Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-22;  திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,732)

Written by London Swaminathan

Post No. 15,732

Date uploaded in London –13 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருவஹீந்திரபுரம்

மூலவர்        தெய்வநாயகன் 

உத்ஸவர்       தேவ நாதன்,

தாயார்         ஹேமாம்புஜவல்லி தாயார் , வைகுண்ட நாயகி ,

திருக்கோலம்        நின்ற திருக்கோலம் 

திசை     கிழக்கு   

மங்களாசாசனம்      திருமங்கையாழ்வார் 10

ஸ்தல விருட்சம்: வில்வம்

கடலூரிலிருந்து பண்ருட்டி செல்லும் சாலையில் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த திவ்யதேசம்.

வஹீந்திரன் என்பது ஆதிசேஷனைக் குறிக்கும்  சொல். ஆதிசேஷனால் அமைக்கப்பட்ட கோவில் இது. அதனால் இது திருவஹீந்திரபுரம் என்றும், தமிழில் திருவந்திரபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. தற்போது இந்த ஊர் திருவந்திபுரம் என்றே அறியப்படுகிறது. இந்த திருத்தலம் இப்போது அயிந்தை என்று வழங்கப் படுகிறது.அருகில் இருந்த மலையில் பிரம்மா தவம் செய்ததால், ப்ரம்மாச்சலம் என்று கூறுவர்.  தேவர்களுக்குத் தலைவனாக இருந்து, எம்பெருமான் யுத்தம் செய்ததால், தேவநாதன் என்று திருநாமம் ஏற்பட்டது. தாயார் தேவர்களைக் காப்பாற்றுவதால் ஹேமாம்புஜவல்லி என்று திருநாமம்.

கிழே தேவநாதப் பெருமாளும், மலைக்கு மேலே லக்ஷ்மி ஹயக்ரீவரும் அருள் பாலிக்கிறார்கள்.

தேவர்களுக்காக விஷ்ணு போரிட்டபோது, அசுரர்கள் பக்கம் நின்று போர் செய்த சிவபெருமான் தன் சூலத்தை விஷ்ணுவின் மீது வீசினார். விஷ்ணு அதைத் தன் சக்கரத்தால் தடுத்து மும்மூர்த்திகளாகத் தன்னை சிவபெருமானுக்கு காட்டினார். அதனால் இந்தக் கோவில் உற்சவருக்கு மூவராகிய ஒருவன் என்ற பெயர்.

திருவஹீந்திரபுரம், கல்விக்கான அவதார மூர்த்தி ஹயக்ரீவப் பெருமாள் எழுந்தருளி இருப்பதாலும், ஆதிசேஷன் மற்றும் கருடனின் மகத்துவத்தாலும், வேதாந்த தேசிகன் என்ற ஆச்சார்யராலும் பெருமையும் சிறப்பும் பெற்றது. திருவஹிந்திரபுரம் நான்கு வேதங்களையும் சகல கலைகளையும் உலகிற்கு அளித்த பெருமாளைப் பெற்றது.

இந்த எம்பெருமானுக்கு தாஸ ஸத்யன், அச்சுதன்,   ஸ்த்ரஜ்யோதிஷ்,

அனகஞ்யோதிஷ்,    த்ரிமூர்த்தி என்று நாமங்கள் உண்டு.

இவற்றில் தாஸ ஸத்யன் என்பதை அடியார்க்கு மெய்யன் என்றும் ஸ்தரஜ்யோதிஷ் என்பதை மேவு சோதியன் என்றும் த்ரிமூர்த்தி என்பதை மூவராகிய ஒருவன் என்றும் திருமங்கையாழ்வார் தன் பாடல்களில் கூறி உள்ளார். கல்வெட்டுக்கள் இப்பெருமாளை நின்றருளிய மகாவிஷ்ணு என்றும் ஏழிசை நாதப் பெருமான் என்றும் குறிக்கின்றன. இவர் யுகம் கண்ட பெருமாள் என்றும் போற்றப் படுகிறார்.

தன்னிடமிருந்தே பிரம்மனும், சிவனும் தோன்றினர் என்பதை இப்பெருமான் உணர்த்துகிறார். பிரம்மனுக்கு அடையாளமான தாமரைப் பூவினை கையிலும் விஷ்ணுவுக்கு அடையாளமான சங்கு சக்கரங்களையும் சிவனுக்கு அடையாளமான நெற்றிக்கண்ணும், சடையும் கொண்டு இப்பெருமான் திகழ்கிறார் என்பர்.

கருடனால் உருவாக்கப்பட்ட கெடில நதி, தெற்கில் இருந்து வடக்காக ஓடுகிறது. ஆதிசேஷன் கொண்டு வந்த, பாதாளகங்கை தீர்த்தமும் கருடன் கொண்டு வந்த விரஜாநதி தீர்த்தமும் இந்த திருத்தலத்தில் உள்ளன. பாதாள கங்கை தீர்த்தம், எம்பெருமானின் நிவேதியத்திற்கும் விராஜா நதி தீர்த்தம் திருமஞ்சனத்திற்கும் எடுத்து கொள்ள படுகின்றன.

இங்கு நரசிம்மர், இராமபிரான், வேணுகோபாலன், சக்கரத்தாழ்வார், பள்ளிகொண்ட நாதர், ஆண்டாள், ஆழ்வார் என்று பல சன்னதிகள் உள்ளன.

வடமொழியில் தேவநாயக பஞ்சாசத் என்னும் ஸ்தோத்ரமும், அச்யுத சதகம் என்ற ஸ்தோத்ரங்கள் அடங்கிய நூலும் இத்தலத்தைப் பற்றி சிறப்பாக பேசுகின்றன.

***

ஹயக்ரீவர்

தெய்வநாயகன் சன்னதிக்கு எதிரே உயரமான பகுதியில் அமைந்துள்ள ஒளஷதகிரி என்று அழைக்கப் படும் ஒரு இடம் மிகவும் பிரசித்தமானது. ஶ்ரீஅனுமன் சஞ்சீவி பா்வதத்தைக் கொண்டு செல்லும் போது அதிலிருந்து விழுந்த ஒரு சிறிய பகுதியே இந்த “ஔஷத மலை” என்றுசொல்வர். அங்கு திருமாலின் அவதாரங்களில் ஒருவரான ஹயக்ரீவ பெருமாளுக்கு ஒரு திருக்கோவில் அமைந்துள்ளது. குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவப் பெருமாள் சகல வித்தைகளுக்கும் ஆதாரமாக இருப்பவர், அதாவது இவர் கல்விக் கடவுள். ஞானத்தையும் கல்வியையும் அள்ளி வழங்குபவர். ஆய கலைகள் 64-ஐயும் நமக்கு அருளும் சரஸ்வதியின் குரு ஹயக்ரீவர். மூலவர் லட்சுமி ஹயக்ரீவர்.

ஹயக்ரீவ பெருமாள், சந்திர மண்டலம் போல் வெளுத்த திருமேனியும் பஞ்சாயுதங்கள் ஏந்திய நான்கு திருக்கரங்களுடனும், குதிரை முகத்துடனும் நீண்ட காதுகளுடனும் வேதமாகிய அமுதம் நுரை தள்ளும் வாயும், கருணை பொங்கும் விழிகளும், பீதாம்பர ஆடை உடுத்தி, பெரிய பிராட்டியை திருமார்பில் கொண்ட திருக்கோலமும் கொண்டு உள்ளார்.

இந்த ஹயக்ரீவ மலைக்கு 74 படிகள், அவை ஸ்வாமி இராமானுஜர் ஏற்படுத்திய 74 சிம்மாசனாதிகளை குறிப்பதாகச் சொல்வர்.

கருடன் விரஜா நதி தீர்த்தத்தை வைகுண்டத்திலிருந்து கொண்டு வந்தார். கருடனால் கொண்டு வரப்பட்ட தீர்த்தமே இங்கு நதியாக மாறி கருட தீர்த்தமாகி, காலப்போக்கில் கெடில நதியாகப் பெயர் மாறி தற்போதும் ஓடிக்கொண்டு இருக்கிறது.

பிருகு மகரிஷி இந்த வனத்தில் தவம் செய்யும் போது மூன்று வயது பெண் குழந்தையை கண்டு எடுத்தார் என்றும், அந்த குழந்தை கடலை நோக்கி சிரித்துக்கொண்டே இருந்தது என்றும் அதனால் அந்த பெண் குழந்தைக்கு தரங்காநந்தினி என்று பெயர் சுட்டி வளர்த்து வந்தார். தரங்கம் என்றால் கடல் அலை, ஆனந்தினி என்றால் மகிழ்ச்சி அடைவாள் என்று பொருள். அவள் திருமண வயதை அடைந்தவுடன், எம்பெருமானுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார். எம்பெருமானும் ஏற்றுக்கொண்டார்.

வ்ருத்தாசுரன் மது, கைடபன் போன்ற அரக்கர் கதைகளுடன் தொடர்புடைய தலம் இது.

திருமங்கையாழ்வாரால் பத்துப் பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம்.

மணவாள மாமுனிகள் பன்முறை மங்களாசாசனம் செய்த தலம். இங்கு மணவாள மாமுனிகளுக்கு ஒரு அழகான கோவில் ஒன்று உள்ளது.

இன்றைக்கு சுமார் 750 வருடங்களுக்கு முன் பிறந்து, ஸ்வாமி ராமானுஜருக்கு பிறகு ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் “கவிதார்க்கிக சிம்மம்”, “சர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர்”, “வேதாந்ததாசரர்” என்று பல பட்டப் பெயர்களுடன் சிறப்பு பெற்றவர் தூப்புல் ஸ்ரீ வேதாந்த தேசிகன் என்ற ஆச்சாரியர்.

ஸ்ரீமாந் நிகாமந்த தேசிகர் இங்கே 40 ஆண்டுகாலம் எழுந்தருளியிருந்து வடகலை சம்பிரதாயத்திற்கு அரும் பெரும் தொண்டுகள் செய்து வளர்த்தார். சுவாமி தேசிகன் திருமாளிகையும், கிணறும் இங்கே உள்ளன.

சுவாமி தேசிகன், ஒளஷதகிரி என்ற திருத்தலத்தில், அச்வத்த மரத்தின் கீழ் அமர்ந்து கருட மந்திரத்தைகொண்டு தவம் புரிந்து, கருடனின் ஆசியை பெற்றார். கருடன், தேசிகனுக்கு காட்சி கொடுத்து, அவருக்கு ஹயக்ரீவ மந்திரத்தையும் சொல்லிக் கொடுத்தார். அதே இடத்தில, ஹயக்ரீவ மந்திரத்தைக் கொண்டு , மீண்டும் ஒரு கடுமையான தவம் புரிந்து, ஹயக்ரீவரின் அருளையும் பெற்றவர். வேதாந்த தேசிகரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூா்த்தியே திருவஹீந்திர புரத்தில் அருள்பாலிக்கும் ஶ்ரீஹயக்ரீவர் ஆவாா்.

திருவஹீந்திபுரத்தில் ஆனி மாதம் நடைபெறும் வசந்த உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. புரட்டாசி மாதத்தில் இந்த ஸ்தலத்தில் நடைபெறும் தேசிக ப்ரமோத்ஸவம் மிக பிரசித்தி பெற்றது.

XXX

திருமங்கையாழ்வார் பாசுரங்கள்:

நாலாயிர திவ்ய பிரபந்தம் -இரண்டாம் ஆயிரம் -திருமங்கை ஆழ்வார் -மூன்றாம் பத்து- முதல் திருமொழி

1. இருந்தண் மாநில மேனமதாய் வளை மருப்பினி லகத்தொடுக்கி,

கருந்தண் மாகடல் கண்டுயின் றவனிடம் கமலநன் மலர்த்தேறல்

அருந்தி, இன்னிசை முரன்றெழும் அளிகுலம் பொதுளியம் பொழிலூடே,

செருந்தி நாண்மலர் சென்றணைந் துழிதரு திருவயிந் திரபுரமே. (1148)

2. மின்னு மாழியங் கையவன் செய்யவள் உறைதரு திருமார்பன்,

பன்னு நான்மறைப் பலபொரு ளாகிய பரனிடம் வரைச்சாரல்,

பின்னு மாதவிப் பந்தலில் பெடைவரப் பிணியவிழ் கமலத்து,

தென்ன வென்றுவண் டின்னிசை முரல்தரு திருவயிந் திரபுரமே. (1149)

3. வைய மேழுமுண் டாலிலை வைகிய மாயவன், அடியவர்க்கு

மெய்ய னாகிய தெய்வநா யகனிடம் மெய்தகு வரைச்சாரல்,

மொய்கொள் மாதவி சண்பகம் முயங்கிய முல்லையங் கொடியாட,

செய்ய தாமரைச் செழும்பணை திகழ்தரு திருவயிந் திரபுரமே. (1150)

4. மாறு கொண்டுடன் றெதிர்ந்தவல் லவுணன்றன் மார்பக மிருபிளவா,

கூறு கொண்டவன் குலமகற் கின்னருள் கொடுத்தவ னிடம்,மிடைந்து

சாறு கொண்டமென் கரும்பிளங் கழைதகை விசும்புற மணிநீழல்,

சேறு கொண்டதண் பழனம தெழில்திகழ் திருவயிந் திரபுரமே. (1151)

5. ஆங்கு மாவலி வேள்வியி லிரந்துசென் றகலிட மளந்து ஆயர்,

பூங்கொ டிக்கின விடைபொரு தவனிடம் பொன்மலர் திகழ் வேங்கை

கோங்கு செண்பகக் கொம்பினில் குதிகொடு குரக்கினம் இரைத்தோடி

தேன்க லந்தண் பலங்கனி நுகர்த்தரு திருவயிந் திரபுரமே. (1152)

6. கூனு லாவிய மடந்தைதன் கொடுஞ்சொலின் திறத்திளங் கொடியோடும்,

கானு லாவிய கருமுகில் திருநிறத் தவனிடம் கவினாரும்,

வானு லாவிய மதிதவழ் மால்வரை மாமதிள் புடைசூழ,

தேனு லாவிய செழும்பொழில் தழுவிய திருவயிந் திரபுரமே. (1153)

7. மின்னின் நுண்ணிடை மடக்கொடி காரணம் விலங்கலின் மிசையிலங்கை

மன்னன், நீண்முடி பொடிசெய்த மைந்தன திடம்மணி வரைநீழல்,

அன்ன மாமல ரரவிந்தத் தமளியில் பெடையொடு மினிதமர,

செந்நெ லார்க்கவ ரிக்குலை வீசுதண் திருவயிந் திரபுரமே. (1154)

8. விரைக மழ்ந்தமென் கருங்குழல் காரணம் வில்லிறுத்து அடல்மழைக்கு,

நிரைக லங்கிட வரைகுடை யெடுத்தவன் நிலவிய இடம்தடமார்,

வரைவ ளந்திகழ் மதகரி மருப்பொடு மலைவள ரகிலுந்தி,

திரைகொ ணர்ந்தணை செழுநதி வயல்புகு திருவயிந் திரபுரமே. (1155)

9. வேல்கொள் கைத்தலத் தரசர்வெம் போரினில் விசயனுக் காய்,மணித்தேர்க்

கோல்கொள் கைத்தலத் தெந்தைபெம் மானிடம் குலவுதண் வரைச்சாரல்,

கால்கொள் கண்கொடிக் கையெழக் கமுகிளம் பாளைகள் கமழ்சாரல்,

சேல்கள் பாய்தரு செழுநதி வயல்புகு திருவயிந் திரபுரமே (1156)

10. மூவ ராகிய வொருவனை மூவுல குண்டுமிழ்ந் தளந்தானை,

தேவர் தானவர் சென்றுசென் றிறைஞ்சத்தண் திருவயிந் திரபுரத்து,

மேவு சோதியை வேல்வல வன்கலி கன்றி விரித்துரைத்த,

பாவு தண்டமிழ் பத்திவை பாடிடப் பாவங்கள் பயிலாவே. (1157)

***

1. திருவயிந்திரபுரம்

அன்பணிந்த சிந்தையரா யாய்ந்த மலர்தூவி

முன்பணிந்து நீரெமக்கு மூர்த்தியரே – என்பா

எமையிந் திரபுரத்தார்க் கின்றொண்ட ரானார்

தமையிந் திரபுரத்தார் தாம். (72)

  –   – பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி

–Subham—

Tags- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-22;  திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், திருவஹீந்திரபுரம்

Leave a comment

Leave a comment