
WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,718
Date uploaded in London – 10 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சப்தரிஷிகள் வரிசையில் இரண்டாவது ரிஷி!
பரமபூஜனீய ஶ்ரீ மாதவ சதாசிவ கோல்வல்கர் – பன்முகம் கொண்ட பண்பாளர் – சப்தரிஷிகளின் வரிசையில் இரண்டாவது ரிஷி!
ச. நாகராஜன்
இன்று பாரத தேசத்தில் நாட்டுப்பற்றும் சமூக சேவைக்கான அர்ப்பணிப்பு மனப்பான்மையும் கொண்ட ஆயிரமாயிரம் ஸ்வயம்சேவகர்களை உருவாக்கிய – உருவாக்கிவரும் அமைப்பு ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம்!
அற்புதமான இந்த அமைப்பை உருவாக்கியவர் பரமபூஜனீய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் அவர்கள்.
அவரைத் தொடர்ந்து சங்கப் பொறுப்பை ஏற்று அதை பாரத தேசத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இமயம் முதல் குமரி வரை பரவ வழி வகுத்தவர் பரமபூஜனீய ஶ்ரீ மாதவ சதாசிவ கோல்வல்கர்.
இவரது வாழ்க்கைச் சரிதம் அற்புதமான வியக்க வைக்கும் ஒரு சரித்திரமாகும்.
மஹாராஷ்ட்ரத்தில் கொங்கன் பகுதியில் உள்ள ஒரு கிராமம் கோல்வாலி கிராமம். இந்தக் கிராமத்தை பூர்வீமாகக் கொண்ட குடும்பத்தினர் கோல்வல்கர் என்று அழைக்கப்பட்டனர்.
காலப்போக்கில் இந்தக் குடும்பத்தினர் பல இடங்களுக்கும் இடம் பெயர்ந்தனர்.
இந்தக் குடும்பத்தின் வழி வந்த ஶ்ரீ சதாசிவ கோல்வல்கருக்கும் லட்சுமிபாய் அம்மையாருக்கும் நாக்பூரில் உள்ள ராய்கர் வீட்டில் பால்குண வருடம் விஜய ஏகாதசி தினத்தன்று – 1906ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் தேதி ஶ்ரீ குருஜி பிறந்தார்.
இவருக்கு மாதவன் என்ற பெயரிடப்பட்டது.
இளமையிலேயே கூரிய புத்தியையும் நினைவாற்றலையும் கொண்ட இவர் அனைவரையும் பிரமிக்க வைத்தார்.
1924ம் ஆண்டு ஹிந்து பல்கலைக் கழகத்தில் இண்டர்மீடியட்டில் தேர்ச்சி பெற்றார்.
பின்னர் எம் எஸ் சி விலங்கியலில் தேர்ச்சி பெற்று சிறிது காலம் சென்னை மீன் அருங்காட்சியகத்தில் பணி புரிந்தார்.
இயல்பாகவே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட இவர் ராமகிருஷ்ண மடத்தில் 1937ம் வருடம் ஜனவரி 13ம் நாளன்று ஸ்வாமி அகண்டானந்தரிடம் தீட்சை பெற்றார்.
1937ல் குரு அகண்டானந்தர் மறையவே சமூகப் பணியாற்ற நாக்பூர் திரும்பினார் குருஜி.
அங்கு சங்க ஸ்தாபகரான டாக்டர்ஜி இவரது அபாரமான பல்துறை அறிவையும், தேசத்தின் மீதுள்ள ஈடுபாட்டையும் கண்டு மகிழ்ந்து இவரை சங்கத்தில் படிப்படியாக பல்வேறு பொறுப்புகளில் அமர்த்தினார்.
இவரது நுண்ணறிவையும் சங்க வளர்ச்சிக்கு இவர் ஆற்றும் பணியையும் கண்ட டாக்டர்ஜி தனக்குப் பிறகு இவரே சங்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்த வல்லவர் என்று தீர்மானித்தார்.
1940ல் ஜூன் 21ம் நாளன்று டாக்டர்ஜி மறையவே 1940 ஜூலை 5ம் தேதி முதல் குருஜி சங்கத்தின் சர்சங்கசாலக்காக ஆனார்.
நாடு முழுவதும் இடைவிடாத பயணத்தை மேற்கொண்டு அற்புதமாக உரையாற்றி ஸ்வயம்சேவகர்களை உற்சாகப்படுத்தினார்.
தனது வாழ்க்கைமுறையாலேயே அனைவருக்கும் உத்வேகம் ஊட்டிய குருஜி தினமும் காலை 4-30 மணிக்கு எழுந்து சூரியநமஸ்காரம், உடல்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ரயில் வண்டியே எனது உறைவிடம் என்று கூறிய குருஜியின் பயணங்கள் சொல்லுக்கு அடங்காதவை.
காந்திஜி கொலையுண்டவுடன் சங்கத்தின் மீது வீண் பழி சுமத்தி சங்கம் தடை செய்யப்பட்டது. 1948 பிப்ரவரி முதல் தேதி அரசு அவரைக் கைது செய்தது. நாடு முழுவதும் சங்கத்தின் மீதான தடையை நீக்க வற்புறுத்தி அறிஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். 1949 ஜூலை 12ம் தேதி சங்கத்தின் மீதான தடை நீங்கியது. குருஜி ஜூலை 13ம் தேதி பேதுல் சிறையிலிருந்து விடுதலையானார்.
தொடர்ந்து விஸ்வஹிந்து பரிஷத், விவேகானந்த கேந்திரம், உட்பட்ட பல்வேறு அமைப்புகளை நிறுவ குருஜி ஊக்கமளித்தார். பாகிஸ்தான் போரின் போது பிரதமர் லால்பகாதூர் சாஸ்திரி அழைப்பின் பேரில் தேசத் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்றார்.
33 ஆண்டுகள் இடைவிடாப் பயணம் செய்து ஆர் எஸ் எஸ்ஸை பெரும் தேசிய சக்தியாக உருவாக்கிய இவரிடம் இவரது வாழ்க்கையின் மையக் கருத்தைக் கேட்ட போது இவர் கூறியது நான்கு வார்த்தைகளே தான் : ‘மை நஹி து ஹி’ (நான் அல்ல நீயே என்பது இதன் அர்த்தம்)
1973ம் ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி அவர் உடலை உகுத்தார். ஜூன் 6, நாள் மாலை அவரது இறுதிச் சடங்கில் நாடு முழுவதிலுமிருந்து வந்த பெரியோர்களும் ஸ்வயம்சேவகர்களும் குழுமி அவருக்கு இறுதி மரியாதையைச் செலுத்தினர்.
இந்த நூலில் அவரைப் பற்றிய வாழ்க்கை வரலாறு தரப்படுகிறது. அத்துடன் ஏராளமான சிறு சிறு சம்பவங்களும் சுவைபடத் தரப்பட்டுள்ளன ஏராளமான படங்கள் ஆர்ட் பேப்பரில் அச்சாகி இருப்பது குறிப்பிடத்தகுந்ததாகும்.
இந்த நூலைப் படிப்போர் குருஜியின் முழு வரலாற்றையும் படிக்க ஆவல் கொள்வர் என்பதில் ஐயமில்லை.
நூலைத் தொகுத்த திரு ஹரிஹரகோபாலன் நமது பாராட்டுக்குரியவராகிறார்.
சப்தரிஷிகளில் முதல் இரண்டு ரிஷிகளின் வரலாற்றைப் படித்தோர் அடுத்த ஐந்து ரிஷிகளைப் பற்றியும் படிக்க முனைப்புடன் முயல்வர் என்பதில் ஐயமில்லை.
விஜயபாரதம் பிரசுரமாக வெளியாகியுள்ள இந்தச் சிறிய புத்தகம் 40 பக்கங்களைக் கொண்டுள்ளது.
நூல் பற்றிய விவரங்களை அறிய நாட வேண்டிய முகவரி:
விஜயபாரதம் பிரஸ்
12. எம்.வி.நாயுடு தெரு
சேத்துப்பட்டு, சென்னை – 31
விலை பற்றிய விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்; (Whatsapp) 89391 49466
**