பெருமை மிகு தமிழகத்தில் சோழ மண்டலம்! (Post No.15,693)

 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,693

Date uploaded in London – 4 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மாலைமலர் 30-4-26 தேதியிட்ட இதழ் விளம்பர மலர் சிறப்பிதழாக வெளி வந்தது. பெருமை மிகு தமிழகம் என்பதை மையப்பொருளாகக் கொண்ட அந்த சிறப்பிதழில் பெருமை மிகு தமிழகத்தில் பாண்டிய மண்டலம், சோழ மண்டலம், கொங்கு மண்டலம், பல்லவ மண்டலம் என நான்கு சிறப்புக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றை இங்கு ஒவ்வொன்றாகக் காணலாம்.

பாண்டிய மண்டலத்தைத் தொடர்ந்து இப்போது சோழ மண்டலம் வெளீயாகிறது. 

பெருமை மிகு தமிழகத்தில் சோழ மண்டலம்! 

ச. நாகராஜன்

 தமிழகத்தில் அனைவரும் தொழுதுண்டு செல்லும் ஒரு பகுதியைக் காண்பியுங்கள் என்றால் பச்சைபசேலென எங்கு நோக்கினும் திகழும் அற்புதமான வயல்களைக் கொண்டுள்ள சோழ மண்டலத்தையே அனைவரும் சுட்டிக் காட்டுவர்.

சோழநாடு சோறுடைத்து என்பது முதுமொழி.

உழுதுண்டு அனைவருக்கும் அமுது படைக்கும் தஞ்சைப் பகுதியை அனைவரும் தொழுதுண்டு பின் செல்வதில் வியப்பே இல்லை.

 வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரியின் பெருமையை சங்க இலக்கியம் முதல் இன்றைய திரைப்படப் பாடல் வரை முழங்குகிறது.

 காலம் காலமாக வணிகத்திலே சிறந்து விளங்கிய பூம்புகார் துறைமுகம் பற்றிய வியத்தகும் செய்திகளை இலக்கியத்தில் காண்கிறோம். கலைகளின் தாயகமாக விளங்கி, இந்திர விழா முதல் பல்வேறு விழாக்களைக் கண்ட சோழ மண்டல நகர்கள் தமிழகத்தின் பெருமையைச் சேர்க்கும் இடங்களாகும்.

 வீரத்தின் விளைநிலமாய்த் திகழ்ந்து உலகம் வியக்கும் மன்னர்களெனத் திகழ்ந்த இராஜராஜன் மற்றும் ராஜேந்திர சோழன் பற்றியும் கரிகால் வளவன் பற்றியும் வரலாறு பிரமிப்புடன் விளக்குகிறது.

 கட்டிடக் கலையின் உச்சமாக ராஜராஜன் அமைத்த பெரியகோவில் தஞ்சையில் திகழும் போது, கடல் கடந்து சென்று ராஜேந்திர சோழன் வென்ற நாடுகள் அவனது தீரம், வீரம், கடற்படை நுட்பம், தொழில்துறையில் மேலோங்கி நின்ற தகைமை ஆகியவற்றைப் பறை சாற்றுகின்றன.

சீர்காழியில் அவதரித்து சிவபிரானின் எல்லையற்ற மகிமையை ஆயிரக் கணக்கில் தேவாரப் பாடல்களாகப் பொழிந்த ஞான சம்பந்தரின் திருமுறைகள் தமிழுக்குத் தெய்வ மாண்பைத் தருபவை.

 பிரபஞ்சத்தின் மர்மத்தை விளக்கும் சிதம்பரத் திருத்தலம் எல்லையில்லாப் பெருமையைக் கொண்ட ஆதித் திருத்தலமாகும்.

நடராஜரின் தாண்டவம் பிரபஞ்ச மர்மத்தை விளக்குகிறது என்பதை அறிந்த பிரபல விஞ்ஞானியான கார்ல் சகன் நேரடியாக மனைவியுடனும் தன் படப்பிடிப்பினருடனும் சிதம்பரம் வந்தார். அறிவியல் கூறும் பிரபஞ்சத்தின் ஆரம்பத் தோற்றமும் இந்துமதம் கூறும் வரலாறும் அதிசயிக்கத்தக்க விதத்தில் ஒத்துப் போவதை ஆராய்ந்த அவர் சிதம்பரம் நடராஜரை பிரபலமான தன் காஸ்மாஸ் தொடரில் ஒரு எபிசொடில் காட்டி மகிழ்ந்தார். அமெரிக்காவின் பிரபலமான தொடர் இது என்பது குறிப்பிடத்தகுந்தது,

 ‘காட் பார்டிகிள்’ எனப்படும் கடவுள் துகளை ஆராயும் செர்ன் ஆய்வுக் கூடம் ஸ்விட்சர்லாந்தில் ஜெனிவா அருகே உள்ளது. இந்த நிறுவனத்திற்கு இந்திய அரசு கடவுள் மர்மத்தை விளக்கும் நடராஜரின் திருவுருவச் சிலையை அன்பளிப்பாக வழங்கியது. அது உலகின் இந்த பிரபல ஆய்வுக்கூடத்தின் முகப்பில் நிறுவப்பட்டிருக்கிறது.

உலகையெல்லாம் மயக்கும் இசையின் ஆணிவேராகத் திகழ்ந்து கீர்த்தனைகளைத் தந்த கர்நாடக இசையின் மும்மூர்த்திகளான தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீக்ஷிதர் ஆகியோர் பிறந்த திருவாரூர் மண்ணின் சிறப்பே சிறப்பு. அங்குள்ள கோவிலின் பிரமிப்பூட்டும் வரலாறும் கமலாலயக் குளத்தின் அழகும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை.

ஊழியின் போது அழியாமல் நின்ற மகாமகக் குளம் கும்பகோணத்தின் பெருமையை உயர்த்தும் போது அந்தப் பகுதியில் அமைந்துள்ள சைவ, வைணவ, சக்தி ஸ்தலங்களும் நவகிரக தலங்களும் லட்சக் கணக்கான பக்தர்களை ஈர்த்து அவர்களின் வாழ்வை மேம்படுத்துகின்றன.

 சோழமண்டலத்தில் அமைந்துள்ள திருவாவடுதுறை ஆதீனம், தர்மபுர ஆதீனம், திருப்பனந்தாள் உள்ளிட்ட சைவ மடங்கள் சைவ சமயத்தை மேம்படுத்தும் வரலாறைச் சுட்டிக் காட்டும் மடங்களாகும்.

 இது ஒரு புறமிருக்க என்றும் நிலைத்திருக்கும் மகா காவியமான இராமாயணத்தைத் தமிழிலே பத்தாயிரம் பாடல்களாகப் பாடி உலகையே கொள்ளை கொண்ட கம்பனது பூமியும் சோழ பூமி தான்.

தேரழுந்தூரில் வாழ்ந்து அனைத்து அறிஞர்களையும் தன் பக்கம் பார்க்க வைத்த கம்பனின் சொற்களுக்கு ஈடு இணை இல்லை என்பது அறிஞர்களின் கருத்தாகும்.

சொல் கண்டார் சொல்லே கண்டார்சொல்லினுட் சொலிக்கும் ஞான

எல் கண்டார் எல்லே கண்டார்இனிமையோடிகலுஞ் சந்த

மல் கண்டார் மல்லே கண்டார்மகிழ்கவித் துறைகை போய

வல் கண்ட புலவர் யாரிவ் வரகவி முடியக் கண்டார்?!!!

 என்பார் கம்பனை அணு அணுவாக ரசித்த கம்ப ரசிகர் கவிஞர் கே.என். சிவராஜ பிள்ளை.

 கம்பனைப் போல பத்து மடங்காக, ஒரு லட்சம் பாடல்களைப் பாடி பத்துக் கம்பன் என்று பெயர் பெற்ற மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் எண்ணற்ற நூல்கள் தமிழ் மொழிக்குப் பெருமை சேர்ப்பவையாகும். இவரது சீடராக மிளிர்ந்து தமிழ் நூல்கள் அடங்கிய ஓலைச் சுவடிகளை கிராமம் கிராமமாகத் தேடி அலைந்து சேகரித்து அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம் உள்ளிட்ட எண்ணற்ற அரும் தமிழ் நூல்களைப் பதிப்பித்து தமிழின் எல்லையற்ற பெருமையை உணர்த்திய மகாமகோபாத்தியாய உ.வே.சுவாமிநாதையரின் பெருமையும் தனி தான்!

 திருச்சி மலைக்கோட்டையின் மாண்பை ரசிப்பதோடு அங்குள்ள அதி நவீன தொழில்நுட்பத்தைப் பறைசாற்றும் பிரம்மாண்டமான தொழிலகங்களையும் காண முடியும்.

 அன்னை அகிலாண்டேஸ்வரி, சுவாமிமலை முருகன், வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதன் என்று அனைவருக்கும் அருள் பாலிக்கும் தெய்வங்கள் கோவில் கொண்டிருக்கும் இடங்கள் சோழ மண்டலத்தில் எண்ணற்றவை.

 கடலூர் மாவட்டத்தில் உள்ள திருமுனைப்பாடியில் அவதரித்து சைவ சமய மேன்மையைப் பறைசாற்றிய அப்பர் தேவார மூவருள் இரண்டாமவர் ஆவார். இவர் இயற்றி அருளியுள்ள தேன் சொட்டும் தேவாரப் பாடல்கள் இன்றும் கோவில்களில் ஓதப்படுவது கண்கூடு.

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்யஞானசபை பல்லாயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் சித்த பூமியாக விளங்குகிறது. ராமலிங்க ஸ்வாமிகள் என்று ஆரம்பத்தில் அறியப்பட்ட வடலூர் வள்ளலார் சமரச சன்மார்க்கத்தை உலகிற்குக் காட்டினார். தன் அறையின் உள்ளே சென்று தாழிட்டுக் கொண்ட அவர் உடலுடன் மறைந்தார் என்பது உலகையே ஆச்சரியப்பட வைத்தது. பிரிட்டிஷார் ஆண்ட காலத்தில், அரசின் உயர் அதிகாரி இதை ஆய்வு செய்து இது உண்மை தான் என்பதை ஆவணப்படுத்தியுள்ளார். ஆயிரக் கணக்கான பாடல்களை அருள் மழையாகப் பொழிந்து திரு அருட்பாவை உலகிற்குத் தந்து சாகாப் பெருநெறியைக் காட்டியவர் வள்ளலார் பெருமான்.

 தஞ்சாவூர் மற்றும் கடலூர் பகுதியில் உள்ள மண்வளம் இயற்கை தாதுக்கள் நிரம்பியது என்பது கடைசியாக அறிவியல் தரும் அற்புதச் செய்தி!

 வேளூர் ஆத்மநாத தேசிகரால் இயற்றப்பட்ட சோழமண்டல சதகத்தில் உள்ள நூறு பாடல்களும் தமிழகத்தில் சோழமண்டலம் கொண்டிருக்கும் பெருமையைப் பறை சாற்றுபவை.

 இப்படி தமிழுக்கு ஏற்றம் தந்து கலை, இலக்கியம், பண்பாடு, ஆன்மீகம், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தொழிலகங்கள் என அனைத்திலும் சிறந்து விளங்கும் சோழ மண்டலம் பெருமை மிகு தமிழகத்தின் சிறப்பான மண்டலம் அல்லவா!

***

Leave a comment

Leave a comment