலசா
இந்தப் பெண்மணியின் கதை மார்க்கண்டேய புராணத்தில் வருகிறது. மதலசா, தனது குழந்தைகளுக்குச் சிறுவயதிலிருந்தே ஆன்ம ஞானம் மற்றும் வைராக்கியத்தை தாலாட்டுப் பாட்டுகள் மூலம் புகட்டினார். அவர் ஒரு ஞானமுள்ள தாயார். . சத்வம், ஆன்ம ஞானம், மற்றும் உலக ஆசைகளைத் துறத்தல் ஆகியவற்றை வலியுறுத்தும் இவரது போதனைகள் ‘மதலசா உபதேசம்’ என்று அழைக்கப்படுகிறது.
அவர் ஒரு ப்ரஹ்மவாதினி ;அதாவது தத்துவ வாதினி.
விசுவாவசு என்னும் கந்தர்வனின் புதல்வி. ரிதத்வஜன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார் .
அவருக்கு விக்ராந்த , ஸுபாஹு, க்ஷத்ருமர்தானா என்ற மூன்று புதல்வர்கள் ; அவர்கள் மூவரும் வாலிபப் பருவம் எய்தியவுடன் சந்யாசிகள் ஆகிவிட்டனர் . ஒரு தாயாரின் தாலாட்டுப்பாட்டுக்குள்ள சக்தியை இது காட்டுகிறது ; சிறுவயதிலிருந்தே காதில் நல்ல விஷயங்களைப் போட்டுக்கொண்டே இருந்தால், அவர்கள் வாழ்நாள் முழுதும் நல்லவர்களாகவே இருப்பார்கள்; எந்த தீய சக்தியும் அவர்களை அணுக முடியாத கவசம் அவர்களுக்கு ஏற்பட்டுவிடும் .
***
மாதவி ( மஹாபாரத மாதவி )
யயாதி மன்னனின் மகளான மாதவி, கன்னித் தன்மையை மீண்டும் பெறும் வரத்தைப் பெற்ற பேரழகியாவாள். காலவ முனிவரின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக, அவள் நான்கு மன்னர்களிடம் அனுப்பப்பட்டு 800 குதிரைகளைப் பெற்றுத் தந்தாள்
மஹாபாரதத்தில் உத்யோக பர்வத்தில் இந்தக் கதை உள்ளது. காலவர் என்பவர் விச்வாமித்ரரிடம் கல்வி கற்றார். குருகுல வசம் முடிந்தது. குருவே! என்ன தட்சிணை கொடுக்க வேண்டும்? என்று பணிவுடன் கேட்டார். காலவர் ஏழை மாணவர் என்பதால் போய் வா! சீடா ! போய் வா! சீடா! என்று இருமுறை கூறினார்; பொருள் விளங்காத காலவர் குரு தட்சிணை எவ்வளவு வேண்டும்? என்று மீண்டும் மீண்டும் வினவ , கோபத்தில் குரு விச்வாமித்தார் சொன்னார்,“போ! 800 வெள்ளைக் குதிரைகளைக் கொண்டுவா; அதன் காதுகள் ஒருபுறம் மட்டும் கருப்பாக இருக்க வேண்டும்” என்று கட்டளையிட்டார் .

காலவர் கவலையுடன் குதிரை தேடி அலைந்தபோது கருடன் வந்து, “வா உன்னை யயாதி மன்னரிடம் அழைத்துச் செல்கிறேன்; அவர் உதவிடுவார்” என்று சொல்லி கூட்டிச் சென்றார் யயாதி , “எதையும் கேள்” தருகிறேன்” என்றார்; வினோதமான 800 குதிரைகள் தேவை என்றவுடன் அவருக்குத் திகில் ஏற்பட்டது. இரு நூறு குதிரைகள் வேண்டுமானால் கிடைக்கலாம்; ஆனால் என் மகள் மாதவி பேரழகி. அவளை அடுத்த நாட்டு மன்னரிடம் அழைத்துச் சென்று உன் கோரிக்கையைச் சொல்; சரி என்று சொன்னால் உனக்குக் குதிரைகள் கிடைக்கும் என்றார். அந்தப் பெண்ணரசி மாதவி, யாருடன் படுத்தாலும் கன்னித் தன்மையை இழக்காமல் குழந்தை பெறும் பாக்கியத்தை—வரத்தைப்– பெற்றிருந்தாள். கடைசியாக அவள் திவோதசன் என்ற மன்னருடன் படுக்கச் சென்றபோது இந்தக் கதை வருகிறது.
மன்னர்கள் பல பெண்களை மணப்பதும் ஒரு மன்னன் போரில் தோற்றால் அவனுடைய மனைவியர், கொள்ளையிட்ட செல்வத்தின் பகுதியாக மாற்றானுக்குச் சொந்தமாவதும் இந்தியா முழுதும் வழக்கில் இருந்தது . ஆகவே மாதவி பல மன்னர்களுடன் படுத்தது தவறில்லை என்ற கட்டத்தில் புகழ்பெற்ற கணவன்- மனைவி பட்டியல் வருகிறது
ஹர்யாஸ்வ ( அயோத்தி மன்னன்) , திவோதாச ( காசி மன்னன்) , உசிநார ( போஜமன்னன் ) ஆகியோருடன் இன்பம் துய்த்து 600 குதிரைகளைப் பெற்று காலவரிடம் கொடுத்தாள்; மீண்டும் கன்னித் தன்மையைப் பெற்றவுடன் நாடு திரும்பினாள் ; அவளுக்குப் பிறந்த வசுமனஸ், ப்ரதர்தன, சிபி, அஷ்டக ஆகிய நால்வரும் பேரரசர்களாகத் திகழ்ந்தனர் . அவளுடைய தந்தை முறையான திருமணத்துக்காக ஸ்வயம்வரம் ஏற்பாடு செய்தபோது அவள் மறுத்துவிட்டு துறவற வாழ்க்கை வாழ்ந்தாள்; செக்ஸ் இன்பத்துக்கு பிறருடன் படுக்காமல், ஒரு முனிவர்க்கு உதவுவதற்புகாகப் பிறருடன் படுத்தாள் ; இதனால் இவரை தியாகத்தின் சின்னமாகவும் நல்ல மனைவியரில் ஓருவராகவும் மஹாபாரதம் காட்டுகிறது .
***
மாதவி (சிலப்பதிகாரத்தில்)
சிலப்பதிகாரத்தில் கோவலனைக் கவர்ந்த நடன மாது மாதவி ;
ஆடல் பாடல் கலைகளில் தேர்ச்சி பெற்றவள். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கண்ணகியையும், மாதவியையும் இரு மாறுபட்ட துருவங்களாகவே படைத்திருக்கிறார். கண்ணகி ஒரு பெரும் வணிகனின் குடும்பத்தில் பிறந்து கோவலனுக்கு வாக்குப்பட்டாள்; கண்ணகியின் கணவன் கோவலன், நடன மங்கை, பேரழகி மாதவியிடம் மையல் கொண்டு அவளுடன் சேர்ந்து வாழ்கிறான். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது. அவள் பெயர் மணிமேகலை. இது இராண்டாவது காவியத்தின் பெயரும் ஆகும்
மாதவி பிறப்பால் கணிகையாக இருந்தபோதிலும் கோவலனை மணந்த பிறகு அவன் ஒருவனை மட்டுமே தன் வாழ்வில் ஏற்றாள். ஒரு சிறிய கருத்து வேறுபாடு காரணமாக மனம் வெறுத்து கோவலன் மாதவியைப் பிரிந்து தன் மனைவி கண்ணகியைத் தேடிப் போகிறான். மதுரை நகரில் புது வாழ்வுத் துவாங்கப்போன இடத்தில் பொற்கொல்லன் ஒருவனின் சதியால் கோவலனுக்கு பாண்டிய மன்னன் மரணதண்டனை கொடுத்துவிட்டான். இந்தத் துயரச் செய்தியை அறிந்த மாதவி துறவறம் பூண்டு, புத்த மதத்தில் சேர்கிறாள்; தன் மகள் மணிமேகலையையும் துறவறம் ஏற்கச் செய்கிறாள்.
***
மாத்ர தேசம்
பழங்கால இந்தியாவின் 56 தேசங்களில் ஒன்றான மாத்ர தேசம் வடமேற்கு இந்தியாவில் பஞ்சாப் பகுதியில் இருந்தது ;அதை ஆண்ட சல்ய என்ற மன்னன் , மஹாபாரத யுத்தத்தில் கெளரவர்களுக்குத் துணையாக நின்றான் ; அங்கிருந்து வந்த இளவரசி மாத்ரி, பாண்டுவின் இரண்டாவது மனைவி ஆனாள்.
***
மாத்ரி
மாத்ர தேச மன்னன் சல்யனின் சகோதரி மாத்ரி ; அவளை பாண்டு மன்னன் இரண்டாவது மனைவியாகக் கட்டிக்கொண்டான் ; பாண்டு செக்ஸ் அனுபவித்தால் இறந்துவிடுவான் என்று கிண்டம மகரிஷி சாபம் போட்டிருந்தார் ; இதனால் முதல் மனைவியான குந்தி , துர்வாச முனிவர் கொடுத்த வரத்தால் யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் ( அதற்கு முன்னர் கர்ணன் ) ஆகியோரைப் பெற்றாள்; யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும் என்று கருதி துர்வாசர் சொன்ன மந்திரத்தை மாத்ரிக்கும் கற்பித்தாள்; அவள் அஸ்வினி தேவர்கள் என்னும் இரட்டையரை வரவழைத்து நகுலன், சகாதேவன் என்ற இரட்டையரைப் பெற்றாள்; ஒரு நாள் பாண்டுவுக்கு செக்ஸ் உணர்வு அதிகரிக்கவே மாத்ரியை அணைத்தார் ; சாபத்தினால் உடனே இறந்தார் ; தன்னால்தானே இப்படி நடந்தது என்று வருத்தப்பட்ட மாத்ரி கணவனின் சிதைத்தீயில் படுத்து உயிர்த்தியாகம் செய்தாள் ; புறநானூற்றில் பூதப் பாண்டியன் மனைவியும் இப்படி இறந்ததை ஒப்பிடலாம் .
(பாண்டு மரணத்துக்கு என்னுடைய விளக்கம் : இருதய நோய் காடுமையாக உள்ளவர்கள், செக்ஸ் போன்ற விஷயங்களில் ஈடு படும்போது மாரடைப்பு ஏற்பட்ட வாய்ப்புண்டு; இது டாக்டர்களின் எச்சரிக்கை; அதை சாபம் என்றால்தான் பழைய கால ஆட்கள் நம்புவார்கள் ; இது மிக அரிதாகவே நிகழும்)
***
மத்வாசார்யார்
துவைதம் என்னும் கொள்கையைப் பரப்பியவர் ; சங்கரர், ராமானுஜர் ஆகிய இரண்டு தென்னிந்திய தத்துவ தரிசிகளுக்கு இணையாக நிற்பவர்.
இவர் ஸ்வஸ்தி ஸ்ரீ விளம்பி வருடம் ஆடி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தியன்று அந்தண குலத்தில் மத்யகேஹர் – வேதவதி ஆகிய தம்பதியருக்கு திருக்குமாரராக அவதரித்தார். இவருக்கு பெற்றோர் வாசுதேவன் என்று பெயர் சூட்டினர். வேத அத்யயனம் முடிந்த பின்னர் தர்க்கம் வியாகாரணம் உள்ளிட்ட அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்றார் வாசுதேவர். உலக வாழ்க்கையில் சற்றும் பற்றில்லாத நிலையில் உடுப்பி தலத்தில் ஸ்ரீ அனந்தேஸ்வரர் ஆலயத்திற்கு அருகில் உள்ள மடத்தில் ஸ்ரீ அச்யுதப்பிரக்ஷர் இருப்பதை அறிந்தார் அவர். அவரை அணுகி தனக்கு சந்யாச தீக்ஷை அளிக்குமாறு வேண்டினார். அவரும் இவரது ஆர்வத்தையும் தகுதியையும் பார்த்து அவருக்கு துறவற தீக்ஷையைக் கொடுத்து ‘பூர்ண ப்ரஜ்ஞர்’ என்னும் சந்யாச நாமத்தை அளித்தார். இவர் வாழ்க்கையில் ஏராளமான அற்புதங்களைச் செய்தார்.

மத்வருக்கு இஷ்ட தெய்வம் கிருஷ்ணர். அவருக்கு ஒரு கோயில் கட்ட அவர் விரும்பினார். ஒரு நாள் தனது ஆசிரமத்திற்கு அருகே உள்ள கடற்கரையில் அவர் அனுஷ்டானம் செய்து கொண்டிருந்த போது கடலில் ஒரு கப்பல் மூழ்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அந்தக் கப்பலின் தலைவன் அவரை அணுகி நமஸ்கரித்து கப்பலைக் காப்பாற்றுமாறு வேண்டினான். மத்வர் காற்று அடிக்கும் திசையை மாற்றி கப்பலை மூழ்காமல் கரைக்கு வாச் செய்தார். கப்பலுக்குரியவன் கப்பலிலிருந்து எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூற மத்வர் கப்பலில் இருந்த கோபீ திருமண் இட்டுக்கொள்வதற்கான பாறையை எடுத்துக்கொண்டார் ; அதை உடைத்தபோது இடையே ஒரு ஸ்ரீ கிருஷ்ண விக்ரஹம் இருந்தது. அதனால் மத்வர் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தார். அந்த விக்ரஹம் ருக்மிணி தேவியால் த்வாரகையில் பூஜிக்கப்பட்டு வந்த விக்ரஹம். த்வாரகை கடலில் மூழ்கிய போது மூழ்கி இருந்த அதுவே மத்வரின் கைக்கு இப்போது வந்து சேர்ந்திருந்தது. உடுப்பியில் அதைப் பிரதிஷ்டை செய்தார்.அதைத் தான் வாழ்நாள் முழுவதும் தன் கையினாலேயே அர்ச்சித்து வந்தார் மத்வர்.
தனக்குப் பின்னர் கிருஷ்ணருக்குப் பூஜை செய்ய, மத்வாசாரியர் தனது சீடர்களில் விஷ்ணுதீர்த்தர் உள்ளிட்ட எட்டு பேரைத் தேர்ந்தெடுத்தார். ஒவ்வொருவரும் இரண்டிரண்டு ஆண்டுகள் அர்ச்சனை செய்யுமாறும் இந்த முறை தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும் என்றும் அருளாணை பிறப்பித்தார். அதன் படியே இன்றளவும் அங்குள்ள எட்டு மடங்கள் ஒவ்வொன்றும் முறைப்படி இரண்டிரண்டு ஆண்டுகள் உடுப்பி கிருஷ்ணருக்கு அர்ச்சனை புரிந்து வருகின்றன.
மத்வாசாரியார் 37 அபூர்வமான நூல்களை இயற்றியுள்ளார். அவற்றில் முக்கியமானவை பகவத் கீதா பாஷ்யம், ஸுத்ர பாஷ்யம், கீதா தாத்பர்யம், மஹாபாரத தாத்பர்ய நிர்ணயம், தசோபநிஷத் பாஷ்யம், பாகவத தாத்பர்ய நிர்ணயம், அனு பாஷ்யம், த்வாதச ஸ்தோத்ரம், தந்த்ர ஸாரம் ஆகியவையாகும். ருக் வேதத்தில் உள்ள முதல் 40 சூக்தங்களுக்கு அவர் பாஷ்யமும் செய்து அருளியுள்ளார்.
–SUBAHM—
TAGS -HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 58; இந்து மத கலைச்சொல் அகராதி-58, மதலசா, மத்வர், மாதவி, சிலப்பதிகாரம், மணிமேகலை, யயாதி, மஹாபாரதம், காலவ முனிவர் விசுவாமித்திரர், மத்வர், மாத்ரி, சல்யன்