பன்னிரெண்டு வயதில் திருமணம்! கணவனுடன் சிதைத் தீயில் மரணம் -பெரிய புராணம் (Post.15,697)

Written by London Swaminathan

Post No. 15,697

Date uploaded in London –4 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பெரிய புராணம்  திருநாவுக்கரசு சுவாமிகள் (அப்பர் , மருள் நிக்கியார்) கதை

கண்ணகிக்கு12 வயதில் திருமணம் :சிலப்பதிகாரத்தில் திருமணத்தின் போது கோவலனுக்கு வயது 16, கண்ணகிக்கு 12 வயதுமானது என்று குறிப்பிடப்படுகிறது.

சிலப்பதிகாரம்

நாகநீள் நகரொடு நாகநாடு அதனொடு

போகம்நீள் புகழ்மன்னும் புகார்நகர் அதுதன்னில்

மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர்

ஈகைவான் கொடியன்னாள் ஈராறுஆண்டு அகவையாள்,2X6=12

அவளுந்தான்,

………………………………

பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த

ஒருதனிக் குடிகளொடு உயர்ந்தோங்கு செல்வத்தான்

வருநிதி பிறர்க்குஆர்த்தும் மாசாத்து வான்என்பான்

இருநிதிக் கிழவன்மகன் ஈரெட்டுஆண்டு அகவையான், 2X8=16

அவனுந்தான்– புகார்க்காண்டம்

கந்தபுராணத்தில் முருகன் – வள்ளிக்குத் திருமணம் நடைபெறும் போதும்  வள்ளியின் வயது 12 தான் 

அப்பரின் சகோதரி திலகவாதியாருக்கு 12 வயதானபோது திருமணம் நிச்சயிக்கப்பட்டதை சேக்கிழாரும் குறிப்பிடத் தவறவில்லை

1292    அந்நாளில் திலகவதியாருக்கு ஆண்டு ஆறு இரண்டின்

முன்னாக ஒத்த குல முதல் வேளாண் குடித் தலைவர்

மின்னார் செஞ்சடை அண்ணல் மெய் அடிமை விருப்புடையார்

பொன்னாரும் மணி மௌலிப் புரவலன் பால் அருள் உடையார்—பெரிய புராணம் 

பெரிய புராணம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது ; ஆயினும் அதில்  வரும் அப்பர் என்னும் திருநாவுக்கரசர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மஹேந்திர பல்லவன் (600 CE) காலத்தில் வாழ்ந்தது கல்வெட்டுகள் மூலம் நிரூபிக்கப்பட்டது.

அப்பரின் சகோதரியின் பெயர் திலகவதி ; அவர்கள் பிராமணர்கள் அல்ல; அதற்கு முன்னர் காரைக்காலில் வாழந்த காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதி ; அவரும்  பி பிராமணர்

அல்ல; செட்டியார் ஜாதி ; இரண்டும் தூய ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் இவர்களுக்கு முன்னர் சங்க காலத்தில் வாழ்ந்த பெண்ணின் பெயர் ஐயை என்று சிலப்பதிகாரம் சொல்கிறது ; இது ஆர்யை/ ஆர்யா என்பதன் தமிழ் வடிவம் . ஆதி சங்கரரின் தாயார் பெயரும் ஆர்யாம்பாள்தான் ; சங்க இலக்கியப் புலவர் பெயர்களில் இருபது, முப்பது பெயர்கள் ஸம்ஸ்க்ருதப் பெயர்களே; இவை தவிர நாகன் என்று முடியும் புலவர்கள் இருபது பேர் உள்ளனர் ; நாகன் என்பது குப்தர் , சாதவாகன, வாகதர் கல்வெட்டுகளிலும் வருகிறது. அதுவும்  ஸம்ஸ்க்ருதப் பெயர் ! ஆகவே திருமணம் செய்யும் வயது, பெயரிடும் முறை ஆகியன வடக்கில் இருந்ததைப் போலவே தெற்கிலும் இருந்தது ; அக்கால மக்கள் தமிழ் மொழியையும் சம்ஸ்க்ருத மொழியையும் இரு கண்களாகவே பாராட்டினார்கள்;பயன்படுத்தினார்கள்.

கோவலன் என்பதும் கோபாலன் என்பதன் தமிழ் வடிவமே !

***

ராமாயணத்தில் ராமன் சீதையின் கல்யாண வயது 16-12 என்றே வருகிறது . நான் 12 ஆண்டுகள் அயோத்தியில் சுகமாக இருந்தேன் என்று சுந்தர காண்டத்தில் வரும் ஒரு வரியை வைத்து கூட்டல் கணக்குப் போட்டு சிலர் சீதைக்கு கல்யாணம் ஆனபோது வயது ஆறு என்று தத்துப்பித்து என்று எழுதியுள்ளனர் ; ஆறு வயதாக இருந்திருந்தால் அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள் என்ற வரிக்களுக்குப் பொருளே வராது . ஆறு வயதில் சீதைக்கு காதல் பார்வை வருமா?

12 ஆண்டுகள் அயோத்தியில் இருந்தேன் என்பதை கல்யாணத்துக்கு முன்னர் வாழ்ந்த காலத்தையும் சொல்லியிருக்கலாம் என்பது அறிஞர்களின் விளக்கம்

சங்க இலக்கியம் முழுதும் ஓடிப்போன சின்னப்  பெண்களின் பொம்மை, அம்மானை சொப்பு , சிறு முலை ஆகியன  பாடப்படுவதால் 12 முதல் 16 வயதுக்குள் அவர்கள் காதலனுடன் ஓடிப்போனது புலப்படுகிறது .

***

மனு நீதி நூலில்

त्रिंशद्वर्षो वहेत् कन्यां हृद्यां द्वादशवार्षिकीम् ।

त्र्यष्टवर्षोऽष्टवर्षां वा धर्मे सीदति सत्वरः ॥ ९४ ॥

triṃśadvarṣo vahet kanyāṃ hṛdyāṃ dvādaśavārṣikīm |

tryaṣṭavarṣo’ṣṭavarṣāṃ vā dharme sīdati satvaraḥ || 9-94 ||

A man thirty years old shall marry a charming maiden twelve years old; or one twenty four years old, a damsel eight years old; in the event of his duties suffering, he may do it sooner.—(9-94)

மனு சொல்கிறார் : முப்பது வயது ஆண் மகன் 12 வயதுப் பெண்ணை  மணக்கலாம் ; 24 வயது ஆண் மகன் எட்டு வயதுப் பெண்ணை  மணக்கலாம்.

இதைத் திருமணம் என்னும் தலைப்பில் சொல்லாமல் வேறு ஓரிடத்தில் சொல்கிறார் ; இவளவு தாமதமாக அந்தக்காலத்தில் ஆண்கள் திருமணம் செய்யவில்லை ஆகையால் இதை மேல் வரம்பு- கீழ் வரம்பு என்றும் கொள்வதே பொருந்தும் என்று மனு தர்ம உரை ஆசிரியர்கள் எழுதியுள்ளனர்..

எல்லாவற்றுக்கும் மேலாக சாவித்ரி, தமயந்தி, திரவுபதி முதலிய கதைகளை படிக்கையில் அவர்கள் எவ்வளவு அறிவு முதிர்ச்சி பெற்றிருந்தனர் எனபதும் தெரிகிறது; மனு ஸ்ம்ருதியில் வரும் ஒரு ஸ்லோகமும் இவ்வாறு பலவிதமாக விளக்கப்படுகிறது அந்தக் காலத்தில்  முறைப் பெண்ணை மணக்கும் வழக்கம் இருந்ததால் வாய் வார்த்தனையாக இப்படித் திருமணத்தைப்பேசி வைப்பார்கள்;

உண்மையான திருமணம் பிற்காலத்தில் நடந்தது; ஆகையால்  மனு எட்டு வயதுக்கு முன்னர் கல்யாணம் பேசக்கூடாது என்பதற்காக இதைச் சொல்கிறார் என்பதே பொருந்தும். மேலும் இருவருக்கு இடையேயுள்ள வயது வித்தியாசத்துக்காக இதைச் சொல்கிறார் .

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் கூட கணவன் மனைவி இடையே இருபது ஆண்டுகள் இடைவெளி இருந்தது நன்றாகத் தெரிகிறது இதனால்தான் கணவர்கள் முதலில் இறப்பதும் விதவைகள் புலம்புவதும் சங்க இலக்கி யத்தில் கூட அதிகமாகக் காணப்படுகிறது.

***

காதல் திருமணம் அல்ல !

அப்பர் வீட்டுத் திருமணமும்  கோவலன் வீட்டுத் திருமணமும் காதல் திருமணம் அல்ல ; தாய் தந்தையர் பேசி முடித்த திருமணம் ; சங்க காலத்திலும் காதல் திருமணமே நடந்ததாக எண்ணுவது தவறு; மனு நீதி நூல் சொன்ன எட்டு வகைத் திருமணங்களையும் தொல்காப்பியரும் அப்பாடியே தமிழர் திருமணங்களாகக் காட்டியுள்ளார்!

வேத காலத்தில் எட்டு வகைத் திருமணங்களும் நடந்தன இதற்கு மஹாபாரதம் மற்றும் புராணங்களில் எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன ;

வேத காலத்தில் சமனஸ் என்னும் பொது விழாக்களில் ஆண்களும் பெண்களும் சந்தித்துக் காதல் புரிந்ததை ரிக் வேத மந்திரங்களில் காணலாம்; அது மட்டுமல்ல; சமனஸ் கூட்டத்துக்கு அலங்கரித்துக் கொண்டு இளம் பெண்கள் சென்றதைப் போல என்பதை புலவர்கள் உவமைகளாக கையாளுவதால் வேத காலத்தில் காதல் திருமணங்கள் மிகவும் நடைபெற்றதும் தெரிகிறது. .

***

அப்பர் காலத்தில் குலம் கோத்திரம் பேசிக் கல்யாணம் முடிப்பதையும் சேக்கிழார் கீழ்கண்ட பாடலில் குறிப்பிடுகிறார் .

294       அணங்கு அனைய திலகவதியார் தம்மை ஆங்கு அவர்க்கு

மணம் பேசி வந்தவரும் வந்தபடி அறிவிப்பக்

குணம் பேசிக் குலம் பேசிக் கோதில் சீர்ப் புகழனார்

பணம் கொள் அரவு அகல் அல்குல் பைந் தொடியை மணம் நேர்ந்தார்-பெரிய புராணம்

***

SATI pictures

அப்பர் – திலகவதியின் தந்தை புகழனார் நோய்வாய்ப்பட்டு இறந்தவுடன் அவருடைய மனைவி மாதினியார் உடன்கட்டை  ஏறி உயிர்விடுகிறார்.

1298    மற்றவர் தாம் உயிர் நீப்ப மனைவியார் மாதினியார்

சுற்றம் உடன் மக்களையும் துகளாவே நீத்துப்

பெற்றிமையால் உடன் என்றும் பிரியாத உலகு எய்தும்

கற்பு நெறி வழுவாமல் கணவனார் உடன் சென்றார்

5.1.28-பெரிய புராணம்

இதே போல கலிப்பகையார் போரில் இறந்தவுடன் அவருடைய மனைவியாகப் போகின்ற திலகவதியாரும் கணவரின் சிதைத் தீயில் ஏறி உயிரத்தியாகம் செய்ய முயன்றதையும் அப்போது மருள்நீக்கியார் என்ற பெயர்கொண்ட அப்பர், அவர் காலில் விழுந்து அழுது  புரண்டு அதைத்  தடுத்ததையும் சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகிறார்  .

புறநானூற்றில் குறைந்தது நான்கு பாடல்களில் சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் குறிப்பிடப்படுகிறது. பூதப்பாண்டியன் தேவி, பலர் தடுத்தும் கேளாமல் வீர வசனம் பேசிவிட்டுத் துணிச்சலாக தீயில் பாய்ந்து கருகி இறந்ததை பாடல்களில் படிக்கிறோம்.

சங்க காலம் — சிலப்பதிகார காலம் — பெரிய புராண காலம் வரை சில வழக்கங்கள் போற்றப்படுவதை நாம் காணமுடிகிறது .

–Subham—

Tags- சதி, உடன்கட்டைஏறும் வழக்கம், அப்பர் திலகவதி, சாதி குலம், பெரிய புராணம்,மனு நீதி நூல்,சேக்கிழார், Sati images

Leave a comment

Leave a comment