WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,702
Date uploaded in London – 6 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மாலைமலர் 30-4-26 தேதியிட்ட இதழ் விளம்பர மலர் சிறப்பிதழாக வெளி வந்தது. பெருமை மிகு தமிழகம் என்பதை மையப்பொருளாகக் கொண்ட அந்த சிறப்பிதழில் பெருமை மிகு தமிழகத்தில் பாண்டிய மண்டலம், சோழ மண்டலம், கொங்கு மண்டலம், பல்லவ மண்டலம் என நான்கு சிறப்புக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றை இங்கு ஒவ்வொன்றாகக் காணலாம்.
பாண்டிய மண்டலம் சோழ மண்டலம் கொங்கு மண்டலத்தைத் தொடர்ந்து இப்போது கடைசி கட்டுரையான தொண்ட மண்டலம் வெளீயாகிறது.
பெருமை மிகு தமிழகத்தில் தொண்டமண்டலம்!
ச. நாகராஜன்
இறையனார் தலைமை வகித்து சங்கத் தமிழை வளர்த்ததை பாண்டி மண்டலம் விளக்குகிறது என்றால் தமிழ்ப் புலவன் பாயைச் சுருட்டு என்று சொன்னவுடன் திருமால் பாய் சுருட்டி செந்நாப் புலவனுடன் கிளம்பிய வரலாறைச் சொல்கிறது தொண்ட மண்டலம்.
‘கல்வியில் கரையிலாத காஞ்சி’ என்று அப்பர் பெருமானால் புகழப்பட்ட காஞ்சியின் பெருமை தான் என்னே!
திருமழிசை ஆழ்வாரின் சீடரான கனிகண்ணனை பல்லவ அரசன் தன்னைப் பாடுமாறு பணிக்க, கனிகண்ணன் மறுத்து விட்டான். இதனால் கோபமடைந்த அரசன் அவனை நாட்டை விட்டுப் போகுமாறு ஆணையிட்டான். இதை அறிந்த திருமழிசை ஆழ்வார் தானும் அங்கிருந்து கிளம்பலானார். தான் வழிபடும் தெய்வமாகிய மணிவண்ணன் மட்டும் ஏன் அங்கிருக்க வேண்டும் என்று எண்ணிய ஆழ்வார் காஞ்சிபுரத்தில் உள்ள திருவெக்கா கோவிலில் பாடினார் இப்படி:
கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டா – துணிவுடைய
செந்நாப் புலவன் யான் செல்கின்றேன் நீயும் உன்தன்
பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்i
திருமால் ஆதிசேஷன் என்ற தனது பாயைச் சுருட்டிக் கொண்டு கிளம்ப உலகமே திகைத்து அதிர்ந்தது. தன் தவறை உணர்ந்த மன்னன் ஆழ்வாரிடம் மன்னிப்புக் கேட்க, மனம் இரங்கிய ஆழ்வார்
கணிகண்ணன் போக்கொழிந்தான்! காமரு பூங்கச்சி
மணிவண்ணா! நீ கிடக்கவேண்டும்! – துணிவுடைய
செந்நாப் புலவனும் செலவொழிந்தான், நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்படுத்துக் கொள்!!
என்று பாட திருமால் தன் இருப்பிடம் வந்து அனைவருக்கும் அருள் பாலிக்க ஆரம்பித்தார். சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என்ற பெயரையும் பெற்றார். தமிழ்ப் புலவனின் ஆற்றலை உலகம் உணர்ந்து கொண்டது.
திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தவரே.
கந்தபுராணத்தை இயற்றிய கச்சியப்ப சிவாசாரியார் காஞ்சிபுரத்தில்
அவதரித்தவர். குமரகோட்டத்தில் உள்ள முருகப் பெருமானின் அருளாணையுடன் அதை அவர் இயற்றினார். 10345 பாடல்கள் கொண்ட இந்த நூலுக்கு முருகப் பெருமானே ‘திகடச் சக்கரச் செம்முகம்’ என்று அடி எடுத்துக் கொடுத்தார் என்பது வரலாறாகும்.
இன்னும் ஆதிசங்கரர் நிறுவிய காஞ்சி காமகோடி பீடம் இந்து மதத்தின் ஏற்றத்தைப் பறைசாற்றும் மடமாகும். சமீப காலத்தில் வாழ்ந்த இதன் 68வது பீடாதிபதி மகா பெரியவர் என்று உலகோரால் கொண்டாடப்பட்டார். இவர் அருளாசியைப் பெற கிரீஸ் ராணி உள்ளிட்ட மேலை நாட்டோரும் வருவது வழக்கமானது.
காஞ்சிபுரம் பட்டு சேலைகள், வேஷ்டிகளுக்கும் கைவினைப் பொருள்களுக்கும் பெயர் பெற்ற இடமாகும்.
14ம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும் முருக பக்தர் அருணகிரிநாதர் ஆவார். இவர் 16000 திருப்புகழ் பாடல்களைப் பாடினார். நமக்கு இன்று
கிடைத்திருப்பது 1334 பாடல்கள் மட்டுமே. இவர் திருவண்ணாமலை
அண்ணாமலையார் கோவிலில் வாழ்ந்து முருகன் அருளால் பாடல்களை இயற்றினார். ‘யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர்
தந்ததனால்’ என்ற இவரது வார்த்தைகளால் முருகனே இவரைப்
பாடல்களை இயற்ற வைத்தான் என்பது தெளிவு.
திருவண்ணாமலையில் அருளாட்சி புரிந்த ரமண மகரிஷியை உலகம் முழுவதும் போற்றியது. மேலைநாடுகளிலிருந்து ஏராளமானோர்
ரமணாசிரமம் வந்து இவரை தரிசித்து அருள் பெற்றனர். குறிப்பாக பால் பிரண்டன் எழுதிய ‘எ செர்ச் இன் சீக்ரட் இண்டியா’ என்ற நூல் இவரது அருமைகளைக் கூற உலகமே இவர் பால் ஈர்க்கப்பட்டது.
இன்னும் திருவண்ணாமலையில் சேஷாத்ரி ஸ்வாமிகள் உள்ளிட்ட ஏராளமான சித்தர்கள் வாழ்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
காஞ்சி வீரத்தின் விளை நிலமாகும். இங்கிருந்து ஆண்ட பல்லவ மன்னர்கள் உலகளாவிய அளவில் புகழ் பெற்றனர். மாமல்லன் என்று அழைக்கப்பட்ட பெரும் வீரன் மாமல்லபுரத்தில் அற்புதமான சிற்பங்களை வடிக்கச் செய்தான். இன்றளவும் அந்த அற்புதச் சிற்பங்களைக் காண உலகெங்குமிருந்து மக்கள் வருகின்றனர். அதன் பெருமையைப் பறை சாற்றுகின்றனர்.
தொண்ட மண்டலத்தில் உள்ள புலியூர் கோட்டத்தில் உள்ள குன்றத்தூரில் பிறந்த தெய்வப் புலவர் சேக்கிழார் 63 நாயன்மார்களின் வரலாற்றை பெரிய புராணம் என்ற நூலாக வடித்தார். தில்லையில் உலகெலாம் என்ற வார்த்தையை ஒலித்து இறைவனே நூலுக்கு அடி எடுத்துக் கொடுத்தான். இரண்டாம் குலோத்துங்க சோழனின் அமைச்சராக இவர் விளங்கிப் பெருமை பெற்றார். குன்றத்தூர் சென்னையின் புறநகர்ப் பகுதியாக போரூர் அருகே உள்ள ஊராகும்.
சென்னையின் புகழ் அதன் பல்வேறு துறை விற்பன்னர்களால் உலகம் முழுவதும் பரவிய ஒன்று.
கணினி சார் துறைகளைச் சேர்ந்த ஏராளமான நிறுவனங்கள், வாகனக்
கட்டுமான உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள்,
ரயில் பெட்டிகளின் வடிவாக்கத் தொழிலகம், கிரிக்கெட், செஸ் உள்ளிட்ட விளையாட்டுகளில் உலகப் புகழ் பெற்ற வீரர்கள்… இப்படி சென்னையின் புகழ் பட்டியல் நீண்ட ஒன்று.
ஆயிரக் கணக்கான தமிழ் திரைப்படங்களை உருவாக்கிய சென்னை மாநகரம் ஆயிரக்கணக்கான திரைத்துறை சார்ந்த கலைஞர்களை உருவாக்கிய நகரமாகும். இசை, நடனம், நடிப்பு, கதை, வசனம், கேமரா உத்தி, வண்ணச் சேர்க்கை, உடை அலங்காரம் என அனைத்துப் பகுதிகளிலும் தன் முத்திரையைப் பதித்த துறை சென்னையின் திரைப்படத் துறையாகும்.
உலகின் ஆகப் பெரிய கடற்கரைகளுள் இரண்டாவது இடத்தைக் கொண்டிருக்கும் மரீனா பீச் உலக பயணிகள் அனைவருக்கும் உற்சாகம் தரும் ஒரு கடற்கரையாகும்.
இது இந்திய சுதந்திரப் போரில் லட்சக் கணக்கான மக்களுக்கு விழிப்பூட்டும் மையமாகத் திகழ்ந்தது. இங்கு கூட்டங்களில் பேசாத தேசீயத் தலைவர்களே இல்லை எனலாம்.
திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருத்தணி அறுபடை வீடுகளில் ஒன்றாகும். இங்கு நடக்கும் படித்திருவிழா முருக பக்தர்களை ஆயிரக்கணக்கில் ஈர்க்கும் மாபெரும் விழாவாகும்.
தொண்டமண்டலத்தில் உள்ள செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம் , இராணிப்பேட்டை உள்ள மாவட்டங்கள் ஒவ்வொன்றும் தனித்தனி புகழ் பெற்றவையாகும். விரிப்பின் பெருகும்.
படிக்காசுப் புலவர் எழுதிய தொண்டைமண்டல சதகம் நூலில் உள்ள 100 பாடல்களையும் படித்து இதன் அருமை பெருமைகளை அறியலாம்.
இராமலிங்க சுவாமிகள் தொண்டைமண்டல சதகம் பற்றிய ஒரு ஆய்வுக் கட்டுரையையே எழுதியுள்ளார். தனது ஆய்வின் முடிவில் அவர் தொண்டை மண்டல சதகம் என்பது சரியல்ல தொண்டமண்டல சதகம் என்ற பெயரே சரி என்று நிறுவி இருக்கிறார்.
இப்படிப் பெருமை மிகு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சிற்றூரும், பெரும் நகரமும் தமிழகத்தின் காலம் வென்ற சரித்திரத்தையும், பண்பாட்டையும், கலை உணர்வையும், வீரத்தையும், தேசீயப் பற்றையும். இலக்கிய வளத்தையும், காலத்திற்கேற்ற அதி நவீன அறிவியல் முன்னேற்றத்தையும் வெளிப்படுத்துவதைக் காணலாம்.
பெருமை மிகு தமிழகத்தின் பெருமைகளை முற்றிலுமாகச் சொல்ல முடியுமா என்ன?
வாழ்க தமிழ், வாழிய தமிழர், வாழிய பழம் பெரும் தமிழ்நாடு!
***