

WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,731
Date uploaded in London – 13 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சப்தரிஷிகள் வரிசையில் ஐந்தாவது ரிஷி!
ஶ்ரீ சிவராம்ஜி – சாமானிய சாதனையாளர் – சப்தரிஷிகளின் வரிசையில் ஐந்தாவது ரிஷி!
ச. நாகராஜன்
இன்று பாரத தேசத்தில் நாட்டுப்பற்றும் சமூக சேவைக்கான அர்ப்பணிப்பு மனப்பான்மையும் கொண்ட ஆயிரமாயிரம் ஸ்வயம்சேவகர்களை உருவாக்கிய – உருவாக்கிவரும் அமைப்பு ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம்!
அற்புதமான இந்த அமைப்பை உருவாக்கியவர் பரமபூஜனீய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் அவர்கள்.
இந்தச் சங்கத்தில் வாழ்நாள் முழுவதும் பிரசாரக்காக இருந்து அரும் பணி ஆற்றியவர் ஶ்ரீ சிவராம்ஜி. அதிசயிக்க வைக்கும் தனது அற்புதமான குணங்களால் அனைவரையும் வியக்க வைத்தவர் சிவராம்ஜி.
ஆர் எஸ் எஸ்ஸின் பிரசாரகராக ஆகி 1942ம் ஆண்டு சென்னைக்கு வந்த சிவராம்ஜி தன் வாழ்நாள் இறுதி வரை தமிழகத்திலேயே இருந்து சங்கப் பணியைச் செய்தார்.
மஹாராஷ்டிர மாநிலத்தில் புனேயில் 1917ம் ஆண்டு மே மாதம் 17ம் நாளன்று யஷ்வந்த் ஜோக்லேக்கருக்கும் கங்கா என்று அழைக்கப்பட்ட சரஸ்வதி ஜோலேக்கருக்கும் சிவராம்ஜி பிறந்தார் மிகவும் புத்திகூர்மை வாய்ந்த சிவராம்ஜி புனேயில் முதுகலை எம்.எஸ்.சி படிப்பில் தங்கப் பதக்கத்தைப் பெற்றார். தான் பெற்ற தங்கப் பதக்கத்தை குரு பூஜை விழாவில் சங்கத்தி’ற்கென சமர்ப்பணம் செய்தார்..
பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது டாக்டர்ஜியை அவர் பார்த்தார். அவரால் ஈர்க்கப்பட்டு சங்கத்தில் சேர்ந்தார்.
நேரம் தவறாமை என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் சிவராம்ஜி. தினமும் காலை நான்கு மணிக்கு எழுந்து அன்றாடப் பணியைத் துவங்கும் அவர், சங்க ஷாகாக்களுக்கு குறித்த நேரத்தில் செல்வதை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தார்.
எளிமையான உருவம். இஸ்திரி போடாத அரைக்கை சட்டை.முகத்தில் எப்போதும் புன்சிரிப்பு. சங்க உடையிலோ அமர்க்களமாக இருப்பார். ஆயிரக்கணக்கான கடிதங்களை அவர் ஸ்வயம்சேவகர்களுக்கு எழுதியுள்ளார். தமிழை நன்கு படித்து அறிந்திருந்த அவரது கையெழுத்து முத்துக் கோர்த்தது போல அழகாக இருக்கும்.
ஷாகாவை மையமாக வைத்தே வாழ்க்கை அமைய வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டிய அவருடன் பழகினாலே போதும் சங்கத்தைப் பற்றி முழுவதுமாகப் புரிந்து கொள்ளலாம். புல்லாங்குழல் வாசிப்பதில் வல்லவர். சங்க கீதங்களை பாடிக் கொண்டே வேலை செய்வார். ஓரிரு சொற்களில் சொல்ல வந்ததை அழுத்தம் திருத்தமாகச் சொல்லி மனதில் பதிய வைப்பார்.
தினமும் அன்றாடம் செய்ய வேண்டிய வேலைகளை எழுதி வைத்துக் கொண்டு திட்டமிட்டபடி வேலை செய்வது அவர் வழக்கம்.
74ம் வயதில் மாரடைப்பு ஏற்பட்டு இதய அறுவை சிகிச்சையை மேற்கொண்ட அவர் அதற்குப் பின்னும் தீவிரமாக பத்தாண்டுகள் சங்கப் பணியை ஆற்றினார்.
தேகதானம் என்பதைப் பற்றிய விழிப்புணர்ச்சியை ஊட்டிய சிவராம்ஜி தன் தேகத்தையே தானமாகச் செய்தார். போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அவரது மறைவிற்குப் பின் அவரது தேகம் அர்ப்பணிக்கப்பட்டது.
நூற்றுக் கணக்கான புதுபுது சிறு திட்டங்களை வகுத்து அவற்றைச் செய்யும் வழிமுறையையும் காட்டி சேவா பணிகளை அனைவரும் வியக்க வைக்கும்படி அவர் செய்வார்.
நூதன திட்டமான ரவுடிகளைச் சந்திக்கும் திட்டத்தில் அவரால் சந்திக்கப்பட்ட ரவுடிகள் மனம் மாறி சிறந்த மனிதர்களாக ஆனது உண்மைச் சரித்திரம்.
அதே போல ஐந்து மருத்துவர்களைச் சந்திக்கும் திட்டம். ஒரு தெருவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று ஒரு சில நிமிடங்கள் பேசி சங்கத்தை விளக்கும் திட்டம் என்று இப்படி நூற்றுக் கணக்கான திட்டங்களை வைத்து அதில் ஸ்வயம்சேவகர்களை ஈடுபடுத்தி வெற்றி பெற வைத்தார் அவர்.
நமக்குத் தெரிந்து இவரது 347 வேலைத் திட்டங்கள் இப்படி தொகுக்கப்பட்டுள்ளன.
ஆசிரியருக்குக் கடிதம் பகுதியில் கடிதம் எழுத பலரையும் ஊக்குவித்த அவர் சமுதாயத்தின் சிந்தனையை ஒவ்வொரு விஷ்யத்திலும் பிரதிபலிக்க வைத்தார். நல்லோர் வட்டம் என்ற அவரது திட்டம் பிரபலமான ஒரு திட்டமாகும்.
இப்படி ஏராளமான நுணுக்கமான அபூர்வ செய்திகளை அவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
சிவராம்ஜியின் சேவையைப் பாராட்டி மஹாராஷ்டிர மாநில அரசு லோகமான்ய திலகர் விருதை அறிவித்தது. ஆனால் அவரோ அதை ஏற்க மறுத்து விட்டார். விருது, கௌரவம் ஆகியவற்றை அவர் விரும்பவே இல்லை.
ஶ்ரீ சிவராம்ஜி அவர்கள் 1999ம் ஆண்டு ஜூன் மாதம் 29ம் தேதியன்று சென்னையில் காலமானார். அவரது விருப்பப்படி அவரது கண்கள் சங்கர நேத்ராலயாவுக்கும் பூதவுடல் போரூர் ராமச்சந்திராக மருத்துவமனைக்கும் அளிக்கப்பட்டது.
இந்த நூலைப் படிப்போர் ஶ்ரீ சிவராம்ஜி அவர்களின் முழு வரலாற்றையும் படிக்க ஆவல் கொள்வர் என்பதில் ஐயமில்லை.
நூலைத் தொகுத்த திரு ஹரிஹரகோபாலன் நமது பாராட்டுக்குரியவராகிறார்.
சப்தரிஷிகளில் முதல் ஐந்து ரிஷிகளின் வரலாற்றைப் படித்தோர் அடுத்த இரண்ட் ரிஷிகளைப் பற்றியும் படிக்க முனைப்புடன் முயல்வர் என்பதில் ஐயமில்லை.
விஜயபாரதம் பிரசுரமாக வெளியாகியுள்ள இந்தச் சிறிய புத்தகம் 56 பக்கங்களைக் கொண்டுள்ளது. இதில் ஏராளமான படங்கள் ஆர்ட் பேப்பரில் அச்சாகி இருப்பது குறிப்பிடத்தகுந்ததாகும்.
நூல் பற்றிய விவரங்களை அறிய நாட வேண்டிய முகவரி:
விஜயபாரதம் பிரஸ்
12. எம்.வி.நாயுடு தெரு
சேத்துப்பட்டு, சென்னை – 31
விலை பற்றிய விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்; (Whatsapp) 89391 49466