WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,698
Date uploaded in London – 5 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மாலைமலர் 30-4-26 தேதியிட்ட இதழ் விளம்பர மலர் சிறப்பிதழாக வெளி வந்தது. பெருமை மிகு தமிழகம் என்பதை மையப்பொருளாகக் கொண்ட அந்த சிறப்பிதழில் பெருமை மிகு தமிழகத்தில் பாண்டிய மண்டலம், சோழ மண்டலம், கொங்கு மண்டலம், பல்லவ மண்டலம் என நான்கு சிறப்புக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றை இங்கு ஒவ்வொன்றாகக் காணலாம்.
பாண்டிய மண்டலம் சோழ மண்டலத்தைத் தொடர்ந்து இப்போது கொங்கு மண்டலம் வெளீயாகிறது.
பெருமை மிகு தமிழகத்தில் கொங்கு மண்டலம்!
ச. நாகராஜன்
தான் நீண்ட நாள் வாழ்வதை விட தமிழ்ப் புலவர் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று தான் பெற்ற நெல்லிக் கனியைக் கொடுத்த வள்ளல் வாழ்ந்த பூமி எது?`குளிர் தாங்காமல் தோகை விரித்து ஆடும் மயில் வருந்துவதைக் கண்டு தன் மேலாடையைப் போர்த்திய வள்ளல்
வாழ்ந்த மண்டலம் எது? தமிழ் இலக்கணத்தில்
பெற்றுத் தமிழை வளர்க்க தொல்காப்பிய வழியில் எளிய நூல் இயற்றிய தமிழ்ப் பாவலனின் பூமி எது? இயற்கை வளம் வாய்ந்த மலைச் சிகரம் எங்கே உள்ளது? நவீன காலத்திற்கேற்ப தொழிலில் முன்னோடி நகரம் என அனைவரையும் பிரமிக்க வைக்கும் நகரைக் கொண்ட பகுதி இது? இன்ன பிற கேள்விகளுக்கெல்லாம் தமிழ் வளர்த்த கொங்கு மண்டலம் என்பதே பதிலாக அமையும்.
கொங்குமண்டலத்தில் இன்று தர்மபுரி என்று அழைக்கப்படும் நகர் அந்தக் காலத்தில் தகடூர் என்ற பெயருடன் புகழ் பெற்றிருந்தது. அதை ஆண்டு வந்த மன்னன் அதியமான் ஒரு நாள் பருத்திப்பள்ளிக்காட்டில் இருக்கும் கஞ்சமலை மீது உள்ள கருங்காடு என்னும் பகுதியில் சஞ்சரித்தான். அப்போது ஒரு துறவி அவனிடம் ஒரு நெல்லிக்கனியைத் தந்து, இதை உண்டால் நெடுங்காலம் வாழலாம் என்று ஆசீர்வதித்தார். அதை வாங்கிய அதியமான் தான் நீண்ட காலம் வாழ்வதை விட தமிழ்ப் பாக்களை அள்ளித் தரும் ஔவையாருக்கு அதைத் தந்தால் இன்னும் நிறைய தமிழ்ச் செல்வத்தை தமிழகம் பெறுமே என்று ஔவையாருக்கு அதைத் தந்தான். இதை அறிந்த மக்கள் அவனது தமிழ் நெஞ்சத்தை வாழ்த்தினர்.
கொங்குமண்டலத்தில் அமைந்துள்ள சேலம், நாமக்கல், ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகள் வளம் வாய்ந்தவை. நாமக்கல்தலில் இருந்து 55 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கொல்லிமலையில் உள்ள கொல்லிப்பாவை கோவில் 15000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சித்தர்கள் கூறுகின்றனர். இங்கு உயரமான சிகரங்கள் உள்ளன. ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி 600 அடி உயரத்திலிருந்து விழுகிறது. கொல்லி மலைப் பகுதியை ஆண்டு வந்த மன்னன் ஓரி, தமிழை வளர்ப்போர்க்கு அள்ளி அள்ளித் தந்து வள்ளல்களில் புகழ் பெற்றவனாகத் திகழ்ந்தான்.
இன்று நாம் பழனி என்று வழங்கி வரும் முருகனின் திருத்தலம் பழைய காலத்தில் வையாபுரி என்று வழங்கப்பட்டு வந்தது. நாடெங்கிலுமிருந்து முருகனின் அருள் வேண்டி பக்தர்கள் கூட்டம் அன்றிலிருந்து இன்று வரை இங்கு திரண்டு வருகிறது.
இயல்பாகவே கருணை வாய்ந்த உள்ளம் கொண்ட மக்கள் இப்பகுதி மக்கள். இதை நிரூபிக்கும் ஒரு சம்பவத்தை நம் இலக்கியம் கூறுகிறது. பேகன் என்ற மன்னன் இப்பகுதியை ஆண்டு வந்தான். ஒருநாள் மலை வழியே அவன் சென்று கொண்டிருந்தபோது தோகை விரித்து ஆடும் மயில் ஒன்று குளிருக்கு ஆற்றாமல் வருந்துவதைக் கண்டான். உடனே தன் மேல் போர்த்தியிருந்த போர்வையை எடுத்து அதற்குப் போர்த்தி மகிழ்ந்தான். இதை அறிந்த மக்கள் அவனை வெகுவாகப் போற்றினர். கடையெழு வள்ளல்களில் ஒருவனாக அவன் திகழ்ந்தான்.
தொல்காப்பியத்தை சுருக்கமாக எளிய தமிழில் அனைவரும் பயனுறும் வகையில் ஒரு நூலை இயற்ற வேண்டும் என்று தமிழ் மக்கள் அனைவரும் விரும்பினர். இதை கொங்குமண்டல மக்கள் வேண்டிக் கேட்கவே பவணந்தி முனிவர் நன்னூல் என்னும் அருமையான இலக்கண நூலை இயற்றினார்.
திருச்செங்கோட்டைச் சேர்ந்த வீரபத்திரன் என்ற புலவர் கொங்குமண்டலத்தில் காரையூர் சென்று சர்க்கரை என்ற வள்ளலைச் சந்தித்தார். அவரை வரவேற்று உள்ளே சென்று சர்க்கரையார் மனைவியுடன் பேசினார். அவர் மீண்டும் திரும்பி வந்து பார்க்கையில் புலவரைக் காணோம். சரியாக உபசரிக்கவில்லை என்ற எண்ணத்துடன் புலவர் இருப்பதை அறிந்த சர்க்கரை அப்படி ஒரு எண்ணம் தமக்கு இல்லை என்றார். இருந்தாலும் புலவரின் திருப்திக்காக கொதிக்கும் நெய்யில் கையை விட்டுத் தன்னை நிரூபித்தார்.
கொங்கு புலவர் சபையின் மாண்பு மகத்தானது.
இப்படி தமிழுக்காக உயிர் வாழ்ந்த, உயிர் வாழும் மண்டலம் தான் கொங்கு மண்டலம்.
பிரம்மாவின் கர்வத்தை அடக்க சிவபிரான், காமதேனுவிடம் படைப்புத் தொழிலை அளிக்க காமதேனு அதை மேற்கொண்டு பிரம்மாவின் கர்வத்தை ஒடுக்கியது. இதை விளக்கும் திருத்தலம் கருவூர் ஆநிலை என்னும் வெண்ணெய் மலை சூழ்ந்த கருவூர் தலமாகும்.
முதலை வாய் அகப்பட்டு மாண்ட சிறுவனை மூன்று வயது வளர்ச்சியுடன் ஏழு வயதுச் சிறுவனாக குளத்திலிருந்து ஒரு பாடலைப் பாடி மீட்டார் சுந்தரர். இந்த ஐதீகத் திருவிழா இன்றளவும் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வருகிறது.
சங்ககிரி துர்க்கத்தில் எம்பெருமான் என்ற கவிராயர் இராமாயணத்தை அற்புதமாக ஆங்காங்கே சொல்லி வந்தார். இதை இசை நூலாக ஆக்கினால் அனைவரும் இன்பம் பயப்பர் என்ற கருத்து உருவானது. அப்போது கீழ்கரைப் பூந்துறை நாட்டை மோரூரில் இருந்து ஆண்டு வந்த நல்லதம்பிக் காங்கேயன் அவரை அணுகி இசை இராமாயணத்தை இயற்றுமாறு வேண்டினான். அவரும் உடனே கோட்டையுள் இருந்த வரதராஜப் பெருமாள் சந்நிதியை அடைந்து வேண்டினார். உலகமாதா என்ற சொல் ஒலிக்க உடனே அந்தச் சொல்லுடன் அவர் தக்கை இசையால் இராமாயணத்தை இயற்றினார். ஆறு காண்டம் கொண்ட அபூர்வமான இந்த நூல் வெண்பா, தக்கை, ஒற்றை இரட்டை என்னும் குடகம் முதலிய வரிப்பாட்டுகள் உள்ளிட்டவற்றைக் கொண்டதாகும்.
இங்குள்ள நீலகிரி மலை உலகின் அற்புதமான மலைகளுள் ஒன்று. மூலிகை வளம் கொட்டிக் கிடக்கும் மலைத் தொடர் இது. இங்கும் கொல்லி மலையிலும் ஏராளமான சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். வாழ்ந்து வருகின்றனர்.
சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல பகுதிகள் நெசவுத் தொழிலுக்குப் பெயர் பெற்ற பகுதிகளாகும். திருப்பூரில் உருவாகும் ஜவுளிப் படைப்புகள் உலக அரங்கில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தியாவின் மான்செஸ்டர் என்ற பெயரைக் கொண்டு விளங்கும் கோயம்புத்தூர் ஜவுளி உற்பத்தியில் தனி இடத்தைப் பெறுகிறது. அதி நவீனத் தொழில்நுட்பத்தைப் போதிக்கும் கல்லூரிகள் ஒரு புறம் என்றால் அந்தக் கல்வியைச் செயல் வடிவத்தில் காட்டும் தொழிலகங்கள் இங்கு ஏராளம். மென்பொருள் உற்பத்தியிலும் வாகனங்களின் உதிரி பாகங்கள் தயாரிப்பிலும் முன்னணியில் கோவை இருக்கிறது. அது மட்டுமின்றி அறிஞர்கள் அனைவரும் வியக்கும் வண்ணம் பல படைப்புகளைச் செய்து காட்டிய ஜி.டி.நாயுடு அவர்களை தமிழகம் மறக்க முடியுமா?
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் உலகில் உள்ள அனைவரையும் ஈர்க்கும் ஒரு கோடைவாசஸ்தலமாகும். இயற்கையின் எழிலை ரசிக்கவும், கோடையின் உக்கிரத்திலிருந்து தப்பிக்கவும் ஆயிரக் கணக்கில் இங்கு மக்கள் திரளுகின்றனர்.
கொங்கு மண்டலத்தில் உள்ள விஜயமங்கலத்தில் பிறந்த கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்குமண்டல சதகத்தில் உள்ள நூறு பாடல்களையும் படித்தால் அந்த மண்டலத்தின் பெருமையைக் கண்டு பிரமிப்போம். தமிழர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய நூல் இது.
இப்படி தமிழ் வளர்ச்சி, தமிழர் தம் கலை, இலக்கியம், பண்பாடு, ஆன்மீகம், அறிவியல் தொழில்நுட்பம் ஆகிய அனைத்தையும் வளர்த்த, வளர்த்து வரும் கொங்கு மண்டலத்தின் புகழ் எங்கும் பரவுவதில் வியப்பேது?
**