
WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,722
Date uploaded in London – 11 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சப்தரிஷிகள் வரிசையில் மூன்றாவது ரிஷி!

ஶ்ரீ ஏக்நாத் ரானடே – தீர்வு கண்ட தீரர் – சப்தரிஷிகளின் வரிசையில் மூன்றாவது ரிஷி!
ச. நாகராஜன்
இன்று பாரத தேசத்தில் நாட்டுப்பற்றும் சமூக சேவைக்கான அர்ப்பணிப்பு மனப்பான்மையும் கொண்ட ஆயிரமாயிரம் ஸ்வயம்சேவகர்களை உருவாக்கிய – உருவாக்கிவரும் அமைப்பு ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம்!
அற்புதமான இந்த அமைப்பை உருவாக்கியவர் பரமபூஜனீய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் அவர்கள்.
அவரைத் தொடர்ந்து சங்கப் பொறுப்பை பரம பூஜனீய ஶ்ரீ மாதவ சதாசிவகோல்வல்கர் ஏற்க சங்கத்தின் பொதுச் செயலாளராக 1956 முதல் 1962 வரை பொதுச் செயலாளராக இருந்து சங்கப் பணியை ஆற்றியவர்
ஶ்ரீ ஏக்நாத்ஜி ரானடே.
பல்வேறு எதிர்ப்புகளைச் சமாளித்து விவேகானந்தருக்கு கன்யாகுமரியில் விவேகானந்தர் பாறையில் பிரம்மாண்டமான நினைவுச் சின்னம் ஒன்றை உருவாக்கிய இவரது வாழ்க்கைச் சரிதம் அற்புதமான வியக்க வைக்கும் ஒரு சரித்திரமாகும்.
இந்த நூலில் அவரைப் பற்றிய பல்வேறு சம்பவங்கள் அவருடன் நெருக்கமாக இருந்து பணியாற்றியவர்களால் சுவைபட விவரிக்கப்பட்டுள்ளது.
நூலைத் தொகுத்து அளித்தவர் நாமக்கல்லைச் சேர்ந்த, சிறந்த ஸ்வயம்சேவகரான திரு ஹரிஹரகோபாலன்.
ஶ்ரீ ஏக்நாத்ஜி ரானடே.1914ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் நாளன்று மஹராஷ்டிர மாநிலத்தில் அமராவதி மாவட்டத்தில் திம்தலா என்ற கிராமத்தில் ஶ்ரீ ராமகிருஷ்ணராவுக்கும் ஶ்ரீமதி ரமாபாய் அம்மையாருக்கும் எட்டாவதும் கடைசி குழந்தையுமாகப் பிறந்தார்.
சிறுவயதிலேயே புத்திகூர்மையுடன் விளங்கிய ஏக்நாத் ஒழுக்கமும் கட்டுப்பாடும் கொண்டவராக இருந்து உயர்கல்வியை முடித்தார்.
1936ல் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தில் சேர்ந்தார். பின்னர் முழு நேர பிரசாரக்காக ஆனார்.
1956 முதல் சங்க சர்காரியவாஹ் பொறுப்பை ஏற்றார்.
சங்க விழா ஒன்றில் கருநாகம் ஒன்று மேடை அருகே தென்பட்டது. அதனைப் பற்றி அவர் சொல்ல விழைந்தாலோ அல்லது கொல்ல முயன்றாலோ பெரும் அமளி ஏற்பட்டிருக்கும். ஆனால் இவர் அந்த கருநாகத்தின் தலையைத் தன் காலின் கீழ் வைத்து அழுத்தி அப்படியே நின்று கொண்டார்.
மிகச் சிறந்த சொற்பொழிவாளரான ஏக்நாத் டயரி எழுதும் பழக்கம் உடையவர். குறிப்பிடத்தகுந்த முக்கிய உரையாடல்களை ஒரு சொல்லும் விடாமல் அப்படியே குறிப்பெடுக்கும் பழக்கம் அவரிடம் இருந்தது. 1963 ஜனவரி முதல் 1964 வரை ஸ்வாமி விவேகானந்தரின் நூற்றாண்டு விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
ஸ்வாமிஜி கன்யாகுமரியில் கடல் அருகே உள்ள பாறையில் அமர்ந்து தியானம் செய்து உத்வேகம் பெற்று அமெரிக்கா சென்று ஹிந்து மதத்தின் பெருமையை உலகெங்கும் பரப்பினார். அங்கு அவருக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்று கன்யாகுமரி மக்கள் விரும்பினர். நாடெங்கும் இதற்கு ஆதரவு பெருகிற்று.
இதைச் சரிவர அமைக்க ஒருவர் வேண்டுமே! சங்கத்திலிருந்து இதற்காக குருஜி கோல்வல்கர் ஏக்நாத்தை அனுப்பினார்.
விவேகானந்தர் நினவுச் சின்னம் ஆறு லட்சம் திட்ட மதிப்பீட்டில் ஆரம்பித்தது. ஆனால் ஏக்நாத் அவர்களின் தீவிர ஈடுபாட்டால் ஒரு கோடியே முப்பத்தைந்து லட்சம் ஆனது. ஒரு ரூபாய் நினைவுச் சின்ன நிதி திரட்டலை அவர் ஆரம்பித்தார். இதனால் நாடு முழுவதும் உள்ளவர்கள் இந்த தேசீய அஞ்சலித் திட்டத்தில் பங்கு கொண்டனர்.
கம்யூனிஸ்டான ஜோதிபாசு வங்க அரசின் சார்பில் 15 லட்ச ரூபாய் நிதியைத் தந்தார். காஷ்மீரிலிருந்தும் நிதி திரண்டது.
ஒரு சிலை மட்டும் நிறுவப்பட இருந்த திட்டம் பெரும் நினைவுச் சின்ன மண்டபம் நிறுவும் திட்டமாக ஆகி வெற்றி பெற்றது.
சில கத்தோலிக்கர்கள் இதை விரும்பவில்லை. அங்கு ஒரு சிலுவையை நிறுவி இதை சேவியர் பாறையாக ஆக்க முயன்றனர்.
ஆனால் சிலுவை உடைத்தெறியப்பட்டது. சத்தியம் வென்றது
அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த பக்தவத்ஸலத்தைச் சந்தித்து நினைவுச் சின்னத்தின் அவசியத்தை விளக்கினார் ஏக்நாத்ஜி.
பல வித எதிர்ப்புகளையும் தகர்த்து 1970ல் திறப்பு விழா நடைபெற்றது. தொடர்ந்து 1972ல் விவேகானந்த கேந்திரம் நிறுவப்பட்டது.
1982ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி அவர் உடலை உகுத்தார்.
இந்த நூலில் பாரத பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடி 9-11-2014 அன்று புது டில்லியில் நடைபெற்ற விழாவில் ஶ்ரீ ஏக்நாத் ரானடே பற்றி ஆற்றிய உரை இடம் பெற்ற்ள்ளது. திரு லட்சுமி நாராயணன், திரு ஆர்பிவி எஸ் மணியன் ஆகியோரின் நினைவலைகளும் பகிரப்பட்டுள்ளது.
ஏராளமான படங்கள் ஆர்ட் பேப்பரில் அச்சாகி இருப்பது குறிப்பிடத்தகுந்ததாகும்.
இந்த நூலைப் படிப்போர் ஶ்ரீ ஏக்நாத் ரானடேஜியின் முழு வரலாற்றையும் படிக்க ஆவல் கொள்வர் என்பதில் ஐயமில்லை.
நூலைத் தொகுத்த திரு ஹரிஹரகோபாலன் நமது பாராட்டுக்குரியவராகிறார்.
சப்தரிஷிகளில் முதல் மூன்று ரிஷிகளின் வரலாற்றைப் படித்தோர் அடுத்த நான்கு ரிஷிகளைப் பற்றியும் படிக்க முனைப்புடன் முயல்வர் என்பதில் ஐயமில்லை.
விஜயபாரதம் பிரசுரமாக வெளியாகியுள்ள இந்தச் சிறிய புத்தகம் 56 பக்கங்களைக் கொண்டுள்ளது.
நூல் பற்றிய விவரங்களை அறிய நாட வேண்டிய முகவரி:
விஜயபாரதம் பிரஸ்
12. எம்.வி.நாயுடு தெரு
சேத்துப்பட்டு, சென்னை – 31
விலை பற்றிய விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்; (Whatsapp) 89391 49466
**