Written by London Swaminathan
Post No. 15,703
Date uploaded in London –6 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திரு இந்தளூர்
திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் பெருமாள் கோயில், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திவ்ய தேசங்களில் 26-வது தலமாகும். இத்தலத்தைப் பற்றி திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் 10 பாசுரங்களை (1852-1861) பாடியுள்ளார்.
பாசுரங்களின் சிறப்பம்சங்கள்:
· பரிமள ரங்கநாதர்: மது, கைடபர் என்ற அசுரர்களை அழித்து, வேதங்களை மீட்டதால், பெருமாளுக்கு ‘பரிமள ரங்கநாதர்’ என்று பெயர்.
· திருமங்கையாழ்வார் பாசுரம்: “சிந்தை தன்னுள் முந்தி நிற்றிர், சிறிதும் திருமேனி, இந்த வண்ணம் என்று காட்டீர் இந்தளூரீரே!” என்று ஆழ்வார், அந்தந்த யுகத்தில் வெவ்வேறு நிறத்தில் இருந்த பெருமாளின் திருமேனி அழகை இந்தளூரில் காட்டி அருளுமாறு பாடியுள்ளார்.
· பஞ்சரங்க தலம்: இது பஞ்சரங்க தலங்களில் ஒன்றாகும்.
· சந்திரனின் தவம்: சந்திரன் தன் சாபம் நீங்க இத்தலத்தில் தவம் புரிந்து பயன் பெற்றான்.
திருமங்கையாழ்வார் பாடிய பாசுரங்கள், பரிமள ரங்கநாதரின் அழகையும், இத்தலத்தின் பெருமையையும் எடுத்துரைக்கின்றன.
எம்பெருமான் திருவடிவம் திருவரங்கத்தைக் காட்டிலும் பெரிது! 12 அடி X 6 அடி;முழுதும் பச்சைக் கல்லில் ஆனது!
பட்டுப் பீதாம்பரத்தின் மடிப்புகளும், கை விரல் நகங்களும் தெரியும் அளவுக்கு நுணுக்கமாகச் செய்யப்பட்டிருப்பதை, ஆரத்தியின் போது காணலாம்!
பஞ்ச ரங்க தலங்களுள் என்று சொல்வார்கள்!
1. திருவரங்கம் = கஸ்தூரி ரங்கன் = பெரிய பெருமாள்
2. குடந்தை = ஹேம ரங்கன் = ஆராவமுதன்
3. திரு இந்தளூர் = பரிமள ரங்கன் = மருவினிய மைந்தன்
4. கோவிலடி = அப்பால ரங்கன் = அப்பக் குடத்தான்
5. மைசூர்-ஸ்ரீ ரங்கப் பட்டினம் = ஆதி ரங்கன் = ரங்கநாத சுவாமி
* ஆதி ரங்கம் = திருவரங்கம் / * மத்ய ரங்கம் = திருக் குடந்தை / * அந்த ரங்கம் = மயிலாடு துறை (திரு இந்தளூர்) – என்பதும் இன்னொரு வழக்கு!
சந்திரன் (இந்து) செய்த குற்றங்களை நீக்கி, அவனுடைய பிராயச்சித்தம் என்னும் கழுவாயை ஏற்று, சாபம் தீர்த்ததால், இந்தளூர்!
***
திரு இந்தளூர் பாசுரங்கள்
சொல்லாது ஒழிய கில்லேன் அறிந்த சொல்லில்! நும் அடியார்
எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை!
நல்லார் அறிவீர், தீயார் அறிவீர், நமக்கு இவ்வுலகத்தில்,
எல்லாம் அறிவீர்! ஈதே அறியீர் இந்த ளூரீரே!
**
திருமங்கை ஆழ்வார் வந்த போது சந்நிதி சார்த்தப்பட்டதால் அவர் கோபத்தில் பாடிய நிந்தா ஸ்துதி.
ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காய்த்து; அடியோர்க்கு
தேசம் அறிய உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு,
காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர், எம்பெருமான்!
வாசி வல்லீர் இந்தளூரீரே! – வாழ்ந்தே போம் நீரே!
**
ஒவ்வொரு யுகத்திலும் திருமாலின் வண்ணம் மாறுபடுவதாக ஐதீகம். அதையும் ப்பாடுகிறார் ஆழ்வார் :
முன்னை வண்ணம் பாலின் வண்ணம், முழுதும் நிலைநின்ற,
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம், வண்ணம் எண்ணுங்கால்
பொன்னின் வண்ணம், மணியின் வண்ணம் புரையும் திருமேனி,
இன்ன வண்ணம் என்று காட்டீர், இந்தளூரீரே!
**
திருஇந்தளூர் பரிமள ரங்கநாதன் கோயில் மாட வீதியில் மிகப் புராதனமான ஹயக்ரீவர் சந்நிதி அமைந்துள்ளது. இங்கு ஸ்வாமி தேசிகனும் லட்சுமி ஹயக்ரீவரும் காட்சி தருகிறார்கள்.
சித்திரை மாதப்பிறப்பில் பெருமாள் வீதி புறப்பாடு, ஆவணியில் ஐந்து நாள் கண்ணன் புறப்பாடு, புரட்டாசி மாதத்தில் தாயாருக்கு நவராத்திரி உற்சவம், மார்கழியில் 20 நாள் வைகுண்ட ஏகாதசி உற்சவம், பங்குனி பத்து நாள் பிரம்மோற்சவம் சிறப்பாக கொண்டாடப்படும்.
—Subham—
Tags- திருஇந்தளூர், Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-15; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள்